அன்பாசிரியர் 24: சுகிகலா - மன்றங்களால் மாணவர்களை மேம்படுத்தும் ஆசிரியை!

அன்பாசிரியர் 24: சுகிகலா - மன்றங்களால் மாணவர்களை மேம்படுத்தும் ஆசிரியை!
Updated on
2 min read

ஆசிரியர் புத்தகத்தை வாசிக்கிறார். சிறந்த ஆசிரியர் மாணவர்களின் மனதை வாசிக்கிறார்.

'சிறந்த சமுதாயத்தை ஆசிரியர் தொழிலே உருவாக்கும்' என்ற எண்ணத்தால் ஆசிரியரானேன் என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டம் ஆத்தனஞ்சேரி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுகிகலா. தன்னுடைய 29 வருட கால ஆசிரியப்பணி அனுபவத்தை இந்த அத்தியாய அன்பாசிரியரில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

''வேலை கிடைத்து முதல்நாள் திண்டிவனத்தில் ஓர் அரசுப்பள்ளிக்குச் சென்றபோது கிழிந்த சட்டை, ஒழுகிய மூக்கு என மாணவர்கள் பரிதாபமான நிலையில் இருந்தனர். அவர்களைப் பார்த்தாலே அழுகை வந்தது. இப்படியும் ஒரு பள்ளி இருக்குமா என்று அதிர்ச்சியடைந்தேன். நான் வேலை பார்த்த இடங்கள் அனைத்தும் கிராமங்கள் என்பதால் அங்கே கல்வி குறித்த விழிப்புணர்வு பெரிதாக இல்லை. முதலில் கல்விமுறையிலும், அடுத்ததாக கட்டமைப்பிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

வாசிப்பை வளர்க்கும் உத்தி

மாணவர்களின் வாசிப்பை மேம்படுத்தும் விதமாக, நூலகத்தில் புத்தகம் படிக்கும் ஒவ்வொருவரும் அதைப்பற்றிய கருத்தை ஒரு நோட்டில் எழுதி வைப்பர். அதற்காகவே தனியாக ஒரு பிரிவை நிர்வகித்து வருகிறோம். அதிக புத்தகங்களைப் படித்து, அவை குறித்து கருத்து சொன்ன மாணவருக்கு பள்ளி விழாக்களில் பரிசளிக்கிறோம். எங்கள் பள்ளியில் நேரந்தவறாமை முழுமையாகக் கடைபிடிக்கப்படுகிறது. காலந்தாழ்ந்த வருகைப் பதிவேடு கிடையாது. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் சரியான நேரத்துக்கு வந்துவிடுகிறார்கள்.

மாதந்தோறும் செயல்படும் மன்றங்கள்

மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை இலக்கிய மன்றம் நடைபெறும். 1- 5 வகுப்புக் குழந்தைகளுக்கு பால சபை நடக்கும். 6 - 8 வகுப்பு மாணவர்கள் சமூக சிந்தனைகள், தலைவர்களின் கருத்துகளை அவர்களைப் போலவே வேடமிட்டுப் பேசுவார்கள். அன்றைக்கே அடுத்த மாதத்துக்கான தலைப்பு வழங்கப்பட்டுவிடும்.

இரண்டாவது வெள்ளியன்று ஆங்கில இலக்கிய மன்றம். வினைச்சொல், பெயர்ச்சொல், உரிச்சொற்கள், ஆங்கில இலக்கணம் குறித்து குழந்தைகளும், நாடகம், நடிப்பு, மிமிக்ரி ஆகியவற்றைப் பெரிய வகுப்பு குழந்தைகளும் அரங்கேற்றுவார்கள். மூன்றாவது வெள்ளியை கணிதமன்றத்துக்கு ஒதுக்கியிருக்கிறோம். சிறிய வகுப்பினர் வடிவங்கள் உள்ளிட்டவற்றைச் செய்ய, பெரியவர்கள் கணித வல்லுநர்கள் பற்றிய தகவல் திரட்டல், சுடோகு விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள். இந்த மன்றங்கள் அனைத்தும் மாணவர்களின் படைப்பாற்றல் பெருகவும், பன்முகத் திறன் வளரவும் உதவுகிறது.

