Published : 09 Aug 2017 03:38 PM
Last Updated : 09 Aug 2017 03:38 PM

யானைகளின் வருகை 8: மோதிக்கொண்ட ரயில்வே - வனத்துறையினர்

 

குரும்பபாளையத்தில் வயிற்றில் இருந்த குட்டியுடன் சேர்த்து 4 யானைகள் இறந்த சம்பவத்திற்கு பிறகு அடுத்த ஆண்டே வாளையாறு பகுதியில் 2 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. அது கேரள எல்லைக்குள் வந்ததால் அங்குள்ள ரயில்வே அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் லெவலிலேயே விஷயத்தை முடித்துக் கொண்டனர்.

அதையடுத்து 2 மாதங்கள் கழித்து 2009 ஜூலை மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை திரும்பவும் ஓர் யானை பின்னிரவில் மங்களூர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் சிக்கி உயிரிழந்தது. இந்த யானை தமிழகப்பகுதியில் (கேரளாவின் கஞ்சிக்கோடு ஸ்டேஷன் அருகே) இறந்ததால் அங்கே தமிழக வனத்துறையினர் திரண்டு விட்டனர்.

இறந்தது 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை. ரயில் மோதியதில் மண்டை பிளந்து, தந்தம் முறிந்து, முதுகு கிழிந்து உயிரை விட்டிருந்தது. அது ஆடி வெள்ளிக்கிழமை நாள் ஆதலால் சுற்றுப்புற கிராம மக்கள் அதிகாலையிலேயே திரண்டு விட்டனர். 'ஆடி வெள்ளியன்னைக்கே இங்கே வந்து உசிர விட்டிருக்கியே கணேஷா. எங்க ஊருக்கு என்ன கேடு வரப்போகுதோ!' என்று கண்ணீர் விட்டு அதற்கு குங்குமம், திருநீரு போட்டு, மாலை சூட்டி வேண்டுதல் செய்தனர் பெண்கள்.

அங்கு வந்த பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகளோ யானையை ஓர் ஓரமாக புரட்டிப் போட்டுவிட்டு ரயிலை கிளப்புவதிலேயே குறியாக இருந்தனர். இறந்து கிடந்த யானைக்கு முன்பக்கமாக இருந்த பதினோரு பெட்டிகளை கழற்றி ஒரு பக்கமாக வேறொரு என்ஜின் பொருத்தி அனுப்பி விட்டு, அதற்கு பின்பக்கம் இருந்த பெட்டிகளை வேறொரு லைனில் (இரட்டை ரயில் பாதை இது) கொண்டு சென்றனர்.

இதற்கே காலை 6 மணிக்கு மேல் ஆகி விட்டது. இதை கவனித்துக் கொண்டிருந்த வனத் துறையினருக்கு செம கடுப்பு. அதனால் ரயில்வே பாதையிலேயே யானையை அப்படியே போட்டு திரைபோட்டு உடற்கூறு பரிசோதனைகள் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதில் ரயில்வே அதிகாரிகள் பொங்கி விட்டனர்.

இப்படி போஸ்ட் மார்ட்டம் செய்தால் எப்படி? இப்பவே நாங்கள் இந்த வழியில் வரவேண்டிய ரயில்களை விட முடியாமல் தவிக்கிறோம். மணிக்கணக்கில் லேட். நாங்கள் யானையை கிரேன் கொண்டு வந்து இருப்புப்பாதைக்கு வெளியே தூக்கிப் போடுகிறோம். அப்புறம் நீங்கள் தந்தத்தை எடுத்துட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்யுங்கள்!'' என கேட்டனர். அதில் இருதரப்புக்கும் மோதல் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்தது. காட்டுயானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இஷ்டம் போல் ரயிலை செலுத்துவீங்க. எதுக்கும் கட்டுப்பட மாட்டீங்க. யானைகள் செத்தாலும் உங்களுக்கு உங்க வேலைதான் முக்கியம்!' என்று இரு தரப்பு அதிகாரிகளுக்குள் வாக்குவாதமும் நிகழ்ந்தது.

இதில் ரயில்வே உயர் அதிகாரி ஒருவர், வனத்துறை உயர் அதிகாரி ஒருவரை முறைத்துக் கொண்டு சென்றுவிட்டனர்.

‘எங்கே பார்க்கணுமோ அங்கே பார்க்கிறேன்’
  • அதில் ரயில்வே அதிகாரி, ''உங்களை எப்படி, எங்கே பார்க்கணுமோ அங்கே பார்க்கிறேன்!'' என்று வெளிப்படையாகவே பேசி விட்டு சென்றது அங்கிருந்த பொதுமக்களுக்கும், வன உயிரின ஆர்வலர்களுக்கும் புகைச்சல் கிளப்புவதாக இருந்தது.

அந்த புகைச்சலில் ரயில்வே பாதையிலேயே இறந்து கிடந்த யானையின் தந்தத்தை வெட்டியெடுத்து, போஸ்ட் மார்ட்டம் செய்து மதியத்திற்கு பிறகே வருகிற ரயிலுக்கு வழிவிட்டனர் வனத்துறையினர்.

இறந்து போன யானை அங்கேயே காட்டுப்பகுதியில் தனித்தனியாக உடல் கூறுகள் வெட்டி புதைக்கப்பட்டன.

