Last Updated : 24 Sep, 2018 07:05 PM

 

Published : 24 Sep 2018 07:05 PM
Last Updated : 24 Sep 2018 07:05 PM

காசநோயும் ஊட்டச்சத்துக் குறைபாடும்!

 

காசநோயை 2030-க்குள் ஒழித்துவிட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு 2025-க்குள் இந்தியாவில் காசநோயை ஒழிப்பதே முக்கியக் குறிக்கோள் என்று அறிவித்தது. காசநோய் இல்லாத இந்தியா எனும் திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். காசநோய் இல்லாத சென்னை என்ற திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

உண்மையில் 2025-க்குள் காசநோயை இந்தியாவில் ஒழிப்பது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால், காசநோய் ஏற்படுவதற்கு மூல காரணமாக இருக்கும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதே இந்தியாவின் அவசர அவசியம்.

ஊட்டச்சத்துக்கும் காசநோய்க்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை காசநோய் மிக எளிதாகத் தாக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஆய்வுகள் கூறும் உண்மை:

இந்தியாவில் 55.4% பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். வியட்நாமில் 48.5% பேரும், சீனாவில் 21.8% பேரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டல் பாதிக்கப்பட்ட நிலையில் ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்கள்தான் என்பது கசப்பான உண்மை.

வயதுவாரியாகப் பார்த்தால் இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள் 15- 19 வயதில் ஆண்கள் 58.1%, பெண்கள் 46.8% பேர். 20-29 வயதில் ஆண்கள் 33%, பெண்கள் 38.1% பேர் பாதிக்கப்படுகின்றனர். 30-39 வயதில் ஆண்கள் 25.5%, பெண்கள் 31% பேர் பாதிக்கப்படுகின்றனர். 40-49 வயதில் ஆண்கள் 26.2%, பெண்கள் 26.4% பேர் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27% பேர் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களே. இந்தக் குறைபாட்டைப் போக்குவதும், பசி, பட்டினியை அகற்றி வறுமையை ஒழிப்பதுமே இந்தியாவின் மிகப் பெரிய சவாலாக உள்ளது. இந்தப் பிரச்சினை தீராத வரை காசநோய் இல்லாத இந்தியா என்பது எப்படிச் சாத்தியமாகும்?

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 28 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2016-ல் இந்த நோயால் 17 லட்சம் பேர் இறந்துள்ளனர். தினமும் 10 ஆயிரம் இந்தியக் குழந்தைகள் காசநோயால் இறக்கின்றனர். 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொரு ஆண்டும் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 லட்சம் குழந்தைகள் உலகெங்கிலும் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் 42 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தை.

    ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது என்ன?

    தியாவுக்கு 13 வயது. பரபரப்பான சென்னையில் 8-ம் வகுப்பு படித்து வரும் அவர் அதிக எடையுடனும், உடல் பருமனுடனும் இருப்பதைப் பற்றி எப்போதும் கவலைப்படுவதே இல்லை. காலை எழுந்தவுடன் பள்ளி செல்ல ஆயத்தம் ஆகும் தியா மாலையில் இந்தி கிளாஸ், டியூஷன் முடித்துவிட்டு தாங்க முடியாத புத்தகச் சுமையுடன் வீட்டுக்குத் திரும்ப இரவு 8 மணி ஆகிவிடும். அதற்குப் பிறகு தியாவின் சாய்ஸ் டிவி பார்ப்பது, செல்போனில் கேம்ஸ் ஆடுவது. பெற்றோர் கண்டிகொள்ளாத சமயங்களில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் புகுந்து விளையாடுவது. ஆனால், உடற்பயிற்சி, விளையாட்டு என்றால் கண்டிப்பாக மறுத்துவிடும் தியா துரித உணவுகளை அளவில்லாமல் சாப்பிடுகிறார்.

    12-ம் வகுப்பு படிக்கும் சரவணன் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாகவே இருக்கிறார். அவரும் சென்னையைச் சேர்ந்தவர்தான். மொத்தமாக 32 கிலோ இருந்தாலே அதிகம். ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல் படிக்கிறார். ஆனால், படிப்பில் சரவணனால் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுகிறார்.

    இந்த இரண்டு பிரச்சினைகளும் இதற்கும் ஊட்டச்சத்துப் பிரச்சினைதான் காரணம் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

    ஒரு பக்கம் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் மெலிந்தும், எடை குறைந்தும், உயரம் குன்றியும் வளர்கிறார்கள். இன்னொரு பக்கம் சரிவிகிதமான ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணாமல் ஊளைச்சதை அதிகம் வளர்ந்து உடல் பருமனுடன் காணப்படுகிறார்கள்.

    ஏன் இந்த முரண்பாடு?

    தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் அரிசிதான் முக்கிய உணவுப் பொருள். இட்லி, தோசை, பொங்கல் என்று காலை உணவாக இருந்தாலும், மதியம் சாப்பிடும் சோறாக இருந்தாலும், இரவு உண்ணும் உணவும் அரிசியிலிருந்தே தயாரிக்கப்படுவதாக அமைந்துவிடுகிறது. இதனால் கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே குழந்தைகளுக்குக் கிடைக்கிறது. புரதச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து போன்றவை குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

    பசி, பட்டினி காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைப் போல, தட்டு நிறைய சாப்பிடுவதற்கான வாய்ப்பு இருந்தும் ஒரே மாதிரியான உணவைச் சாப்பிடுபவர்களுக்கும், நொறுக்குத் தீனி, துரித உணவுகள், நிறம், சுவைக்காக ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வோருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

    இந்தியாவில் பால்வாடி பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளில் 26% குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது, 64% குழந்தைகளுக்கு இரத்தசோகை பாதிப்பு ஏற்படுகிறது எனக் கூறுகிறது ஓர் ஆய்வறிக்கை.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளால் கல்வியில் சிறந்து விளங்க முடிவதில்லை. அறிவாற்றல் வளர்ச்சியிலும் தடை ஏற்படுகிறது. விளையாட்டிலும் ஆர்வம் குன்றுகிறது. எதிலும் அக்கறையற்ற போக்கு மேலோங்குகிறது என 2013-ம் ஆண்டுக்கான லேன்செட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், ஊட்டச்சத்து குறைபாடு ஒரு குழந்தையின் அறிவாற்றல் (ஐக்யூ) திறனை 10 முதல் 15 புள்ளிகள் பின்னுக்குத் தள்ளுகிறது.

    கிராந்தம் மெக் கிரகார் 2007 அறிக்கையின்படி குழந்தையில் ஊட்டச்சத்து குறைபாட்டால்  பாதிக்கப்பட்ட ஒரு நபர் வளர்ந்த பின்னர் தனது வருவாயில் 22% இழப்பை சந்திக்க நேரிடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மனிதனின் உயரம் 1% அதிகரிக்கும்போது அவரது வருவாய் 2.4% அதிகரிக்கிறது என பிரேசில் உள்நாட்டு ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

      உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் மூன்று குழந்தைகளில் ஒன்று இந்தியக் குழந்தை.

      ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை, சீனாவை விட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியக் குழந்தைகளில் கிட்டதிட்ட ஐம்பது சதவீதத்தினர், அதாவது 60 லட்சம் குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்களாக உள்ளனர். 45 சதவீத இந்தியக் குழந்தைகள் வளர்ச்சி குன்றி, குள்ளமாக உள்ளனர். 20 சதவீதத்தினர் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையற்றவர்களாக உள்ளனர். மேலும் இந்தியாவில் 75 சதவீத குழந்தைகள் ரத்தசோகையுடன் உள்ளனர்.

      2017-ம் ஆண்டுக்கான தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 8% பேர் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தேசிய சராசரியைவிட அதிகமாகும்.

      இது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் முனைவர் ஜனனி ஷங்கரிடம் பேசினோம்.

      உடல் எடை குறைவாக இருக்கும் குழந்தைகள், உடல் பருமனுடன் அதிக எடை கொண்ட குழந்தைகள் என இரு பெரும் பிரச்சினைகள்தான் தற்போது பெற்றோர்களை அதிகம் கவலைப்பட வைத்துள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோர் குழந்தைகளை சரியாகக் கண்காணிப்பதில்லை, கவனித்துக்கொள்வதும் இல்லை. இதனால் கிடைத்த உணவுகளை விரும்பியும், விரும்பாமலும் சாப்பிடுகின்றனர். சிலர் ஒரே மாதிரியான உணவையே மீண்டும் மீண்டும் சாப்பிடுகின்றனர். அதிகம் அரிசி சாதம் சாப்பிடுவது, செல்போனில் நேரம் செலவழிப்பது, காய்கறி, பழங்களைத் தவிர்ப்பது என எல்லாமே ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான முக்கியக் காரணங்கள்.

      சில பெற்றோர்கள் 4 அல்லது 5 வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இன்னமும் பால் மட்டுமே உணவாகக் கொடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் முதல் 2 லிட்டர் பால் வரை தண்ணீர் ஊற்றிக் காய்ச்சிக் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு வேறெந்த சத்தும் கிடைக்காது. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு, ஹீமோகுளோபினின் அளவு குழந்தைகளுக்குக் குறையும். ஒரு குழந்தைக்குப் பொதுவாக ஹீமோகுளோபினின் அளவு 12 இருக்க வேண்டும். ஆனால், பால் மட்டுமே குடிக்கும் குழந்தையின் ஹீமோ குளோபின் அளவு 2 வரை குறைய வாய்ப்புள்ளது.

      சரியான நேரத்தில் சரியான வயதில் உணவு தராமல் பால் மட்டுமே தருவதால் இரும்புச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் ரத்தசோகைக்கு ஆளாவார்கள். இதனால் அவர்களின் கவனம் சிதறும். படிப்பதில் ஆர்வம் குறையும்.