காலத்தினாற் கிடைத்த உதவி

பள்ளிகளில் ஆரம்பத்தில் கழிப்பறை, உணவுப் பிரச்சினைகள் அதிகமிருந்தன. வகுப்பறை கட்டமைப்பு வசதிகளும் குறைவாகவே இருந்தன. மெல்ல மெல்ல பள்ளியில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த ஆரம்பித்தோம். நன்கொடையாளர்கள் உதவியுடன் வகுப்பறைகள், கழிப்பறை, சுற்றுச்சுவர்களைக் கட்டினோம்.

கிராம சூழ்நிலையில் இருந்து படிக்கவரும் பெரும்பாலான மாணவர்கள், இயல்பான மனநிலையோடு பள்ளிக்கு வருவதில்லை. வீட்டில் அடிவாங்கிக்கொண்டு வரும் மாணவர்களைக்கூட பார்த்திருக்கிறேன். அதனாலேயே அவர்களை மகிழ்விக்க நீர்வீழ்ச்சி ஒன்றை ஆத்தனஞ்சேரி பள்ளியில் உருவாக்கினோம். பள்ளி தொடங்கும்போது, இடைவேளை, உணவுவேளைகளில் அவை இயங்கும். மாணவர்களின் உடல் நலனைப் பேண சீசா, ஊஞ்சல் ஆகியவற்றை அமைத்தோம். யானை, திருவள்ளுவர் ஆகிய சிலைகள் அவர்களின் அழகுணர்வை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டன.

மூலிகைத் தோட்டங்கள், பூச்செடிகள் பள்ளியில் பசுமையை ஏற்படுத்தின. லவ் பேர்ட்ஸ் வளர்க்கிறோம். சுற்றுச்சுவர்களில் தலைவர்களின் கருத்துக்களை எழுதி வைத்திருக்கிறோம். இதன்மூலம் ஒரு குழந்தையாவது மாறினால் அதுவே எங்களின் வெற்றி. இவற்றைப் பராமரிக்க ஆசிரியர்களின் செலவில் ஓர் ஆயம்மாவை நியமித்திருக்கிறோம். 9 வகுப்பறைகளில் 7-க்கு டைல்ஸ் ஒட்டியிருக்கிறோம். 6 கணிப்பொறிகளும், 5 மடிக்கணினிகளும் இருக்கின்றன. இணைய வசதியும் எங்கள் பள்ளியில் உண்டு. ஸ்மார்ட் வகுப்பறையை உருவாக்கும் எண்ணத்தில் இருக்கிறோம். 24 மணி நேர தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.

எப்படி இத்தனை உதவிகள் சாத்தியமானது?

எல்லாவற்றுக்கும் நாம் அணுகும் விதம்தான் காரணம். பொதுமக்களிடம் பண்பாக பணிவாக பேசினால் கண்டிப்பாக உதவுவார்கள். முக்கியமாக அவர்களிடம் நாங்கள் ஒரு பைசாவைக்கூட பணமாக வாங்குவதில்லை. பொருட்களாக வாங்கிக் கொடுக்கச்சொல்லி விடுகிறோம். இதனால் அவர்களுக்கு எங்களின் மீதான நம்பிக்கை அதிகமாகிறது.

பலம்

எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதைத்தான் என்னுடைய பலமாக நினைக்கிறேன். என்னிடம் படித்த ஒரு குழந்தைகூட சோடை போனதில்லை என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன். குழந்தைகளின் நன்மை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது என் ஆசை. மற்றவர்கள், 'எப்படி உங்கள் பள்ளிக்கு மட்டும் இத்தனை நிதியுதவி கிடைக்கிறது?' என்று கேட்பதுண்டு. நன்கொடையாளர்களிடம் நமது தேவையைப் புரியவைத்தால் கண்டிக்காமல், கடிந்து பேசாமல் அவர்கள் உதவி செய்வார்கள்;செய்கிறார்கள். இதையும் என்னுடைய பலமாகப் பார்க்கிறேன்.

இன்னும் ஒரு வருடத்தில் ஓய்வு பெறப்போகிறேன். அதற்குள் பள்ளிக்கு மேலுல் மூன்று வகுப்பறைகள் கட்டிவிட ஆசை. அவற்றைக் கட்ட ரூ.20 லட்சம் செலவு ஆகும். நான் பள்ளியை விட்டுச் செல்வதற்குள் அவற்றைக் கட்டிமுடிக்க வேண்டும். அதற்கும் உதவி கிடைக்குமென்று தீர்க்கமாக நம்புகிறேன். இதுவே என்னுடைய ஆசை!'' என்று சிரிக்கும் அன்பாசிரியர் சுகிகலாவின் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது நம்பிக்கையும் ஈரமும்.

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in