Published : 30 Aug 2017 10:01 AM
Last Updated : 30 Aug 2017 10:01 AM

காணாமல் போகும் தூக்கணாங்குருவிகளும்..! கரைந்து போன கரும்பு விவசாயமும்..

வி

வசாயி மூர்த்தியின் தோட்டத்துக்கு வருபவர்கள் அதன் முன்பகுதியில் உள்ள கிணற்றைப் பார்த்து விட்டு அதிசயித்துப் போகிறார்கள். காரணம், அந்தக் கிணற்றின் பக்கவாட்டுச் சுவரில் முளைத்துக் கிடக்கும் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தூக்கணாங்குருவிக் கூடுகள்! வருபவர்கள், ‘இந்தக் கூட்டுல எனக்கு ஒண்ணு கொடுங்க’ என்று கேட்பதும், அதற்கு, ‘கிணற்றைச் சுத்தம் செய்யும்போது சொல்லிவிடுறேன்’ என்று மூர்த்தி பதில் சொல்வதும் இங்கு அடிக்கடி கேட்கும் உரையாடல்கள்!

அழகாய் தொங்கும் கூடுகள்

கோவை மாவட்டம், காரமடையிலிருந்து பில்லூர் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டரில் வெள்ளியங்காடு கிராமம். இதனருகே உள்ள பாறைப்பள்ளம் கிராமத்தில் இருக்கிறது மூர்த்தியின் தோட்டம். இங்குள்ள கிணற்றில் ஒன்றல்ல, இரண்டல்ல கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குருவிக்கூடுகள் அழகாய் தொங்கிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக தூக்கணாங்குருவிக் கூடுகள் ஒன்று அல்லது இரண்டு அடுக்குகள் கொண்டதாக மட்டுமே காணப்படும். ஆனால், இங்கு மூன்று, நான்கு அடுக்குகளைக்கூடப் பார்க்கமுடிகிறது.

“இந்தச் சுற்றுவட்டாரத்தில் இதுபோல நிறைய கிணறுகள் இருக்கின்றன. அதில் எங்காவது ஒன்றிரண்டு கிணறுகளில் ஒன்றிரண்டு தூக்கணாங்குருவிக் கூடுகளை பார்க்கலாம். அப்படியே இருந்தாலும் அந்தக் கூடுகளில் இத்தனை அடுக்குகளைப் பார்க்கவே முடியாது” என்று மூர்த்தியே அதிசயிக்கிறார்.

”40 அடி ஆழமுள்ள கிணத்தை எப்பவாவது தண்ணி வற்றும்போதுதான் சுத்தம் செய்யுறது வழக்கம். கிணத்துல 35 அடிக்கு குறையாம தண்ணி இருந்துட்டே இருந்தது. அதனால கடந்த 5 வருசமா கிணத்தை சுத்தம் செய்யல. அதனால, பக்கவாட்டு சுவத்து வெடிப்புல அரச மரம், இச்சி மர விதைகள் விழுந்து முளைக்க ஆரம்பிச்சுது. கைக்கு எட்டற தூரத்துல முளைக்கிற செடி, கொடிகளை வெட்டிட்டோம். இது சுவத்துல நடுவுல இருந்ததால ஒண்ணும் செய்யமுடியலை.

அது இந்த தூக்கணாங்குருவிகளுக்கு ரொம்ப வசதியாப் போச்சு. நாலஞ்சு வருசம் முன்னால, ஒண்ணு ரெண்டு குருவிகள் கூடு கட்டுச்சு. அதுக்கப்புறம் குஞ்சுகளும் ஜோடிக் குருவிகளும் படிப்படியா அதிகமாகி, அடுக்குகளும் (குடும்பத்தில் உள்ள குருவிகளுக்கு ஏற்ப அடுக்குகள் இருக்குமாம்) கூடுகளும் அதிகமாகிருச்சு. டவுன் பக்கம் இருந்து வர்றவங்க இதை அதிசயமா பார்த்துட்டு கேட்கவும் ஆரம்பிச்சாங்க. ‘வீட்டுல வச்சா அழகா இருக்கும்.. அலுவலகத்துல, கம்பெனியில வச்சா நல்லா இருக்கும்..’ன்னு கேட்கிறவங்க நிறைய.