      சில குழந்தைகள் கல், மண் தின்பார்கள். அது ஏன் என்று யோசித்ததுண்டா? ஏனென்றால் அவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருக்கிறது.

      16- 18 வயதுக் குழந்தைகள் ஒல்லியாக இருப்பதே அழகு என்று தவறாக நினைத்துக்கொண்டு ஒழுங்காகச் சாப்பிடாமல் இருப்பார்கள். இன்னும் சிலர் மன அழுத்தம், கோச்சிங் கிளாஸ், மதிப்பெண் பிரச்சினை, எல்லாவற்றிலும் சிறந்தவராக இருக்க வேண்டும் என்ற நெருக்கடி போன்றவற்றால் சரியாகச் சாப்பிட முடியாமல் அவதிப்படுவர்.

      சுகாதாரமின்மையும் மிக முக்கியப் பிரச்சினை. சரியாகக் கை கழுவாமல் இருப்பது, சரியாக மலம் கழிக்காதது, திறந்த வெளியில் மலம் கழிப்பது ஆகியவற்றால் பரவும் கிருமிகளால் உணவு கிரகிக்கும் தன்மை இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

      இப்படி ஊட்டச்சத்துக் குறைபாடு உடைய குழந்தைகளை காசநோய் எளிதில் தாக்கும். இந்தியாவில் 42 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

      இந்தியாவில் 40% மக்களுக்குக் காசநோய்த் தொற்று இருக்கிறது. அது நோயாக மாறாமல் உடலில் மறைந்திருக்கிறது. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது, முழுமையான காசநோய் ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு காசநோய் இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு காசநோய் தொற்றாமல் இருக்க, 6 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் தர வேண்டும். மருத்துவர்கள் அதில் அலட்சியமாக இருக்கும்போது குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.

      காசநோய் மனிதனின் முடி, நகம் தவிர எல்லா இடங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு நுரையீரலைக் காட்டிலும் மூளை, தண்டுவடம் ஆகியவற்றில் காசநோய் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கு கணையம், கண் பார்வை பாதிப்பு ஆகியவை காசநோயால் வரும் என்பதால் கவனம் தேவை. மூளை, முதுகெலும்பு பாதித்தால் குழந்தைகளுக்கு ஒரு வருடம் சிகிச்சை தேவை.

      குழந்தைகளுக்கு காசநோய் இருக்கிறதா இல்லையா என்பதை எளிதில் கண்டறிய முடியாது. ஏனெனில், அவர்கள் இருமுதல், சளி துப்புதல் சிரமமானது. உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகளும் இருக்காது.

      வெறும் காய்ச்சல், முதுகு வலி, லேசான காய்ச்சல், படுத்துக்கொண்டே இருக்கான், டல்லா இருக்கான், ஒன்றரை மாசமா நார்மலா இல்லை, படிக்கலை என்று சொல்லிக்கொண்டு என்னிடம் ஒரு 15 வயதுப் பெண்ணின் பெற்றோர் வந்தனர். வயிற்றுவலி என்று வந்த அந்தப் பெண்ணுக்கு

      சோதனைகள் செய்து பார்த்ததில் வயிற்றில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. 6 மாத சிகிச்சையில் அவர் காசநோயை வென்றார். தற்போது அவர் 12-ம் வகுப்பு படிக்கிறார். காசநோயிலிருந்து விடுபட முடியும். ஆனால், அந்த நம்பிக்கையை பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தர வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகளைத் தந்து, நோயைக் குணப்படுத்த சரியான முறையில் இப்போதைய பெற்றோர்கள் நன்கு ஒத்துழைப்பு தருகிறார்கள்.

      ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க காய்கறிகள், கீரை வகைகள், முட்டை, மீன் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்'' என்றார் ஜனனி ஷங்கர்.

      * கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் முழுமையான வளர்ச்சி பெறவும், போதுமான ஊட்டச்சத்து பெறுவதையும் உறுதிப்படுத்துவதற்காக, மத்திய அரசு ஒப்புதலுடன், 'தேசிய ஊட்டச்சத்து இயக்கம்' 2017-ல் தொடங்கப்பட்டது.

      * 2017- 18 முதல் மூன்று ஆண்டு காலத்துக்கு ரூ.9046.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் குழந்தைகள் உட்பட 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெற்றுள்ளனர். 2020க்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் இத்திட்டம் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

       * வளர்ச்சியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை பாதிப்பை போக்குவதோடு, எடை குறைவாக குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதும் திட்டத்தின் நோக்கம். இதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

       

      க.நாகப்பன்,

      தொடர்புக்கு:nagappan.k@thehindutamil.co.in.

      FOLLOW US

      Sign up to receive our newsletter in your inbox every day!

      WRITE A COMMENT
       
      x