Published : 01 Sep 2018 03:18 PM
Last Updated : 01 Sep 2018 03:18 PM

நீட் தேர்வில் விலக்கு; ஸ்டாலின், திருமாவளவன் முன்னெடுக்க வேண்டும்: அனிதா நினைவு தினத்தில் அண்ணன் வேண்டுகோள்

"ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் ரொம்பக் கஷ்டம். வசதி வாய்ப்பில்லை. எங்கள் ஊரிலேயே ரெண்டு, மூணு பேருதான் நீட் எழுதியிருந்தாங்க. அவங்களும் முழு தேர்ச்சி பெறல. நல்ல திறமையான பசங்கதான் அவங்க. கோச்சிங் கிளாஸ் போறதுக்கான வசதியில்லை. எங்களுக்கு என்ன இருக்கிறதோ அதை வைத்துதான் நாங்கள் மேலே வர முடியும். நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு வேண்டாம் என மாநில அரசு சொன்னது. அதை நம்பினோம்."

நீட் தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என 2017-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போது அனிதா சொன்ன வார்த்தைகள் இவை.

அப்போது அனிதாவுக்குத் தெரியாது, நீட் தேர்வுக்கான போராட்டத்தை நாம்தான் தொடங்கி வைக்கிறோம் என்று. நமக்கும் தெரியாது அரியலூர் மாவட்டத்தின் குழுமூரைச் சேர்ந்த அனிதா தான் நீட்டை எதிர்த்துப் பலரையும் போராடத் தூண்டுவார் என்று. அனிதாவை அடுத்து பிரதீபா என்ற மாணவியையும் நீட் தேர்வால் இழந்தோம். நீட் தேர்வின் பெயரால் நிகழும் மரணங்கள் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்கின்றன. 'டாக்டர் அனிதா' என்று பலரது நெஞ்சங்களில் பதிவு செய்யப்பட்டு இன்று அவரின் நினைவு தினத்தை முன்னிட்டு எல்லோரும் அவர் ஆரம்பித்த போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். ஒருவிதத்தில், நீட் தேர்வுக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த கல்வியமைப்பின் மீதான குறைகளையும், சந்தேகங்களையும் உயர்த்திக் கேள்விகேட்டு அதற்கான உரையாடல்களையும் ஆரம்பித்து வைத்துச் சென்றிருக்கிறார் அனிதா.

அவர் தன் மீதும், மத்திய, மாநில அரசுகளின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. அனிதாவைப் பற்றியும், அவரின் போராட்டம் தொடர்வது பற்றியும் அனைவருக்குமான கல்வி சாத்தியப்படும் வரை பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில், அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது முதலாமாண்டு நினைவு தினத்தில், 'அனிதா நூலகம்' திறந்திருக்கும் அண்ணன் மணிரத்தினத்திடம் பேசினேன். அனிதா, அம்பேத்கர், கல்வியமைப்பு, தாழ்த்தப்பட்டோருக்கான அதிகாரம், மாநில சுயாட்சி என உரையாடல் நீண்டது.

"பாப்பா இறந்ததுக்கு அப்புறம் என்ன பண்றதுன்னே தெரியல. அவ உயிரோட இருந்திருந்தா கண்டிப்பா டாக்டரா ஆகியிருப்பான்னு எல்லாரும் சொன்னாங்க. கல்லூரியில் சேர்க்கிறதுக்காக அப்போது கடனாகப் பணம் வாங்கியிருந்தோம். நெறைய பேரு உதவி பண்ணாங்க. அவளோட பெயரால கிடைக்குற பணத்த வச்சு நாங்க நல்லா வசதியா இருக்கணும்னு நெனைக்கல. அதான் அவளின் நினைவா ஏதாவது சமூகத்துக்கு குறிப்பா, எங்க குழுமூர் கிராமத்துக்கு பயனுள்ளதா எதாவது அமைக்கணும்னு நெனச்சோம். அதான் அனிதா நூலகம். கஷ்டப்பட்டு நூலகம் கட்டியிருக்கிறோம். வாசிப்புதான் முக்கியம், இந்த நூலகம் தொடர்ச்சியா செயல்படணும். அவளின் நினைவு நாளன்று திறக்க வேண்டும் என்பதால் பிப்ரவரியில் அடிக்கல் நாட்டி 6 மாதத்தில் வேகமாகப் பணிகளை முடித்திருக்கிறோம்". என்றார்.

அனிதாவின் மருத்துவ கனவு என்பது நிச்சயம் அவருக்கானதாக மட்டும் இருக்க முடியாது. நீட் இல்லாவிட்டால் 12 ஆம் வகுப்பில் பெற்ற 1176 மதிப்பெண்களுக்கு எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டை தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரியிலேயே படிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பார் அனிதா.

