Published : 19 Jun 2019 14:28 pm

Updated : 19 Jun 2019 14:29 pm

 

Published : 19 Jun 2019 02:28 PM
Last Updated : 19 Jun 2019 02:29 PM

தாராளமாய் கிடைக்கும் மது... தள்ளாடும் தமிழகம்!

குடி என்பது பழக்கமல்ல, நோய். அதைக் குடிநோயாகத்தான் பார்க்க வேண்டும். புரட்சி என்றால் ஆயுதமேந்தித்தான் செய்ய வேண்டும் என்பதல்ல. அறிவில், சிந்தனையில் புரட்சி ஏற்பட வேண்டும். உடலையும் மனதையும் பாதிக்கும் குடிக்கு எதிராக மக்களிடையே புரட்சி எழ வேண்டும்.

மது குறித்து மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகள் இவை..


தமிழகமே இன்று போதைக்கு அடிமையாகிக் கிடக்கிறது. தமிழகத்தில் வாழும் பெரும்பாலான மக்கள் மதுவின் வாடையுடன் தான் ஒவ்வொரு நாளையும் கடக்கின்றனர். அந்த அளவுக்கு பெரும்பான்மை தமிழர்களின் வாழ்வில் மது இரண்டறக் கலந்துவிட்டது. இங்கே தமிழர்கள் என்று ஏன் குறிப்பிடுச் சொல்ல வேண்டும்? மற்ற மாநில மக்கள் எல்லாம் குடிப்பதே இல்லையா என்ற கேள்வி எழலாம். காரணம் இருக்கிறது.

தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் சுமார் 6,800 மதுக்கடைகள், 44,000 ஊழியர்கள், 48 சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. இந்தியாவிலேயே தமிழகம்தான் மது விற்பனையின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் மாநிலம். நாட்டிலேயே மதுவால் அதிக தற்கொலைகள் நிகழும் மாநிலம் என்ற பெருமையையும்(?) தமிழகமே தக்க வைத்துள்ளது.

பதின்பருவத்தில் நண்பர்களின் தூண்டுதலால் விளையாட்டாகத் தொடங்கும் இந்த மதுப் பழக்கம் பின்னாட்களில் தன் உயிரையே குடிக்கும் நிலைக்குச் செல்லும் என்பதை யாரும் அறிவதில்லை.

ஓரிடத்தில் நான்கு நண்பர்கள் ஒன்று கூடுகிறார்கள் என்றால் அங்கே மதுவே பிரதான பொருளாக அங்கம் வகிக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் என யாரும் விதிவிலக்கல்ல. அதிலும் நண்பர்களில் யாராவது ஒருவர் ‘நான் குடிப்பதில்லை, அல்லது குடியை விட்டுவிட்டேன்’ என்று சொன்னால் ’என்னது குடிக்கமாட்டீங்களா?’ என்று அவரை ஏதோ வேற்றுகிரகவாசி போல் பார்த்து, இந்த சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர் போல கேலி செய்வதும் நிகழ்வதுண்டு.

ஆள் நடமாட்டம் பெரிதாக இல்லாத ஏரியாக்களில் கூட டாஸ்மாக் வாசலில் கூட்டம் முண்டியடிப்பதை பார்க்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அவலம் இது.

இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலம் தமிழகம். இதில் 70 சதவீத விபத்துகள் மது போதையால் நிகழ்பவை.

இதற்கு சாமானியன் முதல் பிரபலங்கள் வரை யாரும் விதிவிலக்கல்ல. சாலையோரம் படுத்திருப்பவர்களைக் கார் ஏற்றிக் கொல்வது, சொகுசுக் கார்கள் மூலம் நின்று கொண்டிருக்கும் வாகனங்களை இடித்து சேதப்படுத்துவது என அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக மது இருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த திருவான்மியூரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மீதி மதுபோதையில் சொகுசுக் காரை ஏற்றிக் கொன்ற சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. காரில் இருந்தவர்கள் மூன்று இளம்பெண்கள். மூவரும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வீக்கெண்ட் பார்ட்டியைக் கொண்டாடி விட்டு மது போதையில் திரும்பியபோது இந்த விபத்தை ஏற்படுத்தியாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

வார இறுதிகளில் நடக்கும் பார்ட்டிகளில் பங்கேற்கும் பிரபலங்களும், வசதி படைத்தவர்களின் வாரிசுகள் மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி பாதசாரிகளைப் பதம் பார்ப்பது வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

இது ஒருபுறமென்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையோ சொல்லவே வேண்டாம்.

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லம் என்பவர் அருகில் உள்ள டாஸ்மாக்கில் காலை 9 மணிக்கு ப்ளாக்கில் குடித்துவிட்டு முழுபோதையில் தன் மர்ம உறுப்பையே அறுத்துக் கொண்டார். போலீஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடிவிட்டு எஸ்கேப் ஆகினர்.

இதேபோல் திருவாரூர் அருகே உள்ள அகரத்திருநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண் தன் கணவர் தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்வதைப் பொறுக்கமுடியாமல் சுத்தியலால் அடித்துக் கொன்று விட்டார். இவை சமீபத்தில் மட்டும் நடந்த சம்பவங்கள்.

