Published : 22 Aug 2017 02:41 PM
Last Updated : 22 Aug 2017 02:41 PM

யானைகளின் வருகை 18: கோயில் யானைகள் முகாம் வந்தது பின்னே; ஊழல் வந்தது முன்னே!

மேட்டுப்பாளையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தோலம்பாளையம். இங்கிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோபனாரி கிராமத்திற்கு 14 ஆண்டுகளுக்கு முன்பு மண்பாதையில் மினி பேருந்தே சென்று வந்தது. இந்த கோபனாரி தாண்டியதும் கேரள எல்லையில் மட்டத்துக்காடு வந்துவிடும். இந்த மட்டத்துக்காடுக்கும் கோபனாரிக்கும் இடையே கொடுங்கரை பள்ளம் ஓடை உள்ளது.

கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட இந்த பகுதியின் பெரும்பகுதி காட்டுயானைகள் நடமாடும் வனாந்திரப்பகுதிகள்தான். இதில் குழியூர் பகுதியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த முட்புதர்காடுகள் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமான வெள்வேலன், கருவேலன், முசில் எனப்படும் ஊஞ்சை, அத்தி, கராச்சி, இண்டு முள் உள்ளிட்ட பல முக்கிய தாவரங்களும் உள்ளன.

இவைதான் இங்குள்ள யானைகளுக்கு விருப்பமான உணவாகவும் விளங்கி வருகின்றன. யானைகள் உடலில் பல் மற்றும் எலும்புகள் பலமானவையாக அமைவதற்கு காரணமும் இந்த தாவரங்களே என்பது சூழல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கும் தகவல்கள். அப்படிப்பட்ட இந்த இடத்தில் சாலை அமைத்து பஸ் விட தயாராகியிருந்தனர் அதிகாரிகள். அதை எதிர்த்து அப்போதே சில தன்னார்வ அமைப்புகள் அறிக்கை போர் நடத்த ஆரம்பித்தனர். ஆனால் ரோடு வேலை பாட்டுக்கு நடந்து கொண்டே இருந்தது.

'இங்கே பெரிதாக ஊர்களும் இல்லை. என்றாலும் அரசியல் செல்வாக்கால் இங்குள்ள ஆளுங்கட்சி பிரமுகர்கள் வனத்துறை இயக்குநரகத்துக்கே கடிதம் எழுதி அனுமதி வாங்கி விட்டனர். 'இது வெறும் முள்ளுக்காடுதான்!' என்று சொல்லி அனுமதி வாங்கியதால், 'யானைகள் நடமாடும் காடு!' என்று நாங்கள் சொல்லும் கோரிக்கை எடுபடுவதில்லை!' என அங்கலாய்த்தனர் அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓசை சூழல் அமைப்பினர்.

இந்த அமைப்பை சேர்ந்த ஞானகுரு, காளிதாசன் ஆகியோர் இதைப் பற்றி குறிப்பிடும்போது ரொம்பவுமே உணர்ச்சிவசப்பட்டனர்.

'இங்கு சாலை அமைக்கப்பட்டால் காடு இரண்டாக பிரிக்கப்பட்டுவிடும். வனவிலங்குகள் சுற்றித்திரியும் ஏரியாவும் குறுகி விடும். இந்த சாலை கேரளாவுக்கான வழித்தடமாகவும் (ஆனைகட்டி, தாசனூர்) ஆகிவிடுவதால் இருமாநில போக்குவரத்தும் அதிகரித்துவிடும். ஏற்கெனவே பாலக்காடு கணவாய் வழியாக மட்டுமல்லாது, ஆனைகட்டி, முள்ளி என இருசாலைகள் கேரளாவிற்குள் செல்கின்றன. இப்போது மூன்றாவதாக சாலை உருவானால் மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் வனப்பகுதியிலிருந்து மரக் கடத்தல்கள் அதிகரிக்கும். வனவிலங்குகள் வேட்டைகளும் மிகுதியாகும். கடத்தல்காரர்களுக்கும் வசதியாகிவிடும்.

