Published : 06 Jul 2019 07:23 PM
Last Updated : 06 Jul 2019 07:23 PM

சி. ‘தமிழ்’ மணிகண்டன் (க.இ., கல்.இ.தமிழ்(க.மு)-தமிழ்): தமிழாய் வாழும் 25 வயது இளைஞர்

 

‘‘ஐயா வணக்கம்! இப்போதுதான் வந்தீர்களா? நீங்கள் நலம்தானே? ஊரில் எல்லோரும் நலம்தானே? என்ன அருந்துகிறீர்கள்? தேநீர், குளிர்பானம், வேறு ஏதாவது?’’

பேச்சு வழக்கில் இல்லாமல் ஒரு மனிதன் தூய தமிழில் எத்தனை மணிநேரம்தான் சராசரி மக்களிடம் உரையாட முடியும்? இதோ, இந்த ‘தமிழ்’ மணிகண்டனுக்கு வயது இருபத்தைந்துதான். தன் உரையாடலை சுத்தத் தமிழிலேயே வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். செல்போனில், நிகழ்ச்சிகளில், குடும்பத்தில், பால்காரரிடம், மளிகைக் கடையில், தள்ளுவண்டி காய்கறிக் கடையில் என பல இடங்களிலும் தமிழ், தமிழ், சுத்தத் தமிழ்தான். அவர் பெயரோடு சேர்ந்திருக்கும் இனிசியல் மற்றும் கல்வித்தகுதிகள் கூட இக்கட்டுரை தலைப்பில் சொல்லப்பட்டுள்ளவாறு சுத்தத் தமிழ்தான்.

தான் படித்த பட்டப்படிப்புகளை (க.இ., கல்.இ.தமிழ்(க.மு)-தமிழ்) கூட தமிழில்தான் போடுகிறார். அதாவது ‘க. இ’ என்றால் கலை இளம் நிலை (BA) கல். இ என்றால் கல்வியியல் இளம் (BEd), க.மு என்றால் கலை முதுநிலை (MA). இவர் பிழையின்றி தமிழைப் பேச, எழுத, படிக்க நூற்றுக்கணக்கான பள்ளிகளில் தமிழோடு விளையாடு என்ற நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார். அதையொட்டி பள்ளிகளில் தமிழ் மன்றங்களும் தொடங்கி வைத்திருக்கிறார். கல்லூரிகளுக்குச் சென்று பல்லாயிரம் இளைஞர்களைச் சந்தித்து தமிழ் கற்றல் பற்றி விழிப்புணர்வு ஊட்டியிருக்கிறார். தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தமிழ் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

இந்தச் செயல்பாடுகளுக்காக, ‘இன்தமிழ் இமயம், இளம்தமிழ் மொழிக்காவலர், மதிப்புறு தமிழன், தமிழ் திறமையாளர் , சுவாமி விவேகானந்தர் கல்வி பேச்சுக்கலை விருது’என 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

கோவை என்ஜிஜிஓ காலனி, அசோகபுரத்தில் உள்ளது அவர் வீடு. வீட்டின் முகப்பில் கலைக்குடில் என்று பெயர்ப் பலகை. சுற்றுச்சுவரில் கரும்பலகை பெயின்ட். பிரபஞ்ச திருக்குறள் அறவாரியம் என்ற பெயரில் இன்றைய குறளும், பொருளும் எழுதப்பட்டிருக்கிறது. ‘‘இந்த அமைப்பில் அங்கத்தினன் ஆகி சில மாதங்கள்தான் ஆகிறது அய்யா. இதன் மூலம் தமிழை நம் பகுதி மக்களிடம் எல்லாம் கொண்டு போக எண்ணியுள்ளேன்!’’ என்றபடி அவர் தன் அறைக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்குள்ள ஷோகேசில் நிறைய கேடயங்கள், நினைவுப்பரிசுகள், புத்தகங்கள்....

‘‘எங்கே படிச்சீங்க?’’

‘‘அசோபுரம் பள்ளியில்..’’

‘‘அது என்ன கவர்ன்மெண்ட் ஸ்கூலா?’’

