Published : 01 Jul 2016 04:52 PM
Last Updated : 01 Jul 2016 04:52 PM

அன்பாசிரியர் 21: ரவி - காணொளி வழி கல்விப் புரட்சியில் அரசு பள்ளி ஆசிரியர்

சிறந்த ஆசிரியர் கடந்த காலத்தை நிகழ்த்துகிறார்; நிகழ்காலத்தை வெளிப்படுத்துகிறார்; எதிர்காலத்தை உருவாக்குகிறார்.

''சமூகத்தின் ஆணிவேர்கள் குழந்தைகள். அவர்களை மேம்படுத்த கற்பித்தலை விடச் சிறந்த வழி எதுவும் இல்லை. அதனாலே ஆசிரியப் பணிக்கு வந்தேன். இதில் இனம்புரியா ஆத்ம திருப்தியை உணர்கிறேன்'' என்கிறார் ஆசிரியர் ரவி. பாடப் புத்தகம் தவிர்த்து கணினி வழியாகவே பாடம் எடுக்கும் அறிவியல் ஆசிரியர் ரவி புதுக்கோட்டை, கண்ணக்கன்காடு அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார்.

தன் பணி, பயணிக்கும் பாதை குறித்து ஆர்வத்துடன் அவர் பேசியதிலிருந்து...

கணினி வழிக் கல்வி

ஆசிரியர் பணிக்கு முன்னால், கணிப்பொறி சார்ந்த தொழில் செய்து கொண்டிருந்தேன். அதனால், புத்தகத்தை பயன்படுத்தாமல் கணிப்பொறி வழியாகக் கற்பித்தல் என்பது எனக்கு எளிதாகவே இருக்கிறது. பாடப்புத்தகத்தை ஸ்கேன் செய்து, கற்பிக்கக்கூடிய பாடத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பவர் பாயிண்ட் பிரசண்டேஷனாக தயாரித்துக்கொள்கிறேன். ரோட்டரி கிளப் மூலம் புரொஜக்டரை நன்கொடையாகப் பெற்று அதன்மூலம் பாடங்களை திரையிட்டுக் காண்பிக்கிறோம். இதனால் மாணவர்கள் அனைவரும் கணிப்பொறி வழியாகவே பாடங்களைக் கற்றுக் கொள்கின்றனர்.

புரொஜக்டர் மூலம் பெரிதாக திரையில் காண்பிப்பதாலும், குறிப்பிட்ட பாடம் தொடர்பான காணொளிகளைக் காண்பிப்பதாலும் மாணவர்கள் எளிதில் பாடத்தைப் புரிந்து கொள்கிறார்கள். ஒரு முறை பனிமலை பற்றியும், அது உருகுவது பற்றியும் பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தைக் கொண்டு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விளக்கியபோதும் புரிந்து கொள்ளாத மாணவர்கள், காணொளி மூலம் விளக்கியபோது உடனே புரிந்துகொண்டனர்.

அனைத்துப் பாடங்களுக்குமான மென்பிரதிகள்

எட்டாம் வகுப்பு வரைதான் பாடம் எடுக்கிறேன். ஆனாலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களின் மென் பிரதிகளை (soft copy) வைத்திருக்கிறேன். புத்தக வடிவைக் காட்டிலும் காட்சி வடிவம், மாணவர்கள் மனதில் இன்னும் ஆழமாய்ப் பதியும் என்பது என்னுடைய எண்ணம். அதையே என்னுடைய கற்பித்தல் முறையிலும் பயன்படுத்துகிறேன்.

முதலில் அனைத்துப் பாடங்களுக்கும் பவர் பாயிண்ட் ஸ்லைடுகளையும், காணொளிகளையும் உருவாக்குவது சவாலாகவே இருந்தது.

பொதுவாக ஒரு பாடத்தின் உள்ளடக்கத்தை சுமார் 150 ஸ்லைடுகளில் விளக்கிவிடலாம். சில சமயங்களில் காணொளிகளை உருவாக்கும் பணி நள்ளிரவு 2, 3 மணி வரை நீளும். ஒரு முறை உருவாக்கிவிட்டால் எப்போதுமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உட்கார்ந்து விடுவேன். நம்முடைய மாணவர்களுக்குத்தானே செய்கிறோம் என்ற உணர்வே அதிகம் வேலை செய்யத் தூண்டியிருக்கிறது.

