Published : 06 Jul 2019 07:57 PM
Last Updated : 06 Jul 2019 07:57 PM

‘‘இந்த வழியையும் அடைச்சுட்டா காட்டு யானைகள் எங்கே போகும்?’’- காளிமங்கலத்தை அச்சுறுத்தும் 600 வீடுகள்

எட்டுவழிச்சாலை, உயர் மின் கோபுரம்,  ‘கெயில்’ எரிவாயு குழாய்கள், காவிரிப் படுகையில் மீத்தேன் வாயு ஆகிய மத்திய அரசு திட்டங்கள் தமிழக விவசாயிகளை உலுக்கி வருகின்றன. அதே போல் தமிழக  அரசின் திட்டமொன்று கோவை காளி மங்கலம்  கிராமத்தை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சாலைமறியல், அதிகாரிகள் வாகன முற்றுகை, துண்டறிக்கை பிரச்சாரம் என நடத்திய மக்கள், அடுத்ததாக தம் சுற்றுவட்டாரத்தின் பதினாறு கிராமங்களையும் சேர்த்து போராட்டத்தில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். யானை, கரடி, சிறுத்தை , மான்கள் என  வனவிலங்குகள் நிறைந்திருக்கும் 600 அடுக்குமாடிக் குடியிருப்புகளை குடிசை மாற்று வாரியம் கட்டிக் கொண்டிருப்பதே பிரச்சினை.

கோவை- சிறுவாணி சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலாந்துறை. இங்கிருந்து பிரியும் இடப்பக்க சாலையில் 6 கி.மீ பயணித்தால் எட்டும் கடைக்கோடி கிராமம் காளிமங்கலம். பெரிய, பெரிய மலைகள் , காடுகளால் சூழப்பட்ட ஊரில் சுமார் 250 வீடுகள் உள்ளன.  ‘‘போன வருஷம் மட்டும் எங்கூரு பள்ளத்துல 120 யானைகள் கேரளா போயிருக்கு. ரெண்டு மாசம் முன்னே எங்க வலயன்குட்டையில ஒரு சிறுத்தைய கூண்டு வச்சுப் புடிச்சாங்க. அடுத்த ரெண்டு வாரத்துல  மோளபாளையத்துல மறுபடி ஒரு சிறுத்தைய புடிச்சாங்க. போன வாரம் ஒரு குட்டிக்கரடியை தாயோட மலையடிவாரத்துல பார்த்துட்டு ஆடு மேய்க்கிறவங்க தெரிச்சு ஓடி வந்தாங்க!’’ ஊருக்குள் நுழைந்தவுடனே இப்படி மக்கள் வனவிலங்குகளின் புராணம்தான். கூடவே 600 வீடுகள் கட்டப்படும்  இடத்திற்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள் சில இளைஞர்கள்.

இக்கிராமத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் முடியும் ஒரு தார்ச்சாலை. அங்கே ஒரு பெரும் பள்ளம், பாலம். கீழே காய்ந்த நீரோடை. அதையொட்டி தோண்டப்படும் அஸ்திவாரம். மண்ணள்ளிப் போட்டபடி பொக்லைன்கள். சுமார் 20 ஏக்கர் பரப்பளவு. கம்பிகள் கட்டி காங்கிரீட் தூண் அமைக்கும் பணிகள். அதன் பின்னே பசுமை கொஞ்சும் பெரிய மலைகள், ஊடுருவும் பள்ளத்தாக்குகள், அதற்கப்பால் ஒரு கான்கிரீட் கட்டிடம்.

‘‘அது தனியார் கல்லூரிக் கட்டிடம். வனப்பகுதியை ஒட்டி கட்டினாங்க. மலையிடப் பாதுகாப்புக் குழு விதிகளை மீறி கட்டப்பட்டதுன்னு கோர்ட் உத்தரவு போட்டதுல 2014-ல் சீல் வச்சாங்க!’’ என்ற தகவலை வாசித்ததோடு, அதிலிருந்தும் பல கிளைக்கதைகளை உதிர்த்தனர் உடன் வந்தவர்கள். ‘‘இதே இடத்தில் குடிசை மாற்று வாரியம் கட்டும் 700 வீடுகளுக்கு எப்படி அனுமதித்தார்கள்?’’ என்ற கேள்வியையே அழுத்தமாக கேட்டார்கள். இப்பிரச்சினையின் மையத்தை தொடர்ந்து விவரித்தார் இவ்வூரில் எனக்கு முதலில் அறிமுகமான மணிகண்டன்.