நானும், ‘கிணத்தை சுத்தம் பண்ணும்போது சொல்லிவிடறேன்; வந்து கூடுகளை எடுத்துட்டுப் போங்க’ன்னு. சொல்லி அனுப்பறேன். எனக்கு தெரிஞ்சு சுத்துவட்டாரத்துல இத்தனை குருவிக் கூடுகள், ஒரே இடத்துல எங்கேயும் இல்லை. ஒரு காலத்துல, இந்தப் பகுதிகள்ல மாண்டியா ரக கரும்பு விவசாயம் நடந்துட்டு வந்துச்சு. ஏக்கருக்கு 80 டன் முதல் 100 டன் வரை விளையும்கிறதால விவசாயி களுக்கு நல்ல லாபம் குடுத்துச்சு. ஆனா, சுகர் ஃபேக்டரிக்காரங்களுக்கு அது நஷ்டத்தை ஏற்படுத்து னதால, வேறு ரக கரும்பைக் குடுத்து பயிர்செய்யச் சொன்னாங்க. அந்தக் கரும்பு, மூங்கில் மாதிரி இருந்ததால விலையும் கிடைக்கல; எடையும் நிக்கல. அதனால, பெரும்பாலான கரும்பு விவசாயிகள் வாழை விவசாயத்துக்கு மாறிட்டாங்க. முன்பு, பத்தாயிரம் ஏக்கர்ல கரும்பு விளைஞ்ச இடத்துல இப்ப பத்து ஏக்கராக சுருங்கிப் போச்சு” என்று சொல்லிக் கொண்டே வந்த மூர்த்தியிடம், “தூக்கணாங்குருவிக்கும் கரும்பு விவசாயத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டோம்.

மனசுக்கு கஷ்டமா இருக்கு

அதற்கு, “சம்பந்தமில்லாமலா பேசறேன். கொஞ்சம் இருங்க. அதைத்தானே சொல்லப்போறேன்.” என்ற மூர்த்தி, “கரும்பு பயிர் செஞ்சப்ப அதுல இந்த தூக்கணாங்குருவிகள் உண்ணக்கூடிய நிறைய பூச்சி, புழுக்கள் உற்பத்தி ஆச்சு. அதுகளச் சாப்பிட்டுச் சாப்பிட்டு குருவிகளும் பெருகுச்சு. அப்பெல்லாம், நெனச்ச இடத்துல, பார்க்கிற மரத்துல எல்லாம் இதோட கூடுகளை பார்த்திருக்கேன். ஆனா, இப்ப அப்படியெல்லாம் பார்க்கமுடியல” என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

“அது சரி, இந்தக் கூடுகளை எல்லாம் அழிக்கப் போகிறீர்களா.. அல்லது பாதுகாக்கப் போகிறீர்களா?” என்று அவரைக் கேட்டதற்கு, “அதுதாங்க இப்ப ஒரே கவலையா இருக்கு. இந்தக் கிணத்துல தண்ணி குறையுறப்ப எல்லாம் கிணத்தை தூர் வாரி சுத்தம் பண்ணுறது வழக்கம். இப்ப தண்ணி வற்றிப் பூஞ்சையும், சேறும் சகதியுமா இருக்கு. அதனால, இப்ப கிணத்தைச் சுத்தம் செஞ்சே ஆகணும். ஆனா, குருவிக் கூடுகளை அழிக்கணுமேனுதான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு. அதனாலதான் யோசனையோட விட்டுவச்சிட்டே வர்றேன். ஆனா, இப்ப இல்லாட்டியும் என்னைக்காச்சும் ஒருநாள் இந்தக்கூடுகள அப்புறப்படுத்தித்தானே ஆகணும்?” என்று சங்கடக் கேள்வியுடன் நிறுத்தினார் மூர்த்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x