

தமிழக அரசியல் வரலாற்றில் அதிமுக அணிகள் இணைப்பு சமீப காலமாக பெரிதாக பேசப்பட்ட நிலையில் இரு அணிகளும் இணைந்துள்ளன. முட்டல் மோதல் இடையே இரு அணிகள் இணைந்ததன் பின்னணி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இணைவார்களா மாட்டார்களா என்ற பிரச்சினை பெரிதாக எழுந்த நிலையில் சுமுகமான முறையில் இணைப்பு நடந்துள்ளது. ஆனால் இதற்கு பின்னால் மிகப் பெரிய திட்டமிடல் காய்நகர்த்தல் நடந்துள்ளதாக அதிமுக தரப்பில் கூறுகின்றனர்.
ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பின்னர் அவர் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்ததிலிருந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது. தர்மயுத்தம் தொடங்கியதாக அறிவித்த ஓபிஎஸ்ஸுக்கு முதன் முதலில் ஆதரவு கொடுத்தது நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மதுசூதனன், பொன்னையன், பி.எச்.பாண்டியன் போன்ற மூத்த நிர்வாகிகளே.
அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளும் ஓபிஎஸ்ஸுக்கு 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்ததும். 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எடப்பாடி ஆட்சி அமைத்ததும் அனைவரும் அறிந்ததே. இதன் பின்னர் ஓபிஎஸ் தரப்புக்கு பெரிதாக எம்.எல்.ஏக்களோ மாவட்டச் செயலாளர்களோ வரவில்லை. அதற்குக் காரணம் எடப்பாடி தரப்பு எடுத்த முயற்சிகளே. மறுபுறம் ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் ஓ.பி.எஸ் தரப்புக்கு ஆதரவு அதிகமிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
அதே நேரத்தில் திடீரென இரு அணிகளும் இணைய உள்ளதாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்த வேண்டுமென்றால் நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என்று தினகரன் கூற என்னதான் நடக்குது என்று பொதுமக்கள் குழப்பத்தின் உச்சத்துக்கு சென்றனர். அதன் பின்னர் தினகரன் திடீரென பல்டி அடிக்க மீண்டும் பிரச்சினை சூடு பிடித்துக்கொண்டது. ஒரு கட்டத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்த பேச்சுவார்த்தைக் குழுவை கலைத்தார் ஓபிஎஸ்.
அதன் பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். இடையில் ஓபிஎஸ்ஸை அனைவரும் விமர்சித்தது தனிக்கதை.
இணைப்புக்கு ஓபிஎஸ் தரப்பு ஒத்துழைக்க மறுத்ததே இதுவரை தாமதத்துக்கு காரணம் எனலாம். சசிகலா தரப்பை நீக்க வேண்டும் , ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் , தர்மயுத்தம் என்றெல்லாம் வெளியே கூறினாலும் உள்ளே நடந்தது என்னமோ அதிகார பங்கீடு குறித்த பேச்சுகளே.
இணைப்பில் அதிக ஆர்வம் காட்டியவர் என்று மாஃபா பாண்டியராஜனை அதிமுகவினர் குறிப்பிடுகின்றனர். அணிகள் இணைப்பு பேச்சு துவங்கியதும் ஓபிஎஸ் தரப்பில் முதல்வர் , மற்றும் பொதுச்செயலாளர் பதவியும் மற்றவர்களுக்கு வலுவான அமைச்சர் பதவியும் கேட்டதாக தகவல்.ஆனால் எடப்பாடி தரப்பில் பொருளாளர் பதவி மற்றும் இருவருக்கு அமைச்சர் பதவி என்று கூற மற்றவர்கள் நிலை கேள்விக்குறியானது,
ஆட்சியை விட கட்சியின் பொறுப்புகளை கைப்பற்றுவதில்தான் ஓபிஎஸ், கே.பி.முனுசாமி, பொன்னையன் போன்றோர் நோக்கமாகக் கொண்டிருந்தனர். மைத்ரேயன் போன்றோர் சசிகலா குடும்பம் இல்லா கட்சி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
கட்சிகள் இணையும் பட்சத்தில் தங்களுக்கு என்ன பொறுப்பு என்பதில் ஓபிஎஸ் தரப்பில் அனைவருக்கும் பல கோரிக்கைகள் இருந்ததாக கூறுகின்றனர். ஓபிஎஸ், மாஃபா, சண்முக நாதன், செம்மலை ஆகியோர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்தனர். கே.பி.முனுசாமி வாரியத்தலைவர் பதவியும் கட்சியில் பொறுப்பும் கேட்டிருக்கிறார். மனோஜ் பாண்டியன், பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் தரப்பு டெல்லி பதவிகளை கேட்க கட்சியில் எங்களுக்கு முக்கிய பதவி வேண்டும் என பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் நெருக்க , கோரிக்கைகளை கேட்டு எடப்பாடி தரப்பினர் ஆடிப்போய் விட்டதாக கூறுகின்றனர்.
இந்த பிரச்சினையில் கட்சியில் துணை முதல்வர் நிதியமைச்சர் பொறுப்புக்கு ஒப்புக்கொண்ட ஓபிஎஸ் தரப்பு கட்சி பொதுச் செயலாளர் பொறுப்பு வேண்டும் என பிடிவாதம் பிடித்ததாகவும், பொதுச் செயலாளர் பதவியை பற்றி இப்போது பேச வேண்டாம் சட்ட சிக்கல் வரும் அதைவிட வழிகாட்டும் குழு அமைத்து அதன் தலைவராக நியமிக்கிறோம் என்று கூறிய அடிப்படையிலேயே தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இணையும் நேரத்தில் சசிகலா பற்றி முடிவெடுப்பதில் எடப்பாடி தரப்பு தயக்கம் காட்ட கே.பி.முனுசாமி, மைத்ரேயன் போன்றோர் இத்தனை பிரச்சினைக்குப் பிறகும் இன்னும் தயக்கம் காட்டினால் இணைப்பிற்கு சாத்தியமில்லை என பின் வாங்க இரண்டு மணி நேர டென்ஷனுக்குப் பின்னர் ஒப்புதல் அளித்தது எடப்பாடி தரப்பு.
தற்போது செம்மலை, சண்முக நாதனுக்கு அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் விரைவில் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம். ஆனால் கட்சிப்பொறுப்பில் மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையனின் நிலை என்னவென்று இதுவரை முடிவாகவில்லை.