Published : 31 Aug 2017 02:35 PM
Last Updated : 31 Aug 2017 02:35 PM

யானைகளின் வருகை 25: அதிகாரிகள் நடத்தும் சென்சிடிவ் நாடகம்

துணை நகரம் என்று சொல்லப்படக்கூடிய குடியிருப்புகளை மையமாக வைத்துப் பார்த்தால் இதன் சுற்றுவட்டாரத்தில் 10 மைல் ஆர சுற்றளவில் மட்டும் 31 கல்லூரிகளும், இரண்டு பல்கலைக்கழகங்களும் உள்ளன.

மதுக்கரை, வாளையாறு காடுகளில் இப்படிப்பட்ட அவலம் என்றால் அதற்கு சற்றே வடக்கே தள்ளியிருக்கும் கோவை குற்றாலம் மலைகள், வெள்ளியங்கிரி மலைகள், மருதமலை, மாங்கரை- ஆனைகட்டி மலைகள், குருடி மலை என நெடுகி, உயர்ந்து நிற்கும் மலைக்காடுகளில் யானை வழித்தடங்களில் 1990 முதல் வியாபித்தபடி இருக்கும் கட்டுமானப் பணிகளை சொல்லி மாளாது.

இதில் முக்கியமானது கோவை குற்றாலம் சாடிவயலுக்கு முன்பே பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் உருவாகியுள்ள தனியார் பல்கலைக்கழகம். இந்த கல்விநிறுவனம் உருவானதன் மூலம் பல பழங்குடியின கிராமங்கள் காணாமல் போயின. நூற்றுக்கணக்கான நொய்யல் நீரோடைகள் மறிக்கப்பட்டுள்ளன. பல நீர்நிலைகள் சமாதியாக்கப்பட்டுள்ளன. இங்கே இந்த கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டதற்கும், கிறிஸ்துவ ஜெபக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டதற்கும் பின்னணியில் மத மாற்ற நோக்கமே உள்ளது என நிறைய குற்றச்சாட்டுகள் கிளம்பியிருக்கின்றன.

இதற்காக தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஆதீனங்கள், மடாதிபதிகள் இங்கு 1990களில் இந்து எழுச்சி மாநாடு ஒன்றையும் நடத்தினர். இவ்வளவு எதிர்ப்புகள் இருந்தும் மத்திய அமைச்சர்கள் முதல் மாநில அமைச்சர்கள் வரை இங்கே வருவதும், தங்குவதும், கல்வி நிறுவனத்திற்கு சலுகைகள் வழங்குவதும், அதில் சர்ச்சைகள் எழுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. என்றாலும் இவர்களின் விஸ்தீரணப் பரப்பளவு விளைநிலங்கள் கடந்து, காடுகள் கடந்து, மலைக்குன்றுகள், பள்ளத்தாக்குகள் கடந்து சென்று கொண்டேயிருக்கின்றன.

இது பிரம்மாண்டமாய் எழுந்து நிற்பதால் இதைச் சுற்றி சில நூறு ஏக்கர்கள் வாங்கி, அதை லே-அவுட்டுகளாக பிரித்து ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் கொழிக்கும் அரசியல் விஐபிக்கள் தொழிலதிபர்கள் பெருகி விட்டனர். அவர்கள் மக்களைக் கவரும் வண்ணம், குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கவரும் வண்ணம், காடுகளை ஒட்டியே பல்வேறு வகையான புதுவித வடிவமைப்பில் கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்தக் கட்டிடங்களுக்கெல்லாம் முன்பாக பிள்ளையார் சுழி போட்டது இதே சிறுவாணி சாலையில் ஆலாந்துறை அருகே அமைந்துள்ள சர்வதேச உறைவிடப் பள்ளி. பிரபலமான ஆன்மீக வாதியின் பெயரால் உருவான இந்தப் பள்ளி சுமார் 150 ஏக்கரில் 1980களிலேயே பூமி பூஜை போடப்பட்டது. இதை தொடர்ந்தே இதே பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரபல கிறிஸ்துவ ஜெபக் கூடங்களுடன் கூடிய பள்ளி, கல்லூரிகள் கட்டப்பட்டன. தொடர்ந்து அவை பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றது.

