Published : 21 Aug 2017 03:54 PM
Last Updated : 21 Aug 2017 03:54 PM

மக்கள் செல்வாக்கை உயர்த்திக்கொண்ட ஓபிஎஸ்- ஒரு பார்வை

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலும் ஆட்சியிலும் இரண்டாம் இடத்தில் மரியாதையுடன் இருந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவு பெரிதாக பேசப்பட்டாலும் அவர் தொடர்ந்து மக்கள் செல்வக்கை உயர்த்திக் கொண்டதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஒருவர் அதை திருப்பிக் கொடுத்ததாக வரலாறு இல்லை, ஆனால் சகோதரர் ஓபிஎஸ் முதல்வர் பதவியை என்னிடம் திருப்பித் தந்தவர் என ஜெயலலிதாவால் புகழப்பட்டவர் ஓபிஎஸ். அதனால்தான் ஜெயலலிதா இரண்டு முறை பதவி இழந்தபோது அவருக்கே முதல்வர் பதவியை அளித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவரது மறைவுக்குப் பிறகும் ஓபிஎஸ் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

எப்போதும் தன்னை ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக காட்டிக்கொண்டவர் ஓபிஎஸ். இதனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ் முதல்வராக பொறுப்பேற்ற போது பொதுமக்கள் அவரை ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் தனது பணியை ஆற்றிய ஓபிஎஸ் குறுகிய காலத்தில் தனது எளிமையான நடத்தையாலும், தமிழகத்தை பாதித்த குடிநீர் பிரச்சினை , விவசாயிகள் பிரச்சினை, ஜல்லிகட்டு பிரச்சினையை கையாண்ட விதம் அவருக்கு பெருமையைத் தேடித் தந்தது.

குறிப்பாக கிருஷ்ணா நதிநீர் பிரச்சினைக்காக ஆந்திராவுக்கே நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தியதும், ஜல்லிக்கட்டு பிரச்சினையில் டெல்லிக்கு சென்று பேசி அவசர சட்டத்தை நிறைவேற்றியதும் மக்கள் மத்தியில் ஓபிஎஸ்ஸின் மரியாதையை உயர்த்தியது. சிக்கலான நேரங்களில் உடனடி முடிவு, எளிமை, ஊடகங்களை தவிர்க்காமல் சந்தித்தது போன்றவை அவரது மதிப்பை உயர்த்தினாலும் மறுபுறம் அவர் சொந்தமாக முடிவெடுக்க முடியாதவர் என்ற விமர்சனமும் எழுந்தது.

திடீரென ஓபிஎஸ்ஸை அமைச்சர்கள் விமர்சனம் செய்ததும் அவரை நீக்கியதை பொறுமையோடு ஏற்றுக்கொண்டதை மக்கள் கோபத்தோடு பார்த்தனர். அதன் பின்னர் முற்றிலும் ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ் தலைவியின் சமாதி முன்பு தியானத்தில் அமர்ந்ததும், தான் தர்மயுத்தம் தொடங்கியதாக அறிவித்ததும் அவரது இமேஜை உயர்த்தியது. தனிப்பட்ட செல்வாக்கு என்பதைத் தாண்டி சசிகலா தரப்பின் மீதான மக்களின் கோபம் அவருக்கு ஆதரவாக மாறியது.

மறுபுறம் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் இருந்த தொண்டர்களும், சசிகலா தரப்பால் ஓரங்கட்டப்பட்டிருந்த நிர்வாகிகளும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக திரள கட்சி அணி ஓபிஎஸ் பக்கமும் , ஆட்சி எதிர் தரப்பு கையிலும் போனது. அதன் பின்னர் சசிகலாவுக்கு முதல்வர் பதவி கிடைக்காமல் போனதும், சிறைத்தண்டனை கிடைத்ததும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் அனைவரும் அறிந்ததே.

அப்போதும் ஒ.பி.எஸ் செல்வாக்கு சரியும் என ஆட்சியில் இருந்தவர்கள் நினைத்தனர். ஆனால் ஓபிஎஸ் சென்ற இடமெல்லாம் கூட்டம் சேர்ந்தது. 10 எம்.எல்.ஏக்களுக்கு மேல் யாரும் வராவிட்டாலும் எடப்பாடியை ஏற்றுகொள்ளாத கட்சித் தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் நின்றனர். ஆட்சி கையிலிருந்த போதும் தினகரன் அணியை எடப்பாடி அணியினர் ஒதுக்கியதும் அதன் பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகளும் ஓபிஎஸ்ஸுக்கே சாதகமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் தினகரன் அணியினரை ஒதுக்க ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற ஓபிஎஸ் பக்கம் எடப்பாடி அணியினர் இணைய ஆர்வம் காட்டினர்.

எடப்பாடி அணியின் பக்கம் இணைந்தால் அது தனது அணிக்கு எப்படி சாதகமாக இருக்கும் என்பதை நிதானமாக ஆராய்ந்து பின்னர் தன்னுடைய கோரிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய பின்னர் எடப்பாடி அணியுடன் தனது அணியை இணைத்துள்ளார். இந்த இணைப்புக்கு பின்னால் வேறு சில காரணங்கள் கூறப்பட்டாலும், ஒற்றுமையாக தனது அணியை கட்டிக்காத்து மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் தனது செல்வாக்கை வளர்த்து நினைத்ததை ஓபிஎஸ் சாதித்துள்ளார்.

அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்து மக்கள் செல்வாக்கு பெற்ற ஓபிஎஸ், கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டாலும் துவண்டு விடாமல் அவர் பாணியில் சொல்லப்போனால் தர்மயுத்தம் நடத்தி அதை தக்கவைத்துக்கொண்டார் என்றே சொல்லலாம்.

அதிமுக அணிகள் இணைப்பு சுமுகமாக முடிந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x