Published : 16 Aug 2017 14:23 pm

Updated : 16 Aug 2017 14:25 pm

 

Published : 16 Aug 2017 02:23 PM
Last Updated : 16 Aug 2017 02:25 PM

யானைகளின் வருகை 12: ஒரே மிதி; ஜீப் காலி - கள்ளிப்பட்டியில் நூலிழையில் தப்பிய வனத்துறையினர்

12

 

சந்தனக் கடத்தல் வீரப்பன் என்றதும் சத்தியமங்கலம் காடுகளும், அதில் தந்தங்கள் வேட்டைக்காக நடந்த காட்டு யானைகள் படுகொலைகளும்தான் நினைவிற்கு வராமல் இருக்காது. அந்த சந்தனக் கடத்தல் வீரப்பனால் சத்தியமங்கலம் காடுகளில் உள்ள யானைகள்தான் மிரண்டு ஓட்டம் பிடித்தன. பாவம் ஒரு பக்கம், பலி ஒரு பக்கம் என்பது போல காட்டுக்குள் சுள்ளி, விறகு பொறுக்க வரும் அப்பாவி மக்களையே அடித்தும், மிதித்தும் கொன்றன. அதையும் மீறி அவை ஊருக்குள் வருவது என்பது சத்தி காடுகளில் அபூர்வத்திலும் அபூர்வம்.


இதற்கு விதிவிலக்காக 2001 ஆம் ஆண்டு டிசம்பர் பனிக்காலத்தில் சத்தியமங்கலம் காடுகளை ஒட்டி இருக்கும் கள்ளிப்பட்டி, குறும்பனூர், சித்தன்குட்டை உள்ளிட்ட கிராமங்கள் பகலிலேயே அமளி துமளிப்பட்டன. காரணம். இங்கு காட்டுக்குள்ளிருந்து படையெடுத்திருந்த 15 யானைகள். இரவில் ஊருக்குள் விளைநிலங்களுக்குள் புகுந்தால் விடிந்தாலும் வெளியே வருவதில்லை. அதை மீறி தோட்டங்காடுகளுக்குள் போனால் பிளிறல் சத்தம்தான். துரத்தல்தான். அப்படி விழுந்தடித்து ஓடி வந்து பலர் கையை காலை முறித்துக் கொண்டார்கள்.

மாதக்கணக்கில் வேதனை, கூப்பாடு. வனத்துறையினருக்கு புகார் செய்தால் யாரும் வருவதில்லை. யானைகளின் வருகையால் ஊரே திமிலோகப்பட்டு அதனுடன் மல்லுக்கட்ட முடியாத சூழல் ஏற்பட்டவுடன், இந்த ஊர் மக்கள் எல்லாம் சாலை மறியலில் அமர்ந்தனர். மீடியாக்கள் இதை வெளிச்சம் போட ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு இது எட்ட வனத்துறையினர் யானை விரட்டும் பணிக்கு வந்து விட்டனர்.

  • ''மூர்க்கம் கொண்டு தாக்கினா நாங்களும் சாக வேண்டியதுதான். என்னதான் இருந்தாலும் நம்ம மனுசங்கதான்; அது மிருகம்தான்!''

பவானி சாகர் வனச்சரகர்கள் ஒருபக்கம், சத்தியமங்கலம் பகுதி வன அலுவலர் இன்னொரு பக்கம் காட்டை ஒட்டியுள்ள அந்த விளைநிலங்களில் பதுங்கியிருந்த யானைகளை விரட்டினர். துப்பாக்கியால் வானம் நோக்கிச் சுட்டனர். அந்த தோட்டா சத்தத்தில் காட்டுக்குள் ஓடிய யானைகள் இன்னொரு வழியே ஊருக்குள் புகுந்தன. அங்கும் ஊடுருவினர் வனத்துறையினர். மீண்டும் காட்டுக்குள் போகிற மாதிரி போக்கு காட்டிய யானைகள் பகலில் ஊருக்குள் புகுந்தன. எனவே இதை ஒரு பக்கமாக விரட்டிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவு செய்தனர் வனத்துறையினர். ஒரு பக்கம் ஜீப்பில் பாதி பேரும், மீதி பேர் மறுபக்கம் நடையாகவும் (தரைப்படை போலவும்) வியூகத்துடன் காட்டு யானை நோக்கி நகர்ந்தனர்.

இதை ஊரே திரண்டு வேடிக்கை பார்க்க, துப்பாக்கி சத்தம் கேட்டு ஓடிய யானைகளின் திசையில் பார்த்தால் சூழ்ந்து நிற்கும் கிராம மக்கள். யானைக்கூட்டம் எந்த திசையில் செல்வது என்று புரியாமல் திக்குமுக்காடி வட்டம் போட்ட மாதிரி சுழன்றது. ஒரு பக்கம் ஜீப். இன்னொரு பக்கம் வன அலுவலர்கள் துப்பாக்கியுடன். மறு பக்கம் மக்கள். இதில் இல்லாத வேறு திசையில் பாய்ந்தன யானைகள். ஆனால் அந்த யானைக் கூட்டத்திற்கு வழிகாட்டியாக இருந்த பெரிய கொம்புள்ள ஆண் யானை மட்டும் ஜீப்பை நோக்கி திரும்பியது. ஆங்காரமாய் பிளிறிக் கொண்டு முன்னத்தங்கால்களை மேலே தூக்கிப் பிளிறிய அந்த யானை வெறிகொண்டு ஜீப்பை தாக்கியது.

