Published : 24 Aug 2016 12:43 PM
Last Updated : 24 Aug 2016 12:43 PM

அன்பாசிரியர் 25: தங்கராஜ்- உழைப்போடு ஊதியத்தையும் தரும் ஆசான்!

நல்ல ஆசிரியர் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறார். சிறந்த ஆசிரியரோ செல்ல வேண்டிய பாதையை நோக்கிப் பயணிக்கிறார்.

கற்றலில் பின்தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க ஓர் ஆசிரியரை நியமித்து ஒன்பது ஆண்டுகளாக அவருக்கு தன் சொந்த செலவில் சம்பளம் கொடுத்து வருகிறார் நாமக்கல் நாமகிரிப் பேட்டை, ஊத்துப்புளிக்காடு அரசு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியர் தங்கராஜ். பள்ளியின் கட்டமைப்பு வசதிகளுக்கு அரசு ஒதுக்கிய தொகையைவிட அதிகம் தேவைப்படும்போது தன் சம்பளத்தைக் கொடுத்து, அவற்றைக் கட்டி முடித்திருக்கிறார். தன் அயராத உழைப்பால் 34 மாணவர்களாக இருந்த ஆரம்பப்பள்ளி மாணவர் எண்ணிக்கையை 214 ஆக மாற்றியிருக்கிறார்.

இந்த ஆசானின் ஆசிரியப்பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''சின்ன வயதில் நண்பர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த பழக்கம் கற்பித்தலின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. நாட்கள் செல்லச்செல்ல சமூகத்தில் மாற்றத்தின் விதையை ஊன்றும் எண்ணம் அதிகமானதால், ஆசிரியர் ஆனேன். ஆரம்பத்தில் ஆசிரியப்பயிற்சி முடித்து 1990-களின் தொடக்கத்தில் தனியார் பள்ளியில் 150 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சேர்ந்தேன். மாலை நேரப்பணியாக மாணவர்களுக்கு அதே 150 ரூபாயில் ட்யூஷன் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். என்னுடைய 12 மணி நேர உழைப்புக்கு ஊதியமாக ரூ. 300 சம்பளம் வாங்கினேன்.

சில வருடங்கள் ஓடின. நான்காயிரம் ரூபாயில் அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அப்படியென்றால் எவ்வளவு வேலை செய்யவேண்டும் என்று தோன்றியது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேலை செய்யவேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் சிறப்பு வழிமுறைகள் எதையும் வகுத்து வேலை பார்ப்பதில்லை. ஆனால் மாணவர்களின் கல்வி, ஒழுக்கத்தை வளர்க்க எத்தனை முறை வேண்டுமானாலும் என்னால் சொல்லிக்கொடுக்க முடியும்.

1999-ல் ஊத்துப்புளிக்காட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதைய தலைமை ஆசிரியர் முழு சுதந்திரத்துடன் இயங்க அனுமதித்தார். காலையில் 8.15 மணிக்கு பள்ளிக்குச் செல்வேன். 3, 4, 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8.45 முதல் 9.15 மணி வரை தினமும் ஆங்கிலம் சொல்லித்தருகிறேன். வினைச்சொல் புத்தகம் (Verb book) மூலம் அடிப்படை இலக்கணத்தைக் கற்பிக்கிறோம். ஒவ்வொரு வருடமும் இப்பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுவதால் ஐந்தாம் வகுப்பு முடித்து வெளியே செல்லும் மாணவர், 3 வருட அனுபவத்தோடு செல்கிறார்.

தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். பள்ளியில் அளிக்கப்படும் சீருடைகள் பெற்றோர்கள் மூலம் சீரிய முறையில் தைக்கப்படுகின்றன. மாணவர்கள் டைரி, பெல்ட், ஐடி கார்ட் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். தினமும் குழந்தைகள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். அதைச்சொல்லிக்கொடுத்து டைரியில் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். படிப்பறிவு இல்லாத பெற்றோர்களிடம் குழந்தைகளை சத்தம் போட்டுப் படிக்கச் சொல்லுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.

கையெழுத்தை மேம்படுத்த தினமும் வீட்டுப்பாடம் கொடுக்கிறோம். தமிழ்ப் பயிற்சிக்கு ஒரு நோட்டில் பொன்மொழிகளை இரண்டு வரிகளிலும், ஒற்றை வரியிலும், வரியே இல்லாமலும் 3 முறை எழுத வேண்டும். ஆங்கிலப் பயிற்சிக்கு நான்கு வரிகளிலும், ஒரு வரியிலும், வரியில்லாமலும் எழுதவேண்டும். தினசரிப் பயிற்சி என்பதால் சலிப்பு தட்டாமல் இருக்க ஒவ்வொரு வருடமும் சிறந்த கையெழுத்துக்குப் போட்டி வைத்துப் பரிசுகள் தருகிறோம்.

ஆங்கில நாடகங்கள், அறிவியல் கருத்தரங்குகள் ஆகியவற்றை தொடர்ந்து நடத்தி வருகிறோம். பள்ளியைச் சுற்றிலும் 40 மரங்கள், 250 செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஊராட்சி ஒன்றிய நிதியால் ஆழ்துளைக்கிணறு அமைக்கப்பட்டு நீர் வசதி அமைக்கப்பட்டுள்ளது. 2007-ல் பள்ளியில் +2 முடித்தவரை ஆசிரியராக அமர்த்தினோம். அப்போது அவரின் சம்பளம் ரூ. 400. இதோ இப்போது ஒன்பதாவது ஆண்டில் அவர் நான்காயிரம் சம்பளம் பெறுகிறார். இப்போது வரை அவருக்கு என் சொந்தப்பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்கிறேன். இப்போது ஐந்து வகுப்புகளுக்கும் ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். ஆறாவதாக அவர் மற்ற ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போதும், மற்ற நாட்களில் கற்றலில் பின் தங்கியவர்களுக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கிறார்.

