Published : 01 Sep 2016 05:22 PM
Last Updated : 01 Sep 2016 05:22 PM

அன்பாசிரியர் 26: ஹேமாவதி- மாணவியர் நலம் காக்கும் அறிவியல் ஆசிரியர்!

36 வருட கற்பித்தல் அனுபவம், 1989- 1992 வரை அறிவொளி இயக்க பெண் ஒருங்கிணைப்பாளர், மத்திய கல்வி ஆலோசனை வாரிய உறுப்பினர் (2010-13), தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழுவின் (NCERT) செயற்குழு உறுப்பினர், அனைவரும் படிப்பதற்கான உரிமை (RTE) சட்ட உருவாக்கத்தில் பங்கு, தொழிற்கல்வி வரைவுகள் உருவாக்கம், தொடக்கப்பள்ளிகளின் துணை ஆய்வாளராக நான்கு வருடங்கள், தொடர்ந்து அறிவியல் காட்சிகளை நடத்தும் திறம், பெண் கல்வி, சுகாதாரம், மனநலம் பேணும் பாங்கு உள்ளிட்ட பன்முகங்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் புதுச்சேரி சவராயலு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹேமாவதி. அவரின் அனுபவப் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''ஆசிரியப் பணியின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்ததால், 1980-ல் ஆசிரியராக என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். 2010-ல் புதுச்சேரி இரண்டாவது மண்டல தொடக்கப்பள்ளிகள் துணை ஆய்வாளர் பதவி கிடைத்தது. இதில் 35 அரசுத் தொடக்கப்பள்ளிகளும், 30 தனியார் பள்ளிகளும் அடக்கம். தினமும் ஒரு பள்ளிக்குச் செல்வேன். பள்ளி மாணவர் வருகை, ஆசிரியர் பாடம் எடுக்கும் விதம், மாணவரின் ஒழுங்கு, சுகாதாரம் உள்ளிட்டவை ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.

அதிக கவனம் தேவைப்படும் குழந்தைகள், சிறப்பு கவனிப்புக்கு உட்படுத்தப்பட்டார்கள். பாடங்கள் வழியாக கல்வி கற்காதவர்களுக்கு பாட்டு, விளையாட்டு வழியாகக் கல்வி கற்பிக்கப்பட்டன. கற்பித்தல் முறைகள் அதிகரிக்கப்பட்டன. மண்டல அளவில் நிறைய கண்காட்சிகளை நடத்தினோம். ஒளி, ஒலி, வெப்பம் உள்ளிட்ட தலைப்புகளில் கண்காட்சிகள் நடத்தப்பட்டன.

நீர்த்திருவிழா

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அதைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையிலும் நீர்த்திருவிழா நடத்தினோம். அப்போதைய புதுவை முதல்வர் அதைத் திறந்து வைத்தார். இதில் இரண்டாவது மண்டலத்தில் இருக்கும் 65 தொடக்கப்பள்ளிகளும் கலந்துகொண்டன. 3, 4, 5-ம் வகுப்பு மாணவர்கள் இதில் பங்கேற்றனர். நீர் சார்ந்த ஒவ்வோர் ஆய்வும், மற்றவையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடாது என்பது மட்டும் விதிமுறை. 3 * 65 பள்ளிகள் சேர்த்து மொத்தம் 195 வெவ்வேறான செய்முறை ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தண்ணீரின் தோற்றம் குறித்த கதைகள் மாணவர்களுக்குச் சொல்லப்பட்டன. 3 நாட்கள் நடைபெற்ற கண்காட்சியை முறையாக சிடியில் பதிவு செய்து அவற்றை மற்ற மண்டலப் பள்ளிகளுக்குக் கொடுத்தோம். இன்றளவிலும் அவை பயன்பாட்டில் இருக்கின்றன.

நீர்த்திருவிழாவைத் தொடர்ந்து, ஆற்றல், காற்று, ஒளி, ஒலி குறித்த ஆய்வுகளும் நிகழ்த்தப்பட்டன. கற்றலின் திறனை மேம்படுத்தும் பொருட்டு பாடங்கள் கடினப்பகுதிகள், எளிமையான பகுதிகள் என்று பிரிக்கப்பட்டன. அவை ஆசிரியர்களால் கற்றல் கற்பித்தல் உபகரணங்களைக் கொண்டு, சீரிய முறையில் கற்பிக்கப்பட்டன. இதையும் கண்காட்சியாக்கினோம். ஒரு விஷயத்தை நேரடியாக, செயல் வடிவத்தில், திரும்பத் திரும்பப் பார்த்தால் புரிதல் திறன் அதிகரிக்கும் என்னும் நோக்கில் கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

கற்றல் திறன் உயர்த்துவோம்

2014-ல் 'கற்றல் திறன் உயர்த்துவோம்' நிகழ்வில், 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களில் யாருக்கு என்ன திறன் என்று அலசப்பட்டது. 4 பிரிவுகள் உருவாக்கப்பட்டு எழுத்தைப் படிக்க சிரமம் உடையவர்கள் முதல் பிரிவிலும், சொல்லில் சிரமம் உடையவர்கள் இரண்டாம் பிரிவிலும், வாக்கியத்தில் சிரமமுடையவர்கள் மூன்றாம் பிரிவிலும் சேர்க்கப்பட்டனர். நன்கு படிக்கமுடிபவர்களுக்கு நான்காம் பிரிவு. இவை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு மொழிகளுக்காக உருவாக்கப்பட்டன. (கணிதம் - எண், ஒற்றை இலக்கம், இலக்கங்கள், கூட்டல் கழித்தல் வகைப் பிரிவுகள்)

இந்த முறையை முன்மதிய வேளைகளில் மட்டும் பின்பற்றினோம். பின்மதியத்தில் வழக்கமான வகுப்புகள் நடந்தன. ஆச்சரியப்படும் விதமாக எல்லோரும் ஒரே மாதத்தில் அடுத்தடுத்த பிரிவுகளுக்குச் செல்லும் வகையில் முன்னேற்றம் அடைந்தார்கள். கடைசியாக 1, 2, 3-ம் பிரிவுகளே இல்லாத நிலை உருவாகியது. இதைப் பின்னர் பல பள்ளிகள் பின்பற்ற ஆரம்பித்தன.