அனிதாவின் நினைவுகளைப் பற்றிப் பேசும்போது பல இடங்களில் மணிரத்தினத்தின் குரல் உடைகிறது. நீட் விலக்குக்காக அவ்வளவு நம்பிக்கையுடன் சட்டப் போராட்டத்தினை அனிதா நடத்தியிருக்கிறார் என்பது அவருடைய அண்ணனின் வார்த்தைகளில் இருந்து தெரிகிறது.

"மாநில அரசு கடைசி வரை விலக்கு பெற்றுவிடுவோம் என நம்ப வைத்தது. நீட் விலக்கு கோரி குடியரசுத் தலைவருக்கு 200-250 கடிதங்கள் எழுதினாள். முதல் கடிதத்தில் அவளது கையெழுத்து எப்படி அழகாக இருந்ததோ, கடைசி கடிதத்திலும் அப்படித்தான் அவளது கையெழுத்து இருந்தது. கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல் அர்ப்பணிப்புடன் அதனைச் செய்தாள். அப்போதுதான் அவளின் மீது எங்களுக்கு அப்படியொரு நம்பிக்கை பிறந்தது" என்கிறார் மணிரத்தினம்.

அனிதா சிறு குழந்தையாக இருந்தபோதே அவரது அம்மா ஆனந்தம் இறந்துவிட்டார். அப்பா சண்முகம் திருச்சி காந்தி கார்க்கெட்டில் மூட்டை தூக்குபவராக இருக்கிறார்.

அனிதா இறந்தபிறகும் கூட சமூக-பொருளாதார ரீதியாக பின் தங்கிய அனிதா எப்படி நீட் தேர்வு விலக்குக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றாள், வேளாண் துறையில் படிக்கிறேன் என்று சொன்ன மாணவி எப்படி தற்கொலை செய்துகொண்டாள் என்ற கேள்விகள் எழுந்தன. அதற்கான விடையை அவரது அண்ணன் மணிரத்தினம் தருகிறார்.

"மாநில அரசு நம்பிக்கையளித்தது. மத்திய அரசும் ஓராண்டு விலக்கு அளிக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடைசி வரை கூறினார். அவர் சொன்ன பிறகுதான் உண்மையிலேயே விலக்கு கிடைத்துவிடும் என நம்பினோம். உச்ச நீதிமன்றமும் சிபிஎஸ்இ மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவர்கள் இருதரப்பினரும் பாதிக்காத வகையில் செயல்திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்தது. அப்போது, எப்படியும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அளித்தாலும் உனக்கு கண்டிப்பாக சீட் கிடைச்சிடும் பாப்பா என அனிதாவிடம் கூறினோம். வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு உண்டு, இல்லை என மாற்றி மாற்றி சொன்னது அனிதாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது" என்கிறார் மணிரத்தினம்.

அனிதாவின் அப்பா சண்முகம் அவரது மரணத்திலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. "தான் இறக்கும் வரை அனிதா நினைவு போகாது என அப்பா சொல்லிக்கொண்டே இருப்பார்" என்கிறார் மணிரத்தினம்.

கல்வி எவ்வளவு முக்கியம், அது எப்படி சமத்துவமின்றிக் கிடக்கிறது என்பது குறித்தும் மணிரத்தினம் பேசினார்.

"எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல் தலைமுறைப் பட்டதாரி. அம்பேத்கர் சொன்னது மாதிரி கல்விதான் எங்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம். தலித்-தலித் அல்லாதோர் பற்றி மட்டும் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட சாதியினருக்காகத் தான் இங்கு கல்விக்கொள்கை உட்பட எல்லாம் வகுக்கப்படுகின்றது. அதனால், எனக்கு அனிதா சிவில் சர்வீஸ் படித்து கொள்கைகளை வகுப்பவராக இருக்க வேண்டும் என ஆசை. அவளை யுபிஎஸ்இ தேர்வெழுத வேண்டும் எனக் கூறுவேன். பள்ளி, கல்லூரி புத்தகங்கள் தவிர்த்து பொதுவான புத்தகங்கள் படிக்க வேண்டும் எனக் கூறுவேன். அடிக்கடி பெரியார், அம்பேத்கர் பற்றி அவளிடம் பேசுவேன். அதையெல்லாம் உடனேயே புரிஞ்சுப்பா. பெண் ஏன் அடிமையானாள்? புத்தகம் கொடுத்தேன். நீட் தேர்வுக்காக படித்ததால், அதை அவள் முழுமையாகக் கூடப் படிக்கவில்லை." என்கிறார்.