இதுபோன்ற தினம் தினம் நிகழும் எத்தனையோ சம்பவங்களால் பாதிக்கப்பட்டு ரோட்டில் நிற்கும் குடும்பங்களின் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போதும் புத்தாண்டின் போது டாஸ்மாக்கின் மூலம் இத்தனை கோடிகள் வருவாய் கிட்டியது என்று மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கமா?

தமிழகத்தில் கடந்த தீபாவளியின் போது 3 நாட்களின் மது விற்பனை ரூ.325 கோடி. ஒவ்வொரு வருட தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை நேரங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்வது வேதனைக்குரிய விஷயம்.

கடந்த 2016ஆம் அண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என அறிவித்தார். அதன்படி, முதற்கட்டமாக கடந்த 2016-17 ஆம் ஆண்டில் ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும், டாஸ்மாக் கடைகளின் திறக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இருந்ததை, மதியம் 12 மணி முதல் இரவு 10 வரை என நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

ஆனாலும் தற்போது காலை 7 மணி முதலே தாராளமாக ப்ளாக்கில் மது கிடைப்பதால் ’குடிமகன்’கள் டாஸ்மாக் வாசலில் குவியத்தொடங்குகின்றனர். காலையில் மொய்க்கத் தொடங்கும் கூட்டம் இரவு 10 மணியையும் தாண்டி நீடிக்கிறது.

பள்ளி சீருடையுடன் டாஸ்மாக் முன்பாகக் காத்திருந்து, தோளில் மாட்டியிருக்கும் புத்தகப்பையில் மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றன நம் நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆடை நழுவியது கூட தெரியாமல் மதுக் குவளையோடு டாஸ்மாக் வாசலில் உருண்டு கொண்டிருப்பவர்கள் நம் அப்பாக்களும் தாத்தாக்களும்தானே.

மதுவிலக்கு வேண்டும் என்று வாய்கிழியப் பேசும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் ஏழைத் தொழிலாளர்களுக்கு கூட குவார்ட்டர் சப்ளைதான் செய்யப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை ஏற்பட்ட வெள்ளத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. சென்னை மாநகரத்தை ஒரே நாளில் புரட்டிப் போட்ட அந்தப் பெருவெள்ளத்தால் வணிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய். ஆனால் அந்தப் பேரழிவிலும் டாஸ்மாக் விற்பனை மற்ற நாட்களை விட வெறும் 10 சதவீதமே குறைந்திருந்தது என்பதே தமிழகம் எந்த அளவுக்கு மதுவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது என்பதற்கு சாட்சி.

ஒரு மனிதனுக்குள் சென்றதும் அப்படி என்னதான் செய்கிறது இந்த மது? இதுகுறித்து மனநல ஆலோசகர் வந்தனாவிடம் கேட்டபோது அவர் கூறிய தகவல்கள் இவை:

”மதுவுக்கு அடிமையாதல் என்பது ஒரு நோய். அந்த நோய்க்கு ஆளாபவர்கள் intoxicated state எனப்படும் ஒருவித மயக்க நிலையில் இருக்கும்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. மதுவின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது மூளையில் சில மாற்றங்கள் - neuropsychological changes- நிகழ்கிறது. இது குடிப்பவரை தான் எங்கே இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பதை முற்றிலுமாக மறக்கச் செய்கிறது. உடலில் ஏற்படும் வலிகளை மழுங்கடிக்கிறது.

இதுதான் ஒருவருக்கு தன் உறுப்பையே அறுத்துக் கொள்ளும் துணிச்சலை ஏற்படுத்துகிறது. மது அவரின் இரத்தத்தில் இருக்கும்வரை அந்த வலி அவரது மூளைக்குச் செல்வதில்லை.

மதுவை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் ஒரு மனிதனுக்கு உடலளவிலும், மனதளவிலும், சமூக அளவிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால்தான் மனநல மருத்துவர்கள் இதை biopsychosocial changes என்று அழைக்கிறார்கள்.

குடிநோயாளிகளின் ரத்தத்தில் மதுவின் அளவு குறையாமல் இருக்கும்போது அவர்களுக்குக் குடிக்கும் எண்ணம் வருவதில்லை. அளவு குறைய குறைய குடிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் குடிப்பதற்காக எதையும் செய்யுமளவுக்கு அவர்களைக் கொண்டு செல்கிறது.

இதை குணப்படுத்த மறுவாழ்வு மையங்கள்தான் ஒரே தீர்வு. குடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கு பல்வேறு நிலைகளாக 21 நாட்கள் தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் இதிலிருந்து வெளியே வர வாய்ப்புள்ளது. இந்த 21 நாட்கள் சிகிச்சையில் குடிநோயாளிகளுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.” என்கிறார் மனநல ஆலோசகர் வந்தனா.

