Published : 21 Jun 2019 01:02 PM
Last Updated : 21 Jun 2019 01:02 PM

தண்ணீர் இன்றி இடம்பெயர்ந்த கிராம மக்கள்; மண்ணை விட்டுச் செல்ல மனமில்லாமல் தனியாளாக வசிக்கும் கந்தசாமி

வெயில் சற்று தாழ்ந்திருந்த மதிய வேளையில், 3.30 மணியளவில் மீனாட்சிபுரம் செல்லக் கிளம்பினோம். தூத்துக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலுள்ள மீனாட்சிபுரத்தை அடைவதற்குள் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக செக்காரக்குடி உள்ளிட்ட கிராமங்களின் கோரமான முகத்தைப் பார்க்க வேண்டியிருந்தது. 50, 60 வயதைக் கடந்த பெண்கள், முதியவர்கள், தண்ணீர் குடங்களை தள்ளிக்கொண்டுப் போவதற்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான வாகனங்களில் காலியான தண்ணீர் குடங்களுடன் தங்களின் முறைக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

அதனைக் கடந்து மீனாட்சிபுரத்தை நோக்கிப் பயணித்தோம். ஸ்ரீவைகுண்டம் தாலுகா, கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மீனாட்சிபுரம் கிரமாம். ஆனால், அந்தக் கிராமத்தை கண்டடைவது அவ்வளவு எளிதானதாக இல்லை. எனவே, செல்லும் வழியில், டீக்கடையொன்றில் மீனாட்சிபுரத்திற்குச் செல்லும் வழியைக் கேட்டோம். டீக்கடைக்காரரோ, "அங்கு எதற்கு செல்கிறீர்கள்? அங்க யாருமே இல்லை. ஒரேயொரு வயசானவர் மட்டும் தான் இருப்பாரு", என்று வழியைக் கூறினார்.

மீனாட்சிபுரத்தை நோக்கிச் செல்லச் செல்ல சாலையின் தரம் குறைந்து குண்டும்குழியுமாக காட்சியளித்தது. மக்கள் நிரம்பி வழிந்து, மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் இருக்கும் ஊர்களுக்குச் செல்வதைவிட 4-5 ஆண்டுகளாக கிராமத்தில் ஒருவரும் இல்லாமல், தனியே வாழ்ந்துகொண்டிருக்கும் கந்தசாமியைக் காண மீனாட்சிபுரத்திற்குச் செல்வதே அவசியமானது.

சிரிப்பு சத்தங்களுடன் மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த கிராம மக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் எங்கே சென்றனர்? பசி தீர்த்த விளைநிலங்கள் என்னவாகின? ஒரு கிராமத்தின் மக்கள் ஏன் பிறந்து வாழ்ந்த மண்ணை விட்டு அந்நியமாக மற்றொரு கிராமத்திற்குச் செல்ல வேண்டும்? ஒன்றும் இல்லாமல் பொட்டல்காடாக இருக்கும் கிராமத்தில் கந்தசாமி எனும் 71 வயது முதியவர் ஏன் எங்கேயும் செல்லாமல், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்? என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தேடி மீனாட்சிபுரத்தை அடைந்தோம். 'மீனாட்சிபுரம்' என்ற துருப்பிடித்த வரவேற்புப் பலகை தான் எங்களை வரவேற்றது.

பாழடைந்த ஓட்டு வீடுகள், கரடுமுரடான சாலைகள், பாலைவனமாகக் காட்சியளிக்கும் விளைநிலங்கள், அம்மன் கோயில் இவைதான் மீனாட்சிபுரத்தின் தற்போதைய அடையாளம். இறுதியில், கந்தசாமியின் வீட்டை அடைந்தோம். 70 வயதைக் கடந்த முதிய தேகம், தீராத மூட்டு வலியால் ஒருங்கே நடக்க முடியாத கால்கள் என எல்லாவித உடல் இன்னல்களையும் கடந்து வரவேற்றார்.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1,135 பேர் இக்கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். 5 ஆண்டுகளுக்கு முன்புகூட 50 குடும்பங்கள் இருந்தன. ஆனால், இப்போது கந்தசாமி மட்டும் தனியாக இருப்பது ஏன்? மற்றவர்கள் எங்கே சென்றனர் என அவரிடம் கேள்வி எழுப்பினோம்.

