Published : 19 Aug 2017 04:03 PM
Last Updated : 19 Aug 2017 04:03 PM

யானைகளின் வருகை 15: வாங்க காந்தியை காப்பாற்றுங்க!

 

ஓரிரு மாதங்களே ஆன பூங்குட்டி காந்தி. அது வரும்போது பெயரிடப்படவில்லை. ஒரு காந்தி ஜெயந்தி நாளன்று சிறூர் வனப்பகுதியில் குவியல், குவியலாய் கிடக்கும் மலைகளில் காணப்படும் ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து கிடந்து காயங்களோடு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது அது.

ஒன்று அது தன் தாய் யானையுடன் மலைப்பாதையில் செல்லும்போது, கால் இடறி இந்தப் பள்ளத்தாக்கில் விழுந்து அடிபட்டிருக்க வேண்டும். அல்லது யானைகளுக்கு நடுவே நடந்த மோதலில் இந்தக் குட்டி இடையில் தவறுதலாகச் சென்றதில் அவை முட்டித் தள்ளியிருக்க வேண்டும். இதைப் பார்த்து பரிதவித்த அந்தப் பக்கம் சென்ற பழங்குடியினர் உடனே நம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்களும் வந்தார்கள். சுற்றுப்பகுதியில் எங்காவது யானைக்கூட்டங்கள் இருக்கிறதா என்று ஆராய்ந்தார்கள். அப்படி எதுவும் அகப்படவில்லை. எனவே அந்தக் குட்டியைக் கூட்டத்துடன் சேர்ப்பது அரிது என்பதை உணர்ந்து சிகிச்சைக்காக மசினக்குடி மாவனல்லா அருகில் உள்ள வாழைத்தோட்டம் வனத்துறை சோதனைச் சாவடிக்கு கொண்டு வந்தார்கள். அதன் உடலில் இருந்த காயத்திற்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் மருந்திட்டார்கள்.

பெரிய யானைகளைப் பராமரிப்பது, அந்த யானைகளின் குட்டிகளை அதனிடமிருந்து பிரித்துப் பழக்குவது போன்ற பணிகளில் முதுமலை சரணாலய யானைகள் முகாம் பாகன்களுக்கும், மருத்துவர்களுக்கும் சளைத்தவர்கள் யாரும் இருக்க முடியாது. வனத்தில் அனாதரவாக விடப்பட்ட காட்டு யானைக்குட்டிகளில் 6 மாதங்களுக்கு மேல் வயதிருந்தால் கூட அதை காப்பாற்றி விடுவார்கள் இவர்கள்.

ஆனால் இப்போது கிடைத்ததோ வெறும் ஓரிரு மாதங்கள் கூட நிரம்பாத பூங்குட்டியாயிற்றே. அதனால் இந்தக் குட்டி யானையை பராமரிப்பதில், அதற்கு சிகிச்சை அளிப்பதில் ரொம்பவும் திண்டாடிப்போயினர் இங்குள்ள உள்ளூர் முகாம் மருத்துவர்களும், பாகன்களும். அதற்குத் தோதாக வெளிநாடுகளிலிருந்து இதற்கான பராமரிப்பு மற்றும் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தார்கள். அதற்கேற்ப இங்கே செயல்பாடுகளும் நடந்தன. அந்தப் பணியில் முக்கிய அங்கம் வகித்தது இங்குள்ள தன்னார்வத் அமைப்பான இபான்.

அதில் பாகன்களின் பங்களிப்பு மிகுதியாக இருந்தது. காட்டு யானைக் குட்டி என்பதால் அதற்கு ஒரு நாளைக்கு 'டெக்சோ லேக்' எனப்படும் வைட்டமின் அடங்கிய ஊட்டச்சத்து பவுடர் டின்கள், பால்பவுடர் டின்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டன. யானைக் குட்டிக்கு பால் கொடுக்க பெரிய புட்டிகள், தனிப் பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் யானைக் குட்டிக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகே பயன்படுத்த வேண்டும். அதற்குப் பயன்படுத்தும் பிற பொருட்களையும் மற்றவர்கள் தொடக் கூடாது; அந்தக் குட்டி யானையை சுத்தப்படுத்துவதும் பராமரிப்பதும் குறிப்பிட்ட இரண்டு பாகன்கள் மட்டுமே மாறி செய்ய வேண்டும். அந்த பாகன்களும் வெந்நீரில் குளித்துவிட்டே குட்டி யானையத் தொட வேண்டும் போன்ற நிறைய கட்டுப்பாடுகளுடனே இயங்க வேண்டிய நிலை. இல்லாவிட்டால் அடிபட்ட யானைக் குட்டிக்கு தொற்று ஏற்பட்டு, அதன் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்பதுதான் வெளிநாட்டு யானை மருத்துவர்களின் வழிகாட்டல். அதை அப்படியே நடைமுறைப்படுத்தியது இங்குள்ள மருத்துவர்கள் குழு.

இதில் வேடிக்கையான ஒரு விஷயம். தாயைப் பிரிந்த, காட்டு யானைகள் கூட்டத்தைப் பிரிந்த அந்த சின்னஞ்சிறு குட்டி யானை ஒரு பாகனையே தன் தாயாகக் கருத ஆரம்பித்தது. அந்தப் பாகனின் தொடையிலேயே தலைவைத்து அந்த உடலின் இளஞ்சூட்டிலேயே தூங்கியது. சரியாக காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதியன்று இந்தக் குட்டி யானை காட்டுக்குள் கிடைத்ததால் இதற்கு 'காந்தி' என்றே பெயரிட்டு பாசம் பொங்க போஷித்தனர் பாகன்கள். அங்குள்ள வனத்துறை ஊழியர்களுக்கும் இது செல்லப் பிள்ளையாகி விட்டது.

