Published : 20 Aug 2017 03:14 PM
Last Updated : 20 Aug 2017 03:14 PM

யானைகளின் வருகை 16: வலசைகளை அச்சுறுத்திய தெங்குமரஹாடா சாலை!

''அன்னைக்கு காந்தி கிடந்த கோலத்தைப் பார்த்து காட்டுக்குள்ளே போய் வந்த காட்டுவாசிக எல்லாம் பதறினாங்க. பத்தாக்குறைக்கு அங்கே போன வனஆராய்ச்சி மாணவர்கள் வேற பார்த்துட்டு வந்து மீடியாக்களுக்கு தகவல் கொடுத்தாங்க. அவங்க மிருகவதை தடுப்புப் பிரிவு ஆர்வலர்களுக்கெல்லாம் தகவல் அனுப்பிட்டாங்க. குட்டி யானை குற்றுயிராக் கிடந்த போட்டோ அப்ப மேனகா காந்திக்கு கூட போயிடுச்சு.

அவங்க உடனே பாரஸ்ட்டு உயர் அதிகாரிகளுக்கு பேசியதோட, எனக்கும் போன் செஞ்சு, 'அங்கெ என்னதான் நடக்குது?'னு கொஞ்சம் கோபமாவே கேட்டார். நம்ம எதுக்கு பாரஸ்ட்டுகாரங்க கூட வம்புன்னு அதுவரைக்கும் பேசாம இருந்தோம். இந்த அளவுக்கு விவகாரம் போனவுடனே நாங்களும் நேரில் போய் பார்த்தோம்.

பெரிய மலையில இருந்து காந்தியை கூட்டத்து பெரிய யானை முட்டி கீழே தள்ளிவிட்டிருக்குன்னு தெரிஞ்சது. சுருண்டு கிடந்த குட்டி யானை கூட்டுல உயிர் இருக்கா, இல்லையான்னே தெரியலை. சின்னதா மூச்சு மட்டும் வந்துட்டிருந்தது. அதை புகைப்படம் எடுத்து மேனகா காந்திக்கு அனுப்பினேன்.

பாரஸ்ட்டுல நடக்கிற ஈகோ பிரச்சினையையும் விளக்கினோம். அதுக்குப்பிறகு அவங்க எங்கெங்கோ பாரஸ்ட்டு உயர் அதிகாரிகள் கிட்ட பேசினாங்க. மறுபடி அவங்களே திரும்ப போய் குட்டிய தூக்கிட்டு வந்து சிகிச்சை கொடுத்தாங்க. அதுல எங்களைப் போல என்ஜிஓக்களை அனுமதிக்கலை. முதல்ல நாங்க வச்சு பராமரிச்சதுல, சிகிச்சை கொடுத்ததுல அதோட 9 கிலோ கூடியிருந்துச்சு. ஆனா இப்ப யானைகள் கூட்டத்துல அடிபட்டு தூக்கிட்டு வந்த பிறகு அது சுத்தமாக காலியாயிடுச்சு. ஒரு மாசத்துல செத்தும் போச்சு. அதை பராமரிச்சு தாய் போல காப்பாத்திட்டு வந்த பாகன் ஒருத்தன் அழுதது எங்களுக்கு இப்ப மாதிரி இருக்கு!'' என்று இந்த காந்தி யானைக்குட்டியை காப்பாற்றி பாதுகாத்து அது மரணித்ததை விவரித்த தன்னார்வலர் அந்த குட்டியின் தாயைப் போல் பேசியதைக் கேட்டால் உண்மையிலேயே அப்போது கலங்காத நெஞ்சமும் கலங்கி விடும்.

கோவை மண்டலத்தில் அதி முக்கிய வனஉயிரின சரணாலயங்களாக அங்கம் வகித்தவை நீலகிரியில் உள்ள முதுமலை மற்றும் டாப் ஸ்லிப். இரண்டுமே காட்டு மிருகங்களில் யானைகளை முன்னிலைப்படுத்தியே பேசப்பட்டன. அதிலும் முதுமலை வன உயிரின சரணாலயம் யானைகளின் புகலிடமாகவே புகழ்பெற்று விளங்கியது. இங்குள்ள அபாயரண்யம் முகாமில் அந்த காலகட்டத்தில் 28 யானைகள் கும்கிகளாக பழக்கப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன.