இது மட்டுமல்ல இங்கே பக்கத்தில் உள்ள இன்னொரு பகுதியான கோவனூர்-பாலமலையிலும் (5கிலோமீட்டர் தூர வனப்பகுதி) ரோடு போட முயற்சி நடக்கிறது. பாலமலையில் ஒரு கோயில் உள்ளது. அதற்கு பூஜை செய்ய சில குருக்கள் குடும்பங்கள் உள்ளன. மற்றபடி அந்த ஊரில் பெரிய குடியிருப்புகளோ, ஜனங்களோ இல்லை. ஆனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக ரோடு போடுவதாக சொல்கிறார்கள். இதை விட கொடுமை மேட்டுப்பாளையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லிங்காபுரம்- காந்தவயலில் போடப்பட்டுள்ள ரோடுதான்.

600 மீட்டர் தூரம் வரை வனத்துறைக்கு சொந்தமான இடமுள்ளது. அதன் சுற்றுப்பகுதியும் பெரும்பாலும் வனப்பகுதிதான். அப்பகுதியில் பவானி ஆறும் குறுக்கிடுகிறது. இங்கு சாலை அமைத்தால் வனவிலங்குகளுக்கு ஆபத்து; அவற்றால் நாம் குடிக்கும் குடிநீருக்கும் ஆபத்து என்று வனத்துறையும், நாங்களும் எதிர்ப்பு காட்டுகிறோம். ஆனால் தொகுதி எம்.எல்.ஏ இந்த விஷயத்தில் தலையிட்டு அழுத்தம் கொடுத்ததால் ரோடே போட்டு முடித்துவிட்டார்கள். இதில் என்னதான் செய்வது?' என அங்கலாய்க்கவும் செய்தனர்.

இதைப்பற்றி அப்போதைய வனத்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசியதில், 'கோவனூர்-பாலமலை, தோலம்பாளையம்-கோபனாரி சாலைகளுக்கான அனுமதி குறித்த எங்கள் ஆய்வறிக்கையை அரசுக்கு முறைப்படி சமர்ப்பித்து விட்டோம். அதுபற்றி விவரம் எதுவும் நாங்கள் சொல்ல முடியாது. லிங்காபுரம்- காந்தவயல் சாலையைப் பொறுத்தவரை அது அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. அதில் வெறும் நானுாறு மீட்டர் தூரமே வனத்துறைக்குள் வருகிறது. அதனால் வனத்திற்கோ, வனவிலங்குகளுக்கோ எந்த ஆபத்துமில்லை என்பதால்தான் அனுமதி கொடுக்கப்பட்டது!' என்று விளக்கம் கொடுத்தார். அதையே அரசியல் தலையீடு குறித்து அந்த தொகுதி எம்எல்ஏவிடம் கேட்டபோது, 'இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தாதீர்கள். இதில் என் தலையீடு ஏதும் இல்லை. அந்த பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைக்காக இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதில் லிங்காபுரம்-காந்தவயல் சாலை மட்டுமே போடப்பட்டிருக்கிறது. மற்றவை வனத்துறை அனுமதிக்காக காத்திருக்கிறது!' என்றார் படபடப்புடன்.

