Published : 05 Aug 2019 02:59 PM
Last Updated : 05 Aug 2019 02:59 PM

வி.ஜி.சித்தார்த்தா, ஐஏஎஸ் அகாடமி சங்கர்... வெற்றியாளர்களின் தற்கொலைக்குப் பின்னால் உள்ள உளவியல் காரணங்கள்!

வி.ஜி.சித்தார்த்தா, ஐஏஎஸ் அகாடமி சங்கர்

வி.ஜி.சித்தார்த்தா. இந்த வாரம் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. பரம்பரைப் பணக்காரராக இருந்தாலும், தன் சொந்த முயற்சியில் கஃபே காஃபி டேவை வெற்றிகரமாக உருவாக்கியவர். உலகம் முழுவதும் அதன் கிளைகளைப் பரப்பியவர். தன்னால் ஐஏஎஸ் ஆக முடியாவிட்டாலும் ஆயிரக்கணக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை உருவாக்கியவர் சங்கர். தென்னிந்திய ஐஏஎஸ் அகாடமிகளின் அடையாளமாக தனது சங்கர் ஐஏஎஸ் அகாடமியை மாற்றியவர். 

பிரபல கவிஞர் சில்வியா பிளாத், ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோ, நடிகை சில்க் ஸ்மிதா என இவர்கள் அனைவருமே தத்தமது துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலமானவர்கள். இவர்கள் அனைவருமே தங்களின் வாழ்க்கைக்குத் தாங்களே முடிவுரையை எழுதிக் கொண்டவர்கள். தொழிலில் கடன், குடும்பப் பிரச்சினை, மன அழுத்தம் என வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும், தற்கொலை என்ற ஒற்றைப் புள்ளி அவர்களை இணைத்திருக்கிறது. 

வெற்றியாளர்கள் தங்களின் தொடக்க காலத்தில் தோல்விகளை எதிர்கொண்டு, அதைச் சமாளித்துத்தான் வெற்றியைத் தம் வசப்படுத்தி இருக்கக் கூடும். அப்படிப்பட்டவர்களே, தற்கொலையை முடிவாகக் கருதுவது ஏன், இதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் என்ன என்பது குறித்து நிபுணர்களிடம் பேசினேன். 

வந்தனா, மனநல ஆலோசகர்:

''எப்படி நமக்குக் காய்ச்சல் வரும்போது உடம்பு வலி, சூடு, அயர்ச்சி ஆகியவை வருகிறதோ, அதேபோல மன அழுத்தத்தின் உச்சகட்ட அறிகுறியாக தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சூழ்நிலைகளைப் பொறுத்து எல்லோருக்குமே மன அழுத்தம் வரும். இதில் ஆண், பெண், ஏழை, பணக்காரர் என்று வேறுபாடு இல்லை. வெற்றியாளர்களுக்கு எல்லாமே இருக்கிறது. பணக்கஷ்டம் இல்லை, நல்ல குடும்பம் உள்ளது. இருந்தாலும் ஏன் அவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்? 

மன உளைச்சல் அந்த ஒரு நாள் மட்டும் இருந்திருக்காது. நீண்ட நாட்களாக அதில் இருந்து வெளியே வரமுடியாமல் இருக்கலாம். முறையான மனநல சிகிச்சையை எடுத்திருக்க மாட்டார்கள். எடுத்திருந்தாலும் சிகிச்சையைத் தொடர்ந்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கு 'நாம் எதற்குமே லாயக்கில்லை' என்ற மனநிலை உருவாகும். 'குற்ற உணர்வு' ஏற்படும். 'எதிர்காலத்தைப் பற்றியை நம்பிக்கை' இல்லாமல் இருப்பார்கள். இந்த 3 எண்ணங்களும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்போது தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது'' என்கிறார் வந்தனா.

வெற்றியாளர்கள் எல்லோரும் கீழ்மட்டத்தில் இருந்துதான் மேலே வந்திருப்பார்கள். அப்போது சந்திக்க முடிந்த தோல்விகளை இப்போது எதிர்கொள்ள முடியாதது ஏன் என்று கேட்டதற்கு, ''ஒருவரின் வயது, குணம், ஆளுமை, உடல்நிலை ஆகியவையே இதைத் தீர்மானிக்கின்றன. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் பயோ சைக்கோ சோஷியல் காரணி (Biopsychosocial factor) முக்கியக் காரணமாக இருக்கிறது. 

உடல்நிலை சார்ந்தவை பயாலஜிக்கல் காரணிகளாகவும், ஆளுமை, உடனிருப்பவர்களின் செயல்பாடுகள், உணர்ச்சிகள் சைக்கலாஜிக்கல் காரணிகளாகவும் தொழில் நெருக்கடி, அழுத்தம் ஆகியவை சோஷியல் காரணிகளாகவும் இருக்கின்றன. இந்தக் காரணிகள் எல்லோருக்குமே இருந்தாலும் காலத்துக்கு ஏற்ற வகையில், அதன் தன்மை அதீதமாக மாறி சிக்கலை விளைவிக்கிறது. தற்கொலையை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது'' என்கிறார் வந்தனா. 

