Published : 27 Feb 2017 11:29 AM
Last Updated : 27 Feb 2017 11:29 AM

அன்பாசிரியர் 33: தனபால்- 249 இளம் விஞ்ஞானிகளின் ஆசான்!

சீமைக் கருவேல சாறிலிருந்து மின்சாரம் ; சூழலியலைக் காக்கும் கழிப்பறை

*

சிறந்த ஆசிரியர் ஒரு மெழுகுவர்த்தியைப் போல- தன்னொளி கொண்டு மாணவர் வாழ்வில் ஒளியேற்றுகிறார்.

கிராமப்புறத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த தனபாலுக்கு அறிவியலில் அத்தனை ஆர்வம். எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதைப் பரிசோதித்துப் பார்ப்பார். கல்லூரி முடித்து ஆர்வத்துடன் இளம் விஞ்ஞானிக்கான தேர்வை எழுத 1995-ல் மும்பை சென்றார் தனபால். அங்கே பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கேள்வித்தாள் முழுவதும் ஆங்கிலத்திலும், இந்தியிலுமே இருந்தது.

ஆரம்பக்கல்வி, உயர்நிலைப் பள்ளி, கல்லூரி இளங்கலை என அனைத்தையும் தமிழ் வழியில் படித்த மாணவர் தனபாலால் அன்று தேர்ச்சி பெற முடியவில்லை. ஆனால் அதே தனபால் இன்று அரசுப்பள்ளி ஆசிரியராகி, கிராமங்களில் இருந்து 249 இளம் விஞ்ஞானிகளை உருவாக்கியிருக்கிறார். அவரின் மாணவர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அறிவியல் போட்டிகளில் தங்கத்தைக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக்கத்தையும், ஊக்கத்தையும் ஊட்டும் அன்பாசிரியர் தனபாலின் அறிவியல் பயணம் இந்த அத்தியாய அன்பாசிரியரில்...

''1996-ல் ஆசிரியப் பயிற்சியை முடித்த எனக்கு 2005-ல் கரூர், வெள்ளியணை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேலை கிடைத்தது. கிராமத்தில் இருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகும் பெருமையை ஏற்கெனவே அடைந்துவிட்டோம். ஆனால் விஞ்ஞானிகள் கிராமத்தில் இருந்து உருவாவது மிகமிகக் குறைவு. இதைப் போக்கவேண்டும் என்பதுதான் என் லட்சியமாக இருந்தது. விஞ்ஞானிகள், அறிவியல் என்றவுடனே அந்நியமாக நினைக்க வேண்டாம். அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சரிசெய்பவர்தான் சிறந்த விஞ்ஞானியாக இருக்கமுடியும்.

அறிவியலில் ஆறு குழுக்கள்

இதைத் தொடர்ந்து பள்ளியில் அறிவியல் ஆர்வம் கொண்ட மாணவர்களை இணைத்து ஒரு குழுவை அமைத்துள்ளோம். அறிவியல் நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அண்டம், சுற்றுச்சூழல், மின்னியல், மின்னணுவியல், ரோபோ மற்றும் மருத்துவம் என மாணவர்களின் ஆர்வத்தைப் பொருத்து அவர்களை 6 பிரிவுகளாகப் பிரித்து, பயிற்சி அளிக்கிறோம்.

முதல்படியாக தினமும் நாளிதழ் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். காலை 8.30 - 9.30, மாலை 4.30 - 5.30 என இரண்டு மணிநேரம் ஒதுக்குகிறோம். இதில் வருடத்துக்கு சுமார் 500 மணி நேரம் கிடைக்கிறது. இதுதவிர சனி, ஞாயிறுகளில் களப்பயணம் மேற்கொள்கிறோம். தனித்திறன் வெளிப்பாடு (அறிவியல் துறை சேர்ந்த பேச்சு, எழுத்து, ஓவியப் போட்டிகள்), கண்காட்சி, கருத்தரங்கம், அறிவியல் நாடகம், வினாடி வினா, களப்பயணம், தணிக்கை செய்தல், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல், குறும்படம் தயாரித்தல் ஆகியவை தொடர்ந்து நடத்தப்படுகிறது. இவற்றில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.

