Published : 17 Jul 2019 12:20 PM
Last Updated : 17 Jul 2019 12:20 PM

அறம் பழகு: கூலி வேலை செய்து கபடி பயிற்சியளிக்கும் கோச்; சாதிக்கும் ஏழை வீராங்கனைகள் 7 பேரின் படிப்புக்கு உதவுங்கள்!

மாணவிகள் ஏழு பேருடன் பயிற்சியாளர் சஞ்சய் காந்தி

வேலூரில் கூலி வேலை செய்து தங்களுக்குப் பயிற்சியளிக்கும் கோச்சுக்கு வெற்றிகளைப் பரிசளிக்கும் 7 மாணவிகள் படிக்க வசதியில்லாமல், கல்லூரியில் சேரக் காத்திருக்கின்றனர்.

தேசிய அளவிலான கேலோ பாரத் கபடி போட்டியில் 2-ம் பரிசு, 2017-ல் முதல்வர் கையால் பெண் சாதனையாளர் விருது, 2018-ல் டாக்டர் அப்துல் கலாம் பெண் சாதனையாளர் விருது, 2019-ல் தமிழகத்தின் சிறந்த கபடி வீராங்கனை விருது, தென்னிந்திய அளவிலான கபடிப் போட்டிகளில் முதலிடம், மாநில அளவிலான கபடிப் போட்டிகளில் முதலிடம் என மலைக்க வைக்கும் சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர் வேலூர், ஏரிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் கபடி அணியினர்.

அவர்களின் சாதனைகள் குறித்தும் தேவைகள் குறித்தும் விரிவாக விளக்குகிறார் அணியை உருவாக்கியவரும் அதன் பயிற்சியாளருமான சஞ்சய் காந்தி. தன்னைப் பற்றியும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

''2010-ல் நான் தேசிய கபடி வீரனாக இருந்தேன். ஒருமுறை காஷ்மீரில் தமிழ்நாட்டுக்காக விளையாடிக் கொண்டிருக்கும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் மீண்டும் என்னால் போட்டிகளில் கபடி விளையாட முடியாமல் போனது.

கனவு தகர்ந்துபோய் விட்டதாக எண்ணி மன உளைச்சலில் இருந்தேன். என்னுடைய பழைய சாதனைகளுக்காக கிராமத்தினர் என்னைக் கவுரவிக்க முயன்றபோது, நான் தகுதியில்லாத வீரன் என்று அதைப் புறக்கணித்தேன். அப்போதுதான் கோவையைச் சேர்ந்த பயிற்சியாளர் கலைச்செல்வனைச் சந்தித்தேன். விளையாடினால்தான் பதக்கங்களைப் பெற முடியும் என்று அவசியமில்லை. வீரர்களை உருவாக்கினாலும் பெறலாம் என்பதை அவர்தான் உணர்த்தினார்.

எனது கிராமத்துச் சிறுவர்கள் யாரும் என்னுடைய முயற்சிக்கு ஒத்துழைக்கவில்லை. பெண் குழந்தைகளுக்குக் கபடி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு விளையாட பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. ஏழ்மை அடுத்த சவாலாக இருந்தது. எல்லாவற்றையும் சமாளித்தோம்.

கூலி வேலை செய்தால் தினமும் ரூ.500 கொடுப்பார்கள். அந்தப் பணத்தைக் கொண்டு அணிக்குப் பயிற்சி அளித்தேன். காலையில் 6- 7 மணி, மாலையில் 5 -6 மணி என தினமும் இரண்டு மணி நேரம் கடுமையான பயிற்சி. மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தோம். போட்டிகளுக்குச் சென்று மெடல் அடிக்க ஆரம்பித்தோம்.

2018-ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய கபடிப் போட்டியில் திவ்யா, சத்யவாணி, தமிழழகி ஆகியோர் வெள்ளிப்பதக்கம் பெற்று அசத்தினர். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அஸ்வினி, செளமியா, காயத்ரி, மோனிஷா ஆகிய நால்வரும் மாநில அளவில் பல்வேறு பரிசுகளைப் பெற்றுக் குவித்தனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மங்களூரில் நடைபெற்ற தென் மண்டல பல்கலைக்கழக கபடிப் போட்டியில் திவ்யா, சத்யவாணி பங்கேற்று நான்காம் இடத்தைப் பிடித்தனர். அதைத் தொடர்ந்து சிம்லாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கபடிப் போட்டியில் கலந்துகொண்டனர். தமிழகம் முழுக்க ஈரோடு, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருப்பூர், சென்னை, ஓசூர் என பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப் போட்டிகளில் முதலிடம் பெற்றுள்ளனர்.

கபடி வெற்றிகளால் விளையாட்டு ஒதுக்கீட்டில் தமிழகம் முழுக்க பல்வேறு கல்லூரிகளில் இடம் கிடைக்கின்றன. ஆனால் மாணவிகளின் பெற்றோர் வெளியூருக்கு பெண் குழந்தைகளை அனுப்ப மறுக்கின்றனர். அத்தோடு விளையாட்டும் தடைபடுமே என்பதால், உள்ளூரிலேயே அவர்களைப் படிக்கவைக்க முடிவெடுத்தோம். குடியாத்தத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அபிராமி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் சேர்த்தோம். அங்கு விளையாட்டுக்குத் தனி ஒதுக்கீடு இல்லை என்பதால், கல்விக் கட்டணத்தைக் கட்டும் நிலை.

இதில் திவ்யா எம்.ஏ. ஆங்கிலம் படிக்க உள்ளார். இதற்கு ரூ.22 ஆயிரம் தேவைப்படுகிறது. சத்யவாணி, தமிழழகி, அஸ்வினி, செளமியா, காயத்ரி, மோனிஷா ஆகிய 6 பேரும் பி.ஏ. தமிழ் படிக்க உள்ளனர். அவர்களுக்குத் தலா ரூ.20 ஆயிரம் என்ற வீதத்தில் ரூ.1.2 லட்சம் தேவைப்படுகிறது. இதை முடிந்தவர்கள் தந்து உதவினால் மாணவிகளும் படிப்பும், விளையாட்டும் பாதுகாக்கப்படும்’’ என்று சொல்கிறார் பயிற்சியாளர் சஞ்சய் காந்தி.

உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள: சஞ்சய் காந்தி- 9789647089
வங்கிக் கணக்கு விவரம்:
Sanjai Ganthi D
Account number 6710637788
Ifsc code: IDIB000P147
Indian bank
Pernambut branch

- க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x