வகுப்புப் பாடங்களோடு, மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கக்கூடிய தேசிய திறனறிவுத் தேர்வுக்கும் உதவலாமே எனத் தோன்றியது. இதற்காக கடந்த ஆறு வருட வினாத்தாள்களைத் திரட்டி அவற்றை ஸ்கேன் செய்தேன். பின்னர் அவற்றை ஸ்லைடுகளாகத் தயார் செய்து கொடுத்தது தேர்வுகளுக்கு உதவியாக இருந்தது.

ஆக்கமளித்த ஆசிரியர்

'சர்வ சிக்‌ஷ அபியான்' திட்டம் மூலமாக முனைவர் சுப்பையா பாண்டியன் அறிமுகமானார். அவர் அறிவியலையும் ஆய்வுகளையும் மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி எளிமையாக எழுதுபவர். அவர் எனக்கு தூண்டுகோலாக இருந்தார். அவரின் உதவியோடு 6, 7 மற்றும் 8- ம் வகுப்பு மாணவர்கள் 105 பேரைக் கொண்டு, ஒவ்வொருவருக்கும் ஓர் ஆய்வு மூலம் 105 ஆய்வுகளை மேற்கொண்டோம். 2014-ம் ஆண்டில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு இந்த ஆய்வுகளை கண்காட்சியாகவும் நடத்தினோம். போதிய அளவு பணம் இருந்ததால் என்னாலேயே மாணவர்களுக்கு ஆய்வுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க முடிந்தது.

இவற்றை எங்கள் மாணவர்களின் பெற்றோர்கள், அருகாமையில் இருக்கும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வந்து பார்வையிட்டனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இளம் விஞ்ஞானிகளாகப் பார்த்து மகிழ்ந்த தருணம் வாழ்நாளில் மறக்க முடியாதது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு இன்னும் பயன்படும் வகையில் நிறைய செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

காணொளிகள் உருவாக்கம்

மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வுகளின் ஒவ்வொரு படிநிலைகளையும் படங்களாகக் காட்டுவதைவிட, ஸ்லைடுகளாகவும் அதைவிட காணொளிகளாகக் காட்டும்போது அவர்கள் அறியாமலே ஓர் ஆர்வம் ஏற்பட்டது. அதை வளர்க்கும் நோக்கில் காணொளி வழிக் கற்பித்தலையும் தொடங்கி, பாடங்களுக்கு நூற்றுக்கணக்கான காணொளிகளைப் பயன்படுத்தி வருகிறேன். அதற்கு எடிட்டிங் முக்கியம் என்பதால் அதைக் கற்று வருகிறேன்.

இப்போதுள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் ஒவ்வொன்றுக்காகவும் போராட வேண்டி இருக்கிறது. நம்முடைய பாடத்திட்டங்கள் எல்லாவற்றிலும் கொஞ்சம் பின்தங்கியே உள்ளன. புத்தக அறிவு மட்டும் போதுமானதாக இல்லை. வெளியுலக பொது அறிவும் தேவை. அதற்கான யோசனைகள், திட்டங்கள் இருக்கின்றன. அவை குறித்து செயலாற்றி வருகிறேன்.

இதற்காக நான் புத்தகங்களைக் குறை சொல்லவில்லை. எதற்கெல்லாம் புத்தகம் தேவையோ அங்கெல்லாம் புத்தகங்களையும் எதற்கெல்லாம் தொழில்நுட்பம் தேவையோ அப்போது கணிப்பொறிகளையும், எங்கெல்லாம் கள ஆய்வு தேவைப்படுகிறதோ அப்போது சுற்றுலாக்களையும் எதற்கெல்லாம் சோதனைகள் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் ஆய்வகங்களையும் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துக்கொண்டு செல்வேன். என்னுடைய ஒவ்வொரு மாணவரும் ஊரிலிருக்கும் எல்லா மூலிகைகளின் பெயர்களையும் கூறுவர்.

ஏதாவது தெரியவில்லை என்றால், உடனே தயங்காமல் அதைக் கற்றுக்கொள்வதைத்தான் என்னுடைய பலமாக நினைக்கிறேன். நம்மை நாமே ஒரு மாணவனாக உணர்வதுதான் முக்கியம். அந்தப் பண்பு இருந்தால் நிச்சயம் வளரலாம். மாணவர்களையும் வளர்க்கலாம்" என்று கூறிப் புன்னகைக்கிறார் அன்பாசிரியர் ரவி.

அன்பாசிரியர் ரவி | அவரின் தொடர்பு எண்: 9842494694

க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 20: உமா மகேஸ்வரி- அசத்தும் ஆசிரியர்களின் 'தோழர்'!Sign up to receive our newsletter in your inbox every day!

 
x