இந்த பிரச்சினையில் ரயில்வே அதிகாரிகள் வனத்துறைக்கு ''யானை ரயில்வே பாதையில் வந்தது எப்படி? அதை வனத்துறையினர் வேறு பகுதியில் விரட்டி விடாததற்கு என்ன காரணம்?'' போன்ற கேள்விகளுடன் விளக்க நோட்டீஸ் அனுப்பியதாகவும் தகவல்கள் கசிந்தன. அதில் எரிச்சலான தமிழக வனத்துறை அலுவலர்கள் பதிலுக்கு ரயில்வே துறையினரும் பதில் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இருதரப்புக்கும் எழுந்த புகைச்சல் காரணமாக கோவை பகுதியில் இருந்து இயற்கை மற்றும் சூழலியல் ஆர்வலர் பாலக்காடு ரயில்வே அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்தும், ரயில்களில் அடிபட்டு தொடர்ந்து காட்டு யானைகள் இறப்பதை தடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் செய்ததும் நடந்தது.

அப்போது மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ''இந்தப் பகுதிகளில் எப்படி ரயில்வே பாதை அமைக்க அனுமதி கிடைத்தது என்பதிலேயே இருவேறு துறைகளுக்குள் சில பிரச்சினைகள் உள்ளன. அதை ரயில்வேயில் அதிகாரிகள் வெளிப்படையாக சொல்வதில்லை. தவிர இப்படி வன உயிரினங்கள் உள்ள பகுதிகளில் 10 கிலோமீட்டர் வேகத்திற்கு அடக்கமாகத்தான் ரயிலை இயக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. யானைகள் பொதுவாக 25 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். அதற்கு தகுந்தாற்போல் காட்டுப் பகுதிகளில் ரயிலின் வேகத்தை குறைத்தால் யானைகள் ரயில் வரும்போது ஓடி தப்பித்துக் கொள்ளும். அதை நாங்கள் பல முறை ரயில்வே அதிகாரிகளுக்கு தனிப்பட்ட கடிதங்கள் மூலமாகவும், கலந்தாய்வு கூட்டங்களிலும் சொல்லி விட்டோம். அவர்கள் வேகத்தை குறைத்த மாதிரியே தெரியவில்லை!'' என்று குறிப்பிட்டார்.

கேரளா பாலக்காடு ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மழை, இருட்டு, பனிமூட்டம் காரணமாக ரயிலின் முகப்பு விளக்கு வெளிச்சம் மங்கலாகவே இருந்திருக்கிறது. அதனால் யானை வந்தது ரயில் ஓட்டுநர்களுக்கு தெரியவில்லை. கிட்ட யானை வந்து ரயிலில் சிக்கிய பிறகே தெரிந்துள்ளது. மற்றபடி நாங்கள் கவனமாகவே ரயிலை செலுத்துகிறோம். அப்படி பலமுறை பல யானைகள் விபத்திலிருந்து மயிரிழையில் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. அதையும் மீறித்தான் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன. இதுவரை கோவை வனக்கோட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 4 யானைகளே இறந்துள்ளன. அதைப் பற்றிய விசாரணை அறிக்கையைத்தான் துறை ரீதியாக கேட்டிருக்கிறோம். மற்றபடி இருவேறு துறைகளுக்குள்ளும் மோதல் என்பதில் உண்மை இல்லை!'' என்று தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து இருமாநில வனத்துறை, ரயில்வே துறை அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டங்கள் எல்லாம் நடந்தது. ரயிலின் வேகம் இந்த பகுதிகளில் மிகவும் மட்டுப் படுத்தப்படுவதாகவும் சொல்லப்பட்டது. தவிர ரயில்பாதைகளில் யானைகள் கடக்கும் இடங்களாக கருதப்படும் பகுதிகளில் யானை உருவப்படம் தாங்கிய எச்சரிக்கை பலகைகள் (ரிப்ளக்டர்- ரயில் ஓட்டுபவர்க்கு தெரிகிறாற்போல்) வைப்பதும் நடந்தது. இந்த பகுதிகளில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சுற்றுவது பலப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தனர் வனத்துறையினர்.

சரி, அதன் பிறகாவது யானைகள் ரயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் நின்றதா என்றால் அதுதான் இல்லை. இந்த சம்பவம் நடந்து இதே ரயில்வே பாதையின் 15 கிலோமீட்டர் இடைவெளியில்தான் சமீபத்தில் மதுக்கரை மகாராஜ் யானை சிறப்பு ஆபரேசன் மூலம் பிடிக்கப்பட்டதும், அது டாப் ஸ்லிப் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு கராலில் அடைக்கப்பட்டு இறந்ததும் நடந்தது.

அதற்கு முந்தைய நாளில் மகராஜ் யானை பிடிபட்ட இடத்திற்கு அருகே எட்டிமடையில் (இதுவும் வாளையாறு வனப்பகுதி எல்லையில் உள்ளது) ரயிலில் அடிபட்டு ஒரு யானை இறந்தது. அதற்கு சில நாட்கள் கழித்து வாளையாறு (கேரள பகுதியில்) ஒரு யானை ரயிலில் சிக்கி இறந்தது.

இந்த யானைகள் இறப்பிற்கும் பின்னணியில் நிறைய காரணங்கள் உண்டு. அதை வேறு அத்தியாயங்களில் பார்ப்போம். அதற்கு முன்பு கோவையில் காட்டுயானை தாக்கி முதன்முதலில் இறந்த மனிதர்களின் சோகக் கதைகளுக்குள் கொஞ்சம் சென்று வரலாம்.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x