Published : 29 Sep 2018 11:32 AM
Last Updated : 29 Sep 2018 11:32 AM

‘சாம்பியன் ஆஃப் த எர்த்’: மோடிக்கு இந்த ஐ.நா. விருது வழங்கப்பட்டது ஏன்?

”ஸ்வச் பாரத் அபியான் திட்டம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முதல்படி. இத்திட்டத்தை அறிவித்தவுடனேயே அனைவரும் இது சாத்தியமில்லை என்றுதான் கூறினர். ஆனால், இப்போது 90 சதவீத தூய்மை பராமரிக்கப்படுகிறது. அதனால், காசநோய் உள்ளிட்ட நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

குஜராத் முதல்வராக இருந்தபோது கூட பிரதமர் மோடி சுற்றுச்சூழலில் அதிக கவனம் செலுத்தக் கூடியவராக இருந்தார். அதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். பிரதமரான பிறகும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். அதனால் ஐநாவின் விருது பொருத்தமானது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக் கூடிய விஷயமாக பார்க்கிறேன்” என பெருமிதத்துடன் சொல்கிறார், பாஜகவின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.

எந்த விருதைப் பற்றி ஹெச்.ராஜா சொல்கிறார்? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கும் ஐநா சபை ‘சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த்’ எனும் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதை வழங்கியிருக்கிறது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க முயற்சி எடுத்தல், சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த ஊக்கப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த விருது மோடிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய விருதுக்கு உண்மையிலேயே மோடி தகுதியானவர்தானா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மோடியின் இந்த 4 ஆண்டுகளைத் தாண்டிய ஆட்சிக்காலத்தில் அவருடைய அமைச்சரவை சகாக்கள் பொதுமக்களின் ஆலோசனையின்றி சட்டங்களை நீர்த்துப்போகச் செய்துள்ளனர். அனைத்து நிறுவனங்களையும் சிதைத்து விட்டனர், அதிகாரத்தைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் காடுகள், வன வளம், கடல் வளம் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் எளிதில் சுரண்டுவதற்கு தயார்படுத்திக் கொடுத்துள்ளனர், காற்று மாசுபாடு, மோசமான கழிவு மேலாண்மைக்கு வழிவகுத்துள்ளனர் என பல குற்றச்சாட்டுகள் தற்போதைய மோடி அரசாங்கம் மீது முன்வைக்கப்படுகிறது.

2014 ஏப்ரல்-மே மாத வாக்கில், தேர்தல் பிரச்சாரம் உச்சத்தில் இருந்தபோது ‘டவுன் டூ எர்த்’ இதழில் வெளியான கட்டுரையில் இப்படி எழுதப்பட்டிருந்தது. “சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான பாஜகவின் கையேட்டில் ‘தாவரங்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல்’ என்பதற்குப் பதிலாக தொழில் என குறிப்பிடப்பட்டிருந்தது. தொழில்துறையில் விரைவான அனுமதிகளை ஊக்குவிக்கும் வகையில் அது வரையறுக்கப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மோடி பிரதமராக பதவியேற்ற முதலாம் ஆண்டு அதாவது ஆகஸ்டு 2014 முதல் ஏப்ரல் 2015 வரையிலான ஆட்சிக்காலத்தில், இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, தொழில்துறையில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்குண்டான தடைகளை நீக்க வேண்டும் என பரிந்துரைத்த 60 உடனடி நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியது.

அதே ஆண்டில், மோடி அரசாங்கம் இந்தியாவின் முக்கிய 6 சுற்றுச்சூழல் சட்டங்களை மறு ஆய்வு செய்து அதில் திருத்தங்கள் செய்வதற்காக முன்னாள் கேபினெட் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தது. அந்தச் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986; வன (பாதுகாப்பு) சட்டம், 1980; வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1972; நீர் சட்டம் (பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு), 1974; காற்று (பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம், 1981; மற்றும் இந்திய வனச் சட்டம், 1927. இந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பவே மோடி அரசாங்கம் அதனை முழுதாக நடைமுறைப்படுத்தவில்லை.

