Last Updated : 29 Jun, 2019 03:45 PM

 

Published : 29 Jun 2019 03:45 PM
Last Updated : 29 Jun 2019 03:45 PM

துளி உப்பின் சுவைக்குப் பின்னால்...தூத்துக்குடி உப்பளத் தொழிலும், தொழிலாளர்களும் சொல்லும் வேதனைக் கதைகளின் ஆவணம்

உப்பில்லாத பண்டம் குப்பையிலே.. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.. என்றெல்லாம் நம்மூரில் உப்பு சார்ந்த முதுமொழிகள் நிறையவே இருக்கின்றன.

ஆனால், துளி உப்பின் சுவைக்குப் பின்னால் மிகக் கடினமான உழைப்பு, அதற்கேற்ற ஊதியம் இல்லாத உழைப்பாளரின் சோகம், உப்பளம் தரும் உடல் உபாதைகளால் அவர்கள் வாடும் பரிதாபம், பெரும் நிறுவனங்கள் செய்யும் சுரண்டல் என்று கண்டுகொள்ளப்படாத பல்வேறு கடுமையான விஷயங்கள் இருக்கின்றன.

இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி அதிகமாக செய்யப்படும் நகரம் தமிழகத்தின் கடலோர மாவட்டமான தூத்துக்குடி. தமிழகத்தில் தூத்துக்குடி, மரக்காணம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. இவற்றிலும் தூத்துக்குடிதான் மிக அதிகமான அளவு உப்பு உற்பத்தி செய்கிறது.

ஆனால் இங்குள்ள உப்பளத் தொழிலாளர்களின் நிலை? உப்பளங்களால் நிலத்தடி நீர் மாசு, அதனால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு, குடிநீர் தட்டுப்பாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி பெண்கள் பற்றி அதிகம் பேசப்படாமலேயே இருக்கிறது.

ஒருவகையில், உப்பளங்கள், உப்பளத் தொழிலாளர்கள் பற்றி போதிய அளவு ஆவணப்படுத்தாதும்கூட குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

 

 

 

அண்மையில் முத்துநகரமான தூத்துக்குடிக்குச் சென்றபோது உப்பளத் தொழில் நடக்கும் இடங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலில் உப்பளங்களைப் பார்த்தபோதே அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலை என்னவென்பதை மேலோட்டமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

அதன் நிமித்தமான தேடலில் உப்பளங்கள் பற்றியும் உப்பளத் தொழிலாளர்கள் பற்றியும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டிய ஆழமான பிரச்சினைகள் தெரியவந்தன. தி இந்து தமிழ் திசை இணையதளத்தில் உப்பளம், உப்பளத் தொழிலாளர்கள் அவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் பற்றி ஆவணப்படுத்த முயன்றிருக்கிறோம்.

கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகிவிடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் உப்பளங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.

உப்பு உற்பத்தியும் தமிழகமும்..

சர்வதேச புள்ளிவிவரங்களின்படி உலகளவில் சீனாவே உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 2018 நிலவரப்படி சீனா 68,000 மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்துள்ளது. இதே ஆண்டில் அமெரிக்கா 42,000 டன் உப்பும், இந்தியா 29,000 டன் உப்பும் உற்பத்தி செய்து முறையே உலகளவில் உப்பு உற்பத்தியில் 2, 3-ம் இடங்களில் உள்ளன.  இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்து தமிழகம் தான். அதுவும் தூத்துக்குடிதான் உப்புக்கு பிரசித்தி.

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடித் தொழில்களுக்கு அடுத்ததாக உப்புத் தொழில் உள்ளது. இங்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன.

வேம்பார், குளைச்சல், தருவைகுளம், முத்தையாபுரம், முள்ளங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.  இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி பணிகள் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களும் தான் உப்பு உற்பத்தி உச்சத்தை தொடும் காலம். 

