Published : 26 Aug 2017 10:12 AM
Last Updated : 26 Aug 2017 10:12 AM

பிரமாதம் பிரேம் ஆனந்த்: பனை வளர்க்கும் பொறியியல் பட்டதாரி

டித்து முடித்ததும் பெருநகரங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் பிழைப்பு தேடி படையெடுக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், வித்தியாசமாய் தெரிகிறார் பிரேம் ஆனந்த். பொறியியல் பட்டதாரியான இவர், கிடைத்த வேலையையும் உதறிவிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பனை மரங்களை ஊரெங்கும் விதைத்து வருகிறார்.

பெரம்பலூர் மாவட்டம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். 2011-ல் பொறியியல் படிப்பை முடித்த இவருக்கு பெங்களூருவில் வேலையும் கிடைத்தது. ஆனால், அந்த வேலையில் மனது நிலைக்கவில்லை; ஒரே ஆண்டில் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டார். கிராமத்துக்கு வந்ததும் இயற்கை விவசாயத்தில் இறங்கினார். இப்போது, 10 ஏக்கரில் 6 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை வழி விவசாயம் செய்து வருகிறார்.

பனை மரங்கள் நிறைந்த அகரம் கிராமத்தில் செங்கல் சூளைகளும் அதிகம். அதனால் இங்கே, செங்கல் சூளைகளுக்காக பனைகளை சர்வசாதாரணமாய் வெட்டிச் சாய்ப்பார்கள். இதை தடுக்க நினைத்த பிரேம் ஆனந்த், பனை மரங்களின் பயன்கள் குறித்து பொது மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதுடன், அழிவின் விளிம்பில் இருக்கும் பனையை பரவலாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

இவருக்குச் சொந்தமான வயல்களில், 50 வயதைக் கடந்த, வளமாகக் காய்க்கக்கூடிய 218 பனைமரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் ஒவ்வொரு பனையும் சராசரியாக 600 காய்கள் வரை காய்த்தன. இவற்றை காசுக்கு விற்க விரும்பாத பிரேம் ஆனந்த், அவற்றை அப்படியே பழுக்கவிட்டு விதை ஆக்கினார். இப்படிச் சேகரிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரம் பனை விதைகளை நீர் நிலைகள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் விதைத்தார். திருச்சி - சென்னை நான்குவழிச் சாலையில் பெரம்பலூர் பகுதியில் கடந்த ஆண்டு ஒன்பதாயிரம் பனை விதைகளை விதைத்தார். அவற்றில் பல இப்போது முளைவிட்டு வளர ஆரம்பித்திருக்கிறது.

அதேபோல் இந்த ஆண்டும் காய்களை பறிக்காமல் விட்டு விதைகளாக்கினார். அப்படிச் சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகளை பல்வேறு மாவட்டங்களுக்கு இலவசமாக அனுப்பியிருக்கிறார் பிரேம். இன்னும் 30 ஆயிரம் விதைகளை அனுப்பக்கேட்டு இவருக்கு கோரிக்கை வந்துள்ளதாம். அவற்றையும் அனுப்பி வைப்பதற்கான முயற்சியில் இருக்கிறார் பிரேம் ஆனந்த். பனையை பரவலாக்கும் தனது முயற்சி குறித்துப் பேசிய பிரேம் ஆனந்த், “பனை தமிழ் மண்ணின் பாரம்பரிய மரம். அதன் அருமை தெரியாமல் அழித்து வருகிறோம். பனை மரங்கள் வறட்சியைத் தாங்கி வளரும், மண் அரிப்பைத் தடுக்கும். விவசாயத்துக்கு நன்மை பயக்கும் பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் வாழ்விடம் பனை மரம். தனது சல்லி வேர் மூலம் நீரை உறிஞ்சி நிலத்தின் அடியில் சேமிக்கும். பனையிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே நமக்குப் பலன் தருகின்றன.

அரசும் முன்வரவேண்டும்

எனவே, இப்படிப்பட்ட கற்பகத் தருவை தமிழகம் முழுவதும் மேலும் பரவலாக்க வேண்டும். இதற்காக துண்டுப்பிரசுரம் அச்சடித்து, நான் போகும் இடமெல்லாம் மக்களிடம் கொடுத்து பனை மரங்களை வளர்க்கச் சொல்லி விதைகளையும் வழங்கி வருகிறேன். சுற்றுச் சூழலுக்கு நன்மை பயக்கும் பனை மரங்களை ஏராளமாக உருவாக்கினால் சூழலியல் சீர்கேடுகளை ஓரளவுக்காவது சரிசெய்யமுடியும்.

பனை வளர்க்க அதிகமான உடல் உழைப்பு எதுவும் தேவையில்லை. மழைக்காலத்தில் நீர்நிலைகளின் கரைகள், வரத்துக் கால்களை ஒட்டிய பகுதிகள், நெடுஞ்சாலை ஓரங்கள் உள்ளிட்ட இடங்களில் போகிற போக்கில் தூவி விட்டால் போதும் மூன்று மாதத்தில் வேர்பிடித்து தானாகவே வளர்ந்துவிடும். இந்த முயற்சியை என்னைப் போன்ற தனிநபர்கள் மட்டுமல்லாது, அரசாங்கமும் முன்னெடுத்துச் செய்தால், அது இயற்கைக்குச் செய்த பேருதவியாக இருக்கும்” என்று சொன்னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x