Published : 21 Jun 2016 12:27 PM
Last Updated : 21 Jun 2016 12:27 PM

அன்பாசிரியர் 20: உமா மகேஸ்வரி- அசத்தும் ஆசிரியர்களின் தோழர்!

அரசுப் பள்ளியில் ஆசிரியராக தன் பணியைத் தொடங்கிய உமா மகேஸ்வரி, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர், சமச்சீர் கல்வி சமூக அறிவியல் புத்தக ஆசிரியர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர். தன்னுடைய நீண்ட பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

என்னுடைய எல்லா மாணவர்களும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. பின்னாட்களில் தான் அது தவறு என்று உணர்ந்தேன். ஆரம்ப காலத்தில் எல்லா ஆசிரியர்களையும் போல மதிப்பெண்களில்தான் அதிக கவனம் செலுத்தினேன்.மெல்ல மெல்ல தான் மதிப்பெண்களில் மட்டும் வெற்றியில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மட்டும் என்பதால், வகுப்பறைகள் எங்களுக்குப் பள்ளியைத் தாண்டி விரிந்திருந்தது. கற்பித்தல் அணுகுமுறைகள் ஓரளவிற்கு பரிச்சயமானதால் வேறு எந்த வழிகளில் அவர்களை அழைத்துச் செல்லலாம் என யோசித்தேன். அவர்களின் தேவை வகுப்பறை மட்டுமல்ல என்று புரிந்தது. அங்கே அவர்கள் களைத்துப்போகிறார்கள்; அவர்கள் வயதின் துள்ளலுக்கும், அறிவின் பலத்திற்கும் வேறு வேறு அணுகுமுறைகள் தேவைப்பட்டன.

ஊக்குவிப்பே போதும்

அப்போது பள்ளியில் எந்தப் போட்டி அறிவிக்கப்பட்டாலும் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். அதிகமாக அப்போதெல்லாம் வருவது மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தான். எதுவும் செய்யாமல், அவர்களை ஊக்குவித்தாலே போதும். பரிசுகளுடன் தான் மாணவர்கள் திரும்புவார்கள். மாணவர்களிடம் ஆற்றல் பொதிந்து, புதைந்து உள்ளதை நாம் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவினாலே போதும்.

வகுப்பில் பானை செய்பவர்கள், கரும்பு வெட்டுபவர்களின் குழந்தைகள் படித்தார்கள். குழு செயல்பாடுகள், வகுப்புகளை கவனித்துக்கொள்வது, ஓவியம், பாட்டு, கட்டுரை மாதிரியான கலைகளில் சிறந்து விளங்குவது ஆகியவற்றுக்கும் மதிப்பெண்கள் கொடுத்தேன். ஒரு முறை செயல்பாட்டு வழிக் கல்விக்காக பாடத்தில் இருக்கும் பொருட்களை செய்து எடுத்துவரச் சொல்லியிருந்தேன். சிறந்த செயல்பாட்டுக்கு மதிப்பெண் என்று கூறியிருந்ததால் அவர்களுக்குள் போட்டி வந்துவிட்டது. சமூக அறிவியல் பாடத்தில் இருந்த கடலில் பாறை அமைப்பை தத்ரூபமாகச் செய்து கொண்டு வந்து என்னை வியப்பில் ஆழ்த்தினர்.

புத்தகமில்லா வகுப்புகள்

நான் எப்போதுமே புத்தகங்களைக் கொண்டு வகுப்பெடுப்பதில்லை. மாணவர்களையும் புத்தகங்களைப் பார்த்து வகுப்புகளைக் கவனிக்க ஊக்கப்படுத்துவதில்லை. மொழிப்பாடங்களுக்கு மட்டும் புத்தகங்களைப் பயன்படுத்துவேன். என் மாணவர்கள் அவர்களாகவே ஆர்வத்துடன் கற்பிப்பார்கள்.

நூலகப்பொறுப்பு

ஒருமுறை சுமார் 15 ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை நிர்வகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாணவர்களின் உதவியோடு லெட்ஜரைத் தயாரித்தோம். எல்லாப் புத்தகங்களையும் வரிசைவாரியாகப் பிரித்து அடுக்கினோம். அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் புத்தகக் கையேடுகளை தயாரிக்கப் பழகினர். வருடம் முழுக்க செயல்பாடுகளில் ஈடுபட்டனர். வருடக் கடைசியில் அதை கண்காட்சியாக்கினோம். அத்தோடு கலந்துரையாடல், வினாடி வினா, கதை சொல்லல், சமூகப் பிரச்சினைகள் சார்ந்த கணக்கெடுப்பு ஆகியவற்றிலும் மாணவர்கள் தீவிரமாக இயங்கினர். மாணவர்களின் திறனைக் கண்டு பள்ளி ஆசிரியர்களே வியந்தனர்.

