Published : 17 Aug 2017 01:27 PM
Last Updated : 17 Aug 2017 01:27 PM

யானைகளின் வருகை 13: ஈகோ சண்டையில் தவித்த முதுமலை மக்னா

''யானைகள் எல்லாவற்றையும்தான் காட்டுக்குள் விரட்ட முயற்சித்தோம். அதில் இந்த ஒற்றை யானை மட்டும் தப்பித்துக் கொண்டது. மீதியுள்ளவையும் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுமுகைக்காடுகளில்தான் மையம் கொண்டுள்ளது. அவற்றை மாயாற்றுக்கு அப்பால் (20 கிலோமீட்டர்) விரட்டலாம் என்றுதான் பார்த்தோம். அதை கடந்து இந்தப் பக்கம் வராது என்பதால்தான் இந்த இடத்தை குறி வைத்தோம்.

ஆனால் அவை தண்ணீரைக் கண்டாலே காலடி எடுத்து வைக்கத் தயங்கி வேறு திசையில் பாய்கின்றன யானைகள். அந்த திசையிலும் பல கிராமங்கள் உள்ளன. எனவேதான் சிறுமுகைக்காட்டுக்குள்ளேயே அதை விட்டு வைத்திருக்கிறோம். இந்த ஒற்றை ஆண் யானை எப்படியோ தப்பி இங்கேயே சுற்றிச் சுற்றி வருகிறது. அதையும் விரட்ட மாவட்ட வன அலுவலகம் மூலம் முழு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது!'' என்றனர்.

என்றாலும் அந்த ஒற்றை ஆண் யானை அந்த ஊர்களை விட்டு செல்லாமல் அங்கேயே சுற்றி, சுற்றி வந்தது. மக்களும் பீதியுடனே வரவேண்டிய நிலை இருந்தது. அதற்குப் பிறகு பார்த்தால் தொடர்ந்து யானைகள் வருவதும், ஊருக்குள் மக்கள் அதை விரட்டுவதும், வனத்துறையினருக்கு புகார் தெரிவிப்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வாகவே இந்த கிராமங்களில் ஆகிவிட்டது.

காட்டு யானைகளை விரட்ட இவ்வளவு பாடுபடும் வனத்துறையினர் மீது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கும்போது கருணையும், காருண்யமும் பிறப்பது மக்களுக்கு இயல்புதான். அதே வனத்துறையினர் யானை பிடிப்பதிலும், பிடிபட்ட யானையை காப்பாற்றுவதிலும் ஈகோ காண்பித்தால் - அதையே அரசியல் ஆக்கினால் என்ன ஆகும்?

அதற்கு நல்ல உதாரணம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிடிக்கப்பட்ட மக்னா. மக்னா என்றால் ஆணும் அல்லாது பெண்ணும் அல்லாத அலி யானை என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அதுவே ஒரு கட்டத்தில் தந்தம் இல்லாத ஆண் யானை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் பலம் என்பது மற்ற ஆண் யானைகளை விடவும் பலமடங்கு என்பதுதான் முக்கியம்.

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டிலுள்ள யானைகள் வளர்ப்பு முகாமில், 25க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் முக்கியத் துவம் வாய்ந்தது மூர்த்தி என்ற மக்னா யானை.

மக்னா என்பது
  • மக்னா என்பது தந்தம் இல்லாத ஆண் யானை. ஆண் யானைக்கு தந்தத்தில்தான் வலிமை. இந்த மக்னா யானைக்கு உடம்பெல்லாம்- குறிப்பாக துதிக்கையில் தந்தத்தின் பலம் உண்டு என்பார்கள்.

தமிழக (முதுமலை), கேரள (முத்தங்கா), கர்நாடக(பந்திப்பூர்) முக்கோண வடிவில் உள்ள நீலகிரி உயிர்ச்சூழல் காடுகளில் மண்டலத்தில், 20 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானைதான் இருக்கிறது. ஒரு ஆண் யானை இறந்தால், அது யானை இனத்துக்கே மிகப் பெரிய இழப்பு. ஆயிரம் யானைகளுக்கு ஒரு 'மக்னா' யானைதான் பிறக்கும் என்கிறார்கள் வனஉயிரியியல் ஆய்வாளர்கள். மக்னா யானைகள் பொதுவாகவே மூர்க்கம் நிறைந்தவை.

இன்றைக்கு முதுமலை முகாமில் பாகன் சொல்படி கேட்கும் 'மக்னா' இன்றைக்கு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு வயநாடு கேரளா காடுகளில் 17 பேரையும், நீலகிரி கூடலூர் காடுகளில் 5 பேரையும் கொன்றிருக்கிறது. 1997- 99 காலகட்டங்களில் கூடலூர், முதுமலை, பந்திப்பூர், முத்தங்கா காடுகளில் சுற்றித் திரிந்த இந்த யானையை ஆணும் அல்லாத, பெண்ணும் அல்லாத அலி யானையாகவே மக்கள் கருதி வந்தார்கள். இதன் தோற்றமும், எடையும் மற்ற ஆண் யானைகளை விட இரண்டு மடங்கு கூடுதலாகவே இருந்தது. இதன் மூச்சுக்காற்று பட்டாலே மனிதன் பறந்து விடுவான் என்கிற பேச்சும் மக்களிடம் கதையாய் உலாவியது.