அரசியல் ரீதியான அதிகாரம் குறித்துப் பேசிய மணிரத்தினம், "அனிதா இறந்த போது உச்ச நீதிமன்றம் உங்களுக்கானது இல்லை என அதிகாரத் திமிரில் சிலர் சொன்னார்கள். நாங்கள் அம்பேத்கரைப் படிக்க ஆரம்பித்து விட்டோம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இன்னும் எங்களுக்குப் பொருளாதார வசதி இருந்திருந்தால் அந்த வழக்கை அரசியல் அமர்வுக்கு மாற்றக் கோரியிருப்போம். எங்களுக்கு அரசியலமைப்பைப் பற்றிஉஅ தெளிவிருக்கிறது" என இப்போதும் நீட் தேர்வில் விலக்கு பெறுவது எப்படி என்றுதான் யோசிக்கிறார்.

இந்த சமூகம் அனிதாவின் இறப்பை அவ்வளவு எளிதில் மறந்து விடக்கூடாது என்கிறார் மனிரத்தினம்.

"அனிதாவின் இறப்புக்குப் பிறகு பல தலைவர்கள் வீட்டுக்கு வரும் போதுதான் அவள் பெரும் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கிறாள் என்பது புரிந்தது. சாதி கடந்து அவ்வளவு பெரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எந்தவொரு சாதியக் கண்ணோட்டத்துடனும் அனிதாவைப் பார்க்க முடியாது. அவள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்குமானவள். எல்லோரும் எங்கள் வீட்டுப் பிள்ளை போல அனிதாவுக்காக அழுதனர். அவளை அவ்வளவு எளிதில் இந்த சமூகம் மறந்துவிட முடியாது, மறக்கவும் கூடாது".

இதற்கு தீர்வுதான் என்ன என்று மணிரத்தினத்திடம் கேள்வி எழுப்பினேன்.

"எங்கோ இருக்கும் மத்திய அரசு நமக்காக வகுக்கும் விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்போதிருக்கும் தமிழக அரசு நீட் விலக்கைப் பெறவில்லையென்றாலும் அடுத்து யார் ஆட்சிக்கு வருகின்றார்களோ அதனை நிறைவேற்ற வேண்டும். அனிதாவின் பெயரில் எங்கள் ஊரில் மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும். ஏனென்றால் இது சமூக நீதி காத்த மண். முதன்முதலில் மாநில சுயாட்சிக்கான குரல் இங்கிருந்துதான் ஒலித்தது. மாநில உரிமைகளை அடுத்து வரும் ஆட்சி விட்டுவிடக் கூடாது. மாநில சுயாட்சியில் தான் இதற்கான தீர்விருக்கிறது. ஸ்டாலின், திருமாவளவன் போன்ற தலைவர்கள் இதனை முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, மத்திய அரசின் மீது எதிர் பார்வையைக் கொண்டிருக்கும் அனைத்து மாநிலங்களும் இதனை முன்னெடுக்க வேண்டும். அதிமுகவின் நிலைப்பாடு நீட் கூடாது என்று சொல்கிறார்கள். அதனை நிறைவேற்றுவதில் அதிமுகவுக்கு இயலாமை இருக்கிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் எங்கிருக்கிறது?" என்று கேள்வியெழுப்புகிறார்.

நம் கல்வியில் அடிப்படையிலேயே மாற்றம் வர வேண்டும் என்பதுதான் மணிரத்தினம் உட்பட பல கல்வி உரிமையாளர்களின் வலியுறுத்தலாக உள்ளது. அனிதாவுக்குப் பிறகு இன்னொரு உயிர் போகக் கூடாது என பேசினோம். ஆனால், பிரதீபா இறந்துவிட்டார். இனி இன்னொரு பிரதீபா இறக்கக் கூடாது என பேசுவோம்.

எங்கும் சமத்துவம் இல்லாதபோது எல்லோருக்குமான நீட் தேர்வை எப்படி ஏற்றுக்கொள்வது என மணிரத்தினம் கேள்வியெழுப்புகிறார்.

"எந்த இடத்திலும் சமத்துவம் இல்லாதபோது எல்லோரையும் சமமாகப் பாவித்து எப்படி நீட் தேர்வை நடத்த முடியும்? 12 ஆம் வகுப்பு வரை நாங்கள் சிஸ்டத்தை பார்த்ததில்லை. ஆனால், கணினி வழியில் தேர்வு நடத்தப்படுகிறது. ஜிப்மரில் கணினி வழித்தேர்வின் போது அனிதாவுக்கு நான் சொல்லிக் கொடுத்தேன். எல்லோருக்கும் ஒரே மாதிரியான தேர்வு நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என முடிக்கிறார் மணிரத்தினம்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x