2003-ல் சத்துணவு மேற்பார்வையாளர் எங்களின் பள்ளிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். பள்ளியைக் கண்டு வியந்தவர், உங்கள் பள்ளிக்கு விருதுகள் எதுவும் கொடுக்கவில்லையா என்று கேட்டார். அந்த வார்த்தைகள்தான் முதன்முதலில் என்னை ஊக்கமடைய வைத்தன. ஒருமுறை மாவட்ட திட்ட அலுவலக கண்காணிப்பாளர், எங்களின் பள்ளிக்கு வருகை தந்தார். செய்தித்தாள் வாசிப்பு, பொம்மலாட்டம், கதை, கவிதை சொல்வதில் மாணவர்களின் திறனைப் பார்த்த அதிகாரி இந்தப்பள்ளிக்கு நிச்சயம் ஏதாவது செய்யவேண்டும் என்று கூறிச்சென்றார். சொன்னபடியே பள்ளிக்கு சில மாதங்களிலேயே மூன்று கணினிகள் வழங்கப்பட்டன. (நடுநிலைப்பள்ளிக்கு மட்டுமே கணினி வழங்கப்பட்ட காலம் அது)

ஒருமுறை காமராசர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. அத்தோடு என் சம்பளப் பணத்தில் இருந்து 15 ஆயிரம் எடுத்து 40 ஆயிரத்துக்கு இரண்டு வகுப்புகளும், ஒரு கிடங்கையும் கட்டிமுடித்தோம். தண்ணீர்த்தொட்டி அமைக்க ரூ.28 ஆயிரம் வழங்கப்பட்டது. 10 அடி ஆழம், 7 அடி அகலத்தோடு உயர்தர டைல்ஸ் கொண்டு தொட்டி அமைத்தோம். கட்டி முடிக்க ரூ.50 ஆயிரம் செலவானது. குடிநீர் உயிர்நாடி என்பதால் மீதிப்பணத்தை நானே கொடுத்துவிட்டேன்.

பள்ளியில் அடிக்கடி விழாக்கள் நடைபெறுவதால் அவை சிரமமின்றி நடக்க கலையரங்கம் தேவை. ஆனால் தொடக்கப்பள்ளிக்கு அதைக் கேட்பது முறையாகாது எனத் தோன்றியது. அதனால் 20 அடி அகலம், 26 அடி நீளத்தில் தற்காலிக மேடை ஒன்றை என்னுடைய செலவிலேயே (12 ஆயிரம்) அமைத்திருக்கிறேன். விழாவுக்கு வந்த அதிகாரிகள் அதைப் பார்த்துவிட்டு கலையரங்கம் கட்டுவதற்காக 5 லட்சம் ஒதுக்கப்படும் என்று மேடையிலேயே அறிவித்துவிட்டார்கள்'' என்று மகிழ்கிறார் அன்பாசிரியர் தங்கராஜ்.

பொதுமக்களிடம் நன்கொடைகள் வாங்கி அவற்றைப் பயன்படுத்தலாமே என்று கேட்டால், '' ஊத்துப்புளிக்காடு 349 பேரை மட்டுமே கொண்ட சின்ன கிராமம். இங்குள்ள விவசாய மக்கள் உணவுக்கே சிரமப்படுகிறார்கள். அவர்களிடம் பணம் கேட்கவே கூசுகிறது. பணமாகக் கொடுக்க முடியாவிட்டாலும், அவர்கள் தங்களின் உடல் உழைப்பை அளிக்கின்றனர்.

கட்டிட வேலைகளின்போது ட்ராக்டர் மூலம் மண் கொண்டுவந்து கொட்டிவிட்டுக் காசே வாங்காமல் சென்றார் ஒருவர். எங்கள் பள்ளிக்கான மின்சாரம்கூட பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்துதான் வாங்கப்படுகிறது. அதற்கான தொகையை அவர் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதனாலேயே நாங்களும் மின்சாரத்தைச் சிக்கனமாகவே பயன்படுத்துகிறோம்.

34 மாணவர்கள் இருந்த அதே ஆரம்பப்பள்ளியில் இன்று 214 பேர் படிக்கின்றனர். எங்கள் ஒன்றியத்தில் உள்ள 17 நடுநிலைப் பள்ளிகளில் இரண்டில் மட்டுமே எங்கள் மாணவர்களை விட அதிகம்பேர் படிக்கின்றனர். பள்ளிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்தாகிவிட்டது. கல்வியும் தரமாகக் கற்பிக்கப்படுகிறது. குறைவான விலையில் அல்லது பயன்படுத்திய நிலையில் இருக்கும் கணினிகள் கிடைத்தால் அவற்றைக் கொண்டு மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை வளர்க்க முடியும். அவற்றை வாங்கும் முயற்சியில்தான் இருக்கிறேன். ஆசிரியர்கள் கொஞ்சம் மெனக்கெட்டால் போதும். பள்ளிச்சூழலும் மாறும்; மாணவர்களும் மாறுவார்கள்'' என்கிறார் அன்பாசிரியர் தங்கராஜ்.

ஆசிரியர் தங்கராஜின் தொடர்பு எண்: 9843619251

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x