இளைஞர்களும், மாணவர்களும் மதுவிற்கு அடிமையாகிக் கிடப்பதற்கு சினிமாவும் ஒரு முக்கியக் காரணியாக உள்ளது. ’குடிக்கிறதெல்லாம் ஒரு விஷயமே இல்ல’ என்கிற ரீதியில் அமைக்கப்படும் காட்சிகளும், பெண்ணைத் திட்டுவதற்கு குடியைத் தூக்கி வைத்து எழுதப்படும் பாடல்களும் தமிழ் திரைப்படங்களில் சகஜமானதாக மாறி நீண்ட நாட்களாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் வெளியானவற்றில் டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். சமூகத்தில் நடப்பதைத் தானே சினிமா பிரதிபலிக்கிறது என்று சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் தமிழ் சமூகம் சினிமாவை சினிமாவாக மட்டுமா பார்க்கிறது?

ஒரு நடிகர் 3 படங்கள் நடித்து வெற்றி பெற்றுவிட்டால் அவரை தலைவன் என்று சொல்லி தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்து சொல்பவர்களின் பரம்பரையையே முச்சந்திக்கு இழுத்து திட்டுவதும்தானே இங்கு நடக்கிறது. இன்னும் ஒரு படி மேலே போய் தன் தலைவர் படத்தின் முதல்நாள் முதல்காட்சி பார்ப்பதற்கு பணம் தராத தந்தையை ஒரு ரசிகர் எரித்ததும், அதே படத்துக்கு தியேட்டரில் சீட் படிக்கும் போட்டியில் கத்தியால் குத்தியதும் இங்கேதான் நடந்தது. இந்த அளவுக்கு சினிமா மோகம் தலைக்கேறிய ஒரு சமூகம் அதே சினிமாவால் குடிக்கு அடிமையாவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

பரிட்சையில் பாஸ் ஆனால் குடி, வேலை கிடைத்தால் குடி, காதல் கைகூடினால் குடி, காதல் தோல்வியென்றாலும் குடி, திருமணம் என்றால் குடி என்று இளைஞர்களில் வாழ்வில் குடிப்பழக்கம் புரையோடிப் போய் கிடக்கிறது.

கொஞ்சமா சாப்பிட்டா ஒண்ணும் ஆகாது, வாரத்துக்கு ஒரு தடவதானே, தப்பில்ல என்று அவர்களே அவர்களுக்கு சமாதானம் சொல்லிக் கொள்கின்றனர். இப்படி விளையாட்டாய் தொடங்கும் இந்த விபரீதம் நாளடைவில் ஒரு சிறிய மன உளைச்சல் என்றாலும் குடியை நோக்கி செல்ல வைக்கிறது.

இதற்கு என்னதான் வழி, இதற்கு அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டியவை குறித்து சமூக சேவகரும், மதுவுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான செந்தில் ஆறுமுகத்திடம் பேசினோம்.

”அரசாங்கத்தின் வருமானத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு டாஸ்மாக் மூலமாகத்தான் வருகிறது. இது இல்லாமல் அரசாங்கத்தை நடத்தவே முடியாது என்ற நிலைக்கு கொண்டு சென்று விட்டனர். ஆனால் குஜராத்திலும் பீகாரிலும் மது விற்பனை இல்லாமல் அரசாங்கம் நடக்கும்போது தமிழகத்தில் என்ன பிரச்சனை?

மது ஆலைகளை நடத்துவதே அரசியல்வாதிகளும் அவர்களின் பினாமிகளும்தான். அதே போல டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை நடத்துபவர்கள் வட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட கீழ்மட்ட அரசியல்வாதிகளாக இருக்கின்றனர். எனவே இப்படி மூன்று வகையான வருவாய் டாஸ்மாக்கை நம்பி இருப்பதால் மூன்று தரப்பினருக்குமே மிகப்பெரிய அடி விழும். ஆனால் இதையெல்லாம் தாண்டி பல்வேறு அமைப்பினரும், சமூகச் செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து போராடியதின் விளைவாக தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவு கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அனைத்து கட்சிகளும் மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆட்சிக்கு வந்த அதிமுக முதற்கட்டமாக 1000 கடைகளை மூடினார்கள். அதன்பிறகு அதையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

குடிநோயாளிகளை மதுவின் பிடியிலிருந்து மீட்க மறுவாழ்வு மையங்கள் மாவட்டம் தோறும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் பெரிய அளவில் மதுவுக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் செந்தில் ஆறுமுகம்.

குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்காவிட்டால் நம்முடைய எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம்? எத்தனை குடும்பங்களை மதுவின் கோரப்பசிக்கு இரையாக்கப் போகிறோம்? எத்தனை குழந்தைகளை ஆதரவற்றவர்களாக்கி தெருவில் நிறுத்தப் போகிறோம்? என்னதான் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டங்களை நடத்தினாலும், அரசாங்கம் முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட மது என்னும் கொடிய நோயை ஒழிப்பதென்பது மக்களாகிய நம் கையில்தான் இருக்கிறது.


மதுவின் தீமைகள் குடிநோயாளிகள் டாஸ்மாக் ஊழியர்கள் டாஸ்மாக் மது மதுவிலக்கு டாஸ்மாக் வருமானம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x