Published : 28 Jul 2016 03:56 PM
Last Updated : 28 Jul 2016 03:56 PM

அன்பாசிரியர் 23: தமிழரசன்- பசுமையை விதைக்கும் சகலகலா வல்லவர்!

சிறந்த ஆசிரியர் பந்தயக் குதிரைகளை உருவாக்குவதில்லை; பண்பான மனிதர்களை ஆக்குகிறார்.

தேசிய விளையாட்டு வீரர், கோ கோ, தடகளப் போட்டிகளில் மாநில அளவில் தங்கம் பெற்றவர், கதை, கவிதை, ஓவியக் கலைகளுக்குச் சொந்தக்காரர், பெயிண்ட் அடிக்கத் தெரியும், அடிப்படைக் கட்டுமானப் பணிகளில் ஈடுபாடு, ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு அவற்றைத் தொடர்ந்து பராமரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர், விவசாயி உள்ளிட்ட பல முகங்களுக்குச் சொந்தக்காரர் இந்த அத்தியாய அன்பாசிரியர் தமிழரசன்.

தன் 16 வருட ஆசிரியர் பணி குறித்து ஆர்வத்துடன் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

"எனக்கு விழுப்புரம் மேல் ஒலக்கூரில் ஆசிரியர் வேலை கிடைத்ததும் ஒன்றை மட்டும் யோசித்தேன். என்னுடைய சிறு வயதில் பிடிக்காத ஆசிரியர்கள் போல இருக்காமல், பிடித்த ஆசிரியர்களின் அனைத்து குணங்களையும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அது. காலம் தவறாமை நற்பெயரைக் கொடுக்கும் என்று என் அப்பாவின் நண்பர் அடிக்கடி கூறுவார். அதை இன்றளவிலும் கடைபிடித்து வருகிறேன். 16 ஆண்டுகளாக என்னுடைய பெரும்பலம் அது.

ஒருநாள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, வண்டி பஞ்சர் ஆகிவிட்டது. தேர்வு சமயம் வேறு. கிராமத்துப் பள்ளி என்பதால் அந்த வழியாக யாரும் வரவில்லை. பொறுத்துப் பார்த்தேன். அங்கிருந்து பள்ளிக்குச் செல்ல 3 கி.மீ. தூரத்தை கடக்க வேண்டும். தடகள போட்டிகளில் ஓடிப் பழக்கம் என்பதால், குறுக்கு வழியாக ஓடினேன். பள்ளியில் பிரேயர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பள்ளியை அடைந்துவிட்டேன். தங்கப்பதக்கம் வாங்கியபோது கிடைக்காத மகிழ்ச்சி அந்த கணத்தில் கிடைத்தது.

மாணவர்களுக்கு டயரி முறை

என்னுடைய பணியில் முக்கியப் பங்காக நான் நினைப்பது பள்ளி, பெற்றோர் மற்றும் சமுதாயம். குழந்தைகளுக்கு டயரி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தேன். அதற்கென தனியாக எதுவும் வாங்காமல். பெற்றோர் கையொப்பம், ஆசிரியர் கையொப்பம் ஆகியவற்றை எழுதி சின்ன முத்திரை வைத்தேன். அதுவே பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இடையில் சிறந்த தொடர்பு சாதனமானது.

செஸ், கேரம் முதலிய விளையாட்டுகளோடு, தனியார் பள்ளிகளின் பாணியில் சிறப்பு சீருடைகளை அறிமுகப்படுத்தினோம். சுமார் 11 வருடங்கள் மேல்ஒலக்கூரில் வேலை பார்த்தேன். 7 ஆண்டு விழாக்கள், 3 விளையாட்டு போட்டிகளை நடத்தியிருக்கிறோம். அங்கிருந்த சிறுவர்கள் என்னை ரோல் மாடலாகவே பார்த்தார்கள். அதனால் தலை வாருவது முதல் உடை, அணிகலன்கள் அணிவது வரை கவனத்துடன் இருக்க ஆரம்பித்தேன்.

சில வருடங்களில் பள்ளிக்குளம் கிராம பள்ளியில் பதவி உயர்வோடு பணி கிடைத்தது. அடிப்படை வசதிகள் எதுவுமில்லாமல் மிகவும் மோசமான நிலையில் இருந்த பள்ளி அது. நண்பர்கள் எல்லோரும், அது மோசமான ஊர் போகாதே என்று பயமுறுத்தினார்கள். ஆனாலும் சென்றேன். அங்கிருந்த தலைமை ஆசிரியர் என்னை சுதந்திரமாக இயங்க அனுமதித்தார். அன்று தொடங்கி இப்போது வரை தினமும் 1 - 2 மணி வரை அனைத்து மாணவர்களையும் நானே கவனித்துக் கொள்கிறேன். என்னுடைய டயரி முறையை அங்கும் ஆரம்பித்தேன். தலைமை ஆசிரியரும் பின்பற்ற ஆரம்பித்தார். மாணவர்களும் ஆர்வத்துடன் அதைப் பின்பற்ற ஆரம்பித்தனர்.