மக்னா பிடிபட்ட, காந்தி இறந்த காலகட்டத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே பதிவிடப்பட்ட வன உயிரின தன்னார்வ அமைப்புகள் இயங்கி வந்தன. அதில் சில வெளிநாட்டுத் தொடர்புடனும், பலர் உள்ளூர் வனத்துறையினரின் கைப்பாவைகளாகவும் செயல்பட்டு வந்தனர். இவற்றில் பெரும்பான்மையினர் நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்திலேயே தங்கள் செயல்பாடுகளை விரித்திருந்தனர்.

அவற்றில் சில தன்னார்வலர்கள் இங்கு நடக்கும் நில ஆக்கிரமிப்புகள், மரக் கடத்தல்கள், அதனால் காட்டுயிர்களுக்கு நடக்கும் தீங்குகளைப் பட்டியலிட்டு மீடியாக்களிடம் காட்டுவதும் தொடர்ந்து நடந்தது. அதை மேனகா காந்தி உள்ளிட்ட பிரபலங்களுக்கு ஆதாரங்களுடன் அனுப்புவதும் தொடர்ந்தது. இதனால் இங்குள்ள வனத் துறையினருக்கு துறை ரீதியான சிக்கல்கள் வருவதும் இயல்பாக நடந்து வந்தது. அதிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள உள்ளூர் அதிகாரிகள் உள்ளூர் அளவில் சில தன்னார்வலர்களை தங்கள் கைப்பாவையாக வைத்திருந்தனர்.

இந்த இருதரப்புக்கான உள்ளடி மோதல் 1997-ஆம் ஆண்டிற்கு பிறகு 'சேட்டிலைட் சேனல்'கள் வியாபித்த பின்பே அதீதமாக வெளிவர ஆரம்பித்தது. அது பல்வேறு சர்ச்சைளையும் கிளப்பியது. அது மக்னா, காந்தி பிரச்சினைகளுக்குப் பிறகே மிக அதிகமாக வெளிவர ஆரம்பித்தது. அதில்தான் தென்னிந்தியாவின் முக்கிய உயிர்ச்சூழல் மண்டலமாக விளங்கும், தமிழகத்தின் தண்ணீர் தொட்டி என புகழப்படும் கூடலூர் வனப்பகுதியில் (முத்தங்கா, முதுமலை, பந்திப்பூர் ஆகிய கேரளா, தமிழக, கர்நாடகா சரணாலயங்கள் சந்திக்கும் மையப்புள்ளி) நடக்கும் அட்டூழியங்களும் தெரிய வந்தன. அதனூடே காட்டு யானைகள் மட்டுமல்ல, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளும் பாடாய்ப்படுவதும், ஊருக்குள் அவை புறப்படவும், அதற்கு மரக் கடத்தல் மாஃபியாக்கள் எப்படியெல்லாம் காரணமாகிறார்கள் என்பதையும் அறிய முடிந்தது.

'யானைகளை அழிக்க ஒரு சாலையா?'
  • அதில் அரசியலும் உள்ளே நுழைந்தது. அந்த அரசியல் வழியே காடழித்து சாலைகள் போடும் வேலையும் நடந்தது. அப்படி வனவிலங்குகளுக்கு எதிராக, குறிப்பாக யானைகளின் வழித்தடமாக விளங்கும் வலசைப் பாதைகளை அழித்து ரோடு போடுவதற்கு எதிராக சூழல் ஆர்வலர்கள் பொங்க ஆரம்பித்தனர். அப்படித்தான் 'யானைகளை அழிக்க ஒரு சாலையா?' என்ற கேள்வியுடன் ஒரு கொந்தளிப்பு கிளம்பியது.