எதிர்ப்பு கிளம்பியும், அதை மீறி, இந்த ரோடுகள் போடப்பட்டும், அதை மறுத்து எம்.எல்.ஏ படபடத்து பேட்டி கொடுத்த சம்பவம் நடந்தும் 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்குப் பார்த்தால் இந்த சாலைகளில் இருமருங்கும் உள்ள கிராமங்கள் தற்போது அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

முன்னெப்போதும் இல்லாத அளவு யானைகள் ஊருக்குள் படையெடுப்பதும், விளைநிலங்களில் புகுந்து வாழை, சோளம், தென்னை போன்ற பயிர்களை சேதப்படுத்துவதும், காட்டு யானைகளுக்குப் பயந்து மாலையிலேயே மக்கள் வீட்டுக்குள் புகுந்து முடங்குவதும், அதிகாலையில் எழுந்து வெளியே செல்ல பயப்படுவதும், அதை மீறி செல்பவர்கள் காட்டு யானைகளால் மிதிபட்டு சாவதும், இப்பகுதியில் உள்ள ரேஷன் கடைகள், வீடுகள் யானைகளால் சூறையாடப்படுவதும், யானைகள் மின்வேலியில் சிக்கியும், உடல் உபாதைகளால் இறப்பதும் தொடர்கதையாகி வருகின்றன. யானைகள் கிராமங்களில் ஒவ்வொரு திக்கிலும் கிளம்பி வர இது மட்டும்தான் காரணமா? நிச்சயம் இல்லை. இதோ அடுத்து வருகிறது தமிழக அரசு நடத்திய கோயில் யானைகள் முகாம் குளறுபடிகள்.

யானைகள் என்றால் மிகப் பிரியம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு. அதை நிரூபிப்பதாக இருந்த சம்பவம் நிறைய என்றாலும் குருவாயூர் கோயிலுக்கு கிருஷ்ணன் என்ற குட்டி யானையை அவர் பரிசாகக் கொடுத்ததையே பலரும் குறிப்பிடுவர். 1991 முதல் 1996 வரையிலான ஆட்சியில் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996 முதல் போடபட்ட வழக்குகளில் சிறை சென்று, ஜாமீனில் விடுதலையாகி இருந்த அவர் திரும்ப ஆட்சியை பிடிப்பாரா இல்லையா என்பதே கேள்விக்குறியாக இருந்து வந்தது.

சிறை சென்று வெளிவந்த பிறகு பெரும்பான்மையான நாட்களில் கோயில் கோயிலாக சென்று பிரார்த்தித்தார். தொடர்ந்து கிடைத்த 2001 வெற்றியின் காரணமாக குருவாயூர் கோயிலுக்கு குட்டி யானையை பரிசளித்தார். அந்த நேரத்தில் அக்கோயிலில் சிலர் ஜெயலலிதாவுக்கு கறுப்புக் கொடி காட்ட போலீஸ் தடியடியும் நடந்தது. அதுவெல்லாம் சர்ச்சைகளாக கிளம்பியது. அதையெல்லாம் பொருட்படுத்தாத ஜெயலலிதா முதுமலையில் கோயில் யானைகளுக்கான முகாமை 2003 ஆம் ஆண்டில் அறிவித்தார். அதுவும் பெரும் சர்ச்சைப் பொருள் ஆனது.

அதிலும் முதுமலை, கூடலூர் பகுதியில் உள்ள சூழலியாளர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் அப்போது 28 வளர்ப்பு யானைகள் இருந்தன. அவை எல்லாமே ஏற்கெனவே நாம் பார்த்த கும்கி யானையைப் போலவே அடர் வனத்தில் மக்கள் வசிப்பிடங்களில் புகுந்து அழிச்சாட்டியம் செய்ததில், மனிதர்களை கொன்றதில் பிடிக்கப்பட்டு, பாகன்களால் பழக்கப்பட்டு பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருபவை. இதில் பல யானைகள் இங்கேயே குட்டி போட்டு அதையும் பாகன்களே வளர்த்துள்ளனர்.

இவை முகாமில் இருக்கும் யானைகள் என்றாலும் கூட அனைத்துமே காட்டு வாழ்க்கையில் ஒன்றிப் போனவை. இப்படிப்பட்ட யானைகள் உள்ள இடங்களில் கோயில் யானைகள் கொண்டு வரப்பட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதுதான் அப்போது கிளம்பிய சர்ச்சை.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x