இப்படியாக இந்தியாவின் காடுகள், கடல், வன உயிர்கள், காற்று என அனைத்தையும் பாதுகாப்பதற்கான சட்டங்களை நீர்க்கச் செய்த மோடி அரசு இயற்கை வள சுரண்டல்களை அதிகப்படுத்தியதாக சூழலியல் சட்ட நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

”மோடி ஆட்சியில் வன அழிப்பு, கடல்வள அழிப்பு திட்டங்களே அதிகம். சாகர்மாலா திட்டம் உட்பட பல வளர்ச்சி திட்டங்கள் குறித்த இந்த அரசின் கொள்கை நிலைத்த வளர்ச்சியை நோக்கி இல்லை. இயற்கை வளங்களைப் பாதுகாக்க நிபுணர்கள் அளிக்கும் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில்லை. சூழலைப் பாதுகாப்பதற்காக தொழில்துறைக்கு அனுமதி வழங்கும்போது தனித்தனி அனுமதி பெறும் வகையில் இருந்தது. ஆனால் இப்போது எல்லா அனுமதியையும் ஒரே அனுமதியாகப் பெற்று கார்ப்பரேட் ஃப்ரெண்ட்லியாக உள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. டெல்லி தவிர மற்ற மூன்று மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் இல்லை” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சூழலியல் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்த ஊக்கப்படுத்துதலுக்காக இந்த விருது மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சோலாரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படவில்லை என்கிறார் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்.

“சோலாரைப் பொறுத்தவரை கார்ப்பரேட்மயமாகியுள்ளது. எல்லோரும் பயன்படுத்தும் வகையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். ஆனால், அதனை அவர்கள் கொண்டு வரவில்லை, அதனை நடைமுறைப்படுத்தவும் மோடி அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை. நிலக்கரி மீது இந்த அரசு செஸ் வரி விதித்தது. அதன்மூலம் வரும் வருவாயை வைத்து காலநிலை மாற்றங்களைச் சமாளிக்கக்கூடிய திட்டங்களுக்கு செலவழிக்கலாம் என திட்டமிட்டது. ஆனால், ஜிஎஸ்டிக்குப் பிறகு நிலக்கரி மீதான செஸ் வரியும் நீக்கப்பட்டது. அதனால், அந்தத் திட்டங்களுக்கு நிதியில்லாத நிலைமை ஏற்பட்டது. காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்படவில்ல. காலநிலை மாற்றத்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என, கம்ப்யூட்டர் மாடலிங்கே இல்லை. ஆனால், மேக் இன் இந்தியா பெயரில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வருகின்றனர்” என்கிறார் வெற்றிச்செல்வன்.

2016 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதமர் மோடி 2030க்குள் பசுமை இல்ல வாயுக்களை 30% குறைப்போம் என உறுதியளித்தார். ஆனால், பசுமை இல்ல வாயுக்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த காங்கிரஸ் ஆட்சியில் 8 திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதையடுத்து வந்த மோடி அரசாங்கத்தில் எந்தவிதப் புதிய திட்டங்களும் இல்லை.

2017-ம் ஆண்டு இந்தியாவின் மூன்றாவது வன உயிர் செயல் திட்டத்தை (2017-31) மோடி அரசு இறுதி செய்தது. ஆனால், மோடி ஆட்சிக்காலத்தில் வன உயிர் பாதுகாப்பு என்பது மந்தகரமானதாகவே இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து இந்த அரசு கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை என்கிறார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் கோ.சுந்தர்ராஜன்.

”உலகமே காலநிலை மாற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கையில், இந்த அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டில் காலநிலை மாற்றம் என்ற வார்த்தையே இல்லை. வார்த்தையே இல்லையென்றால் அதனைத் தடுக்க எப்படி வழிகள் கண்டுபிடிப்பார்கள்? ‘Climate has not changed. We have changed’ அதாவது காலநிலை மாறவில்லை, நாம் மாறிவிட்டோம் என்கிறார் மோடி. ஐநாவின் இந்த விருது பிரச்சாரத்திற்காக கொடுக்கப்பட்டது. எந்த விதத்திலும் தகுதியானது அல்ல.

