Published : 27 Jun 2019 04:48 PM
Last Updated : 27 Jun 2019 04:48 PM

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகள்: எச்சரிக்கும் ஆய்வறிக்கை- என்ன தீர்வு?

ஐந்து வயதுக்குக் குறைவான இந்தியக் குழந்தைகளில் மூன்றில் ஒருவர் (31.4% பேர்) 2022-ல் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவர் என்று அண்மையில் ஐ.நா. மற்றும் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத் துறை சார்பில் வெளியான ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. நாட்டின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழப்பவர்களில் பாதிப்பேர் சத்துக்குறைபாடு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஐந்து வயதுக்குக் குறைவான 38% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் உயிரிழக்கும் குழந்தைகளில் பாதிப்பேர் ஊட்டச்சத்து போதாமை, வளர்ச்சிக் குறைபாடு ஆகிய காரணங்களால் மடிவதாக யுனிசெஃப் கூறுகிறது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் மூளைவளர்ச்சி தடைபடும்; படிப்புத் திறன் குறையும், பள்ளியில் செயல்திறன் சிறப்பாக இருக்காது, படிப்பு சரியாக இல்லாததால் சம்பளம் ஈட்டுவது கணிசமாகக் குறையும். அதுமட்டுமல்லாது ஊட்டச்சத்துடன் தொடர்புடைய நோய்களான நீரிழிவு, உடல்பருமன் ஆகியவற்றுக்கும் வழிவகுக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.

ஐ.நா. ஆய்வறிக்கையின்படி, மக்கள்தொகைப் பெருக்கம், நாட்டில் சமத்துவமின்மை, உணவை வீணாக்குதல், தானியங்கள் அழிவது, உணவு ஏற்றுமதி, பொருளாதாரப் பின்னணி ஆகிய காரணங்களால், இந்தியாவின் 30% ஏழைகளுக்கு உரிய உணவு கிடைப்பதில்லை. ஒரு மனிதர் சராசரியாக ஒரு நாளைக்கு 2,155 கிலோ கலோரியை உட்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் அந்த 30% மக்களுக்கு ஒரு நாளுக்கு 1,811 கிலோ கலோரி மட்டுமே கிடைக்கிறது. இந்தக் குறைபாட்டால் குழந்தைகளிடையே வளர்ச்சி குறைகிறது.

மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும் குறைபாடு

இந்த விகிதம் இந்தியாவுக்குள்ளேயே மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. பிஹாரில் 48% குழந்தைகளும், உத்தரப் பிரதேசத்தில் 46% குழந்தைகளும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இது அங்குள்ள இரண்டு குழந்தைகளில் சராசரியாக ஒரு குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இது கேரளா மற்றும் கோவாவில் மிகவும் குறைவாக உள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களிலும் 20% குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

பொருளாதாரத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களின் குழந்தைகளில் 51.4% பேரும், பழங்குடியினத்தில் 43.6% பேரும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த 42.5% குழந்தைகளும் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் வளர்கின்றனர். படிப்பறிவில்லாத தாய்க்குப் பிறக்கும் குழந்தைகளில் 51% பேருக்கு முறையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

இந்தியப் பொருளாதாரம் வியக்கத்தகு வகையில் உயர்ந்தாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட  இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை மெதுவாகவே குறைகிறது. 4.68 கோடி குழந்தைகளைக் கொண்ட இந்தியா, மூன்றில் ஒரு பங்கு ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகளைக் கொண்டுள்ளது. இதற்கு என்ன காரணம், ஊட்டச்சத்து குறைபாடு எப்படி உருவாகிறது என்பவை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் எழில்வாணி பேசுகிறார்.

ஊட்டச்சத்து குறைபாடு எப்போது தொடங்குகிறது?

ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வயதுவந்த இளம்பெண் கர்ப்பமாகும்போது, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு தொடங்குகிறது. சரியாக உட்கொள்ளாமல், அவர் தாயாகும்போது குழந்தையின் உடல்நிலையில் குறைபாடு அதிகரிக்கிறது. சிசுவுக்கு அயர்ன், கால்சியம், ஃபோலிக் அமிலம், புரதம் ஆகிய ஊட்டச்சத்துகள் அவசியம். அவை இருக்கும் உணவுகளையும் மருந்துகளையும் சரிவிகிதமாக உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க முடியும்.

குழந்தை பிறந்த பிறகு பால் கொடுக்கவேண்டும் என்பதால், தாய் சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பாலே போதும். அதற்குப் பிறகு ரிச் புரோட்டீன் உணவுகளைக் கொடுக்கவேண்டும். உணவுகளில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச் சத்து, வைட்டமின்கள், மினரல்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பால், வேகவைத்த முட்டை, அரிசி சாதம், பருப்பு மசியல், வேகவைத்த உருளைக்கிழக்கு, காய்கறி, கீரை சூப்புகள், ஆப்பிள், பழங்கள் ஆகியவற்றை 1.5 வயது வரை கொடுக்கவேண்டும். அதற்குப் பிறகு நாம் உண்ணும் உணவுகளையே கொடுக்கலாம். முழு தானியங்கள் நல்ல பலனைத் தரும். சரிவிகிதமாகக் கொடுக்கும்போது குழந்தைகள் நல்ல வளர்ச்சியை அடைவர்.

சத்தான உணவுகளை வாங்க முடியாத குழந்தைகளுக்கு...

ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வாங்கி உண்ண முடியாத குழந்தைகளும் இருப்பார்கள், அவர்களுக்கு அரிசி சாதம், கம்பு, ராகி, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவுகள், நாட்டுக் காய்கறிகள், சாம்பார், சூப் ஆகியவற்றைக் கொடுக்கலாம். அதையும் வாங்க முடியாதவர்கள் அரசு வழங்கும் சத்துமாவுகளை வாங்கி கஞ்சி, கூழ் ஆகியவற்றைத் தயாரித்துக் கொடுக்கலாம். அதிலேயே போதுமான சத்துகள் இருக்கின்றன.

ஊட்டச்சத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டறிவது எப்படி?

* அவர்களைப் பார்த்தாலே அடையாளம் காணமுடியும்

* உடம்பு இளைத்திருப்பது

* சோர்வாகக் காணப்படுவது

* வளர்ச்சி (உயரம்) குறைவாக இருப்பது

*  குறைவான மூளை செயல்திறன்

* இயல்பை விட மந்தமாக இருப்பது

குறிப்பிட்ட சில ஊட்டச்சத்து குறைபாட்டை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

 

அவர்களை முழுமையாக மீட்டெடுப்பது எப்படி?

அவர்கள் எந்த ஸ்டேஜில் இருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது. அதிகமாக ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளை முறையான மருந்துகள், சிரப்புகள் மூலம் சரியாக்க முடியும். மற்றவர்களை சத்துகள் நிறைந்த உணவின் மூலமே மீட்டெடுக்கலாம் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் எழில்வாணி.

இந்தியாவில் 4.6 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்தின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். . தமிழகத்தைப் பொருத்தவரையில் தீவிர ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 8% குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தையின் உடல் நலனும் மன நலனும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதால், ஊட்டச்சத்துப் பிரச்சினையை அதன் ஆரம்பப் புள்ளியிலேயே சரியாக்க வேண்டியது அத்தியாவசியத் தேவை.

க.சே. ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x