Published : 23 Aug 2017 02:24 PM
Last Updated : 23 Aug 2017 02:24 PM

யானைகளின் வருகை 19: முதுமலையை அழிக்கவா கோயில் யானைகள் முகாம்?

 

அதாவது கோயிலில் பொங்கலையும், கேப்பைக் களியையும், தென்னை ஓலைகளையும் மட்டுமே சாப்பிட்டு வந்த கோயில் யானைகள், முதுமலையில் கிடைக்கும் புதுவகை தாவர வகைகளாலும், இடம் மாற்ற சூழல்களாலம், உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்புண்டு. அதே சமயம் அதனிடம் இருக்கும் தொற்றுநோய்க் கிருமிகள், முகாமிலுள்ள யானைகளுக்கும் பரவ வாய்ப்புண்டு என்பதால் கோயில் யானைகள் முகாம் இங்கே கொண்டு வருவதைத் தவிர்க்கவே பார்த்தனர் வனத்துறை உயர் அதிகாரிகள்.

அதற்காக அவர்கள் அறநிலையத்துறை மற்றும் வனத்துறை அமைச்சர்கள் கோயில் யானைகள் முகாம் நடத்தும் இடத்தை பார்வையிட முதுமலை வந்தபோது, சூசகமாக இந்த விஷயங்களை தெரிவித்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாம் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மரவகண்டி என்ற இடத்தை காட்டினர்.

அங்கே கோயில் யானைகள் தங்க வைக்கப்பட்டால் முதுமலை வளர்ப்பு யானைகளுக்கும் பாதிப்பு இருக்காது; சூழல் கேடும் இருக்காது என தெரிவித்தனர். அதில் அமைச்சர்களுக்கு திருப்தியில்லை . வேறு இடம் காட்டும்படி கேட்டனர். அங்கும் பிரச்சினை. தண்ணீர் இல்லை. மக்கள் நடமாட்டம் வேறு அதிகம். அதையும் ஏற்றுக்கொள்ள மறுக்க ஏற்கெனவே உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிற்கு எதிரே 200 மீட்டர் தூரத்தில் உள்ள லாக் ஹவுஸ் என்ற பகுதியை அமைச்சர்கள் தேர்வு செய்தனர்.

பதினைந்து ஏக்கர் பரப்பளவுக்கு யானைகளுக்கான மருத்துவ மையம். உணவுகள் தயாரிக்கும் மையம். பாகன்கள் தங்கும் விடுதி. யானைகள் ஓய்வு எடுக்கும் பகுதிகள் என பிரித்து அதற்கான ஏற்பாடுகளும் தொடங்க ஆரம்பித்து விட்டனர். இவற்றைத் தவிர இங்கே நவீன தகவல் தொழில்நுட்பச் சாதனங்களும், இரவு நேரங்களில் பாதுகாப்புக்கு அதிரடிப்படை வீரர்களும் (அப்போது வீரப்பன் உயிரோடு இருந்தார்) தங்க வைக்க ஏற்பாடுகள் நடந்தன.

ஒரு மண்டல காலம் கோயில் யானைகளைப் பரமாரிக்க ஒரு கோடி ரூபாய் நிதி மதிப்பீடும் போடப்பட்டது. தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமில் ஒரு யானைக்கு தினசரி பத்துகிலோ ராகி, ஐந்து கிலோ அரிசி, நூறுகிராம் வெல்லம், நூறுகிராம் உப்பு, ஒரு தேங்காய் ரேஷனாக வழங்கப்பட்டு வருவதாக அப்போது சொல்லப்பட்டது. அதற்காக மாதம் ரூ. 6லட்சம் செலவு செய்து வந்தது முகாம் அலுவலகம்.

இதில் அப்போதே ஏகப்பட்ட ஊழல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியிருந்தன. இந்த ஒப்பந்தத்தை நீண்ட காலமாக எடுத்துப் பொருட்கள் விநியோகித்து வருபவரே ஒரு தன்னார்வலர்தான். இவர் கொடுக்கும் உணவுப் பொருட்களில் கல்லும், மண்ணும் நிறைந்திருந்தன. புழுத்துப்போன ராகி மாவு, ரேஷன் அரிசியை சப்ளை செய்து விட்டு பொன்னி அரிசியாக கணக்கெழுதுவதெல்லாம் கூசாமல் நடந்து வந்தது. இதை இங்கு பணிபுரிந்து ஒரு கால்நடை மருத்துவர் சுட்டிக்காட்டியதற்காக அவரை வேறிடத்திற்கு மாற்றியும் இருந்தனர்.

இதைக் கண்டும் காணாமல் இருக்கும் வனச்சரகர், வனவர்கள், வாட்ச்சர்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ஒரு தொகை கவனிப்பும் இருந்து வந்தது. இங்கேயே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் வளர்ப்பு யானை முகாமிலேயே இந்த அளவு ஊழல்கள் என்றால் கோயில் யானைகளும் வந்து சேர்ந்தால் என்னவாகும்? அந்த கோயில் யானைகளுக்கும் அதே தன்னார்வ ஒப்பந்ததாரர்தான் அரிசி, ராகி மாவு உள்ளிட்ட பொருட்களை கொடுக்க விண்ணப்பம் தந்திருந்தார். அதற்கு பலமான சிபாரிசும் இருந்தது.

அதேபோல் தமிழக கால்நடை பராமரிப்பு துறையிலிருநு்து ஒரு மருத்துவரையே கோயில் யானைகளுக்கும் சிகிச்சையளிக்க பரிந்துரைத்திருந்தனர். அவர் ஏற்கெனவே கால்நடைத் துறையிலிருந்து மிருகக்காட்சி சாலைக்கு மாறுதல் செய்யப்பட்டிருந்தார்.