உப்பு உற்பத்தி உச்சத்திலிருக்கும் ஜூன் மாதத்தில் உப்பளத் தொழிலாளி சாமியிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேச நேர்ந்தது. நம்முடன் தொலைபேசியில் பேசிய உப்பளத் தொழிலாளிகள் அனைவருமே தங்கள் உண்மையான பெயர்களை வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேசினார்கள். சாமிக்கு வயது 56.

அவர் நம்மிடம் பேசியதாவது:

‘‘30 வருசமா இங்கதான் வேலை. காலைல 5 மணிக்கெல்லாம் வேல செய்ய ஆரம்பிச்சிடுவோம். பாத்தி கட்டுறது, உப்பை காயவைக்கிறது, வெட்டி எடுத்து குவிச்சு வைக்கிறது, லாரியில் லோடு ஏத்துறதுன்னு எல்லா வேலையும் செய்வேன். ஆனா எங்களுக்கு இந்த வேலைல எந்த பாதுகாப்பும் இல்ல. வெயில் காயிறப்ப உப்பளத்தப் பார்த்து கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வரும். பார்வைல கோளாறு எல்லாம் வந்து ரொம்ப நாளாயிடுச்சு. காலெல்லாம் பொத்தல் விழுந்திடும். பூட்ஸ் எல்லாம் கிடையாது. அதனால புண் எரிஞ்சாலும் அப்படியேதான் வேலை.

கூலின்னா பாத்தீங்கன்னா 300 ரூபாய் வரைக்கும் கெடைக்கும். பொம்பளைங்களுக்கு 200 ரூபாய் தருவாங்க. அவுங்க சிலரு பேக்கிங் வேலையும் செய்வாங்க. இந்த உப்பளத்துல நாங்க செத்து விழுந்தாலும்கூட எங்களுக்குன்னு எந்த ஆதரவும் இல்ல. இந்த நிலமெல்லாம் மத்திய சர்க்கார்தான் குத்தகைக்கு விட்டிருகாங்க.

எங்க முதலாளிங்க 15, 20 வருஷம்னு குத்தகைக்கு எடுத்து எங்கள வேல வாங்குறாங்க. சின்ன முதலாளிகளும் இருக்காங்க. அவுங்க பெரியவுகக்கிட்ட இருந்து சப் லீஸ் வாங்குவாக. யார் யாரோ என்னென்னவோ செய்தாலும் எங்க நெலம எதுவும் மாறல. 30 வருஷமா கூலிக்காகவும், பாதுகாப்புக்காகவும் நானும் கோஷம் போட்டுகிட்டுத்தான் இருக்கேன். இங்க எதுவுமே மாறல’’ என்றார்.

 

அவருடைய பேச்சு ஆண்டாண்டு காலமாக உப்பளத் தொழிலாளர்களின் நிலைமையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதற்கான சாட்சி. சாமியைப் போல் அங்கிருக்கும் பலருக்கு சொல்வதற்கு சோகக் கதைகள் இருக்கின்றன. உப்பளத்தால் கண் நோய் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, தோல் வியாதிகள், மூச்சுகுழாய் வியாதிகள் என பரிதாபமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களும் இருக்கின்றன.

தூத்துக்குடி வேம்பார் பகுதியைச் சேர்ந்த ராக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சைக்கும் சரிவர சென்றுவர இயலாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடனேயே உப்பளத்தில் வேலை செய்த அவரது மகன்கள் இருவரும் இப்போது திருப்பூர் பனியன் கம்பெனி பக்கம் கூலி வேலைக்குச் சென்றுவிட்டனர். 

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுக்கு சுவை சேர்க்கும் தொழிலாளர்களின் நிலை இவ்வளவு பரிதாபமானதாக இருக்கும் என்று என்றாவாது நாம் நினைத்திருப்போமா? உப்பளத் தொழிலாளர்கள் மட்டுமல்ல அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலரும் இத்தகைய நெருக்கடியில்தான் இருக்கின்றனர்.