இந்த விஷயங்கள் எல்லாம் மீடியாக்களில், செய்திப் பத்திரிகைகளில் சுவாரஸ்யமாக வெளியாக, இந்தக் குட்டி யானையை வேடிக்கை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிய ஆரம்பித்தனர். உதவிகளும் நிறைந்தன. ஒரு வியாபாரி தன்னிடமிருந்து நூற்றுக் கணக்கான பால்பவுடர் டின்களை இதற்காக இலவசமாகவே கொடுத்தார். அதில் யானைக் குட்டி நன்றாக உடல்நலத்துடன் காணப்பட்டது. பாகன் எங்கெல்லாம் போகிறாரோ அவர் பின்னாலேயே போவதும், அவரிடமே படுத்து உறங்குவதும், விளையாட்டுக் காட்டுவதுமாக பொழுது கழிய அந்தக் காட்சிகளும் அப்போதைய சேனல்களில் வெளிவந்தன.

அதனால் வனத்துறை உயர் அதிகாரிகளிடமிருந்து நெருக்கடி வர ஆரம்பித்தது. ''காட்டுக்குள் கிடைத்த குட்டியை வைத்து வேடிக்கையா காட்டிட்டு இருக்கீங்க. அதை சிகிச்சையளித்து காட்டுக்குள் அதன் யானைக் கூட்டத்துடன் விடவேண்டியதுதானே? அங்கே தன்னார்வ அமைப்பில் உள்ள கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க, நம் மருத்துவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?'' என்றெல்லாம் அதில் கேள்விகள் எழுந்ததாக சொல்லப்பட்டது. அதன் விளைவு. அடுத்த நாளே அந்தக் குட்டியை காட்டில் கண்டெடுக்கப்பட்ட இடத்திலேயே விட மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கு வெளிநாட்டு மருத்துவர்களிடம் பல்வேறு ஆலோசனைகள் பெற்றுத் தந்த தன்னார்வலர்கள் குழு எதிர்ப்பு தெரிவித்தனர்.

''குட்டி யானை இப்போதுதான் ஓரளவுக்கு தேறியிருக்கிறது. அதை இப்படியே பராமரித்து முழுக்க குணமானவுடன் அதன் கூட்டத்துடன் சேர்ப்பதுதான் சரி. மற்ற யானைக் கூட்டங்களாக இருந்தால் அவை இதை முட்டித் தள்ளி கொன்றே விடும். இந்தக் குட்டி யானைக்குரிய யானைக் கூட்டமாக இருந்தாலும் கூட மனித வாடை பட்ட இதைத் திரும்ப தன் கூட்டத்தோடு சேர்த்துக் கொள்ளுமா என்பதும் சந்தேகம்தான்!'' என்பதுதான் அவர்கள் வாதம்.

அதற்கு வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் செவி சாய்ப்பதாக இல்லை. இது மேலிட உத்தரவு என்று ஒற்றை வரியில் சொன்னவர்கள் அடுத்த நாளே ஒரு வாகனத்தில் குட்டியை ஏற்றி யானைக் கூட்டத்தில் விட ஏற்பாடு செய்துவிட்டனர். இதன் மீது ஈடுபாடு காட்டி மருத்துவ உதவி செய்த மருத்துவர்களும், தன்னார்வலர்களும் அதனுடன் பின்னாலேயே ஜீப்பில் சென்றனர். காட்டில் ஓரிடத்தில் யானை மந்தைகள் தெரிய அங்கேயே விடுவது என்று முடிவு செய்தனர்.

குட்டி யானையின் கூட்டமே அல்ல
  • பின்னால் போன தன்னார்வலர்கள் குழு, 'அது இந்தக் குட்டி யானையின் கூட்டமே அல்ல; அங்கே விட்டால் இந்த குட்டி உயிருடன் இருக்காது. வேண்டாம்!' என்று கேட்டுப் பார்த்தனர். கெஞ்சியும் பார்த்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அந்தக் கூட்டத்தோடு, காந்தி குட்டி யானையை விட்டால் அது அந்தக் கூட்டத்தின் திசை நோக்கி செல்லாமல் இவர்களை நோக்கியே திரும்பி வந்தது.

குறிப்பாக அதை வளர்த்திய பாகனை நோக்கியே கத்திக் கதறியபடி ஓடி வந்தது. அதை எதையும் லட்சியம் செய்யாமல் குட்டியை அந்த வனாந்திரத்தில் விட்ட வனத்துறையினர் குழு ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பியது. அந்த குட்டி யானை அந்த வாகனத்தின் பின்னாடியே - அதிலும் பாகன் அமர்ந்திருந்த வாகனத்தின் பின்னாலேயே கத்திக் கொண்டு ஓடி வந்தது பார்ப்பவர் நெஞ்சைப் பிழிய வைப்பதாக இருந்தது.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் அத்தனை பேரும் திரும்பி விட்டனர்.

அடுத்த நாள் அந்த யானைக் கூட்டம் இருந்த இடத்தில் பார்த்தால் ஒரு பாறை இடுக்கில் படுகாயங்களுடன் கிடந்தது காந்தி. இப்படியொரு குட்டி யானை கிடப்பதை அப்பகுதிக்கு சென்ற பழங்குடி மக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர்.

'அந்தக் குட்டி யானைக்கு உசிர் இருக்கா இல்லையான்னே தெரியலை. நெறைய காயமாகியும் இருக்கு. சுருண்டு விழுந்து கிடக்கு. வாங்க. வந்து காப்பாத்துங்க!' என ஒரே மாதிரி பதட்டத்துடன்தான் அத்தனை பேரும் பேசினர். அதை வனத்துறையினர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x