Published : 08 Aug 2017 03:17 PM
Last Updated : 08 Aug 2017 03:17 PM

யானைகளின் வருகை 7: 4 பெரிய ஜீவன்கள் மரணத்திற்கு காரணிகள் யார்?

 

இரவில் நடந்த சம்பவத்தில் யானைகள் இறந்தது மட்டுமல்ல, ரயிலின் சில சக்கரங்களும் தடம் புரண்டு விட்டன. எனவே ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

அதே சமயம் தொடர்ந்து யானைகளின் பிளிறல் சப்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. அதனால் உடனுக்குடனே அங்கே கூட்டம் திரண்டு விட்டது. அந்த யானைகள் இறந்த பகுதியில் உள்ள வனாந்திரத்தில் தப்பித்துச் சென்ற ஒற்றை யானை ஒன்றும், வேறு ஒரு குட்டியானை ஒன்றும் மூர்க்கத்துடன் நிற்பதாக மக்களிடம் பேச்சு அடிபட்டது.

ஒரு யானை இறந்துவிட்டாலோ, குட்டி இறந்து விட்டாலோ கூட்டத்தில் உள்ள யானைகள் அவ்வளவு சுலபமாக அந்த இடத்தைவிட்டு செல்லாது. அவை இறந்து கிடக்கும் உடலை அப்படி இப்படி புரட்டி எடுக்கும். உண்மையிலேயே விழுந்து கிடக்கிற யானை இறந்துதான் விட்டதா என்பதை பலமுறை சோதிக்கும். அதேபோல் தன்னால் அடித்துக் கொல்லப்பட்ட மனிதன் உயிரோடு இருக்கிறானா? இல்லையா என்பதிலும் கூட பெருத்த சந்தேகம் கொள்ளும்.

எனவே பிணவாடை அடிக்காமல் அந்த இடத்தை விட்டு நகராது. அப்படித்தான் கோவை குற்றாலத்தில் சிறுமியை கொன்ற ஒற்றையானை கூட அந்த இடத்திலேயே அரைமணி நேரத்திற்கும் குறையாமல் நின்றிருந்தது. சிறுமியிடம் பிணவாடை அடித்த பின்பே நகர்ந்தது.

அதேபோல் இங்கே தன் குடும்பமே இறந்து கிடப்பதை மற்ற இரண்டு யானைகள் (அதில் கொம்பன் யானையும் கூட) கண்டிப்பாக எதிர்கொள்ளும். சுற்றியிருப்பவர்களை தாக்கும் என்பதால் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் விரட்டினார்கள்.

அதில் ஆண் யானை விடிந்த பிறகே அந்த இடத்தை விட்டு அகன்றது. விடியலில் ரயில்வே மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் எல்லாம் வந்தார்கள். அதற்கு முன்பே தகவல் கிடைத்து அங்கே சென்றிருந்தேன். நான் அங்கே கண்ட காட்சி மனதைப் பிழிய வைப்பதாகவே இருந்தது.

அப்பெரிய பள்ளத்தாக்கில் இரைதேடும் மலைப் பாம்பை போல நீண்டு கிடந்தது தண்டவாளம். அந்த தண்டவாளத்தின் தெற்குப்பகுதியில் இரண்டு யானைகள் குன்றுகள் சாய்ந்து கிடந்ததுபோல் கிடந்தது.

அங்கிருந்து 100 அடிதூரத்தில் வடபுறப்பகுதியில் தாய் யானை வயிறு கிழிந்த நிலையில் இருந்தது. அதற்கும் முன்னே சில அடி தூரத்தில் கத்திரிப்பூ, கனகாம்பரப்பூ இரண்டும் கலந்தால் எப்படியிருக்கும்? அந்த கரிய செந்நிறத்தில் அப்பழுக்கில்லாத விநாயகர் போல் தன் தாயின் வயிற்றில் இருந்து பிதுங்கி மரித்துக் கிடந்தது. அங்கே பல்லாயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

அதைப் பார்ப்பவர்கள் யாரும் உச்சு கொட்டாமல் அங்கிருந்து நகரவில்லை. 'அடப்பாவி யானைகளா? இப்படி அநியாயமா உசிரை விடத்தான் பத்திருபது நாளா எங்ககிட்ட எல்லாம் கண்ணாமூச்சி விளையாடினீங்களா?' என மனிதர்களுடன் பேசுவது போலவே பெண்கள் கனிந்துருகி வெளிப்படையாக வார்த்தைகளை உதிர்த்துச் செல்வதையும் காண நேர்ந்தது.