"இப்போது இருப்பது போல் இந்த ஊர் முன்பு இல்லை. பருத்தி, கம்பு, உளுந்து இவைதான் மீனாட்சிபுரத்தின் பிரதான பயிர்கள். அப்போதும் விவசாயம் அவ்வளவு செழிப்பாக இருந்தது என்றெல்லாம் சொல்ல முடியாது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் வறட்சி, விவசாயத்திற்கும் தண்ணீர் இல்லை, மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் இல்லாமல் போனது. அதனால் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கிராமத்திலிருந்து முதல் குடும்பம் வெளியேறியது. அதன்பிறகு ஒவ்வொருவராகச் செல்ல ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊரே காலியாகிவிட்டது. அவர்கள் தங்களின் விவசாய நிலங்களை விற்றுவிட்டுச் சென்றுவிட்டனர். அவர்களின் வீடுகள் பாழடைந்து கிடக்கின்றன", என்கிறார் கந்தசாமி.

இந்த கிராமத்திலிருந்து முதல் குடும்பம் எப்போது வெளியேறியது என்ற சரியான தகவல் இல்லை. கிராம நிர்வாக அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றைத் தொடர்புகொண்டும் அத்தகவல்களைப் பெற முடியவில்லை. எனினும், கந்தசாமி, முதல் குடும்பம் 10 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேறிவிட்டதாகக் கூறுகிறார்.

கந்தசாமியின் மனைவி வீரலட்சுமி, 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அதன்பின்பு, தன் இரு மகன்களுக்கும் திருமணம் முடித்து வைத்துள்ளார் கந்தசாமி. அவருடைய இரு மகன்களும் கூட மீனாட்சிபுரத்தில் இல்லை. அருகாமை கிராமங்களில் உள்ளனர். இரு மகன்களும் ஓட்டுநராக உள்ளனர்.

"என் மனைவி இறந்த இடத்திலேயே நானும் இறக்க வேண்டும் என்பதற்காகத் தான் உயிரை இங்கேயே கையில் பிடித்து வைத்திருக்கிறேன். அந்தப் புண்ணியவதி போனதுதான் கவலையா போச்சு, என்னைய அனுப்பிவிட்டுட்டு அவ போயிருக்கலாம். அவ முன்னே போய்விட்டு, நீர் பின்னால் வாரும்னு போயிட்டா. என்ன செய்ய?", என்கிறார் கவலை தோய்ந்த குரலுடன்.

கிராமத்தில் தனியாக இருக்கும் கந்தசாமிக்குத் துணை, அவருடன் ஒட்டி உறவாடும் இரு நாய்கள் தான். ஒன்று ராஜா, மற்றொன்று ராணி. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னரே மொத்த கிராமமும் வெளியேறிவிட்டது. அதன்பின்பு தனியாக இருந்த கந்தசாமியிடம் ஒட்டிக்கொண்டன ராஜாவும் ராணியும். "எனக்கு இவை இரண்டும் தான் துணை", என்கிறார் கந்தசாமி சிரித்துக்கொண்டே.

இதுதவிர, இலவச தொலைக்காட்சியும், வானொலியும் தான் அவரின் பொழுதுபோக்கு. எந்த நடிகரின் திரைப்படமாக இருந்தாலும் பார்ப்பதாகக் கூறும் கந்தசாமி, எம்ஜிஆரின் தீவிர ரசிகர். சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றிருக்கிறார் கந்தசாமி.