அதைத் தொடர்ந்தே இங்கிருந்து ஐந்து மைல் தொலைவில் 1990களில் உருவாக்கப்பட்டது ஆன்மீக யோகா மையம். வெறும் 5 ஏக்கரில் உருவான இந்த மையத்தின் பரப்பளவு தற்போது சுமார் 500 ஏக்கர் என்று சொன்னாலும் இவர்கள் கட்டுப்பாட்டில் மட்டும் ஆயிரம் ஏக்கர் காடுகளும், அதை சார்ந்த பகுதிகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த யோகா மையம் வந்தது, இதன் மூலம் தியான லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது, தொடர்ச்சியாக சமீபத்தில் ஆதியோகி சிலை நிறுவப்பட்டது எல்லாமே இயற்கை சூழல் நிமித்தம் பலவேறு சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டே இருக்கின்றன.

முதலில் சுட்டிக்காட்டப்பட்ட எட்டிமடையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் தொடங்கி அதைச் சுற்றியுள்ள 31 கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், துணை நகரங்கள் என வரும் பகுதிகள் முதல் இந்த கிறிஸ்துவ, ஆதியோகி மையங்கள் வரை அத்தனை நிறுவனங்களுமே அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்று விளங்குகின்றன என்பதற்கு அதன் வளர்ச்சியும், இந்த மையங்களின், கல்வி நிறுவனங்களின் முக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை வந்து சென்று கொண்டிருப்பதே பலமான சான்று. அதை முன்னிட்டு இங்குள்ள பரந்துபட்ட காடுகளில் நடக்கும் அத்துமீறல்களை தட்டிக் கேட்க உள்ளூர் அதிகாரிகள் பலருக்கும் நடுக்கமோ நடுக்கம். கொடுப்பதை வாங்கிக் கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருக்கிறார்கள்.

அதையும் மீறி மீடியாக்களில் செய்திகள் வந்து விட்டால் அதை உடனே சென்சிடிவாக எடுப்பதும், பெயரளவுக்கு அங்கே ஆக்கிரமிப்பு அகற்றம் என்று கீழ் நிலை அதிகாரிகளை முன்னிருத்தி நாடகமாடுவதும், அதற்குள் சம்பந்தப்பட்ட நிறுவனம் நீதிமன்றம் சென்று அரசுக்கு எதிராக தடையாணை வாங்கி வருவதும், உடனே அரசு அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளை கைவிடுவதும் இயல்பாகவே நடக்கும் ஒன்று.

அதற்கு ஒரு உதாரணம் என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். கோவை ஆலாந்துறைக்கு தென்பகுதியில் 4 கிலோமீட்டர் சென்றால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி வரும். இந்த எல்லையில் 80 ஏக்கருக்கு மேல் உள்ள பட்டா நிலங்களை சிலரிடம் ரியல் எஸ்டேட் நிறுவனம் விலைக்கு வாங்கியிருக்கிறது. இதற்கிடையே ஓடின நீரோடைகள், குளம், குட்டைகள், புறம்போக்கு நிலங்களையும் தனதாக்கி சுற்றுச்சுவரும் வேலிகளும் எழுப்பிக் கொண்ட அந்த நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் ஒரு சொகுசு பண்ணை வீட்டையும் எழுப்பியது.

இதற்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் தண்ணீர் சப்ளையை மாநகராட்சி அதிகாரிகளே முன்னின்று செய்தது. இதில் முக்கியஸ்தர்கள் வந்தால் தங்குவதற்கும், சொகுசு மாளிகையாக வாடகைக்கு விடவும் திட்டம். கூடவே மேலும் பல சொகுசு மாளிகைகளை கட்டுவதும் ஏற்பாடு. இதில் முக்கியமான விஷயம் இவர்கள் வாங்கியும், பிடித்தும் வைத்துள்ள இடத்தில்தான் யானைகள் வந்து ஓய்வு எடுப்பதும், தண்ணீர் அருந்துவதும் காலங்காலமாக நடந்து வந்துள்ளது. எனவே உள்ளூர் மக்கள் இதில் விதிமீறல்கள் உள்ளதை சுட்டிக்காட்டி அழைத்தார்கள். நானும் சென்று உள்ளது உள்ளபடி செய்தி சேகரித்தேன். ஆட்சியரிடமும் சென்று இதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டி விளக்கமும் பெற்றேன்.

