Published : 25 Aug 2017 13:13 pm

Updated : 25 Aug 2017 13:13 pm

 

Published : 25 Aug 2017 01:13 PM
Last Updated : 25 Aug 2017 01:13 PM

‘ப்ளூ வேல்’ - ஆஷிக்கைக் கொன்ற ஆன்லைன் விளையாட்டு?

உங்கள் மகனோ, மகளோ கையில் செல்போனுடன் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருக்கிறார்களா.. ஏதோ ஓர் ஆன்லைன் ‘கேம்’ல் லயித்திருக்கிறார்களா.. கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடமிருந்து தனிமைப்பட்டு தனக்குத்தானே பேசிக்கொள்கிறார்களா.. கை, காலை கீறி ரத்தம் வடித்துக் கொண்டும், மாடியிலிருந்தோ பாலத்திலிருந்தோ குதித்துத் தற்கொலை செய்து கொள்வது போல் போஸ் கொடுத்துக் கொண்டும் ‘செல்ஃபி’ எடுக்கிறார்களா..? இதெல்லாம் உங்கள் பிள்ளைகளிடம் தென்பட்டால், அவர்கள் ‘ப்ளூ வேல்’ (Blue Whale) விளையாட்டில் சிக்கியிருக்கிறார்கள்; அஜாக்கிரதையாக இருந்துவிடாதீர்கள். நீங்கள் விரைந்து செயல்பட்டால் மட்டுமே உங்கள் பிள்ளையை மீட்க முடியும். ஏனென்றால், இந்த விளையாட்டுக்கு வந்தவர்கள் செத்தே தீரவேண்டும் என்கிறது ‘ப்ளூ வேல்’ விளையாட்டின் இறுதி வடிவம். அதற்கு உதாரணம் கேரளத்தில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம்!

தற்கொலைக்குத் தூண்டும் விளையாட்டு


கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள பிராய்ரி பஞ்சாயத்துக்குள் உள்ளது பள்ளிக்குளம். இங்கு வசிக்கும் அஸ்மா பீவி என்பவரின் மகன் ஆஷிக். பாலக்காடு விக்டோரியா கல்லூரியில் பி.காம்., இறுதி ஆண்டு படித்து வந்தார். படிப்பில் கெட்டிக்காரராக இருந்த ஆஷிக், காதல் உள்ளிட்ட வேறெந்தப் பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்ளவில்லை. இந்த நிலையில், கடந்த மார்ச் 30-ம் தேதி, தனது வீட்டுக்குள்ளேயே அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தின் பின்னணிதான் இப்போது கேரளத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு ஒரு சில மாதங்களாகவே, ‘நான் இருந்தென்ன செய்யப்போகிறேன். தற்கொலை செய்யப்போகிறேன்!’ என்றெல்லாம் அடிக்கடி பிதற்றி வந்துள்ளார் ஆஷிக். இரவு நேரங்களில் ஆன்லைன் ‘கேம்’கள் விளையாடுவதும், அடிக்கடி தனிமை வயப்படுவதுமாய் இருந்திருக்கிறார். இதையெல்லாம், சுட்டிக்காட்டும் ஆஷிக்கின் அம்மா அஸ்மா பீவி, ‘ஆன்லைனில் வரும் ‘ப்ளூ வேல்’ எனப்படும் நீலத் திமிங்கில விளையாட்டுத்தான் எனது மகனை தற்கொலைக்குத் தள்ளிவிட்டது’ என இப்போது போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, மன உளைச்சலால் இறந்திருக்கலாம் என முன்பு விசாரணையை முடித்திருந்த போலீஸ், இப்போது, வேறு திசையில் விசாரணையை முடுக்கியிருக்கிறது.

கேரளத்தில் 5 பேர்?

இந்த விவகாரம் கேரள ஊடகங்களில் செய்திகளாக விரிந்ததை அடுத்து, திருச்சூரில், எர்ணாகுளத்தில், கோழிக்கோட்டில் என இதுவரை 5 பேருக்கு மேல் ‘ப்ளூ வேல்’ விளையாட்டில் சிக்கி தற்கொலை செய்து கொண்டிருப்பதாக கேரளத்தில் செய்திகள் சிறகடிக்கின்றன. இந்த நிலையில், ஆஷிக் விவகாரத்தில் என்னதான் நடந்திருக்கும் என்பதை அறிய அஸ்மா பீவியை நேரில் சந்தித்தோம்.