ஊரையே மாற்றிய ஒற்றை விழா

ஒரு நாள் பள்ளி ஆண்டு விழா பற்றிய பேச்சு வந்தது. மற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இதுநாள் வரையிலும் ஆண்டுவிழா நடத்தப்படவில்லை என்றனர். ஊரில் பிரச்சனை உண்டாகும்; வேண்டாம் என்று தயங்கினர். மதியம் 2 - 3 வரை ஒரு மணி நேரம் மட்டும் நடத்தலாம் என்று கூற தயங்கியவாறே சம்மதித்தனர். கவிதை, பாட்டு, நடனம் என எல்லாவற்றுக்கும் நிறைய பயிற்சி செய்தோம். கொடையாளர்கள் மூலம் 15 ஆயிரம் ரூபாயைத் திரட்டி 2013-ல் முதல் ஆண்டுவிழா நடத்தப்பட்டது. 3 மணி வரை மட்டுமே நடத்துவதாக ஆரம்பிக்கப்பட்ட விழா, இரவு வரை நீண்டது. நிகழ்ச்சியின் முடிவில் மொத்த கிராமமும் அங்கேதான் இருந்தது.

அதற்கு முன்னர் வரை, மாலை நேரங்களில் இளைஞர்கள் பள்ளியை கழிப்பிடம் போலப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் பாக்கு பொட்டலங்கள், மது பாட்டில்கள் நிறைந்துகிடக்கும். இதைப்பற்றி ஆண்டுவிழாவில் பேசினேன். அதற்குப் பிறகு அந்த சம்பவங்கள் 50 % குறைந்திருந்தன. சிறுநீர் கழிப்பது நின்றது. ஒற்றை ஆண்டுவிழா மூலம் ஊரே மாறியது.

அடுத்த நாளே முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்ற அரசுக்கு 1 லட்சம் கட்ட வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என்றேன். மக்களின் பேராதரவால் ஒரே நாளில் 1 லட்சம் ரூபாய் வசூலானது. 2013-ல் பணத்தைக் கட்டிவிட்டு அரசின் ஆணைக்காகக் காத்திருக்கிறோம்.

மாணவர்களின் பெற்றோர்களிடம் குறைகள் என்னென்ன என்று கேட்டு சரிசெய்தோம். வீடு வீடாகச் சென்று எங்கள் பள்ளியைப் பற்றி எடுத்துக் கூறினோம். ஆங்கில வழிக்கல்வி தொடங்கிய உடன், மாணவர் சேர்க்கை அதிகமாக ஆரம்பித்தது. ஒரு நாள் எங்களின் பேச்சைக் கேட்ட தந்தை ஒருவர், மெட்ரிக் பள்ளியில் சேர்த்த தன் குழந்தையின் ஷூ, சாக்ஸைக் கழற்றி எங்களுடன் அனுப்பினார். இந்தக் கணம் வரை மறக்க முடியாத நிகழ்வு அது.

பசுமைக்கு விதை போட்டவர்

கொஞ்சம் கொஞ்சமாக பள்ளி முன்னேறிக் கொண்டிருந்தது. ஒருமுறை பள்ளிக்கல்வி அலுவலர் திடீரென பள்ளிக்கு வந்தார். ''பள்ளியின் சுற்றுப்புறம் சரியாக இல்லை; சூழல் நன்றாக இருந்தால்தானே படிக்க முடியும். பள்ளியை இப்படித்தான் வைத்திருப்பீர்களா?'' என்று கேட்டுச் சென்றார். அந்த நிகழ்வு மனதை மிகவும் உறுத்தியது. அவரே பாராட்டும்படி வேலை பார்ப்பேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு பள்ளியைச் சுற்றிலும் சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். பள்ளிக்கு வண்ணம் பூச எண்ணினோம். செலவு அதிகமாகும் என்பதால், நானே பெயிண்ட் அடிக்க ஆரம்பித்தேன். திருக்குறள், விழிப்புணர்வு வாசகங்களை எழுதினோம். படங்கள் வரைந்தோம். ஏராளமான மரக்கன்றுகளை நட்டோம். வாராவாரம் 200 ரூபாய்க்கு சந்தையில் கன்றுகளை வாங்குவேன்.

