Published : 05 Jul 2019 03:40 PM
Last Updated : 05 Jul 2019 03:40 PM

மதுவால் ஏற்படும் இழப்புகளும் இறப்புகளும்: மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்துமா தமிழக அரசு?

டிசம்பர், 2018- கரூர் உப்பிடமங்கலம் அருகே கணவன் ஜெயபாலும் மனைவி திலகவதியும் இளையமகனுடன் ஓரமாக வண்டியில் சென்றுகொண்டிருந்தனர். எதிர்ப்பக்கத்தில் குடிபோதையில் அசுரவேகத்தில் வந்து மோதிய பைக், இவர்களின் வண்டியைச் சாய்த்தது. சம்பவ இடத்திலேயே ஜெயபால் உயிரிழக்க, ரத்த வெள்ளத்தில் கிடந்த திலகவதி மருத்துவமனையில் உயிரை விட்டார். சிறுவன் கிரிதரண் லேசான காயங்களோடு உயிர் தப்பினார்.  சிறுவர்கள் இருவர்களுடனும் சிரமத்தோடு காலத்தை நகர்த்துகிறார் பாட்டி பாக்கியம்.

ஜூன், 2019 - கோவை ஜம்புகண்டி பகுதி அருகே தனது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்துகொண்டிருந்தார் ஷோபனா. அருகில் இருந்த டாஸ்மாக்கில் வயிறு முட்டக் குடித்த குடிகாரர்கள் எதிர்திசையில் இருந்து வந்து மோதினர். ஹெல்மெட் போட்டிருந்தும் சம்பவ இடத்திலேயே ஷோபனா இறந்துவிட, மகள் சாந்தனா தேவி உயிருக்குப் போராடி மீண்டு கொண்டிருக்கிறார். மனைவியின் சடலத்தோடு சாலையிலேயே 6 மணி நேரம் அமர்ந்திருந்தார் மருத்துவர் ரமேஷ்.

இந்த இரண்டு செய்திகளிலுமே இரு சக்கர வாகனங்கள் மோதித்தான் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. எனில், குடிகாரர்கள் எந்த வேகத்தில் வண்டியை ஓட்டியிருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.

இந்தியா முழுவதும் 16 கோடிக்கும் மேற்பட்டோர் மது அருந்துகின்றனர் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தனது புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 14.6% ஆகும். கோவா, பஞ்சாப், அருணாச்சலப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அதிக மக்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக உள்ளனர்.

குடிப்பவர்களில் 38 பேரில் ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. 180 பேரில் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்.

சசிபெருமாளை நினைவிருக்கிறதா?

இந்த நேரத்தில் மது ஒழிப்புக்காகத் தன் கடைசி மூச்சு வரை போராடிய போராளி சசிபெருமாளை நினைவிருக்கிறதா? காந்தியவாதியான இவர் மதுவை எதிர்த்து ஏராளமான உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியவர். 2014-ல் அவர் 36 நாட்கள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரதம் அவர் உடல்நிலையை முழுமையாகச் சீரழித்தது. 2015-ல் கன்னியாகுமரியில் மதுக்கடை ஒன்றை மூட வலியுறுத்தி, செல்போன் டவர் மீது ஏறிப் போராட்டம் நடத்திய சசிபெருமாள், போராட்டத்தின்போதே உயிரிழந்தார். சடலமாகக் கிடந்த சசிபெருமாளின் சட்டையில் இருந்த பேட்ஜ் என்ன சொன்னது தெரியுமா?

''மதுவை ஒழிப்போம்

மக்களைக் காப்போம்''

பொதுமக்களைக் காப்பதற்காகத் தன் மக்களைக் கருத்தில்கொள்ளாத சசிபெருமாளின் மரணம், தற்கொலையாகக் கடந்துபோனது. ஊடகங்களும் மக்களும் அதைப் பற்றிப் பரபரப்பாகப் பேசினர். கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மதுவிலக்கும் இடம்பெற்றது.

படிப்படியாக மதுவிலக்கு

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறினார் ஜெயலலிதா. பதவியேற்ற மே 23-ம் தேதியே 500 கடைகளை மூடுவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார். வருமானம் குறைவான, கோயில், பள்ளிகள் அருகில் இருப்பதால் பிரச்சினைகள் அதிகம் வருகிற மதுக்கடைகள் தேர்வு செய்யப்பட்டு, மூடப்பட்டன என்ற குற்றச்சாட்டும் எழுந்தன.

ஜெயலலிதா வழியைப் பின்பற்றி, எடப்பாடி பழனிசாமியும் ஆட்சிக்கு வந்தபின்னர் 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். மீண்டும் அதேபாணி பின்பிற்றப்பட்டு, மதுக்கடைகள் மூடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் அதிலிருந்து 500 அடி தூரம் வரை மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு, மக்கள் மத்தியில் ஆசுவாசத்தைத் தந்தது. ஆனால் பேரிடியாக அதுவே மாறும் என்று மக்கள் நினைக்கவில்லை.

500 அடிக்குள்தானே இருக்கக்கூடாது என்று யோசித்த அதிகாரிகள், குடியிருப்புகளின் அருகிலேயே மதுக்கடைகளைத் திறந்தனர். தேசிய நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைகளாகவும் உள்ளூர் சாலைகளாகவும் மாற்றப்பட்ட கொடுமையும் நடந்தது.

