Published : 24 Aug 2017 10:24 AM
Last Updated : 24 Aug 2017 10:24 AM

பள்ளிக்கூடங்களுக்குள் உலக சினிமா.. ஒரு இயக்குநரின் புது முயற்சி!

ஜித்தின் விவேகத்தையும் விஜய்யின் மெர்சலையும் ஆர்பாட்டத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சினி ரசிகர்கள். ஆனால், எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், உலகின் தலைசிறந்த சினிமாக்களைத் தேடிப்பிடித்து, கிராமத்துப் பள்ளிக்கூடங்களுக்குள் கொண்டு சேர்த்துவருகிறார் மா.ராமதாசு.

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருத்தண்டலையைச் சேர்ந்தவர் ராமதாசு. பி.ஏ., தமிழ் இலக்கியம் படித்த இவர், மத்திய அரசுப் பணியை உதறித் தள்ளிவிட்டு, திரைத்துறைக்கு வந்தவர். சென்னையில் இயக்குநர் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருந்த போதுதான் இவரது பார்வை உலகத் திரைப்படங்களை நோக்கித் திரும்பியது.

செருப்பை மையமாக வைத்து

திருப்பூர் வந்திருந்தபோது தனது திரை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட ராமதாசு, “ஈரானிய திரைப்படங்களான ‘வேர் இஸ் மை ஃபிரெண்டு ஹோம்’, ’சில்ரன் ஆஃப் தி ஹெவன்’ இந்த இரண்டு படங்கள் தான் என் வாழ்க்கையின் போக்கையே அடியோடு மாற்றியது. செருப்பை மையமாக வைத்துக்கூட ஒரு படம் பண்ணமுடியும் என்பதை ‘சில்ரன் ஆஃப் தி ஹெவன்’ஐ் பார்த்துப் புரிந்துகொள்ள முடிந்தது. இதுபோல தரமான உலகப் படங்களை கிராமத்துப் பிள்ளைகளுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் 2000-ல், ‘ஃபிலிம் சொஸைட்டி’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். இதன்முலம் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் சர்வதேசத் திரைப்படங்களைத் திரையிட்டு காட்ட ஆரம்பித்தேன். இப்போது, அதுவே எனது சுவாசமாகிவிட்டது” என்றார்.

தற்போது தஞ்சையில் வசிக்கும் ராமதாசு, தரம் வாய்ந்த 7 ஆயிரம் உலகத் திரைப்படங்களை ஆவணத் தொகுப்பாக வைத்திருக்கிறார். சர்வதேசப் படங்கள் மீதான தனது பார்வையை விளக்கிய ராமதாசு, “அமெரிக்கப் படமான ‘தி வே பேக்’ எனும் திரைப்படம் இனவெறிச் சங்கடங்களைச் சித்தரிக்கும் மிக அற்புதமான திரைப்படம்.

சினிமா ஆவணம்

மற்ற நாடுகளில் சினிமாவையும் ஒரு கலாச்சாரமாகவே பார்ப்பதால் சினிமாவையும் ஆவணப்படுத்துகிறார்கள். இந்தியாவில்கூட பல மாநிலங்களில் இனப்பற்றோடு வரலாற்றை ஆவணப்படுத்தும் வேலைகள் நடக்கின்றன. ஆனால், தமிழகத்தில் திரைத் துறையை ஒரு தொழிலாக மட்டுமே பார்க்கிறார்கள். அதனால்தான், தமிழில் வெளியான முதல் மவுனப்படமான ‘கீசக வதம்’. திரைப்படத் தையே நாம் ஆவணப்படுத்தத் தவறிவிட்டோம். தென்னிந்தியாவில் முதன்முதலில் சலனப் படத்தை மக்களுக்கு திரையிட்டுக் காட்டிய சாமிக்கண்ணு வின்சென்ட் பற்றி இயக்குநர் செந்தமிழன் ஆவணப்படுத்தியுள்ளது சற்றே ஆறுதலான விஷயம்.

பொதுவாக, உலகத் திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. அந்தக் குறையை ஓரளவுக்காவது போக்கலாமே என்பதற்காகத்தான் நான் பள்ளி மாணவர்கள் மத்தியில் தரமான சர்வதேசப் படங்களை கொண்டு போய் சேர்த்து வருகிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் திரைப்பட விழா எங்கு நடந்தாலும் தவறாமல் என்னை அழைத்துவிடுவார்கள். அந்த நிகழ்வுக்கு வருபவர்களுக்கு, மிகவும் அரிதான உலகத்திரைப் படங்களின் குறுந்தகடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறேன்.

தமிழில் மொழிமாற்றம்

இன்றைய சூழ்நிலையில், ‘தி எக்கனாமிக்ஸ் ஆஃப் தி ஹேப்பினஸ்’ ஆவணப்படம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். காஷ்மீரில் தர்சார்புடன் வாழும் லடாக்கியர்களை பற்றிய படம் இது. திருப்பூரில் உலகத் திரைப்பட விழாவுக்கு வந்திருந்த பேராசிரியர் நடேசனுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இந்தப் படத்தின் வசனத்தை தமிழில் எழுதி வைத்திருப்பதாகச் சொன்னார். அதை வைத்து, அந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

படைப்புலக ஜாம்பவான்களான மு.வ., கி.வா.ஜ., சா.கந்தசாமி, பிரபஞ்சன் ஆகியோரின் குரல்வளம் எப்படி இருக்கும், அவர்களது பேச்சுகள் எப்படி இருக்கும்? என்பதெல்லாம் இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. எதிர்கால தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் அவர்களது பேச்சுக்களை ஆவணப்படுத்தி பரவலாக்கும் முயற்சியிலும் இப்போது ஈடுபட்டுள்ளேன்.” என்கிறார் ராமதாசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x