முதுமலைக்கு அப்பால் உள்ள கூடலூர் மக்கள், கோவைக்கோ, அல்லது தமிழகத்தின் இதரப் பகுதிகளுக்கோ செல்ல வேண்டுமென்றால் ஊட்டிக்கு ஐம்பது கிலோமீட்டர் தூரம் மலைப் பாதையில் பயணித்து, அங்கிருந்து கீழிறங்கி மேட்டுப்பாளையம் வந்துதான் செல்ல வேண்டும். இதற்கு மட்டும் பேருந்துப் பயணம் என்றால் 6 முதல் 7 மணி நேரம் பிடிக்கும். எங்காவது இடையில் நிலச்சரிவு ஏற்பட்டால் போக்குவரத்து தடை ஏற்பட்டு விடும். அதிலும் இரவில் அகப்பட்டுக் கொண்டால் போச்சு. நாள் முழுக்க கடுங்குளிரில் மலைகளில் நெளிந்து கிடக்கும் தார்ச்சாலைகளில் நடுங்கிக் கிடக்க வேண்டியதுதான்.

இந்த துயரத்தைப் போக்க கூடலூர் முதல் பவானி சாகர் வரை புதியதாக சாலை போட 2002 ஆம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டது. இதனூடே ஜெயலலிதாவின் கோடநாடு மாளிகைக்கும் புத்தம் புது சுலபமான ரூட் கிளியராகி விடும். இதில் வேடிக்கையான விஷயம் கூடலூரிலிருந்து மசினக்குடி வரை பிரதான சாலை உள்ளது. இங்கிருந்து சிறுகூர் வரை கிராமத்து சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இங்கிருந்து ஐந்தாறு கிலோமீட்டர் தூரம் வரை மட்டும் சாலை இல்லை. அங்கிருந்து தெங்குமரஹாடா வரை சாலை உள்ளது. தெங்கு மரஹாடா சென்றால் அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் சாலையமைத்து இடையில் மூன்று பாலங்கள் கட்டினால் போதும் சுலபமாக பவானி சாகரை அடைந்து விடலாம். இந்த தூரத்தைக் கடக்க 3 மணிநேரம் போதுமானது.

1997-ம் ஆண்டிலேயே இங்கே விடுபட்ட பகுதியில் சாலை அமைத்து, பழுதுபட்ட சாலையை சீரமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முயற்சி செய்தது நீலகிரி மாவட்ட நிர்வாகம். ஆனால் வனத்துறை இதற்கு முழு எதிர்ப்பு தெரிவித்து இப்பணியை தடுத்து நிறுத்தியது. காரணம் இங்கே மசினக்குடி என்பது முதுமலையை ஒட்டியுள்ள ஊர் (இது தற்போது புலிகள் காப்பகத்திற்குள் வருகிறது). இங்கிருந்து ஓரிரு கிலோமீட்டர் தூரமுள்ள வாழைத்தோட்டம் பிரிவிலிருந்து சிறுகூர் வரையில் (14 கிலோமீட்டர்) முழுக்க, முழுக்க யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி.

அதேபோல் கோடநாடு காட்சி முனையிலிருந்து பார்த்தால் கீழே குவிந்து கிடக்கும் ஊர் தெங்குமரஹாடா. சதுப்பு நிலக்காடுகள் மிகுந்த பகுதி. மிகச் சிறிய அழகிய கிராமமான இதை மாயாறு ஆறு வளப்படுத்துகிறது. சுமார் ஆயிரம் குடும்பங்கள் இப்பகுதியில் வசிக்கின்றன. கோடநாட்டில் இருந்து காட்டு வழியாக மூன்றரை மணி நேரம் நடந்தாலும், 10 கி.மீ தொலைவில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்தை அடையலாம். 'ட்ரெக்கிங்' மேற்கொள்பவர்கள் உதகை வடக்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதிபெற்றே செல்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டியும் அவசியம் தேவைப்படுகிறது.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in   

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x