Published : 24 Aug 2017 05:19 PM
Last Updated : 24 Aug 2017 05:19 PM

உச்ச நீதிமன்ற தீர்ப்பு: ஒரு சமூக ஆர்வலரின் பார்வையில்..

இந்திய அரசியல் சாசனத்தின்படி தனிநபர் ரகசியம் அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆதாரைக் கட்டாயமாக்கும் திட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான தனிநபர் சுதந்திரத்தை மீறுகிறதா? என்பது குறித்த வழக்கில் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ தமிழ் தி இந்து இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள் ?

உச்சபட்ச தனிமனித பாதுகாப்பு , ரகசியம் காப்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் ஆதார் என்ற ஒரு முறை மூலம் சிம் கார்டு வாங்குவது முதல் அரசு மானியம் வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கட்டாயம் என்பது வரவேற்கத்தக்கது. காரணம் மும்பை தாக்குதல் விவகாரத்தில் பல இடங்களில் தீவிரவாதிகள் கண்டபடி சிம் கார்டு வாங்கியதை பார்க்க முடிந்தது. இது போன்ற விஷயங்கள் தடுக்கப்படும்.

ஆனால் நடைமுறையில் நாடாளுமன்றத்தில் திடீரென கொண்டுவந்து நிறைவேற்றியது தவறு. மற்றொரு புறம் தனியார் ஏஜன்சியிடம் ஒப்படைக்க கூடாது. அரசு ஊழியர்களை அமர்த்தி நீண்டகால திட்டமாக ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும்.

போட்டோ ஒழுங்கு கிடையாது, கைரேகை ஒழுங்காக வாங்குவது கிடையாது போன்ற குறைபாடுகளை களைந்திருக்க வேண்டும். நல்ல திட்டத்தை ஏனோ தானோ என்று நிறைவேற்றுவது சரியல்ல என்பது தான் எங்கள் எண்ணம்.

ஆகவே இந்த தீர்ப்பு துரதிர்ஸ்டவசமானது. தனிநபர் ரகசியம் காப்பது தான் என்கின்றனர் தவிர ஆதாரே தேவை இல்லை என்று தீர்ப்பு வரவில்லை.

தனிநபர் உரிமைகள் பறிக்கப்படுகின்றனவா?

அப்படி எடுத்துக்கொள்ள முடியாது. இன்று பத்திர பதிவு ரிஜிஸ்ட்ரேஷன் போனால் கைரேகை பதிவு எடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டில் கைரேகை வாங்கிகொண்டிருக்கிறார்கள். சிறைக்கு சென்றால் முழுதும் ஆடைகளை களைந்துதானே சோதனை இடுகிறார்கள்.

அங்கே எங்கே போனது தனிமனித உரிமை. ஆகவே சில விஷயங்களுக்கு கட்டாயம் தேவை எனபதாகத்தான் பார்க்க வேண்டும். சமீபத்தில் மேற்கு மாநிலம் ஒன்றில் லட்சக்கணக்கில் ரகசிய தகவல்கள் கசிந்ததாக தகவல் வந்தது. இது போன்ற தவறுகள் தான் களையப்பட வேண்டும் என்கிறோம். மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்த முடியாது அல்லவா. இதை எந்த அரசு கொண்டு வந்தது எனபதை பார்க்கக்கூடாது.

பாதுகாப்பு தேவை , நிறைய குளறுபடி உள்ளது. ஆகவே ரகசிய பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் தரணும். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் ஏனோ தானோன்னு இருக்காங்க. எந்தெந்த விஷயங்களில் தனியாருக்கு கொடுப்பது என்பதை முறைப்படுத்தணும்.

தனியார் செல்போன் நிறுவனம் ஒன்றுக்கு ஆதார் விபரங்களை சமீபத்தில் அளித்ததாக தகவல் வந்தது. இது போன்ற விஷயங்களில் எந்த அளவுக்கு தரவேண்டும் என்பதை முறைப்படுத்தணும்.

தவறு எங்கே நடக்கிறது?