காங்கிரஸ் அரசாங்கத்திலும் சுற்றுச்சூழல் மோசமாகத் தான் இருந்தது. ஆனால், பாஜக அரசு சட்டத்தையே இல்லாததாக்கி விட்டனர். எல்லோருக்கும் அனுமதி, யார் வேண்டுமானாலும், எதையும் மாசுபடுத்தலாம் என்கிற நிலை. மோடியின் சொந்த வாரணாசி தொகுதியில் சரணாலயத்தையே அழித்து விட்டனர்” என்கிறார் சுந்தர்ராஜன்.

IndiaSpend எனும் தரவு இணையதளத்தில், தொழில்களுக்கு வன அனுமதி கிடைப்பது எப்படி எளிமைபடுத்தப்பட்டிருக்கிறது எனவும், இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட வன பகுதிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுயலாபத்துக்காக எப்படி அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

இந்தாண்டு மார்ச் மாதம் தேசிய வனக்கொள்கை 2018 வரைவு சட்டத்தில் முக்கிய மாற்றங்களை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் பரிந்துரைத்தது. இந்த வரைவானது கார்ப்பரேட்டுகளின் லாபங்களுக்கு சார்பாக இருப்பதாக விமர்சிக்கப்பட்டது.

கடல் சூழல், கடல்வளப் பாதுகாப்பு இவற்றிலும் இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் அழிவை நோக்கியதாகவே உள்ளன என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். சாகர்மாலா திட்டம் முதல் இப்போது வரையறுக்கப்பட்ட வரைவு கடற்கரை ஒழுங்குமண்டல அறிவிப்பாணை வரை இதே நிலைமைதான் என்கின்றனர்.

”இப்போது கொண்டு வரப்பட்ட வரைவு கடற்கரை ஒழுங்குமண்டல அறிவிப்பாணையின்படி, கடல்பகுதியில் 50 மீட்டருக்குள் எந்தளவிலான கட்டிடங்களையும் கட்டலாம். அபாயக் கோட்டுக்குள் எந்தவொரு வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டு வரக்கூடாது என்பதையும் நீக்கி அதனை அனுமதித்துள்ளனர். இது கடல்வளத்தைப் பலிகொடுக்கும் சட்டம். அவற்றைப் பலிகொடுத்தவர் தான் மோடி. முழுக்க வணிக நோக்கத்தைக் கொண்டிருப்பதுதான் ஐநா. அப்படிப் பார்த்தால் இவர்களெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வணிகத்துக்கு எந்தவொரு பிரச்சினையும் வராமல் காக்கிறது ஐநா” என்கிறார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.

பிளாஸ்டிக்கைத் தடை செய்வதாகச் சொன்னாலும் இந்த அரசின் கொள்கைகளால் அடுத்தாண்டு 12% பிளாஸ்டிக் உற்பத்தி பெருகும் என எச்சரிக்கிறார் நித்யானந்த்.

“ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் மூலம் கிடைத்த இந்த விருதால் பெருமைப்பட முடியாது. அதில் ஏதோ குறை உள்ளது. 2015 இல் யுனிலிவர் விவகாரம் உலகம் முழுக்கப் பேசப்பட்டபோது, அந்நிறுவனத்தின் தலைவர் பால்போல்மேனுக்கு ஐநா இதே விருதை வழங்கியது. கடந்தாண்டு வங்கதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இதே விருது வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் தான், சுந்தர்வன அலையாத்திக் காடுகளை அழித்து அனல்மின் நிலையம் கட்ட இந்திய பிரதமர் மோடியுடன் ஷேக் ஹசீனா ஒப்பந்தம் செய்தார். அதற்கு எதிராகப் போராடிய மீனவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி அடக்குமுறையைக் கையாண்டனர். அப்படியென்றால், இம்மாதிரியான ஆட்களுக்கு இந்த விருதைக் கொடுக்கும் போது மோடிக்கு வழங்குவதில் தவறில்லை. ஐநா கொடுக்கும் விருதை இவருக்குக் கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பது?” என்கிறார் நித்யானந்த் ஜெயராமன்.

சூழலியல் ஆர்வலர்களின் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளின்படி பார்த்தால் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ‘சாம்பியன் ஆஃப் த எர்த்’ விருதை சபிரதாயமான விருதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. 

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x