இது குறித்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்:

1991-ம் ஆண்டில் உலகமயமாதல் கொள்கை வரும்வரை உப்பளங்களை மத்திய அரசே குத்தகைக்கு விட்டுவந்தது. அதன்பின்னர்தானே தனியாரே உப்பளங்களுக்காக நிலங்களை வாங்கிப் பயன்படுத்துவது அதிகமானது. பெரும் முதலாளிகளின் வருகைக்குப் பின்னர் விளிம்புநிலை தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு கடுமையான வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

நீங்கள் நேரில் பார்த்ததாகச் சொல்லும் வேம்பார், தருவைக்குளம் உப்பளங்கள் எல்லாம் தூத்துக்குடியின் வடபகுதியில் உள்ளவை. இங்கு கடல்நீரில் இருந்து உப்பு தயாரிக்கப்படுகிறது. தென் பகுதியில் போர் வாட்டர் மூலம் உப்பு தயாரிக்கப்படுகிறது.

உப்பளங்களை சமன் செய்யும் வேலையை வெறும் கால்களைக் கொண்டே செய்ய வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் எல்லாம் கம் பூட், கண்ணாடி, தலைக்கு தொப்பி என உப்பளத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இங்கும் உப்புத் தீர்வை சட்டம் அதையே சொல்கிறது. ஆனால், தனியார் நிறுவன முதலாளிகள் அவற்றையெல்லாம் கொடுப்பதில்லை. இதனால் உப்பள ஊழியர்களுக்கு வெப்பம் சார்ந்த நோய்களின் தாக்கம் அதிகமாக ஏற்படுகிறது.

வண்டுகளில் விளையும் உப்பை பெண்கள் சுமந்து சென்று சேர்க்கின்றனர். ஒரு பெண் ஒரு நாளைக்கு சராசரியாக 250 உப்பு சட்டிகளை சுமக்கிறார். ஒரு உப்புக் சட்டியின் எடை 20 முதல் 22 கிலோ வரை இருக்கும். ஒற்றையடிப் பாதையில்தான் பெண்கள் அதனை சுமக்கின்றனர். இதனால், பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு ஏற்படுகிறது.

 

 

ஆண், பெண் இருபாலருக்குமே கண் நோய், சிறுநீரக நோய், கால்களில் பொத்தல் விழுவது போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

இந்தத் தொழிலாளர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. கழிப்பிட வசதி செய்து தரப்படுவதில்லை. குடிதண்ணீரும் அவர்களே கொண்டு செல்கின்றனர். அதுவும்கூட உப்பளக்காற்றால் அதன் இயல்பான தன்மையை இழந்துவிடுகிறது. உப்பளக் காற்றால் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.

அவ்வப்போது இவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும். ஆனால், அவை நடத்தப்படுவதில்லை. நாங்கள் தனியார் மருத்துவர்களைக் கொண்டு அவ்வப்போது முகாம் நடத்துவதுண்டு அப்போதெல்லாம் இந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வரும்.

பொதுவாக உப்பளத் தொழிலாளர்கள் இடுப்பைச் சுற்றி தண்ணீர் பாட்டிலைக் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பது நலம் என்று மருத்துவர்கள் ஒவ்வொரு முறையும் அறிவுறுத்திச் செல்வார்கள். ஆனால், பணியின்போது அது இடையூறாக இருக்குமென்பதால் அதனை அவர்கள் பின்பற்றுவதில்லை.

தனியார் நிறுவனங்கள் பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுத்தாலே இந்தத் தொழிலாளர்கள் உடல் உபாதைகளிலிருந்து பெருமளவில் நன்மையடைவார்கள். சிறுநீரகப் பிரச்சினைக்கு அடுத்தபடியாக அவர்களுக்கு அதிகம் ஏற்படுவது கண் நோய். சுற்றிலும் வெள்ளை நிறம், சிறுமணிகளில் ஊடுருவி தெறிக்கும் ஒளிக்கதிர் அவர்களின் ரெட்டினாவை பதம் பார்த்துவிடுகிறது. சொல்லப்போனால் தொழில் சார்ந்த அபாய சூழல் (Occupational Hazard) அதிகமாக உள்ள தொழில் உப்பளத் தொழில்தான்.

