Published : 16 Aug 2017 11:01 AM
Last Updated : 16 Aug 2017 11:01 AM

சிதிலமடையுதே எம்.ஜி.ஆர். பிறந்த வீடு! - எங்கே போனார்கள் அவரது விசுவாசிகள்?

மிழகத்தில் ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி, டி.டி.வி. அணி என போட்டி போட்டுக்கொண்டு எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள். காரணம், அது இங்கே அவர்களுக்கான அரசியல் இருப்பிடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு சக்கராயுதம். அதேசமயம், கேரளத்தில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு கவனிப்பார் இல்லாமல் சிதைந்து கொண்டிருக்கிறது. அதை இந்த நேரத்தில்கூட கொண்டு நோக்க ‘எம்.ஜி.ஆர். விசுவாசி’ ஒருவருக்குக்கூட நேரம் இல்லை!

குண்டும், குழியுமாய் கிடக்கும் வீட்டின் முகப்புத் திண்ணை.. ‘நாங்கள் எப்போது வேண்டுமானாலும் விழுவோம்’ என மிரட்டும் இருபுறத்துச் சுவர்கள்.. வீட்டின் பின்புறம் ஒரு பாழும் கிணறு; அதுவும் இருக்குமிடம் தெரியாமல் செடி மண்டிக் கிடக்கிறது. வீட்டின் பின்புறச் சுவரும் சரியும் கண்டிஷன்.. வீட்டை ஒட்டியுள்ள கழிப்பிடத்தின் மீது மரம் விழுந்து ஓடுகள் சிதறிக்கிடக்கின்றன. கிட்டத்தட்ட பாழடைந்து கிடக்கிறது அந்த வீடு.

mgr_veedu_1.jpg எம்.ஜி.ஆர் இல்லம் முகப்பு 100
இனம் புரியாத சிலிர்ப்பு

முகப்பில் நுழைந்ததுமே அங்கே மாட்டியிருக்கும் எம்.ஜி.ஆரின் பழைய போட்டோ நம்மை வரவேற்கிறது. எத்தனையோ நெஞ்சங்களை வசீகரித்துப் போட்ட அந்த முகத்தைப் பார்த்ததுமே நமக்குள் இனம் புரியாத ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. ஆனால், அந்த வீட்டின் இப்போதைய நிலை அந்த சிலிர்ப்பைக்கூட சில நொடிகளில் சிதறடித்து விடுகிறது.

பாழடைந்த நிலையில் இருந்தாலும் இப்போது இந்த வீட்டுக்குள் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. அங்கு நான்கைந்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அங்கிருந்த பணியாளர்களிடம் மெல்லப் பேச்சுக் கொடுக்கிறோம். அவர்களும் வாஞ்சையுடன் அந்த வீட்டைப் பற்றிச் சொல்கிறார்கள். ”எம்.ஜி.ஆர். இருந்திருந்தா அவருக்கு இப்ப நூறு வயசு. அவரோட அம்மை சத்தியபாமாவோட அச்சனோட, அச்சன்ட வீடு இது. அப்படின்னா ஈ வீட்டுக்கு எந்தா வயசிருக்கும்? வெறும் மண்ணுவீடுதன்னே. அதான் பொல, பொலன்னு உழுந்துட்டிருக்கு!” என்று சொன்னார்கள் அங்கிருந்த பணியாளகள்.

பாலக்காடு ஜில்லா தத்தமங்கலம் புதுநகரத்திலிருந்து 5 கிலோ மீட்டரில் வடவனூர் வருகிறது. இங்குதான் இருக்கிறது எம்.ஜி.ஆர். வாழ்ந்த அந்த வீடு. இது சத்தியபாமாவின் பூர்வீக வீடு. வடவனூரில் யாரைக் கேட்டாலும் தலைவர் வீட்டை தப்பாமல் காட்டிவிடுகிறார்கள். விநாயகர் கோயில் மேடைக்கு எதிரே இருக்கும் ஒரு மாரியம்மன் கோயில். அதையொட்டி வரிசையாக மாடிவீடுகள் பளீரிடுகின்றன.