இந்த செய்தி அச்சில் வந்ததுதான் தாமதம். பல இடங்களிலிருந்து நெருக்கடிகள். அதற்கு மேல் அடுத்த கட்ட செய்தி எழுத முடியாத அளவுக்கு தொந்தரவுகள். இப்படி ஒரு செய்தி வந்த ஒரே காரணத்திற்காக அந்தப் பகுதி வருவாய்த்துறை அலுவலர் முடுக்கி விடப்பட்டார். நான்கைந்து புல்டோசர்களை விட்டு சில ஓடைகளை மறித்து கட்டப்பட்ட தடுப்புச் சுவர்களை இடிப்பது போல் பாவ்லா காட்டினர் அரசு ஊழியர்கள்.

காலையிலிருந்து மாலைக்குள் பெயரளவுக்கு சில சுவர்கள் இடிக்கப்பட்டவுடன் அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்று விட்டதாக சொல்லப்பட்டது. இந்த செய்திகள் ஊடகங்களில் வந்ததோடு சரி. அதற்குப் பிறகு இப்போது இதே இடத்தில் பல கட்டிடங்கள் உருவாகியுள்ளன. யானைகள்தான் பாவம் வழி தெரியாமல் தவிக்கின்றன.

இதே சொகுசு மாளிகையிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அடர் காட்டுக்குள் இன்னொரு கட்டிடம். இது சுமார் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தில் நடுவே பெரிய பண்ணை வீடு போல அமைந்துள்ளது. இதில் நீச்சல் குளம், பல்வேறு தண்ணீர் தொட்டிகள், செயற்கை நீர் ஊற்றுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நிலமும் பண்ணை வீடும் அடர்ந்த வனப்பகுதி எல்லையில் அமைந்துள்ளது. இங்கே காட்டு யானைகள், சிறுத்தைகள், மான்கள், சில சமயங்களில் புலி கூட வருவதுண்டு.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய மதில் சுவர்கள் சூழ அமைக்கப்பட்ட இந்தப் பண்ணை வீட்டுக்கு சொந்தக்காரர் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்கள் மட்டுமே வருவார். இரவுகளில் தங்குவார். உடன் தன் வாட்ச்மேன், தோட்டத்து வேலையாட்கள் மட்டுமே இருப்பார்கள். அங்கே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்த வரும் யானைகள், சிறுத்தைகளை புகைப்படங்களாக, வீடியோ காட்சிகளாக எடுப்பார். இதை தன் நண்பர்களுக்கு வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதை வாடிக்கையாகவே கொண்டார்.

சில சமயங்களில் அந்த வெளிநாட்டு, வெளிமாநில நண்பர்களும் அங்கே வருவார்கள். ஒரே குடியும் கூத்துமாக இருக்கும். சில சமயம் யானைகள் வரவில்லையென்றால் அதற்காகவே தண்ணீரில் சர்க்கரை உப்பு கலந்து வைத்தார்கள். பலாப்பழங்களை வெட்டி சுற்றிலும் எறிந்தார்கள். அந்த வாசத்திற்கு காட்டு யானைகள் வர ஆரம்பித்தன. இதில் பழகிப்போன காட்டு யானைகள் தினசரி இங்கே வருவதும், பண்ணை வீட்டில் ஆட்கள் இல்லாததால் சுவையான உணவு கிடைக்காததால் சுற்றிலும் உள்ள வீடுகளை, தோட்டத்து சாலைகளை உடைக்க ஆரம்பித்தது. பக்கத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களை, வாழைத் தோப்புகளில் நுழைந்து அழிச்சாட்டியம் செய்யத் தொடங்கியது. மக்கள் எதிர்ப்பட்டால் அவர்களை துரத்தி மிதித்து கொல்லவும் துணிந்தது.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x