கிட்டதட்ட 120 கோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்த முறைப்படுத்துவதில் இது போன்ற விஷயங்கள் கட்டாயம் தேவை இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில் தான் ஏகப்பட்ட குளறுபடி செய்து விட்டார்கள். பொதுமக்கள் ஆதாரை எடுத்தப்பின்னர் தகவல் தவறாக இருக்கிறது , போட்டோ தவறாக இருக்கிறது என்று பொதுமக்களை அலைக்கழிக்கும் போக்கு உள்ளது.

இதை அலட்சியமாக கையாளும் ஊழியர் மீது நடவடிக்கை வரணும். டார்கெட் கொடுத்து ஒரு நாளைக்கு இத்தனை பேர் என்று கொடுப்பதால் சகட்டு மேனிக்கு அலட்சியமாக நடக்கின்றனர். அடிப்படை விஷயஞானம் இல்லாதவர்களை வைத்து செய்வது சரியல்ல அரசுதான் இதை செய்யணும்.

பொதுவாக அரசு ஊழியர்கள் இது போன்ற விஷயங்களில் சரியாக செயல்பட மாட்டார்கள் என்ற குறைபாடு உள்ளதே?

அப்படி சொல்லவில்லை. பாஸ்போர்ட் போன்றவைகளில் இது போன்ற தகவல்களை சேகரிக்க அதற்குரிய தனியார் ஏஜன்சிகள் உள்ளன. ஆனால் அதை இறுதிப்படுத்துவது அரசாங்க அதிகாரியாக இருப்பார் , அப்படிப்பட்ட ஒரு நடைமுறையை கொண்டுவந்தால் தான் இது போன்ற தவறுகள் நடப்பதை சரிபடுத்த முடியும்.

120 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில் அரசு ஊழியர்களை மட்டும் வைத்து இவ்வளவு பெரிய திட்டத்தை நிறைவேற்ற முடியுமா?

வாய்ப்பு இல்லைதான், ஆனால் தகுதியான சாஃப்ட்வேர் தெரிந்த நபர்களை வைத்து பதிவு பணிகள் நடந்திருக்கணும். ஏரளமான நிதியையும் அரசாங்கம் ஒதுக்கியது. ஆனாலும் அது முறையாக நடக்கவில்லை என்பதே எங்கள் கருத்து.

இந்தியா முழுதும் ஒருமுகப்படுத்தப்பட்ட அடையாள அட்டை அவசியமானதுதானே?

கட்டாயம் அவசியம் தான். எல்லோருக்கும் ஒரு யூனிக் நமபர் கொடுப்பது வரவேற்கப்படவேண்டிய விஷயம். இதன் மூலம் நிறைய குற்றங்கள் தடுக்கப்படும். இன்று வடமாநிலத்தவர் இங்கு வந்து குற்றச்செயலகளில் ஈடுபட்டுவிட்டு தப்பி சென்றுவிடுவதாக கூறுகிறார்கள் ஆனால் இந்த முறையில் அவர்களது ரேகையை எடுத்தால் யார் என்ன என்று கண்டுபிடித்து விடலாம். முறைகேடுகள் தடுக்கப்படும்.

இதன் அடுத்த கட்ட வளர்ச்சி எப்படி இருக்கும்?

ஏராளமான விஷயங்கள் இருக்கு. வெளிநாட்டில் இது போன்ற யூனிக் நம்பர் மூலம் மருத்துவ ரிப்போர்ட்டே நாட்டின் எந்த மூலைக்கு சென்றாலும் எடுக்க முடியும். அதுமட்டுமல்ல அனைத்து ஆவணங்களையும் இதில் பதிவேற்றுவதன் மூலம் நீங்கள் வெளி மாநிலங்களுக்கு சென்றால் கூட உங்கள் எண்ணை கொடுப்பதன் மூலம் அனைத்து விபரங்களையும் சரிபார்க்க முடியும்.

அப்படியானால் நமது ஆவணங்கள் அடுத்தவர் கையாளும் நிலை ஏற்படாதா?

அதற்குத்தான் ஒன் டைம் பாஸ்வேர்ட் முறை உள்ளது. அதன் மூலம் யார் உங்கள் ஆவணங்களை அல்லது மருத்துவ ரிப்போர்ட்டுகளை பார்க்க விரும்புகிறாரோ அவருக்கு உங்களுக்கு வரும் ஒன் டைம் பாஸ்வேர்டை கொடுத்து ஒரு முறை மட்டும் ஆவணங்களை பார்க்கும் வகையில் நடைமுறை இருக்கும்.