2013-ல் கூடங்குளம் அணு உலை பிரச்சினை எழுந்த சமயம். நாளிதழ்களில் அதை வாசித்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டோம். பாலமுருகன் என்ற +1 மாணவர், 'அணுமின் உற்பத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். அது 'ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா' நடத்திய போட்டியில் தேர்வாகியது. எங்கள் மாணவருக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தன் கையால் பரிசு வழங்கினார்.

சீமைக் கருவேல சாறிலிருந்து மின்சாரம்

2014-ல் சீமைக் கருவேல மரங்களின் எதிர்மறைத் தாக்கம் பெரியளவில் விவாதிக்கப்பட்டு வந்தது. பறவைகூடக் கூடுகட்ட முடியாத அந்த மரத்தால் மழைப்பொழிவும், நிலத்தடி நீரும் குறைந்தது. இந்நிலையில் சீமைக் கருவேல மரத்தின் ஒவ்வொரு பாகங்களையும் சேகரித்தோம். காய், இலை, தண்டு, வேர் ஆகியவற்றை பள்ளி ஆய்வகத்தில் வைத்துப் பரிசோதனை செய்தோம். எல்லா தாவரங்களிலுமே அமிலம் இருக்கும். இதைப் பரிசோதித்ததில் அதன் pH மதிப்பு 5 எனக் கண்டுபிடித்தோம். அதைக்கொண்டு ஏன் மின்சாரம் தயாரிக்கக் கூடாது என்று யோசித்து, சீமைக்கருவேலத்தை அரைத்துப் பிழிந்து சாறு எடுத்தோம். 100 மில்லி சாறில் இருந்து 1.5 வோல்ட் மின்சாரம் கிடைத்தது.

மின்சாரத்தின் அளவை அதிகப்படுத்த, தாமிரம்- துத்தநாகம் (Cu-Zn) மின்கலன் கொண்டு, அதைத் தொடரிணைப்பில் (series connection) கொடுத்தோம். இதன்மூலம் 3 லிட்டர் சாறில் 64 வோல்ட் மின்சாரம் தயாரித்து, 50 எல்ஈடி விளக்குகளை எரியவைத்தோம். இந்த செயல்திட்டத்துக்கு சதீஷ்குமார் என்ற +1 மாணவர் மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்றார். தேசிய அளவிலும் தேர்வாகி, அங்கு மாநிலத்துக்கான 2-ம் பரிசு கிடைத்ததோடு, 'புத்தாக்க அறிவியல் விருது'ம் கிடைத்தது. இப்போது சதீஷ்குமார் ஜப்பானில் நடக்கவுள்ள சர்வதேசக் கருத்தரங்கிலும் பங்கேற்க உள்ளார்.

தொழிற்சாலைக் கழிவுநீரைச் சுத்தப்படுத்த..

அதேபோல, தொழிற்சாலைக் கழிவுகளால் குடிநீரும், நிலத்தடி நீரும் பாழாவதோடு எங்கும் சாக்கடை நீரே வியாபித்திருப்பதைக் கண்டோம். எப்படித் தடுக்கலாம் என்று விசாரித்ததில் கழிவுநீரில் விளையும் பயிர் பற்றித் தெரியவந்தது. மாட்டுத் தீவனப்புல் எனப்படும் கம்பு நேப்பியர் (CN2) பயிர்தான் அது. இப்பயிரால் கழிவு நீரை உறிஞ்சி, வளரமுடியும் என்றாலும் இதைக் கால்நடைகளுக்கு உண்ணக்கொடுக்கக் கூடாது. இதிலிருந்து மின்சாரம் எடுக்கமுடியுமா என ஆய்வுசெய்து, வெற்றிகரமாக மின்சாரம் தயாரித்தோம். இத்திட்டமும் மாநில அரசின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

சூழலியலைக் காக்கும் கழிப்பறை

பொதுவாக கழிப்பறை கழிவுகள் பூமிக்கடியில் சேகரமாகின்றன. இதனால் நிலத்தடி நீருடன் கழிவு நீர் கலந்து அசுத்தமாகிறது. மேற்கத்திய கழிப்பறைகளால் அதிகளவில் தண்ணீரும் வீணாகிறது. இதைத் தடுக்கவும், திறந்தவெளி மலம் கழித்தலைக் குறைக்கவும் 2016-ல் சூழலியல் காக்கும் கழிப்பறையைக் கட்டினோம். இக்கழிப்பறை பூமிக்கு மேலே 3 அடி உயரத்திலேயே கழிவுகளைச் சேகரிக்கும். இது 3 வகைகளில் கழிவைப் பிரிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும். தென்னை நார், சாம்பல் மூலம் கழிவிலிருந்து துர்நாற்றம் கிளம்பாது. நொதித்தல் மூலம் கழிவுகள் இயற்கை உரங்களாக மாற்றப்படும். அதில் கால்சியம், பொட்டாசியம், சாம்பல் சத்து இருக்கும் என்பதால் விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். இந்த செயல்திட்டத்தை விளக்கி ஹரிஹரன் என்ற மாணவர், மாநில அளவில் தங்கப்பதக்கம் பெற்றார்.