அதை சுட்டுப்பிடிக்குமாறு கேரள அரசு வனத்துறைக்கு உத்தரவு போட்டிருந்தது. அதற்கேற்ப மக்களால் தாக்கப்பட்டும், வேட்டைக்காரர்களால் சுடப்பட்டும் உடம்பில் ஏகப்பட்ட விழுப்புண்களோடும் திரிந்தது இந்த யானை. அதனால் மனிதர்களைக் கண்டாலே மேன்மேலும் மூர்க்கத்துடனே துரத்தியது. அபூர்வத்திலும், அபூர்வ இனமாக ஆஜானுபாகுவாக இருந்த இந்த மக்னாவை உயிரோடு பிடிக்க வேண்டும் என்பது அப்போது முதுமலை வன உயிரின சரணாலய வார்டனாக இருந்த உதயணன் உறுதிப்பாடு எடுத்துக் கொண்டார்.

அதற்கேற்ப தமிழக காடுகளில் சுற்றித்திரிந்த மக்னாவை பிடிக்க வியூகங்கள் வகுத்தார். முகாமில் உள்ள கும்கிகள் உதவியுடன், மயக்க ஊசி செலுத்தப்பட்டு பிடிக்கப்பட்ட மக்னா, பலமிக்க தேக்கு மரங்களினாலான கரால் அமைக்கப்பட்டு அதில் அடைக்கப்பட்டது. இதையறிந்து தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தெல்லாம் மீடியாக்கள் வந்தன. கராலில் அடைபட்ட மக்னா மயக்கம் கொஞ்சம் தெளிந்ததும் கடும் அழிச்சாட்டியம் செய்தது. கராலை மூர்க்கத்துடன் தாக்கியபோது படம் எடுக்கும் மீடியா கும்பலில் நானும் இருந்தேன்.

அதைப் படமெடுக்க கரால் அருகே சென்றதுதான் தாமதம். அதன் சீ்ற்றம், கராலில் மோதிய வேகத்தில் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வே ஏற்பட்டது. என் பின் பக்கத்தில் வீடியோ கேமராவுடன் நின்றிருந்த முதுமலை வன உயிரின அலுவலர் ஒருவர் என் கையைப் பிடித்து இழுத்து தூர நிறுத்தியதும், நான் நடுங்கியதும் இப்போது மாதிரி இருக்கிறது, 'அது வெரி டேஞ்சரஸ். கிட்ட போயிடாதீங்க!' என்று எச்சரித்தார்.

தேக்கு மரத்தாலான இரண்டு அடுக்கு கராலையும் கூட காட்டு யானை முட்டி உடைத்துக் கொண்டு வந்துவிடுமா என்ற சந்தேகம் அப்போதும் வனத்துறை ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இருந்தது. எனவே மக்னாவைப் பார்க்க வரும் அதிகாரிகள் கூட 20 மீட்டர் இடைவெளியிலேயே அதைப் பார்த்து அகன்றபடி இருந்தனர். குறிப்பிட்ட சில பாகன்கள் மட்டும் பக்கத்தில் சென்று தண்ணீர் இரைத்து ஊற்றுவது, கரும்புகள் வீசுவது போன்ற பணிகளில் ஈடுபட்டார்கள்.

இந்த மக்னாவைப் பற்றி ஊரே பேசிக் கொண்டிருக்க, சேனல்களில் சர்ச்சையான செய்திகளும் உலாவின.

'மக்னாவை மாதக்கணக்கில் பட்டினி போட்டு கொடுமைப் படுத்துகிறார்கள். அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதில்லை. காலில், உடம்பில் எல்லாம் ஏற்பட்டிருக்கும் காயங்கள் ஆறாமல் புரையோடிப் போய்விட்டது. ஏற்கெனவே அதன் உடம்பில் 15க்கும் மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் துளைத்திருந்தன. அதுவும் எடுக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அதைவிட சங்கிலியால் பிணைக்கப்பட்டு, அதில் ஏற்பட்ட காயங்களும் செப்டிக் ஆகி துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த புண்கள் அதன் உயிருக்கே உலை வைக்க உள்ளது!' என்றெல்லாம் இதில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள்.

இந்த குற்றச்சாட்டுகள் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் பரவியது. குறிப்பாக இந்த மக்னாவுக்கு சிகிச்சையளிப்பவர்கள் யானைகளுக்கான சிறப்பு மருத்துவரே அல்ல; நம் ஊர் சாதாரண கால்நடை மருத்துவர்கள்தான் என்பதையும் சிலர் சர்ச்சை கிளப்பினர். இதன் உச்சகட்டமாக இந்த மக்னாவிற்கு வெளிநாட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் யானை ராஜேந்திரன் என்பவர்.  

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x