அதற்குக் காரணம் அவர் மீது பல ஊழல் புகார்கள். அதுவும் சாதாரண புகார் அல்ல; இந்திய அளவிலிருந்து மட்டுமல்ல, உலக அளவில் உள்ள வன உயிரின ஆர்வலர்களை தனக்குத் தோதான தன்னார்வலர்கள் மூலம் தன்னிடம் வரவைப்பது. அவர்களுக்கு இங்குள்ள காட்டுயிர்களை பற்றி விதோந்தோதி சொல்வது. அதில் சம்பந்தப்பட்ட ஆசாமிகள் விழுந்தால் கைக்குள் போட்டு சில காரியங்களை செய்வது என்றெல்லாம் நகர்ந்திருக்கிறார். அப்படிப்பட்டவரையே இந்த யானைகள் முகாமிற்கும் சிறப்பு மருத்துவராக அறிவித்தால் என்ன ஆகும்?

வேறொன்றும் நடக்கவில்லை. அவர் முகாம் ஆரம்பிப்பதற்கு முன்பே கேரள மாநிலம் திருச்சூரிலுள்ள ஆயுர்வேத மருத்துவரிடம் பேசியிருக்கிறார். அந்த மருத்துவருக்கு சொந்தமாக உள்ள உள்ள ஆயுர்வேத மருந்து கம்பெனியில் குறிப்பிட்ட மருந்துகள் சுமார் ரூ. 20 லட்சம் அளவுக்கு வாங்க பேரம் பேசப்பட்டிருக்கின்றன. அந்த மருந்துகளை யானைகளுக்குப் புகட்ட ஒரு உதவியாளரும் தேவை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதற்கான கோரிக்கையோடு, கையோடு கமிஷன் எவ்வளவு என்றும் பேரமும் நடந்துள்ளது. ஆனால் கேரள வைத்தியர் பெரிய சமார்த்தியசாலி, அதற்கு அவர் படியவில்லை. உடனே இங்குள்ள கால்நடை மருத்துவர் குழு, அதே திருச்சூரில் உள்ள யானைகள் பராமரிப்பில் எக்ஸ்பர்ட்டாக விளங்கிய பணிக்கர் ஒருவரை அணுகியிருக்கிறது.

'கோயில் யானைகள் எல்லாம் இங்கிலீஷ் மருந்துக்கு பழகிப்போனவை. அவற்றுக்கு திடீர் என்று ஆயுர்வேத மருந்து கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளது. அதற்கு உடல் உபாதைகள் ஏற்படும். அதன் கழிவுகள் காடுகளில் இடும்போது அதில் வரும் புழுக்களை பறவைகள் சாப்பிடும், காற்றின் மூலம் அதன் கிருமிகள் பரவும். காட்டுயானைகள் சுத்தமான காற்றில், நீரில் வாழ்பவை. எல்லா கோயில்யானைகளுக்கும் காசநோய் எனப்படும் டிபி உண்டு. அது இங்குள்ள காட்டுயானைகளுக்கும் பரவினால் பேராபத்து. அதற்கே அப்படி என்றால் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ளவற்றின் கதி என்னாவது?' என்று பேசினார் முதுமலையில் யானைகளுக்கு மருத்துவம் பார்த்த கால்நடை மருத்துவர் ஒருவர்.

கோயில் உடல்நலக்குறைவு காரணமாக ஏற்கெனவே பல கோயில் யானைகள் முதுமலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஏழு வருடங்கள் முன்பு (இன்றைக்கு 24 வருடம் முன்பு) கும்பகோணம் பகுதியிலிருந்து வந்த கணேஷ் என்ற யானை, திருப்பதியிலிருந்து வந்த வடிவு என்ற யானை, பிறகு வந்த சுவாமிநாதன் என்ற யானை எல்லாமே முதுமலையில் தங்கி விட்டன. இவ்வளவு வருடங்கள் ஆகியும் அவற்றின் உணவுப் பழக்கங்கள் மாறவில்லை. இஞ்குள்ள காட்டுயானைகள் போல் தீவனங்களை உண்பதில்லை. இதனால் மெலிந்தும், நலிந்துமே போய்விட்டன.

அதில் செந்தில் வடிவு என்ற யானைக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. காட்டிற்குள் அது எங்காவது சுற்றித்திரிய விட்டிருப்பார்கள். அது எங்கேயும் போகாது. ஓரிடத்திலேயே மணிக்கணக்கில் நிற்கும். திடீரென்று ஓட்டம் பிடிக்கும். தலையை ஆட்டிக் கொண்டே இருக்கும். மறுபடி திடீரென்னு பின்னோக்கி ஓடும். இங்கே வரும் கோயில் யானைகள் நிலைமை இப்படி இருக்க, ஒட்டுமொத்தமாக 40க்கும் மேற்பட்ட கோயில் யானைகளை கொண்டு வந்து இங்கே தங்க வைத்தால் நிலைமை என்னவாகும்?

எனவே அதை இங்கே வராமல் தடுத்தே ஆகவேண்டும் என்பதே அந்த காலகட்டத்தில் இப்பகுதியை சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்தது. சிலர் இதற்கு எதிராக நீதிமன்றமும் சென்றனர். சிலரோ, அப்போதைய மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்களுடன் பேசினர். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவின் மூலம் முட்டுக்கட்டை போடவும் அரசியல் ரீதியாக முயற்சி செய்தனர்.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x