அங்கு விடியும் முன்பே வந்துவிட்ட உள்ளூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மூர்த்தியிடம் பேசியபோது, ''இந்த இடத்தில் ரயில் எல்லாம் மெதுவாத்தான் வரும். அதுதான் சட்டுனு யானைகள் மோதின வேகத்தில் தடம்புரண்டு நின்றுவிட்டது. முழு வேகத்தில் ரயில் வந்திருந்தால் யானைகளை அடித்து தள்ளிவிட்டு போயிருக்கும்!'' என குறிப்பிட்டார்.

அந்த இடம் தமிழகப்பகுதியை சேர்ந்தது என்றாலும், ரயில்வே கோட்டம் பாலக்காடு என்பதாலும், காட்டு யானைகள் பாதுகாப்பில் இருமாநில அதிகாரிகளுக்கும் பொறுப்புள்ளதாலும் தமிழக, கேரள வனத்துறை, ரயில்வே உயர் அதிகாரிகள் அங்கே குழுமி விட்டனர்.

விபத்துக்கு காரணம்
  • இப்படி ஒரு கோர விபத்துக்கு காரணம் வனத்துறையின் அலட்சியம்தான் என்று ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ரயில்களின் வேகம்தான் என்றும் இயற்கை ஆர்வலர்களிடம் புகார்கள் கிளம்பின. இருவேறு மாநிலத்திலிருந்து வந்த மீடியாக்களிடமும் இதேபோன்று இருவேறு குற்றச்சாட்டுகள் இருந்தன.

''இந்த வாளையாறு -மதுக்கரை ரயில்வே லைனுக்கு இடைப்பட்ட பகுதியில் இதுபோல இரண்டு சம்பவங்கள் நடந்துவிட்டது. இது மூன்றாவது. இதில் இதுவரை ஏழு யானைகள் இறந்துள்ளன. இவ்வளவு பெரிய உருவங்கள் ரயில்வே லைனை கடக்கும்போது தூரத்திலேயே ரயிலை ஓட்டிவரும் என்ஜின் டிரைவருக்கு தெரியாதா? அப்படி கண்ணுக்கு தெரியும்போது வண்டியை நிறுத்தும் மிதவேகத்தில் ரயிலை செலுத்த முடியாதா? இந்த யானைகள் மூன்று மாதமாக இங்கேதான் சுற்றித் திரிந்துள்ளன. அவை எங்கே செல்கின்றன. எந்த திசையில் நகர்கின்றன என்பதை கண்காணிப்பதற்குத்தான் வனத்துறை இருக்கிறது.

யானைகள் ரயில்பாதையில் இறங்குவதற்கு முன்பு அதை வேறுதிசையில் விரட்டியிருக்கலாம். அல்லது ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு போன் செய்து சிக்னல் போட்டு ரயிலை நிறுத்தியிருக்கலாம். இந்த விஷயத்தில் இரண்டு துறைகளிலும் அக்கறை இல்லை. இரு தரப்புமே ஈகோ பார்ப்பதாலும், அக்கறையுடன் வேலை பார்க்காததாலும்தான் அநியாயத்திற்கு இத்தனை யானைகள் இப்படி செத்திருக்கின்றன!'' என்பதே அவர்களின் கோபமாக இருந்தது.

இதற்கிடைப்பட்ட நேரத்தில் அங்கு குழுமம் மக்கள் யானைகளை தொழுவதும், அதற்கு மாலைகள் இட்டு மரியாதை செய்வதும் நடந்தது. அதே நேரத்தில் சில வனவர்கள் தாங்கள் கண்டதை வெளியே சொல்லமுடியாது சில மீடியாக்களிடம் மட்டும் தம் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த யானைகள் ஓரிரு வாரங்களாக மட்டுமல்ல; 3 மாதமாகவே இங்குள்ள தோட்டத்து விவசாய நிலங்களில் விளைபொருட்களை சேதப்படுத்துகிறது. அதற்கு சோலார் மின்வேலிகள் பொருத்தியும் பலனில்லை. அதனால்தான் அதை பட்டாசு விட்டும், வான வெடி விட்டும் விரட்டியிருக்கிறார்கள் சுற்றுப்புற விவசாயிகள். அதனாலயே இது ஊருக்குள் புகுந்து நகரத்திற்குள் புகுந்து கலங்கல் கிராமம் வரை (காட்டிலிருந்து 50 கிலோமீட்டர்) சென்று விட்டது.