“கணவரை இழந்த எனக்கு இருந்த ஒரே நம்பிக்கை ஆஷிக் தான். எப்பவுமே, துறு துறுன்னு இருப்பான். படிப்புலயும் குறைசொல்ல முடியாது. எப்பவும் படிப்பு படிப்புன்னு இருக்கானேன்னு அக்கம் பக்கத்துலகூட ஆச்சரியப்படுவாங்க. அப்படிப்பட்டவனோட நடவடிக்கையில திடீர்னு சில மாற்றங்கள் தெரிஞ்சுது. செல்போன் வேணும்னு கேட்டுட்டே இருந்தான். காலேஜ்லருந்து வந்த ஸ்காலர்ஷிப் பணத்துலதான் அவனுக்கு செல்போன் வாங்கிக் குடுத்தேன். ஆனா, அந்த செல்போனே அவனுக்கு எமனா வரும்னு நான் கொஞ்சமும் நினைக்கல” என்று கலங்கிய அஸ்மா, தன்னைத் தேற்றிக்கொண்டு தொடர்ந்து பேசினார்.

மாடியில் ஏறி நின்னுட்டு..

“செல்போன் வந்ததுலருந்து தன்னோட ரூமைச் சாத்திக்கிட்டு, செல்போன்ல கேம் விளையாடிட்டே இருந்தான். சில நேரங்கள்ல தனக்குத்தானே போட்டோ எடுத்துக்குவான். ஏதாச்சும் கேட்டோம்னா பயங்கரமா கோபம் வரும். போன டிசம்பர் மாதம் தீடீர்னு ஒரு நாள், வீட்டு மாடியில ஏறி நின்னுட்டு, ’கீழ குதிக்கப் போறேன்’னு கத்துனான். அக்கம் பக்கத்துல இருக்கவங்க ஓடிவந்துதான் அவனை கீழ இறங்க வெச்சாங்க.

bluewhale3jpg அஸ்மா பீவி

அதுக்கப்புறம் ஒரு நாள், கத்தியால கையைக் கீறிக்கிட்டு, ‘நான் மரிக்கணும்; இருந்து என்ன செய்யப்போறேன்..’னு கத்தினான். அப்பவும் காப்பாத்தினோம். அதுக்கப்புறம் ஒருமுறை, கால் நரம்பை கீறிக்கிட்டு கத்தினான். அப்ப, ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயி சிகிச்சையளிச்சோம். இன்னொரு முறை, இரவு வேளையில் சுடுகாட்டில் போய் நின்னுட்டு கத்திருக்கான்.

இந்த நிலையில், நானும் அவனும் கடந்த மார்ச் 29-ம் தேதி, சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்காக கோயமுத்தூருக்குப் போயிருந்தோம். மறுநாள் காலையில, அவன் மட்டும் ஊருக்குத் திரும்பிட்டான். நான் கொஞ்சம் லேட்டா கிளம்பி வந்தேன். நான் வீடுவந்து சேர்ந்தப்ப சாயந்தரம் மணி 4.30. அப்ப, அவனோட ரூம் கதவு தாழிட்டுருந்துச்சு. கூப்பிட்டுப் பார்த்தேன். எந்த சத்தமும் இல்லைன்னதும் வீட்டின் புறத்தே போய் அவனோட ரூம் ஜன்னலைத் தட்டினேன்.

அது திறந்துடுச்சு. காதுல ஹெட் போன்ஸை மாட்டிக்கிட்டு கட்டில்ல நின்ன கோலத்துல இருந்தான் ஆஷிக். நின்னுட்டே செல்போன்ல பேசறானோ.. பாட்டுக் கேட்டுட்டு இருக்கானோ..?ன்னுதான் மொதல்ல நினைச்சேன். ஆனா, கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்தும் எந்த அசைவும் இல்லைன்னதும் எனக்கு படபடப்பு அதிகமாகிருச்சு. அந்தப் பதற்றத்தோட உள்ள எட்டிப் பார்த்தப்பத்தான், ஃபேன்ல கயித்தைப் போட்டு அவன் தூக்கு மாட்டிக்கிட்டு..” அதற்கு மேல் பேசவராமல் விம்மினார் அஸ்மா பீவி.

கை, காலை அறுத்துட்டு..

சற்று நேர மவுனத்துக்குப் பிறகு தொடர்ந்து பேசிய அஸ்மா சொன்ன தகவல்களைக் கேட்டு அதிர்ந்து போனோம். “மன அழுத்தத்துல பையன் தற்கொலை செய்திருக்கலாம்னு சொன்ன போலீஸ்காரங்க, அவனோட செல்போன் பத்தி பெருசா எதுவும் கேட்கல. எனக்குத்தான் மனசு கேக்கலை. மகனோட தற்கொலையில எனக்கும் என் உறவுகளுக்கும் சந்தேகம் இருந்துச்சு. அந்த நேரத்துலதான் இந்த, ‘ப்ளூ வேல்’ கேம் பத்தின செய்திகளைப் பார்த்தோம். ஆபத்தான இந்த ‘கேம்’ல, ஆன்லைன்லயே உத்தரவுகளைப் போடுவாங்களாம். ‘இங்கே நில்லு.. இப்படி படம் எடு.. அதை மெயிலில் அனுப்பு’ன்னு அங்கேயிருந்து ஆபத்தான உத்தரவு வருமாம். அதில் கடைசி செக்மென்ட்தான் இந்த தற்கொலை விளையாட்டாம்.