இது குடிகாரர்களுக்கு இன்னும் சவுகரியமாக மாறியது. டாஸ்மாக்குகளுக்காக பிரதான சாலைக்கு வராமல், பக்கத்திலேயே குடிக்கப் பழகினர். பொதுமக்களும் வியாபாரிகளும் என்னென்னவோ போராட்டங்களை முன்னெடுத்துப் பார்த்தனர். ஆனால் எதற்கும் அரசு மசியவில்லை.

எப்படி நடக்கும்? கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 31 ஆயிரத்து 757 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதில் அரசுக்குக் கிடைத்த வருமானம் மட்டும் 26 ஆயிரம் கோடி ரூபாய். 

சிறையில் நந்தினி; நின்ற திருமணம்

மதுவை எதிர்த்துப் போராடிய நந்தினி, மது ஓர் உணவுப் பொருளா என்று கேட்டதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சிறையில் இருக்கிறார். மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஜூலை 5-ம் தேதி நிச்சயிக்கப்பட்ட திருமணமும் நின்றுவிட்டது. மதுவுக்கு எதிராகப் போராடுபவர்களைக் கிள்ளுக்கீரையாகப் பார்க்கும் அரசு, குடிமகன்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் பல்வேறு வசதிகளைச் செய்துதருகிறது.

பொருளாதாரத்தில் உயர்நிலைக் குடிகாரர்களுக்காக எலைட் பார்களைத் திறந்து, விற்பனை செய்கிறது. டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் அமைச்சர் தங்கமணி. திருப்பூரில் மதுவுக்கு எதிராகப் போராடிய ஈஸ்வரி என்ற பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு, எஸ்பியாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

தேசிய குற்றவியல் பதிவேட்டு ஆணையம் வெளியிட்ட அறிக்கைப்படி, இந்தியாவில் தினந்தோறும் 15 பேர் உயிரிழக்கின்றனர். அதாவது ஒவ்வொரு 96 நிமிடத்துக்கும் ஓர் இறப்பு நிகழ்கிறது. மதுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறப்பது, விபத்துகளால் இறப்பதை மட்டுமே பெருவாரியாகப் பேசுகிறோம்.

ஆனால் தினக்கூலிகளாய் வேலைசெய்து, கிடைக்கும் பணத்தை டாஸ்மாக்கில் கொடுத்துவிட்டுச் செல்லும் பாமரர்களால் வீடுகளில் பிரச்சினைகள் வெடிக்கின்றன. பாலியல் துன்புறுத்தல்கள், கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட குற்றங்களுக்கும் மதுவே அடிப்படைக் காரணமாக இருக்கிறது. இதுகுறித்தும் பெருவாரியாக விவாதிக்கப்படவேண்டும், தீர்வுகளை நோக்கி நகரவேண்டும்.

சமூகத்துக்கான ஆயுதமாக மாறிய சடலம்

கோவையில் தனது மனைவியின் சடலத்தையே  மதுக்கடைக்கு எதிரான ஆயுதமாக மாற்றிய மருத்துவர் ரமேஷ் பேசும்போது, ''மனைவியுடன் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தேன். எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. இந்த சமூகம் உடைந்து நொறுங்கிக் கிடக்கிறது. ஏற்கெனவே அந்த மதுக்கடையால் விபத்து ஏற்பட்டு, மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். ஏராளமானோர் ஊனமாகி என்னிடமே சிகிச்சை பெற்றுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்னால்குடிபோதையில் லாரியைத் தாறுமாறாக ஓட்டிக்கொண்டு வந்த ஓட்டுநர், ஆட்டு மந்தையின் மீது மோதிவிட்டார். சுமார் 50 ஆடுகள், அதில் நசுங்கி உயிரிழந்தன. அந்த இடமே அதிகாலையில் ரத்தவெள்ளமாகக் காட்சியளித்தது.

அன்று என்னுடைய மனைவியின் ரத்தமும் அங்கிருந்த தார்சாலை வழியாக, நிலத்தில் பட்டு வழிந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கையறு நிலையில் இருந்தேன். அதிகாரம் இல்லாத என்னால் செய்யமுடியும்? அப்போதுதான் இந்த மதுக்கடை வேண்டாம் என்று எண்ணினேன். அந்தத் தருணத்தில் நண்பர்களுடன் அனைவருடனும் சேர்ந்து சாலையில் அமர்ந்தோம். அமைதியான முறையில் வேண்டுகோள் விடுத்தோம். மதுக்கடையை தற்காலிகமாக மூடினர்.

மதுக்கடைகள் விவகாரத்தில் மனிதாபிமானமோ, சட்டமோ இல்லை. மாஃபியாதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. இப்போது மீண்டும் கடையைத் திறக்க உள்ளதாகத் தகவல் வருகிறது. என்னால் வேறென்ன சொல்லமுடியும்? தெய்வம் நின்றுகொல்லும்'' என்கிறார் மருத்துவர் ரமேஷ்.

மதுக்கடைகளால் கிடைக்கும் வருமானத்தைப் பார்க்காமல், மதுவால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் பொருளாதார, உளவியல் சிக்கல்களையும் கருத்தில்கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும். ஜெயலலிதாவின் வழியில் செயல்படுவதாகக் கூறும் தமிழக அரசு, படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி, மது இல்லா மாநிலமாகத் தமிழகத்தை மாற்றவேண்டும்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x