யானையின் மூணு கால்கள் கீழே!
  • மூணு கால்கள் கீழே. முன் வலது கால் ஜீப்பின் பேனட் மேலே. ஜீப்புக்குள் இருந்த வனவர்கள் நடுங்கிவிட்டனர். தும்பிக்கையால் ஒரே தட்டு ஜீப்பின் முன்பகுதி கண்ணாடிகள் சுக்கலாய் நொறுங்கி முன்பக்கம் அமர்ந்திருந்த சத்தியமங்கலம் வனத்துறை ரேஞ்சர் செல்வராஜ் மடியில் விழுந்தது. அடுத்தது அவர்தான் என்பது போல் நசுக்க காலை தூக்கி விட்டது.

அந்த நேரத்தில் ஜீப்புக்குப் பின்னால் வந்த இன்னொரு ஜீப்பில் இருந்த வனத்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட, தூக்கிய காலை அப்படியே நிறுத்தியது. பேனட் மீது இருந்த காலையும் கீழே இறக்கி, அதே வேகத்தில் வேறு திசையில் ஓட்டம் பிடித்தது. இந்த சம்பவத்தை அத்தனை ஊர் ஜனங்களும் நின்று வேடிக்கை பார்த்தன. இந்த சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் அந்த வாரத்தில் சத்தியமங்கலம் பகுதிகளில் வீரப்பனை விடவும் தலைப்புச் செய்தியானார்கள்.

அந்த வனவர்களிடம் பேசியபோது, ''நாங்க அஞ்சுபேர். துப்பாக்கியால் பின்னால் வந்தவர்கள் மட்டும் துப்பாக்கியால் சமயோசிதமா அப்ப ஷூட் பண்ணாம இருந்திருந்தா எங்கள்ல யாரை மிச்சம் விட்டிருந்திருக்குமோ அந்த யானை. அதோட சைஸூம், கொம்பும், மூர்க்கமும், காலை தூக்கி பேனட் மேல வச்சு இன்னொரு காலைத் தூக்கி, தும்பிக்கையை வளைத்து பிளிறின பிளிறலும் அப்படியே கண்ணு முன்னால நிற்குது. ஜீப்புல இருந்தது நாங்க அஞ்சு பேர். அத்தனை பேருக்கும் கூட்டுல உசிரு இல்லை!'' என்று அதிர்ச்சி மாறாமல் பேசினார் இந்த ஜீப்பை ஓட்டிய வனத்துறை டிரைவர்.

யானையிடம் நூலிழையில் தப்பிய ரேஞ்சர் செல்வராஜிடம் பேசியதில், ''யானை அடித்து கண்ணாடிச் சிதறல்கள் என் மடியில் சிதறியபோது, எங்களை மறைத்து உயர்ந்து யானை நின்றபோது யானை என்னை மிதித்துவிட்டதுபோலவே உணர்ந்தேன். வனத்துறையினர் என்றால் யானைகளை விரட்ட முடியும். அவையும் போய்விடும் என்று பலரும் நினைக்கிறார்கள். நாங்களும் மனிதர்கள்தான் என்பதை நினைப்பதில்லை. துப்பாக்கி, பட்டாசு, சியர்ச் லைட்டுனு அதுக கொஞ்சம் விலகிப்போன ஆச்சு. மூர்க்கம் கொண்டு தாக்கினா நாங்களும் சாக வேண்டியதுதான். என்னதான் இருந்தாலும் நம்ம மனுசங்கதான்; அது மிருகம்தான்!'' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

இந்த சம்பவம் நடந்த பிறகு வனத்துறையினர் முழு ஆள் பலத்தோடு இறங்கி அந்த யானைகளை 10 கிலோமீட்டர் அப்பால் உள்ள சிறுமுகைக் காட்டுக்குள் விரட்டி விட்டார்கள். ஆனால் ஜீப்பின் மீது கால்பதித்து நொறுக்கிய ஒற்றை ஆண் யானை மட்டும் அங்கேயே ஊருக்குள் சுற்றித் திரிந்தது. அது ஒரு கூட்டத்துக்கு வழிகாட்டியாக திரியும் ஆண் யானை. மூன்று அல்லது நான்கு மைல் சுற்றளவிலேயே தன் கூட்டத்தை விட்டு விலகியிருக்கும். அங்கே ஒரு ஆபத்து என்று பிளிறல் சிக்னல் கிடைத்தால் அந்த விநாடியில் குறிப்பிட்ட இடத்திற்கு ஜெட் வேகத்தில் சென்று எதிரிகளை துவம்சம் செய்து விடும். அந்த அளவுக்கு மூர்க்கம் மிக்க யானை.

தற்போது அதன் கூட்டத்தையே ஒரு காட்டை விட்டு இன்னொரு காட்டுக்குள் துரத்தி விட்டதால் படுகோபம் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாது ஜீப்பின் மீது காலை வைத்து மனிதர்களை கிட்டத்தில் பார்த்து தப்பிக்க விட்டதிலும் அதற்கு மூர்க்கம் கூடுதலாக இருக்கிறது. இப்படி ஒற்றை யானை ஊருக்குள் சுற்றுவது படு ஆபத்தானது. அதை உடனே பிடிக்க வேண்டும். கராலில் அடைத்து வனத்துறையே பராமரிக்க வேண்டும் என்று பீதியுடன் வேண்டுகோள் வைத்தனர் இந்த கிராமங்களில் உள்ள மக்கள்.

ஆனால் வனத்துறையினரோ அது இயலாத காரியம் என்பது போல் கைவிரித்தனர்.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

 


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author