அவை திரும்ப காட்டிற்கே வருவதற்கு பல கிராமத்து சாலைகளை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியிருந்தது. அப்படி எல்லா சாலைகளையும் கடந்து விட்ட நிலையில் நேற்றுதான் இங்கே மதுக்கரை எட்டிமடை பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தோம். அவை பழக்கதோஷத்தில் அங்குள்ள வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்து விட்டது. அதை பட்டாசு வெடித்து விரட்டினர் விவசாயிகள். நாங்கள் சொன்னால் யாரும் கேட்பதாயில்லை. நாங்களும் ரெண்டு மூணு மாதமாக யானை விரட்டியே சோர்ந்து விட்டோம்.

அப்படி சோர்ந்திருந்த நிலையில்தான் இவை இங்குள்ள ரயில்வே டிராக்கில் புகுந்திருக்கின்றன. இது எங்களுக்கு தெரியாது. ஆனால் அதை விரட்டிய குறிப்பிட்ட ஊர் விவசாயிகளுக்கு தெரியும். ரயில் அந்த நேரத்தில் வரும் என்று தெரிந்தே இந்த பள்ளத்தாக்கில் விரிட்டி விட்டுள்ளார்கள். ஐந்தறிவே உள்ள விலங்கு அதற்கு என்ன தெரியும். நாங்கள் இது தெரிந்து சுதாரித்து அங்கிருந்து விரட்ட முயற்சித்தோம். ஆனால் நன்றாக அங்கே ரயில்வே தண்டவாளத்தில் விலக முடியாமல் அந்தப் பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. இப்போ ஐயோ விநாயகக் கடவுள். இப்படியாகிப் போச்சேன்னு கும்பிட்டுட்டு நகர்ற ஜனங்களில் சிலபேரு செஞ்ச கோளாறுதான் இந்த நாலு யானைகளின் சாவு!'' என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

அந்த யானைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி, தண்டவாளத்திலிருந்து சரிந்த சக்கரங்களை மீண்டும் தண்டவாளத்திலேயே பொருத்தி திரும்பவும் அந்தப் பாதையில் ரயில் ஓட வைக்க 10 மணி நேரம் ஆனது. அங்குள்ள சமதள இடத்திற்கு இறந்த யானைகள் கிரேன், பொக்லைன் இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. அதே நாளில் இறந்த யானைகளுக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தும் முகமாக குரும்ப பாளையம், மதுக்கரை, எட்டிமடை, மைல்கல், திருமலையாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் கூடினர். மலர் மாலையிட்டு அவற்றை தொழுதனர். அழுதனர்.

கோவை மாவட்டத்தில் வயது முதிர்ந்தவர்கள் இறந்துவிட்டால் அதை பெரிய சாவு என்று வர்ணித்து துக்கம் அனுஷ்டிப்பார்கள். அதையும் தாண்டி இந்த பெரிய ஜீவன்களின் மரணம் இந்த சுற்றுப்புற மக்களின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதை வெளிப்படுத்தும் முகமாகவோ, அல்லது இந்த யானைகள் மரணத்திற்கு நமக்கும் பங்குண்டு என்ற குற்ற உணர்ச்சி தனக்குள் தன்னையறியாமலே எழுந்ததன் காரணமாகவோ அவர்களிடம் மூலைக்கு மூலை பல்வேறு விதங்களில் துக்கம் பீறிட்டது.

இதைத் தொடர்ந்து இருமாநில வனத்துறையினர் இணைந்து எதிர்காலத்தில் ரயிலில் அடிபட்டு யானைகள் இறக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனைக் கூட்டங்கள் போட்டனர். ரயில்வே நிர்வாகத்திடமும் பேசினர். ரயில்வே பாதையில் யானைகள் கடக்கும் இடங்களில் யானைகள் படம் பொறித்த எச்சரிக்கை பலகையும், அந்த பகுதிகளில் ரயிலின் வேகம் 30 முதல் 40 கிலோ மீட்டருக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வாதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் உத்திரவாதம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த ரயில்வே பாதையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் யானைகள் கடக்கும் இடம் என்பதற்கான அறிவிப்பு பலகைகள் ரயில்வே நிர்வாகத்தால் வைக்கப்பட்டன. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இப்படி பலகைகள் வைத்த இடங்களை குறிவைத்தே மறுபடியும் யானைகள் விபத்தில் சிக்கி மரணிக்கும் நிலை தொடர்கதையானது. அதற்கான அச்சாரம் அடுத்த 17-வது மாதத்தில் இதே பகுதியில் நடந்தது...

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x