‘‘அது அரசுப் பள்ளிதான் அய்யா. அதில் படிக்கும் போதே என் குலப்படிப்பு சமஸ்கிருதம் மூன்றாண்டுகள் படித்தேன்.  தொடர்ந்து பள்ளிப் படிப்பு பத்தாண்டு. பிறகு தொழில்நுட்ப இயந்திரவியல் கல்வி. ராமகிருஷ்ணா பல்தொழில் நுட்பக்கல்லூரியில் மூன்றாண்டுகள். அதையும் தமிழிலேயே கற்றேன். அங்கே தமிழ்மன்றச் செயலாளர். நாட்டு நலப்பணித் திட்டக்குழு தலைவர். அங்கேதான் என்னுடைய ஒருங்கிணைப்பை நான் கற்றுக் கொண்டேன். பள்ளியில் நான் என் திறனை கண்டுகொண்டேன். அதன் பிறகு ஒரு விபத்து நேரிட்டது. அதில் நான் பிழைத்ததே மறுபிறவி. ஒருவரிடம் வாகன உதவி கேட்டு வரும்போது நடந்த விபத்தில் தலையில், காலில், தொடையில் பெரிய காயம். கிட்டத்தட்ட 11 நாள் கண்விழிக்காமல் கிடந்தேன். 48 மணிநேரம் கெடு வைத்து விட்டார்கள். அதற்குப் பிறகு தந்தை இறந்தார். என் அப்பா சராசரி கவிஞர். அவர் ஊட்டி வளர்த்த தமிழ்தான் இந்த சமூகத்தில் எனக்கு இந்த தமிழ் மணிகண்டன் என்கிற பெயரை பெற்றுத்தந்தது!’’

நீள்கிறது அவர் பேச்சு.

‘‘எப்போ இருந்து இப்படி சுத்தத் தமிழிலேயே பேச ஆரம்பிச்சீங்க?’’

‘‘அப்பா, அம்மாகிட்ட கேட்டு எழுதி பள்ளிக்கூட பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்வேன். அப்போது 16, 17 வயதுதான். எல்லாமே முதல் பரிசுதான். தொழில்நுட்பக் கல்வி பயின்று, தொடர்ந்து சூழ்ந்த வறுமை, கொடுமையால் கல்லூரிக்குச் செல்ல முடியாத சூழல்.  ஒரு மனிதவள மேம்பாட்டுப் பத்திரிகையில் பணி செய்தேன்.  அப்படியே தொலை நிலைக்கல்வி மூலம் படித்தேன். என் தமிழ் கற்பித்தலைப் பார்த்து நிறைய நிகழ்ச்சிகளுக்கு அழைத்தார்கள். பள்ளிக்கூடங்களில், கல்லூரிகளில் பேசினேன். நல்ல வரவேற்பு. நிறைய பரிசுகள். தமிழ் எனக்கு அளித்த இந்த வெகுமதிகள், பாராட்டு என்னை தமிழாகவே மாற்றி விட்டன.

பல பள்ளிக்கூடங்களில் தமிழாசிரியாராகப் பணிபுரிந்துள்ளேன் (மணமாகாதவர்களை ஆசிரியப் பணியில் வைப்பதில்லை என்ற ஒரு புது விதிமுறையை இவர் பணியாற்றிய பள்ளி கொண்டு வந்து விட்டதாம். எனவே வேறு பள்ளியில் சேர வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்) 18 வயசுக்கு மேல நான் படிச்சது எல்லாம் தொலை நிலைக்கல்விதான். அதைக் கொண்டு போய் பள்ளிகளில் வேலைக்கு கேட்கும்போது என் சான்றிதழ்களைப் புறக்கணித்தார்கள். ஆனால் நான் பேசும் தமிழில் ஆனந்தம் கொண்டார்கள். அதை வைத்தே பல பள்ளிகள் எனக்கு வேலை தந்தன. அதற்கு முன்பே நான் சில பருவ இதழ்களில் பணி புரிந்துள்ளேன். அதன் மூலம் நிறைய புலவர், அறிஞர்களை சந்தித்துப் பேச, அவர்களின் கட்டுரைகளை எழுதி அச்சுக்குக் கொண்டு போக, மெய்ப்புத் திருத்தம் செய்தல் என அந்த அந்த ஆற்றலும் எனக்குள் புகுந்தது. அது என்னை முழுமையான தமிழிலேயே இயங்க வைத்து விட்டது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நான் பேசியபோது அதை ஒருங்கிணைத்த தனபால் ஐயா நீ ‘மணி தமிழ்’ கிடையாது; ‘தமிழ்’ மணிகண்டன்னு பெயர் சூட்டினார். அது எனக்கு நிலைத்து விட்டது. என்னை இப்போது மணிகண்டன் என்று சொன்னால் கூட யாருக்கும் தெரியாது. தமிழ் என்றால் தெரிந்து விடும்!’’

