Published : 15 Aug 2017 11:08 AM
Last Updated : 15 Aug 2017 11:08 AM

ஐந்து மாதங்கள்.. ஐந்து குளங்கள்..கோவையைக் கலக்கும் இளைஞர் படை!

ந்து பெரிய குளங்கள்.. சோழர் காலத்தின் இரண்டு தடுப்பணைகள்.. ஒரு வாய்க்கால்.. இத்தனையையும் ஐந்தே மாதங்களில் தூர்வாரி சீரமைத்து இருக்கிறது கோவையைச் சேர்ந்த ஒரு இளைஞர் படை. இவர் களின் பணி இன்னும் முடியவில்லை, சோழர்கள் காலத்தின் பாரம்பரியக் கிணறு ஒன்றை இப்போது தூர்வாரிக் கொண்டிருக்கிறது இந்தப் படை!

தூர்ந்து கிடந்த பேரூர் குளம்

கோவையைச் சேர்ந்தவர் மணிகண்டன். சுந்தராபுரம் அருகே லேத் பட்டறை வைத்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் கோவை பேரூர் பெரிய குளத்தை கடந்துச் சென்ற இவர், குளத்தின் நிலையைப் பார்த்து கலங்கிப் போனார். 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் முழுவதும் தூர்ந்தும் சீமைக் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் கிடந்தது. இதை சரிசெய்ய ஏதாவது செய்யமுடியுமா என சாதாரணமாய் யோசித்த மணிகண்டன், ‘பேரூர் குளத்தை தூர் வாருவோம்; ஒன்றிணைவோம்’ என்று ‘வாட்ஸ் அப்’பில் தகவலைத் தட்டி விட்டார். அவ்வளவுதான், அடுத்த சில நாட்களில் படிப்படியாக 300 பேர் வரை குளத்தில் கூடிவிட்டனர். ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் வேலைசெய்வது என தீர்மானித்து, இரண்டே மாதத்தில் குளத்தை முழுமையாகத் தூர்வாரி முடித்தார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசினார் மணிகண்டன். “பேரூர் பெரிய குளத்தை தூர் வாரியதும் எங்களுக்கு மிகப் பெரிய உத்வேகம் உண்டானது. ‘கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு’ என்ற பெயரில் முகநூல், வாட்ஸ் அப் குழுக்களில் தகவலைப் பதிவு செய்தோம். இதைத் தொடர்ந்து, ‘நமது கோவை... நமது பசுமை’ அமைப்பு, கனடா நாட்டைச் சேர்ந்த ‘தமிழா ஃபவுண்டேஷன், சிகாகோவைச் சேர்ந்த ‘நம்பிக்கை விழுதுகள்’ அமைப்பு ஆகியவை உதவிக்கு வந்தன. இவர்களின் உதவியில், ஜே.சி.பி. எந்திரங்களை வைத்து செல்வ சிந்தாமணி குளம், செங்குளம், வெள்ளலூர் குளம், வெள்ளலூர் தடுப்பணை, 12.5 கி.மீட்டர் நீளம் கொண்ட குனியமுத்தூர் வாய்க்கால், சோழர் காலத்தின் தேவிசிறை தடுப்பணை ஆகியவற்றை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றினோம்.

ஆழிக்கிணறு அதிசயம்

தேவி சிறை மற்றும் அதன் கீழுள்ள குறிச்சி தடுப்பணைகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டபோது, ‘மரபுசார் குழு’ என்ற ‘வாட்ஸ் அப்’ குழுவினர் அறிமுகமானார்கள். அவர்கள், ‘ஆழிக் கிணறு என்றழைக்கப்படும் சோழர் காலத்தின் பாரம்பரியம் வாய்ந்த கிணறு ஒன்று சுண்டாக்காமுத்தூரில் தூர்ந்து போய் உள்ளது. அதையும் தூர் வாரி சீரமைக்க வேண்டும்’ என்றனர். இதையடுத்து, முழுவதுமாய் தூர்ந்து கிடந்த அந்தக் கிணற்றை தூர் வார தொடங்கினோம்.

உள்ளே தோண்ட தோண்ட பல்வேறு ஆச்சரியங்கள் காத்திருந்தன. அது வழக்கமான கிணற்றைப் போல இல்லை. சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் அழகிய படிக்கட்டுகளும் கொண்டிருந்தது அந்தக் கிணறு. வடக்கிலிருந்து இறங்கும் படிக்கட்டுகள் ஒருகட்டத்தில் மேற்கு நோக்கி திரும்புகின்றன. தற்போது 40 அடிவரை தூர் வாரிவிட்டோம். இதன் சிறப்பு என்னவெனில் கிணற்றில் அடிப்பாகம் வரை படிக்கட்டுகள் இருக்கின்றன. சீக்கிரமே இங்கு வேலை முழுமையடைந்து விடும். இப்போதே கிணற்றின் பக்கவாட்டிலிருந்து தண்ணீர் கசிகிறது. வரும் மழைக்காலத்தில் கிணறு நிச்சயம் நிரம்பிவிடும். இது ஒருபுறமிருக்க, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தக் கிணற்றை ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும் என்று தொல்லியல் துறைக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம்.” என்று சொன்னார் மணிகண்டன்.

இவர்களால் விரைவில் நிரம்பிக் குளிரப்போவது நீர்நிலைகள் மட்டுமல்ல.. கோவை மக்களின் மனங்களும் தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x