அதனிடையே கிளை பரப்பும் ஒரு சிறிய சந்துக்குள் நடந்தால் தன்னந்தனியாய் நிற்கிறது அந்த வீடு. வீட்டின் முகப்பிலுள்ள அறிவிப்புப் பலகை, ‘கேரள சர்க்கார் சாமுகிய நிதி வருஷி. பிளாக் கொல்லங்கோடு, பஞ்சாயத்து வடவனூரு. ஸ்தலம் கவுண்டத்தரா’ என மலையாளத்தில் பேசுகிறது.

இலங்கையின் கண்டியிலிருந்து கேரளம் வந்த எம்.ஜி.ஆர். குடும்பம், அவரது தாயின் பரம்பரை வீடான இங்கு தான் முதலில் குடியேறியது. இந்தச் சிறிய ஓட்டு வீட்டில்தான் எம்.ஜி.ஆர். தனது சிறு வயதைக் கழித்தார். அதன் பிறகு அவர் சென்னையில் செட்டிலானாலும் இந்த வீட்டை மறக்கவில்லை. தமிழக முதல்வராக வந்த பிறகுகூட அவ்வப்போது இங்கு வந்து போயிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு கோவை மாவட்டத்தின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இங்கு வந்து எம்.ஜி.ஆர். பிறந்த நாளைக் கொண்டாடி, நினைவு நாளை அனுஷ்டித்தார்கள். அந்த நேரங்களில் இங்கு அன்னதானம்கூட போட்டிருக்கிறார்கள்.

இடைப்பட்ட காலத்தில், இந்த வீட்டை எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக மாற்றப் போவதாகக்கூட சிலர் எடுத்துவிட்டார்கள். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. இப்போது இந்த வீட்டுப் பக்கம் கரை வேட்டிகள் யாரும் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. அவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நேரத்தில்கூட யாரும் இந்த வீட்டைத் திரும்பிப் பார்க்கவில்லை.

‘‘இந்த வீட்டில் சத்திய பாமாவின் உறவுக்கார பெண் மணி ஒருவரும் மனநலம் பாதித்த அவரது பேத்தியும் இருந்தார்கள். அந்தப் பெண்மணி இறந்த பிறகு, பேத்தியை எங்கோ காப்பகத்தில் கொண்டுபோய் சேர்த்துவிட்டார்கள். அதன் பிறகு சும்மாவே கிடந்த இந்த வீட்டில் ரெண்டு வருஷத்துக்கு முந்திதான் அங்கன்வாடி மையத்தைத் திறந்தார்கள். சுமார் 40 சென்ட் இடத்தோட இருக்கிற இந்த வீடு, எம்.ஜி.ஆர். அண்ணன் சக்கரபாணி பேருல இருக்கிறதா சொல்றாங்க” என்று தங்ளுக்குத் தெரிந்த விவரங்களைச் சொன்னார்கள் அங்கன்வாடி மையத்தில் இருந்தவர்கள்.

எல்லாத்தையும் மறந்துடுவாங்க

வடவனூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலரிடம் பேசியபோது, “4 வயசிலேயே எம்.ஜி.ஆர். இங்கிருந்து சிலோன் போயிட்டார். திரும்பி வந்ததும் அம்மாவ பார்க்கிறதுக்காக அடிக்கடி எம்.ஜி.ஆர். இங்க வந்திருக்கார். அந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் மருதூர் கோபாலமேனன் வீடு. அதெல்லாம் பழசாகி இடிச்சுட்டாங்க.

எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லிட்டு இந்த வீட்டுக்கு அப்பப்ப அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்னு வருவாங்க. வீட்டை விலைக்கு வாங்கி, நினைவு இல்லம் ஆக்கப் போறதாவும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் கட்டப்போறதாவும் சொல்லுவாங்க. இங்கிருந்து போனதும் எல்லாத்தையும் மறந்துடுவாங்க. ஜெயலலிதா இருந்தப்பக்கூட அப்பப்ப எம்.எல்.ஏ. மாருக வந்திருக்காங்க. அவரும் மரிச்ச பின்னாடி யாருமே இந்தப் பக்கம் வர்றதில்லை. அவங்களுக்கு இனிமே இங்க வர்றதால எந்தக் காரியமும் ஆகப்போற தில்லையே!” என்றனர்.

ஆமாம், அதுதானே உண்மை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x