‘‘சுற்றி இருக்கிற நாதே கவுண்டன்புதூர், முகாசிமங்கலம், வடிவேலம் பாளையம், ஆலாந்துறை கிராமங்களில் எல்லாம் ரொம்ப பழமையானது காளிமங்கலம். இங்கிருந்துதான் மக்கள் மற்ற ஊருக்கு குடிபெயர்ந்ததா சொல்லுவாங்க. எங்க பாட்டன், பூட்டன் ஏழெட்டு தலைமுறையும் விவசாயம்தான். இப்ப அமைகிற  அடுக்குமாடிக் குடியிருப்பு பஞ்சமி நிலங்கள்னு சொல்றாங்க.  சிலர் அதுல உரிமை வாங்கி 10 வருஷம் முன்னால வெள்ளாமை செஞ்சுட்டு இருந்தாங்க. இங்கிருந்து 10 கிலோமீட்டர் சுத்தி யோகா மையம், ஆன்மிக மையம், ஜெபக்கூடம், கல்லூரி, பல்கலைக்கழகம், சிமெண்ட் ஃபேக்டரி, கல்குவாரி, மிலிட்டரி கேம்ப்ன்னு வந்துடுச்சு. அதனால சீசனுக்கு சீசன் கேரளா போற யானைகளுக்கு போற வர்றதுக்கு இருக்கிற ஒரே வழியா இதுதான் இருக்கு. இப்பக்கூட ஒரு ஒற்றை யானைய மருதமலையிலிருந்து (10 கிமீ தொலைவு) பாரஸ்ட்டுக்காரங்க நொய்யல் ஆத்து வழியிலேயே துரத்திட்டு வந்து இங்கேதான் விட்டாங்க. இப்படி யானைகள், ஊடுருவினதால மலையடிவார நிலத்துல விவசாயமே செய்ய முடியலை. ஃபாரஸ்ட்டோட பவுண்டரியில மின்வேலியோ, அகழியோ அமைச்சு பாதுகாப்பு பண்ணிக் கொடுங்கன்னு அதிகாரிகள்கிட்ட முறையிட்டுட்டு இருந்தோம். ஆனா பாருங்க. அதுலதான் திடீர்னு கொண்டு போய் இப்படி அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க!’’என்றவர், இக்குடியிருப்பு வந்த முறையை விவரித்தார்.

கடந்த பிப்ரவரி 9-ம்தேதி. இதுக்கு பூமி பூஜை போட அமைச்சர் வேலுமணி (இவரே தொகுதி எம்.எல்.ஏ) மற்றும் அதிகாரிகள் வர, அவர்களை ஊர்க்காரர்கள் மறித்து, ‘இங்கே கட்டிடம் கட்டி காட்டு யானைக்கு இருக்கிற ஒரு வழியும் மறிச்சா, அதுகல்லாம் ஊருக்குள்ளேதான் வரும். அதனால வெள்ளிங்கிரி மலை வரை இருக்கும் 4000 ஏக்கர் பூமியிலயும் விவசாயம் செய்ய முடியாது.  மக்கள் குடியிருக்கவும் முடியாது!’என்றனர். அதற்கு அமைச்சரும், அதிகாரிகளும் ‘ஊர்க்கூட்டம் போட்டு உங்க கருத்தெல்லாம் கேட்காம எதையும் செய்ய மாட்டோம்!’என்று உறுதி சொன்னார்களாம். ஆனால் சொன்ன மாதிரி செய்யாமல் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து விட்டனர். அதனால் பல ஊர்க்காரர்கள் சேர்ந்து போய் அமைச்சர் வீட்டில் போய் நியாயம் கேட்டிருக்கிறார்கள். ‘நிலம் குடிசை மாற்று வாரியத்திடம் ஒப்படைத்து விட்டோம். ஒன்றும் செய்வதற்கில்லை!’ என்றே பதில் சொல்லியிருக்கின்றனர். பின்பே தொடர் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் மக்கள்.

பூபதி என்ற இளைஞர் பேசும்போது, ‘‘நான் ஆட்டோமோபைலில் பிடெக் படிச்சவன். இந்த மணிகண்டன் பிகாம் பட்டதாரி. எங்க கிராமத்துல விவசாயம் செய்யறவங்க பெரும்பகுதி பட்டதாரிகதான். ஊரை விட்டு, நாடு விட்டு வேலைக்குப் போகாம விவசாயம் செஞ்சுட்டு வர்றோம்னா இந்த மண்ணு மேல எவ்வளவு உசிரை வச்சிருப்போம்னு நினைச்சுப் பாருங்க. இங்கே ஒரு காலேஜ் கட்டினதுலயே ஏழெட்டு ஓடைகள் காணாமப் போச்சு. ஒரு சொகுசு மாளிகை பத்து பனிரெண்டு நீரோடைகளை முழுங்கிடுச்சு. ஒரு பல்கலைக்கழகமோ நூத்துக்கணக்கான ஓடைகளை மறிச்சிருச்சு. ஒரு ஆன்மிக மையம் சின்னாறுன்னு ஒரு ஆற்றையே சாப்பிட்டுடுச்சு. இப்ப இவங்க அடுக்கு மாடி கட்டற இடத்துல அருந்தவப் பள்ளம்னு ஒரு நீரோடை இருந்தது, அதுல வருஷத்துக்கு 6 மாசம் ஓயாம தண்ணி வரும். அதுல இப்ப மழை பெஞ்சாலும் தண்ணி ஒரு பொட்டு வர்றதில்லை.

