Published : 15 Jul 2019 07:02 PM
Last Updated : 15 Jul 2019 07:02 PM

கொடுத்த மரக்கன்றுகளை சிறப்பாக வளர்த்த பள்ளிக் குழந்தைகளுக்கு தங்க நாணயம், ரூ.5 ஆயிரம் பரிசு: அலங்காநல்லூர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களின் பசுமைப் பாசம்

மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியதோடு கடமை முடிந்துவிட்டதாக நினைக்காமல் கொடுத்த மரக்கன்றுகளை ஒழுங்காக நட்டு வளர்க்கிறார்களா? என்று கண்காணித்து அதைச் சிறப்பாக வளர்க்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு தங்க நாணயங்களையும், ரொக்கப் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கி அசத்தியிருக்கிறார்கள் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள்.

பள்ளிக் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டு தேசியக் கொடியேற்றுவது சுதந்திர தின விழாக்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுகள். ஆனால், கடந்த ஆண்டு அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டில் கொண்டு வளர்ப்பதற்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வித்தியாசமாக சுதந்திர தின விழாவைக் கொண்டாடினார்கள். 

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி என இரண்டு பள்ளிக் குழந்தைகளுக்கும் சேர்த்து மொத்தம் 2,018 மரக்கன்றுகளை இந்த பழைய மாணவர்கள் வழங்கினர். மரக்கன்றுகளை வழங்கியதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக அவர்கள் கருதாமல் கொடுத்த மரக்கன்றுகளை சிறப்பாகப் பராமரித்து வளர்க்கிறார்களா? என்று ஒரு ஆண்டாக கண்காணித்து சிறப்பாக வளர்க்கும் பள்ளிக் குழந்தைகள் 4 பேருக்கு நேற்று அந்த முன்னாள் மாணவர்கள் தங்க நாணயங்களையும், ரூ.5 ஆயிரம் ரொக்கப் பரிசையும் வழங்கி அசத்தி இருக்கிறார்கள். 

தங்க நாணயம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும்  விழா அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாலை நடந்தது. மதுரை ஏடிஎஸ்பி கணேசன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்பாக மரக்கன்றுகள் வளர்த்த மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம், ரொக்கப் பரிசு ரூ.5 ஆயிரத்தையும் வழங்கினார். 

இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவரும், பசுமை நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளருமான பொன்குமார் கூறுகையில், ‘‘வளர்ச்சித் திட்டங்களுக்காக காடுகள் மட்டுமில்லாது குடியிருப்புப் பகுதிகள், சாலைகளில் உள்ள மரங்கள் கொத்துகொத்தாக  அழிக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதில்லை. அப்படியே மரக்கன்றுகள் நட்டாலும் அவற்றை யாரும் அதன்பின் தண்ணீர் ஊற்றி பராமரிப்பதில்லை. பெரும்பாலும் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் கடமைக்காகவே நடக்கிறது. அதனால், மரக்கன்றுகள் வளர்க்க விருப்பப்படும் பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு சங்கங்களை நாங்களே தேடிச் சென்று இலவசமாக மரக்கன்றுகள் வழங்குகிறோம். அவர்கள் அந்த மரக்கன்றுகளை தொடர்ந்து வளர்ப்பதற்கு வேலி அமைத்து கொடுத்து உதவுகிறோம்.

நாட்டு மரங்கள், பழ மரங்கள் என்று இதுவரை நாங்கள் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியுள்ளோம். மரக்கன்றுகள் வளர்ப்பையும், அதற்கான விழிப்புணர்வையும் பள்ளிக் குழந்தைகளிடம் தொடங்குவதே சரியாக இருக்கும். அதற்காக நாங்கள் படித்த பள்ளியில் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மிட்டாய் வழங்குவதற்குப் பதிலாக வீட்டில் சென்று வளர்ப்பதற்காக மரக்கன்றுகளை வழங்கினோம். அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த தங்க நாணயம் பரிசுத் திட்டத்தை அறிவித்தோம். மரக்கன்றுகளை வாங்கிச் சென்ற அனைத்துக் குழந்தைகளும் தங்கள் வீடுகளில் சிறப்பாக வளர்த்து வருகின்றனர். அவர்களில் சிறப்பாக மரக்கன்றுகளை வளர்த்த பிளஸ் 1 மாணவிகள் ரா.மோகனபிரியா, ஏ.நாகலெட்சுமி,  8-ம் வகுப்பு மாணவர் பி.செந்தமிழன், 7ம் வகுப்பு மாணவர் பி.அருண்பிரசாத் ஆகியோரை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு நாங்கள் அறிவித்தபடி இந்த ஒரு கிராம் தங்க நாணயம், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசை வழங்கினோம்’’ என்றார் பொன்.குமார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x