செயல்திட்டங்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பிப்பதற்காகத் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கிறோம். அரசு அளிக்கும் தொகை போக்குவரத்துக்கே செலவாவதால், லக்கேஜ், உணவு உள்ளிட்ட செலவினங்களை நானே பார்த்துக் கொள்கிறேன். கிராமப்புற மாணவர்கள் நாடு போற்றும் விஞ்ஞானிகளாக உருமாற்றும் தருணத்தைவிட ஓர் ஆசிரியருக்கு வேறென்ன தேவைப்பட்டுவிடும்?

'என்னை செதுக்கியது மாணவர்கள்தான்'

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய பள்ளிப்பருவத்தில் நான் எந்த மேடையும் ஏறியதில்லை; பரிசுகளோ, கைதட்டல்களோ வாங்கியதில்லை. இப்போது என் மாணவர்கள் அவற்றைப் பெறும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மாணவர்களுடன் இப்போது வரை 117 மேடைகள் ஏறியிருக்கிறேன். என்னைச் செதுக்கியது மாணவர்கள் என்பதில் எனக்குப் பெருமைதான்.

அறிவியலுக்கு செயல்வழிக் கற்றல் மிகவும் முக்கியம். அதனால் பாடங்களைப் பெருமளவில் ஆய்வகத்திலும், களங்களிலும் கற்பிக்கிறோம். பத்தாம் வகுப்பில் அறிவியலில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவர்களுக்கு ஒரு வெள்ளி நாணயத்தை ஆண்டுதோறும் பரிசாக வழங்கிவருகிறேன். 8 ஆண்டுகளாக என் மாணவர்கள் அறிவியலில் 100% தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

வெளியூரில் இருந்து படிக்கும் மாணவர்கள்

அரசுப்பள்ளி என்றாலும் வெளியூர்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். மாணவர்களின் தனித்திறமையைக் கண்டு, ஈரோடு, திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் தங்கள் மகன்களை இங்கே சேர்க்கின்றனர். அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியில் இன்னும் கூடுதலாக உழைக்கிறேன். முதுகலை இயற்பியல் ஆசிரியராகப் பதவி உயர்வோடு, இட மாற்றலுக்கான ஆணை வந்தது. என் மாணவர்களின் நலன் கருதி அதை வேண்டாமென்று கூறிவிட்டேன். 12 வருடங்களில் ஒரு நாள் கூட மருத்துவ விடுப்பு எடுக்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

எங்கள் மாணவர்களின் அறிவியல் சாதனைகளைக் கண்ட முன்னாள் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து, 80 ஆயிரம் ரூபாய் செலவில் ஆய்வகத்தை மறுசீரமைப்பு செய்துகொடுத்தனர். 100 பேர் அமரும் வகையில், இளம் விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது வைக்கோல் எரிப்பதால் டெல்லியில் ஏற்படும் மாசுபாடு குறித்து செய்தித்தாளில் படித்தோம். இதனால் வைக்கோல் மறுசுழற்சி குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். தேசிய அளவில் வெற்றி பெற்று விருதுடன் திரும்பும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்த ஆசை. ஆனால் அரங்க வசதி இல்லாமல் இருக்கிறது. அத்துடன் நவீன உபகரணங்கள் கொண்டு ஆய்வகத்தை மேம்படுத்தும் முயற்சியிலும் இருக்கிறோம். நல்லுள்ளங்களின் உதவியில் அனைத்தும் நடக்கும்'' என்கிறார் அன்பாசிரியர் தனபால்.

க.சே. ரமணி பிரபா தேவி --> தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

ஆசிரியர் தனபாலின் தொடர்பு எண்: 9443588855

முந்தைய அத்தியாயம்: >அன்பாசிரியர் 32: கண்மணி- தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் உள்கட்டமைப்பை உருவாக்கியவர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x