சுத்துவட்டாரத்துல 1200 அடி ஆழ்துளை கிணறு தோண்டினாலும் தண்ணி இல்லை. இதுல புதுசா கட்டற வீடுகளில் குடியேறப்போறவங்களுக்கு ? (கோவை நகரின் நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களுக்கு மாற்று வீடு தரவே இந்த திட்டமாம்) எங்கிருந்து தண்ணி வரும்?  அப்படியே கொடுத்தாலும் இந்த யானைகள், சிறுத்தைகளோட மல்லுக்கட்டறது எங்களுக்கே பெரும்பாடா இருக்கும்போது, புதுசா வர்றவங்க எப்படி சமாளிப்பாங்க?’’ என்று கேள்விகளால் அடுக்கினார்.

கடந்த 27-ம் தேதி இவர்கள் நடத்திய சாலை மறியலில் தாசில்தார் தலையிட்டு, ‘வெள்ளியங்கிரி மலை தொடங்கி இந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 4200 வீடுகள் கட்டப்பட்டிருப்பதற்கு பொதுநல வழக்கு ஒன்று கோர்ட்டில் ஏற்கெனவே நடக்கிறது. 3 வாரத்தில் கோர்ட் தீர்ப்பு அதுல வந்துடும். அந்த தீர்ப்புக்கு ஏத்தபடி இதுலயும் நடவடிக்கை எடுக்கறோம்!’என்று சொல்லியிருக்கிறார். ஆனால் மலையடிவாரத்தில் நடக்கும் கட்டுமானப் பணிகளை நிறுத்தவேயில்லை. எனவேதான் அடுத்ததாக ஆட்சியர் அலுவலக முற்றுகை, பதினாறு ஊர்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டம், மறியல் என புறப்பட முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள் மக்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.,வும், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணியிடம் பேச முயற்சி செய்தோம். அவர் தொடர்பில் கிடைக்கவில்லை. எனவே கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் பேசினேன். ‘‘குடிசை மாற்றுவாரியம் இப் பிரச்சினையை ஹேண்டில் செய்து கொண்டிருக்கிறது. இது சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இருக்கு. அத்தீர்ப்பு வரும் வரை எதுவும் பேச முடியாது. என்றாலும் விதிமுறைப்படியே அரசு செயல்பாடு இருக்கும் என்பதை மக்களிடம் உறுதி கொடுத்துள்ளோம்!’’ என்று தெரிவித்தார்.

காளிமங்கலம் ஒரு தொல்லியல் கிராமம்

காளிமங்கலத்தில் பல தொல்லியல் சின்னங்கள் கிடைத்துள்ளன. அதற்காகவும் இப்பகுதியை பாதுகாக்க வேண்டும்!’ என்றும் மக்களிடம் கோரிக்கை வலுத்து வருகிறது. அதைப் பற்றி தமிழக அரசின் தொல்லியல் துறை அலுவலராக இருந்து ஓய்வு பெற்ற அறிஞர் பூங்குன்றனிடம் கேட்டேன். ‘‘ஈமத்தாளி, மண்பாண்ட ஓடுகள் பல காளிமங்கலத்தில் கிடைத்துள்ளது உண்மை. வேளாண்குடிகள் உழவோட்டும்போது, வீடுகள் கட்டும்போது  கிடைத்த பொருட்கள்தான் இவை. இங்கே பெரிய குடியிருப்புகள் கட்டினால் தொல்லியல் சின்னங்கள் அழிந்துவிடும். இப்போதெல்லாம் தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு மக்களுக்கும், அரசுக்கும் வந்து கொண்டிருக்கிறது. ஒன்று அந்த நிலத்தில் அகழாய்வு செய்து பொருட்களை எடுத்து வச்சுட்டு குடியிருப்புகள் கட்டலாம். அல்லது தோண்டாமல் இருப்பதே நல்லது!’’ என்றார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x