இப்போது சவராயலு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், எல்லோரும் பிழையில்லாமல் எழுதப் படிக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மாணவிகளில் பெரும்பாலானோரின் பெற்றோர் அமைப்புசாராத் தொழிலாளர்கள். அவர்களின் வாழ்க்கையைக் கல்வி ஒன்றே மாற்றும் என்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அறிவியலைப் படித்தால் உலகத்தையே புரிந்துகொள்ள முடியும். கடுகு ஏன் எண்ணெயில் போட்டால் மட்டும் வெடிக்கிறது, ஏன் சமையலுக்கு எண்ணெயைப் பயன்படுத்துகிறோம் ஆகிய அடிப்படை விஷயங்களில்கூட அறிவியல் ஒளிந்திருக்கிறது. அதனால் அண்டம், வானம், சூரிய கிரகணம், சந்திய கிரகணம் ஆகியவை குறித்த ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துகிறோம்.

கணிதம் மற்றும் அறிவியலுக்கென ஆக்டிவிட்டி அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காகிதங்களில் ஓரிகாமி கலையின் மூலம் எல்லா வடிவக் கோணங்களையும் செய்கிறோம். சமூக அறிவியலில் அவர்களைக் கையாலேயே இந்தியாவின் வரைபடத்தை வரையச் சொல்வோம். இதன்மூலம் அவர்களின் சமூகப்பார்வை விரியும். இதைத்தவிர அடிக்கடி விடுமுறை எடுப்பவர்களின் வீட்டுக்கு நேரில் போய்ப் பேசியிருக்கிறோம். பள்ளி இடைநிற்றலைத் தடுக்க பெரும்பங்கு ஆற்றியிருக்கிறோம்.

சவராயலு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

ரூ. 1க்கு நாப்கின்

பள்ளியின் சுத்தத்தைப் பேணிக்காப்பதில் கவனத்துடன் இருக்கிறோம். தூய்மையான குடிநீரையே பயன்படுத்தி வருகிறோம். பள்ளியில் மாணவிகள் சிலர் மாதவிடாயின்போது துணியைப் பயன்படுத்தி வந்தனர். கையிலிருந்த நன்கொடைப் பணம் மூவாயிரத்துக்கு சானிட்டரி நாப்கின்கள் வாங்கினோம். துணியைப் பயன்படுத்தும் ஏழை மாணவிகளுக்கு 1 ரூபாய்க்கு நாப்கின்கள் வழங்கிவருகிறோம்.

மாதவிடாயின்போது மாணவிகள் வருத்தத்துடனும் சிடுசிடுப்பாகவும் இருந்ததைக் கவனித்தோம். சில நேரங்களில் அவர்களின் தாயும் அதற்குக் காரணமாக இருந்தார். அதனால் இருவருக்கும் ஒரேநேரத்தில் ஆலோசனை அளிக்கப்பட்டது. இந்த தருணத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. இனிப்புகள் வழங்கினோம். இந்த நிகழ்வு இல்லையெனில் உலகமே இருந்திருக்காது என்பதைப் புரியவைத்தோம்.

மருத்துவ ஆலோசனை

பாலின ஈர்ப்பு, உடல் வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்து வருடத்துக்கு குறைந்தது 2 முறை மருத்துவர்களை அழைத்து வந்து முறையான ஆலோசனை வழங்குகிறோம். அதில் கேள்வி நேரமும் உண்டு. மாணவிகள் தங்களின் சந்தேகங்கள், கேள்விகளை அவர்களிடமே நேரடியாகக் கேட்கலாம். இந்த ஆலோசனையை தொடர்ந்து வழங்குவதால் கடந்த சில ஆண்டுகளாக எங்கள் மாணவிகள் சரியான புரிதலுடன் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். மாணவர்களை சக தோழர்களாகப் பார்க்கும் பார்வையை மாணவிகளிடத்தில் வளர்த்தெடுத்து வருகிறோம்.

பெண்கள் பள்ளி என்பதால் மாலை பள்ளிக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு உண்டு. மாணவிகள் அடையாளம் தெரியாத நபர்களோடு பழகுவது தெரியவந்தால், கண்டிக்காமல் எடுத்துக் கூறுகிறோம். அவை எல்லாவற்றையும் எல்லாருக்கும் சொல்லாமல் பாதுகாக்கிறோம். அதை ஒரு விபத்தாகப் பார்க்காமல் சம்பவமாகவே பார்க்கச் சொல்லி ஆசிரியர்களை அறிவுறுத்துகிறோம். இளைய தலைமுறையை உணர்ச்சிபூர்வ சமூகத்திலிருந்து, அறிவியல் சார்ந்த அறிவுச் சமூகமாக மாற்றவேண்டும் என்பதே என் ஆசை'' என்கிறார் அன்பாசிரியர் ஹேமாவதி.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x