ஆரம்பத்தில் ஊரில் இருந்தவர்களே செடிகளைப் பிடுங்கிப் போட்டார்கள். உடனே கை உடைந்த மாதிரி இருக்கும். ஆனாலும் கன்றுகள் நட்டுப் பராமரித்துக்கொண்டே இருந்தோம். அந்த ஆண்டு பொங்கல் விழாவில் பள்ளிக்கருகில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை அழைத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கச் சொன்னோம். அந்த நிகழ்வுக்குப் பிறகு யாரும் அங்கு விளையாட வரவில்லை. செடிகள் வளர வளர மக்களின் பிரமிப்பு அதிகமானது. விடுமுறை நாட்களில் அவர்களே செடிக்கு தண்ணீர் ஊற்றினார்கள். இன்னும் எங்கள் பள்ளிக்கு மூன்று பக்கங்களுக்கு சுற்றுச்சுவர் இல்லை. ஆனாலும் யாரும் தொந்தரவு கொடுப்பதில்லை.

மரம் வளர்த்தால் தங்க மூக்குத்தி

பள்ளியில் மட்டுமல்லாமல் ஊரிலும் மரம் வளர்க்கலாமே எனத்தோன்றியது. பெண்களை மரம் வளர்க்கத் தூண்ட தங்கம் கொடுப்பது நல்ல உத்தியாக இருக்கும் எனத்தோன்றியது. தங்கத்தில் மலிவாகக் கிடைக்கும் பொருள் மூக்குத்தி. உடனே 'தங்க மூக்குத்தி' திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். பள்ளிக்குளம் முதல் பசுமைக்குளம் வரை என்ற தலைப்பில் போட்டி வைத்தோம். கிராம மக்களுக்கு இலவச மரக்கன்று வழங்கி நடச்சொல்வோம், மூன்று மாதம் கழித்துப் பார்ப்போம். நல்ல முறையில் செடியைப் பராமரிப்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க மூக்குத்தி வழங்குகிறோம். இன்று எங்கள் கிராமம் முழுக்க பசுமை பரவி நிற்கிறது.

ஊரக விளையாட்டு விழாவை நடத்தி மக்களுக்கு இன்னும் நெருக்கமானோம். அருகிலிருந்த குளத்தில் மழை பெய்து தண்ணீர் நிரம்பியிருந்தது. அங்கே நீச்சல் போட்டிகள் நடத்தினோம். மக்களுடனான எங்களின் பிணைப்பு பள்ளிக்கான நன்கொடையாக மாறியது.

ஒவ்வொரு ஆண்டு விழாவும் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது. முதலாண்டு விழாவில் வசூலான தொகை 15 ஆயிரம் ரூபாய். இரண்டாம் ஆண்டில் 60 ஆயிரமும், மூன்றாவதில் 1 லட்சமும், இப்போது நான்காம் ஆண்டில் 1 லட்சத்து 70 ஆயிரமும் வசூலாகியுள்ளது. தள்ளாத வயதில், நடக்கவே முடியாமல் இருந்த பாட்டி, தன்னுடைய சுருக்குப்பையில் இருந்து 125 ரூபாயைக்கொடுத்து, 'எங்கிட்ட இவ்வளோதான்பா இருக்கு!' என்றார். எல்லோரும் உறைந்து நின்றோம்.

ஆண்டுவிழா நடத்தியது போக, மீதத்தொகையைப் பள்ளிக்காகச் செலவிடுகிறோம். 2-ம் ஆண்டில் 20,000-க்கு சுத்திகரிப்பு இயந்திரமும், 3-ம் அண்டில் 50,000-க்கு கழிப்பறை, நீர் வசதி, மின்விசிறிகளை உருவாக்கினோம். இந்த வருடத்தொகையில் ஏசி வசதியோடு கூடிய ஸ்மார்ட் பலகையை உள்ளடக்கிய வகுப்பை உருவாக்கி வருகிறோம்.

அன்றைக்கு பள்ளியின் சூழலைப் பற்றிப்பேசிய கல்வி அலுவலர் இன்று வந்து பார்க்கவேண்டும் என்று ஆசை. இப்போது 'வீடுதோறும் கழிப்பறை' என்ற இலக்கை நோக்கிப் பயணித்து வருகிறோம். வெகு சீக்கிரத்தில் இலக்கை எட்டுவோம்" என்று உறுதியும் நம்பிக்கையும் இழையோடச் சொல்கிறார் அன்பாசிரியர் தமிழரசன்.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

ஆசிரியர் தமிழரசனின் தொடர்பு எண்: 9786899951

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 22: ராதாமணி- உள்ளூர் பள்ளியை உயர் தரத்துக்கு மாற்றிய ஆசிரியை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x