அவற்றைத் தனியாக ஒரு கையேட்டில் பதிவு செய்து அவற்றுக்கும் தனியாக மதிப்பெண்கள் அளித்தேன். இந்த செயல்பாடுகளை சமூக அறிவியல் பாடத்துக்கு பின்பற்றினேன். அறிவியல் பாடத்துக்கு துளிர் வினாடி வினா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்டவை ஆர்வத்தை ஏற்படுத்தின. செடி வளர்ப்பது குறித்த பாடத்துக்காக நிஜத்திலேயே செடிகளை வளர்க்க ஆரம்பித்தோம். அப்போது ஆரம்பித்து இன்று வரை சுமார் 300 மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன.

கணிதப்பாடம் பல மாணவர்களுக்கு கசப்பாகவே இருந்தது. அதிலும் இயற்கணிதத்தில் முழுக்கள் பற்றிப் படிக்கவே அச்சப்பட்டார்கள். பிளஸ்களும், மைனஸ்களும் அவர்களைப் புரட்டி எடுத்தன. அவர்களுக்கு மரச்சட்டத்தைக் கொண்டு எளிமையாகக் கற்பிக்கலாம் என்று தோன்றியது. மரச்சட்டத்தை எடுத்து நடுவில் ஆணி அடித்து, இரு மெல்லிய கம்பிகளால் அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்தோம். ஒரு முனையில் கீ செயின்களையும், மறுமுனையில் மணிகளையும் கட்டினோம். ஒரு பக்கத்தை நேர்மறை எண்களாகவும் மறு பக்கத்தை எதிர்மறையாகவும் வைத்துக் கொண்டோம். இந்த முறையை ஒரு கருத்தரங்கில் பரிந்துரைக்க அதை பல்வேறு பள்ளிகளில் பயன்படுத்துகிறார்கள்.

தோழியான ஆசிரியர்

கருத்தரங்குகளுக்குப் போனால், விடுமுறை எடுத்தால் என் மாணவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வேன். அந்த சமயங்களில் அவர்களே சுய கட்டுப்பாட்டுடன் படிப்பார்கள். மாற்று ஆசிரியர்கள் வந்தால் மதிப்பு கொடுப்பார்கள்.

மே மாதத்தில் மாவட்டக் கல்வி நிறுவனத்திலிருந்து பயிற்சிக்கான அழைப்பு வந்தது. விடுமுறையால் யாரும் செல்லாததால் நான் போனேன். வகுப்பறைக் கல்வி செயல்பாடுகள், கற்பித்தலில் ஆசிரியர்களின் பங்கு, மேம்பட்ட கற்றல் முறை ஆகியவை குறித்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தேன். அந்த அனுபவங்களின் மூலம் சமச்சீர் கல்விக்கு புத்தகம் எழுதும் பணிக்குத் தேர்வானேன். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கான ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவத்துக்கான ஆசிரியர் ஆனேன்.

>ஆசிரியர் சித்ராவுடன் இணைந்து, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் சார்பில் (SCERT) புத்தக ஆக்கத்தில் ஈடுபட்டோம். அப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அதில் ஆர்வம் கொண்டிருந்த ஆசிரியர்களை ஒருங்கிணைத்து தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்தினோம்.

அடையாளம் பெற்ற ஆசிரியர்கள்

கற்றலில் புதுமை படைக்கும் ஆசிரியர்களின் பணிகளை ஆவணப்படுத்தும் பொருட்டு காணொலிகள் எடுக்க திட்டமிடப்பட்டது. இதில் 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

'டிசைன் ஃபார் சேஞ்ச்' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் புத்தாக்க செயல்திட்டங்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில், குழந்தைகளோடு ஆசிரியர்களும் கலந்துகொள்வர். இதில் முதல் 100 பேருக்கு பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொள்ள எஸ்.சி.ஈ.ஆர்.டி. சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கடந்த வருடம் அகமதாபாத்தில் நடந்த போட்டியில் 33 இடங்களை தமிழக ஆசிரியர்களே பிடித்தனர்.

இந்திய கலாச்சார கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கு பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைகள் மூலம் கற்பிக்கும் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ஆர்வம் காட்டிய ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மூலம் தமிழார்வம் கொண்டவர்கள் அடையாளப் படுத்தப்பட்டனர். அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான வாட்ஸப் குழுக்கள், ஹைக் குறுஞ்செய்தி இயக்கம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவை அனைத்திலும் ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் உமா மகேஸ்வரி இருக்கிறார்.

மாணவர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கின்றனர் நல்ல ஆசிரியர்கள். ஆசிரியர்களை செவ்வனே ஒருங்கிணைத்து, அவர்களின் திறமைகளை அடையாளப்படுத்தி, உலகம் அறியச் செய்கிறார் அன்பாசிரியர் உமா மகேஸ்வரி.

ஆசிரியர் உமா மகேஸ்வரியின் தொடர்பு எண்: 9976986098

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x