 

 

பாதுகாப்பு உபகரணங்களை வழங்க உப்பளத் தொழிலாளர்களுக்கு என சிறப்பு மருத்துவமனை வேண்டும், உடல் நலன் குன்றிய நாட்களில் விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும், உப்பளத் தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருக்கிறது. குஜராத், தமிழகத்தில் வேதாரண்யம் போன்ற பகுதிகளில் உள்ள உப்பளங்கள் எல்லாம் அமைப்பு சார்ந்த தொழிலாக நடைபெறுகிறது. இதை முறைப்படுத்த வேண்டும். மத்திய கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தினால் உப்பளத் தொழிலாளர்களுக்கு பிஎஃப் போன்ற நலன் கிட்டும்.

அதுமட்டுமல்ல உப்பளத் தொழிலாளர்களுக்கு 6 மாதம் மட்டும்தான் வேலை இருக்கும். மழை காலத்தில் வேலை இருக்காது. இப்போதெல்லாம் காலநிலை மாற்றத்தால் பருவம் தவறி மழை பொழிகிறது. இதனால், இவர்களுக்கு இன்னும் நெருக்கடி அதிகமாகிறது. உப்பளத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை பணி காலத்தில் ஒரு நாள் மழை என்பது அழிவுக்கு சமம், 5 நாள் மழை பெய்தால் பேரிடருக்குச் சமம்.

மழைக்காலங்களில் நிவாரணத் தொகையாக ரூ.5000 கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட கால கோரிக்கையாகவே இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளுமே இதனை தேர்தல் அறிக்கையில் மட்டுமே முன்வைக்கின்றன. தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உப்பளத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுப்பார் என நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐயோடின் உப்பும் அரசியலும்..

ஐயோடின் உப்பின் பின்னால் இருக்கும் அரசியல் வணிகம் குறித்தும் கிருஷ்ணமூர்த்தி விரிவாகப் பேசினார். உப்பில் ஐயோடின் சேர்க்கப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றி கேட்டபோது அதிரவைக்கும் அரசியல்தான் அவரிடமிருந்து நமக்குப் பதிலாக வந்தது.

"தமிழ்நாட்டில் மொத்தம் 13 கடற்கரை மாவட்டங்கள் இருக்கின்றன. கடல் காற்றிலேயே மனிதர்களுக்குத் தேவையான ஐயோடின் கிடைத்துவிடும். இதுதவிர தமிழக மக்களில் பெரும்பாலானோர் கடல் உணவை உட்கொள்கின்றனர். கடல் உணவும் இயற்கையாகவே உடலுக்கு ஐயோடினைச் சேர்த்துவிடும். ஆனாலும், ஐயோடைஸ்ட் உப்பு என்பது இப்போது பிரபலமாகிவிட்டது. ரூ.5-க்கும் ரூ.10-க்கும் சிறு வியாபாரிகளிடம் உப்பு வாங்கிய காலம் மலையேறி கம்பெனி லேபிள்களில் விற்கப்படும் உப்பு ரூ.40 வரை வியாபாரமாகிறது. இங்கு உள்ள தனியார் தொழிற்சாலைக்கு பெரும் நிறுவனங்களில் லேபிள் அடங்கிய பைகள் லட்சக்கணக்கில் வந்துவிடும்.

ஆலையில் ஐயோடின் சேர்க்கப்பட்ட உப்பு அவற்றில் நிரப்பப்படும். கல் உப்பிலேயே எல்லாவிதமான தாதுக்களும் அடங்கியிருக்கின்றன. மேலும் நம் நாட்டு சமையலிலேயே உப்பு சேர்த்து சமைப்பதால் நமக்கு மேஜை உப்பின் அவசியம் அதிகமில்லை. ஆனால், மேஜை உப்பையே சமையலுக்கும் பயன்படுத்த வைத்து வணிக நிறுவனங்கள் கல்லா கட்டியிருக்கின்றன.