‘‘நீங்க இப்படி பேசறது ஜனங்களுக்கு, குடும்பத்திற்கு அந்நியப்பட்டதா இல்லையா? கொங்குதமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத்தமிழ் என வரும் வழக்குத் தமிழுக்கெல்லாம் என்ன அர்த்தம்?’’

‘‘நான் பேசும் இந்தத் தமிழ்தான் இத்தனை பிரிவுகளாக,  கிளைகளாக வந்திருக்கிறது. வழக்குத் தமிழுக்கு இந்த தமிழ் முரண் கடையாது. பிழையில்லாது பேச, எழுத, படிக்கவே இந்த தமிழைப் பிரயோகம் செய்கிறேன். ‘தமிழில் உரையாடு’, ‘தமிழில் பேசலாம் வாங்க!’ன்னு செயல் வடிவம் செஞ்சு பல பள்ளிகளில் இதை நிரூபிக்கவும் செஞ்சிருக்கேன். என் குறிக்கோளே பிழையின்றித் தமிழ் பேசறதுதான். தமிழுக்கு நாம் செய்கிற தொண்டு ஒன்று உண்டு என்று சொன்னால் அது தமிழைப் பிழையின்றி பேசுவதுதான்.

நான் இலக்கியவாதின்னும், புலவர்னும், முனைவர்னும், ஞானின்னும், எழுத்தாளர்னும் சொல்லிக் கொள்வதில்லை. தமிழ் என்றே சொல்கிறேன். நாம் வாழுகிற நாடு தமிழ்நாடு. பெற்ற குடும்பம் தமிழ்க் குடும்பம், பேசுகிற மக்கள் தமிழ் மக்கள். படித்தது தமிழ். இப்படி நம்மைச் சுற்றியிருக்கும் அனைத்து அங்கங்களும் தமிழ். அதன் ஒரு படி மேலே தமிழைப் பார்க்கிற போது அது தாய்மொழி. ஒரு தாயை விட்டு மகன் விலகியிருப்பதும், குடும்பம் விலகியிருப்பதும் சரியா? ஒரு மனிதனுக்கு ஒரேயொரு மொழிதான் தாய் மொழியாக இருக்க முடியும். நான் தமிழில் இலக்கியங்களை, இலக்கணத்தை திணிக்கவில்லை. எளிமையாக, இயல்பாகத் தமிழை கொண்டு செல்கிறேன். என்னை செல்லிடப்பேசியில் அழைத்தீர்கள். அதில் எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு பாடல் ஒலிக்கும். இப்ப அடிச்சீங்கன்னா செம்மொழியான தமிழ் மொழியாம்னு வரும்.  வீட்டு நுழைவாயிலில் தமிழ் அறநூல். நான் தமிழை இப்படிக் கொண்டு செல்கிறேன்.!’’

சில வருடங்களுக்கு முன்பு 1330 திருக்குறளை மலையப்பம்பாளையம் என்ற இடத்தில் முத்து வேலாயுதசாமி மலைக்குன்றுகளில் கல்வெட்டுகளாகப் பொறிக்க கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் சிலர் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழறிஞர்கள் வந்தனர். அதில் சேவை செய்ய நம் தமிழ் மணிகண்டனையும் இணைத்துள்ளனர். அங்கே வந்திருந்தவர்களிடம் எல்லாம் சுத்தத் தமிழிலேயே மணிகண்டன் அசாராது உரையாடிக் கொண்டிருக்க வந்திருந்த தமிழறிஞர்கள் எல்லாம் மலைத்துப் போயினர்.

அதைப் பார்த்த இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கல்வெட்டராய்ச்சியாளர், ‘நீங்க மணிகண்டன் கூட யார் வேண்ணா ஒரு மணி நேரம் பேசுங்க. அவர் உரையாடும்போது, ’ஒரு வார்த்தை ஆங்கிலக் கலப்போ, கொச்சைத் தமிழ் வார்த்தைகளோ வந்துட்டா, உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் தந்துடறேன்!’’ என்றாராம். அதுதான் என் தமிழுக்கும், என் தமிழ் பேச்சுக்கும் கிடைத்த வெகுமதி என்கிறார் மணிகண்டன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x