இதனால் சான்றிதழ்களை எடுத்து போவது அது காணாமல் போவது போன்ற விஷயங்கள் தவிர்க்கலாம். தற்போது சிம்கார்டு வாங்க விரல் ரேகை மட்டும் வைத்து ஆதார் எண்ணை கொடுத்தால் போதும் எளிதாக சிம்கார்டு பெற முடிகிறது. இது பாராட்டத்தக்க அம்சம்.

ஆனால் தகவல்களை பாதுகாக்கும் உத்தரவாதம் மட்டும் இருக்கணும் என்கிறோம். என்னுடைய எந்த ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்கணும் என்ற முறையை சரியாக செய்யணும். இதன் மூலம் தான் மக்கள் நம்பிக்கையை பெற முடியும்.

ஆதார் அட்டையை அனைத்து சேவைகளிலும் இணைக்க வேண்டும் என்பதற்கு சிலர் எதிர்ப்புத்தெரிவிக்கிறார்களே?

அது ஏற்கத்தக்கதல்ல , எந்த சிஸ்டத்துக்குள்ளேயும் வரமாட்டோம் என்று யாரும் சொல்ல முடியாது. எதாவது ஒரு அமைப்புக்குள் நாம் இருந்துதான் ஆகவேண்டும். நம்முடைய தகவல்கள் ஏற்கனவே அரசாங்கத்திடம் இருப்பதால் முறைகேட்டை தடுக்க முடியும்.

மானியங்கள் பல வகைகளில் தருகிறார்கள். அதில் ஆதாரை இணைக்கும் போது போலியாக வாங்குபவர்கள் , வாங்கினவர்களே திரும்ப வாங்குகிறார்கள். இதில் ஆதாரை இணைக்கும் போது கரெக்டா கண்டுபிடித்துவிடலாம். முறைகேடு செய்பவர்களால் இதில் ஏமாற்ற முடியாது. எதையும் வரைமுறைப்படுத்த முடியும்.

போலி லைசென்ஸ்கள் , வங்கி கணக்குகள் , சிம்கார்டுகள் , ரேஷன் கார்டுகள் எதையுமே வாங்க முடியாது. இரட்டை பதிவு செய்ய முடியாது. போலிகள் தடுக்கப்படுவார்கள்.

ஆந்திராவில் மதிய உணவு திட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை டபுள் எண்ட்ரி போட்டு அரிசி வாங்கியதை ஆதார் இணைத்தபோது வெளிப்பட்டு தடுத்து விட்டார்கள்.

போலி ஆதார் அட்டைகள் வருகிறதே அதை முறைப்படுத்துவது எப்படி ?

இதைத்தான் வலியுறுத்தி வருகிறோம். நல்ல திட்டம் அதை முறையாக ஒழுங்காக நடைமுறைப்படுத்தி விட்டு பின்னர் அனைத்து சேவைகளிலும் ஆதாரை இணைக்கும் திட்டத்தை கொண்டு வரவேண்டும். ஒரு ஆளுக்கு ஆதார் அட்டை பதிவு செய்ய 15 நிமிடம் ஆகும். ஒரு நாளைக்கு ஒரு நபர் 30 பேரை மட்டுமே பதிவு செய்ய முடியும். அப்படியானால் அதற்கான அதிக அளவில் தகுதியான ஆட்களை நியமித்து சரியாக பதிவு செய்ய வேண்டும்.

வேறு என்ன நடைமுறை வேண்டும்?

ஆதாருக்கு பதிவு செய்பவர்களை பாஸ்போர்ட் நடைமுறைபோல் ஆன்லைனில் பதிவு செய்து பின்னர் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் முறைகேடு இல்லாமல் ஆதார் அட்டை எடுக்க முடியும்.

முன்பே சொன்னது போல் நமது அடிப்படை தகவல்களை பாதுகாக்கும் முறைகளும் இருக்க வேண்டும். இதன் மூலம் தான் தனது ரகசிய தகவல்கள் பாதுகாக்கப்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்.

ஆதார் அட்டை அவசியம், அதில் நாம் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஆகவே முறைப்படுத்தப்பட வேண்டிய அவசியமும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x