இதுல சிக்கிக்கிறவங்க, கை, காலை அறுத்துட்டு ரத்தத்தோட நின்னு போட்டோ எடுத்துப்பாங்களாம். ‘சாகணும், சாகப்போறேன்’னு சைக்கோ மாதிரி சொல்லுவாங்களாம். இப்படி மாறிப்போறவங்கள, கடைசியில தற்கொலையில கொண்டு போய் தள்ளிருவாங்களாம். இப்படிப்பட்ட விபரீத விளையாட்டுல சிக்கித்தான் என் பையனும் தற்கொலை செஞ்சிருக்கான்னு இப்பத்தான் தெரிய வருது.

செல்போனில் படங்கள்

இந்த ‘கேம்’ல சொல்ற மாதிரியான சில படங்களை ஆஷிக்கும் தனது செல்போனில் எடுத்து வெச்சிருந்தான். சில படங்களை ஃபிரெண்ட்ஸை விட்டும் எடுக்க வெச்சிருக்கான்” என்று சொன்னவர், அந்தப் படங்கள் சிலவற்றையும் நம்மிடம் காட்டினார். அதில் ஒரு படத்தில், இரண்டு கைகளிலும் ரத்தம் சொட்டச் சொட்ட ஆஷிக் கடல் அலைகளுக்குள் நிற்கிறார். இன்னொரு படத்தில், வகுப்பறையில் பெஞ்ச் மீது தலைகவிழ்ந்து அமர்ந்திருக்கிறார். மற்றொரு படத்தில் சாலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு வானத்தை பார்த்து கைகளை விரித்தபடி நிற்கிறார் ஆஷிக். இன்னும் சில படங்கள் போலீஸ் வசம் உள்ளதாம்.

தொடர்ந்து பேசிய அஸ்மா,“இந்தப் படங்கள் எல்லாமே ‘ப்ளூ வேல்’ கேமில் தனக்கு வந்த உத்தரவுகள்படியே ஆஷிக் எடுத்திருக்கிறான். போன மகன் திரும்பி வரப்போறதில்லை. ஆனா, இனி ஒரு புள்ளைக்கு இப்படி நடக்கக்கூடாது. அதுக்கு உண்டான நடவடிக்கைகளை போலீஸ் எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் புகார் தந்திருக்கிறேன்” என்றார். ஆனால், “இவர்கள் சொல்லும் புகார்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இருந்தாலும் அனைத்துக் கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறோம்” என்கிறது பாலக்காடு டவுன் போலீஸ்.

ஆஷிக் வழக்கின் விசாரணை ஒருபுறம் நடந்தாலும் இந்த விபரீத விளையாட்டை முடக்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் இன்னும் விபரீதமாகிவிடும்!

விளையாட்டை உருவாக்கிய ஃபிலிப் புடேக்கின்

இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் இந்த விபரீத விளையாட்டு ரஷ்யாவில் 2013-ல் உருவாக்கப்பட்டது. இதை மற்ற விளையாட்டுகள் போல டவுன்லோடு செய்ய முடியாது; ஆன்லைனில் மட்டுமே விளையாட முடியும். இந்த கேமில் இருப்பவர்கள் அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து ஆன்லைனில் வரும் வீடியோக் களைப் பார்க்க வேண்டும். இந்த விளையாட்டால் கடந்த 3 ஆண்டுகளில் ரஷ்யாவில் மட்டுமே 130 பேர் தற்கொலை செய்திருப்பதாக ஒரு தகவல் உண்டு. சீனா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த விளையாட்டு, தற்போது இந்தியாவிலும் விபரீதம் காட்ட ஆரம்பித் திருக்கிறது.

சமீபத்தில் மும்பையில் 14 வயது சிறுவன் ஒருவன், வீட்டின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறான். இந்த விளையாட்டை உருவாக் கிய ரஷ்யாவைச் சேர்ந்த ஃபிலிப் புடேக்கின் என்ற நபர் கடந்த ஆண்டே கைதுசெய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். இந்த விபரீத விளையாட்டை ஏன் உருவாக்கினாய் என்று அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, ’எந்தவித மதிப்பும் இல்லாத வர்களைத் தற்கொலை செய்துகொள்ள வைத்து சமூகத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். அதற்காகவே இந்த கேம் உருவாக்கினேன்’ என்று கூலாக சொன்னாராம் ஃபிலிப் புடேக்கின்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author