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதில், 1.35 லட்சம் பேர் இந்தியாவில் இருப்பவர்கள். சர்வதேச அளவுடன் ஒப்பிடும்போது 17.5% பேர் இந்தியாவில் இருந்து தற்கொலை செய்துகொள்கின்றனர் என்கிறது உலக சுகாதார அமைப்பு. தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கும் நமது வாழ்க்கை முறைக்கும் உள்ள தொடர்பு குறித்துப் பேசுகிறார் மருத்துவர் அசோகன்.

அசோகன், மனநல நிபுணர்:

''இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவ மேதை புரூஸ்லியன், வாழ்வை இப்படி வரையறுப்பார்- 'வாழ்க்கை என்பது ஓர் அழகான குழப்பம்; ஒரு பயங்கரமான முரண்பாடு'. மாத்திரை, மருந்துகளுக்கு காலாவதி தேதி தெரிகிறது. ஆனால் மனிதனுக்கு அது கிடையாது. காலாவதியாகும் நாள் தெரியாதவரைதான், வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும். 

வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வருபவர்கள் தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு தோல்வியில் இருந்தும் ஒரு பாடத்தைக் கற்கவேண்டும். கற்காமல் அதைக் கடந்து வரும்போது, ஒரு கட்டத்தில் தோல்வியை, அது அளிக்கும் அழுத்தத்தை எதிர்கொள்ள முடியாத சூழல் ஏற்படுகிறது.

வெற்றியாளர்கள், வேலையில் எத்தனையோ ஏற்ற, இறக்கங்களைப் பார்த்திருந்தாலும் தற்கொலை என்பது உணர்ச்சிகரமான சூழலில், நிதானத்தை இழந்து எடுத்த முடிவாகத்தான் இருக்கும். கட்டிவைத்த ஒட்டுமொத்த சாம்ராஜ்யமும் சரிந்து விழும்போது யாராக இருந்தாலும் மன அழுத்தம் ஏற்படும். அந்த நேரத்தில் சாதாரணப் பிரச்சினைகள் கூட மலையாகத் தெரியும். அப்போது அதிகம் உணர்ச்சி வசப்படுவோம். 

செய்திகளின் அடிப்படையில் பார்க்கும்போது, சித்தார்த்தா தற்கொலையைத் திட்டமிட்டே செய்திருப்பார் என்று தோன்றுகிறது. திரும்பத் திரும்ப அதுகுறித்து யோசித்திருக்கக் கூடும். என்னால்தான் இந்த நஷ்டம் ஏற்பட்டது என்ற குற்ற உணர்ச்சியால் அவர் தவித்திருக்கலாம். மற்றவர்கள் மத்தியில் அவமானப்பட வேண்டும், அடுத்தவர்களுக்கு பதில் சொல்லவேண்டுமே என்று யோசித்திருக்கலாம். தனிப்பட்ட வகையில் தன்னைப் பற்றி மட்டும் யோசித்திருந்தால் அவருக்கு எளிதாகத் தீர்வு கிடைத்திருக்கும், ஆனால் என் குடும்பத்தினரோ என் ஊழியர்களோ ஏன், என்னால் அடுத்தவர்கள் முன்னிலையில் அவமானப்படவேண்டும்? என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கலாம். 

நாம் பார்க்கும் கண்ணோட்டத்தைப் பொறுத்து பிரச்சினையின் தீவிரம் மாறுபடும். நமது பார்வையில் ஒரு பிரச்சினையின் தாக்கம் குறிப்பிட்ட அளவிலும் மற்றவர்களின் பார்வையில் பல மடங்கு பெரிதாகவும் தெரியலாம். 

இதையே சங்கரின் வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்க்கலாம். குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் தூக்கு மாட்டி இறந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு பிரச்சினை என்னை மட்டும் பாதிக்கிறது என்றால் பரவாயில்லை. அதுவே எனக்கு நெருக்கமானவர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் பாதித்தால் அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்ற வகையினர் இருக்கின்றனர். இவர்களால் தனிப்பட்ட விவகாரங்களை எளிதாகக் கையாள முடியும். உறவுச்சிக்கல்களை அவிழ்க்க முடியாது. சுருக்கமாகக் கூறவேண்டுமெனில், என் பிரச்சினை என்றால் சமாளிப்பேன். என்னால் எனக்கு உயிரானவர்களுக்கு பிரச்சினை என்றால் தாங்க முடியாது. 