சைக்கிளின் கேரியரில் சாக்கு மூடையில் கல் உப்பு வைத்து விற்கும் வியாபாரியும் அழிந்துவிட்டான். ரூ.10-க்கு விற்கப்படும் கல் உப்பு பாக்கெட்டுகளை வாங்குவோரும் குறைந்துவிட்டனர். கல் உப்பில் தாதுக்கள் நிறைவாகவே உள்ளன. ஆனால், உப்பை ரசாயனமாக்கி அதன் சார்ந்த உடல் உபாதைகளையும் வரவழைத்திருக்கிறது இந்த அரசியல்" என்றார் கிருஷ்ணமூர்த்தி.

உப்பளங்களும் தருவை மீட்பும்..

உப்பளத் தொழில் சார்ந்த பிரச்சினைகளில் புறந்தள்ளிவிட முடியாத பிரச்சினை நிலத்தடி நீர் மாசு. வேம்பாரில் இருந்து இயங்கு PAD (Peoples Action for Developemt) என்ற அமைப்பின் மன்னார் சுற்றுச்சூழல் பிரச்சினை தொடர்பான பல்வேறு விவகாரங்களப் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார்.

அவர் பேசியதிலிருந்து..

பெரியசாமிபுரம் தொடங்கி வேம்பார் வழியாக மூக்கையூர் வரை 30 கி.மீ. தூரத்திற்கு வளமான பகுதியாக இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்னதாக குண்டாறு மலட்டாறு வேம்பார் தண்ணீர் பாய இந்தப் பகுதியில் வாழையும், காய்கறியும் செழித்து வளர்ந்தது. ஆனால், உப்பளங்கள் பெருகப் பெருக சால்ட் பேன் (SaltPan) கழிவானது தருவைகளை ஆக்கிரமித்தது. தருவை என்பது இயற்கையான குளம் போன்ற அமைப்பு. மழைக்காலங்களில் இவற்றில் மழைநீர் தேங்கும். சலனமில்லாமல் நிற்கும் இந்த நீர் நிலத்தடி நீரின் ஆதாரமாக இருக்கும். அத்துடன் மெல்ல மெல்ல கசிந்து கடலிலும் கலக்கும். இதனால் கடலின் வளமும் செழிப்பாக இருக்கும்.

 

ஆனால், தனியார் உப்பளங்கள் தருவைகளை ஆக்கிரமித்தன. அதனால் இந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 12 பஞ்சாயாத்து தலைவர்களையும் கொண்டு தருவை மேலாண்மை குழு ஒன்று அமைத்தோம். உப்பளங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தருவைகளைக் கண்டறிந்தோம். இப்போது தருவை மீட்புக்கான திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்.

தருவைகள் அழிக்கப்பட்டதாலேயே வேம்பார் பகுதியில் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரித்திருக்கிறது. ஏற்கெனவே மழை இல்லாததால்  தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தருவைகள் அழிப்பு நிலத்தடி நீரை வெகுவாகப் பாதித்துள்ளது. இதன் தாக்கத்தை நேரடியாக பெண்கள்தான் அதிகம் அனுபவிக்க வேண்டியுள்ளது.

இங்கு பார்த்தீர்கள் என்றால், பெண்கள் ட்ராலிகள் மூலம் ஒரே நேரத்தில் 5 குடங்களில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு செல்லும் காட்சிகள் மிகவும் சாதாரணம். இயற்கையின் பேரிடர் எதுவாக இருந்தாலும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமாகத் தான் இருக்கிறார்கள். பெண்களின் நலனை கருத்தில் கொண்டும் பேட் அமைப்பு தருவை மீட்பில் இறங்கியது எனக் கூறுகிறார் மன்னார்.

உப்புதானே என்று நினைத்திருபோமேயானால், உப்பின் பின்னர் எத்தனை எத்தனை பேசப்படாத பிரச்சினைகள் இருப்பதை இப்போதாவது உணர்ந்து கொள்வோம்.

தொடர்புக்கு:

bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x