குறிப்பாக என் சோகத்தைவிட என்னால் அவர்களுக்கு (குடும்பம், ஊழியர்கள்) ஏற்படும் சோகம்தான் என்னை அதிகம் பாதிக்கும் என்ற மனநிலைதான் அது. அப்போது ஏற்படும் மன அழுத்தத்தை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. அந்தத் தருணத்தில், தனது கடந்த காலத்தில் நடந்த எதிர்மறை சம்பவங்கள் அனைத்தும் நினைவுக்கு வந்து மனதை அழுத்தும். நாம் மறந்துவிட்டதாகவும் மறைத்துவிட்டதாகவும் எண்ணிக் கடந்துவந்த சம்பவங்களும் சேர்ந்துகொள்ளும். இவையனைத்தும் சேர்ந்து உச்சகட்ட மன அழுத்தத்தில் சாதனையாளர்களையும் சாவை நோக்கித் தள்ளுகின்றன.

ஏன் இப்படி?

வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிகளை அடையவேண்டும், சிகரம் தொடவேண்டும் என்று எல்லோருமே நேர்மறைச் சிந்தனைகளுக்கே பழக்கப்படுகிறோம். இதுதான் எல்லோரின் ஆசையாகவும் கனவாகவும் இருக்கிறது. ஆனால் வாழ்க்கை, தோல்விகளும் நிரம்பியதுதான் என்பதை உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். 

எதையும் தாங்கும் சக்தியை எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கத் தவறிவிட்டோம். முந்தைய தலைமுறையில், பெற்றோர் தமது குழந்தைகளை சாவு வீடுகளுக்கும் அழைத்துச் சென்றனர். இழப்பையும் தோல்வியையும் கற்றுக்கொடுத்தனர். சுடுகாட்டுக்குக் கூட குழந்தைகள் சென்றனர். ஆனால் நிலைமை மாறிவிட்டது. இந்த உலகில் மன அழுத்தம் இல்லாமல் இருப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவரும், முற்றும் உணர்ந்தவரும்தான்.

என்ன செய்யவேண்டும்?

எப்போதுமே தயாரான நிலையில், பிளான் பி நம்முடன் இருக்கவேண்டும். தோல்விகளை எதிர்கொள்ள மறுப்பவர்கள்தான் மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில், எதிர்மறைப் பார்வையும் உண்டு என்பதை யோசிக்க வேண்டும். நாம் செய்த கடைசித் தவறுதான் நமது ஆசிரியர். தொடு வானத்தைத் தாண்டி உயரப் பறக்க நினைப்பது தவறில்லை. ஆனால் தொடு வானத்தை நோக்கிச் செல்வதே சாதனைதான் என உணர வேண்டும். 

பள்ளிகளில் கஷ்டம் என்றால் என்ன? அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டும். தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டாலும் மின்சாரம் இல்லாமல் இருந்தாலும் அதில் வாழக் கற்க வேண்டும். மனிதர்களை நம்பாமல், அந்நியமாக இருக்கக் கூடாது. உயரச் செல்லச் செல்ல, நண்பர்களிடம் இருந்தும் குடும்பத்திடம் இருந்தும் ஏன் நம்மிடம் இருந்தே நாம் அந்நியப்பட்டுப் போய்விடக் கூடாது. சின்னச் சின்ன ரசனைகளை தொலைத்துவிடக் கூடாது'' என்கிறார் அசோகன்.

தற்கொலை எண்ணத்தில் இருந்து எப்படி மீள்வது? என்று கேட்டதற்கு, ''இது எல்லோருக்கும் வருவதுதான். ஏதாவது ஒரு சமயத்தில் தற்கொலை எண்ணம் வராத மனிதர்களே உலகத்தில் கிடையாது. அப்போது தனியாக இருக்காதீர்கள். பிடித்த ரசனையான விஷயங்களுடன் நேரம் செலவிடுங்கள். நலம் விரும்பிகளுடன் பேசுங்கள். மன அழுத்தங்கள் இருக்கும் சூழலில் மற்றவர்களுடன் மனம் விட்டுப் பழகுங்கள். 

இதேபோல அல்லது இதைவிட பயங்கரமான பிரச்சினைகளை வைத்துக்கொண்டும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். கண்ணதாசனின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. 
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

இதைவிடப் பெரிய மனநல ஆலோசனை இருக்க முடியாது'' என்கிறார் மருத்துவர் அசோகன்.

இன்பத்தைப் பகிர்ந்தால் இரட்டிப்பாகும்; துன்பத்தைப் பகிர்ந்தால் பாதியாகும் என்பது பழமொழி மட்டுமல்ல. அனுபவ வார்த்தைகளும் கூட. தொழில்நுட்பங்கள் சூழ் உலகில், மனிதர்கள் சூழ மகிழ்ச்சியுடன் வாழ்வோம். மன அழுத்தத்தை விரட்டுவோம்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x