இவர் தனியாக இருக்க ஆரம்பித்த காலத்தில், அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் டிவிஎஸ் வண்டியும் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வாகனத்தில் தான் இரு நாட்களுக்கு ஒருமுறை 3 கி.மீ. தொலைவில் உள்ள செக்காரக்குடிக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொள்வாராம். மேலும், 3 நாள்களுக்கு ஒருமுறை செக்காரக்குடியில் உள்ள மருத்துவமனையில் தனது மூட்டு வலிக்கு மாத்திரைகள் வாங்கிக் கொள்கிறார்

ஆரம்பகாலத்தில் அருகிலுள்ள மின்சார நிலையத்தில் கேண்டின் வைத்து வாழ்வாதாரத்தை நிறைவேற்றிக்கொண்ட கந்தசாமி, தனது தந்தை சுப்பநாயக்கர் காலத்திலேயே தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்றுவிட்டதாகத் தெரிவிக்கிறார்.

"என் இளைய மகன் பாலகிருஷ்ணன் தான் வாரத்திற்கு 2-3 முறை இங்கு வந்து 100, 200 கொடுத்துவிட்டுச் செல்வான். மூத்த மகன் அவ்வளவாக இங்கு வர மாட்டான். தினமும் எனக்கு 2 பீடிக்கட்டுகள், தேநீருக்கே 60 ரூபாய் வரை செலவாகும். தினமும் சோறு சமைத்துக்கொள்வேன். ஆனால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை குழம்பு வைத்துக்கொண்டு, அதனைச் சூடு செய்து சாப்பிடுவேன்", என்கிறார் கந்தசாமி.

கிராமத்தில் தனியாளாக இருக்கும் கந்தசாமி வீட்டுக்கு மட்டும், மின்வாரிய அதிகாரிகள் மின் அளவீடு எடுக்க வருகின்றனர். மாதம் கந்தசாமிக்கு ஆகும் மின்சார செலவு 50-100 ரூபாய். கடந்தாண்டு முதல் மின்மோட்டார் மூலம் தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

ஊரைவிட்டுச் சென்றுவிட்ட கிராம மக்கள், வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அங்குள்ள அம்மன் கோயிலுக்கு வந்து கும்பிடுவர். அந்த கோயிலுக்கு கந்தசாமி அறங்காவலராக இருந்துள்ளார். சமீபத்தில் அக்கோயிலில் திருவிழாவும் நடந்தது. அந்த ஊர் மக்கள் அனைவரும் வந்து திருவிழா கொண்டாடினர். ஒவ்வொரு குடும்பமும் ரூ.2,000 தலைக்கட்டு வரி கொடுத்து, கந்தசாமியின் வீட்டில் உணவு சமைத்து திருப்தியாக திருவிழா கொண்டாடினர்.

"கிராம மக்கள் இங்கு வரும்போது, "மாமா எங்களுடன் வந்துடுங்க", "அண்ணன் வந்துடுங்க"ன்னு கூப்பிடுவாங்க, என் மகனும் கூப்பிடுவான், ஆனால், அவர்களிடம், எதாவது எனக்கு வாங்கிக் கொடுத்துட்டுப் போங்க, நான் பேசாம இங்கயே இருக்கிறன்னு சொல்லிடுவேன்", என்கிறார்.

ஊர் மக்கள் திரும்பவும் இங்கு வர வேண்டும் என ஆசை இருக்கிறதா என கந்தசாமியிடம் கேட்டபோது, "எனக்கு ஆசை இருக்கு, ஆனா அவங்களுக்கு ஆசை இல்லையே." என்கிறார்.

உடல்நிலை ஏதும் சரியில்லை என்றாலும் யாரிடமும் தெரிவிக்க மாட்டாரம். "உடம்பு சரியில்லைன்னா கடவுள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்", என்கிறார் கந்தசாமி.

இந்த கிராமத்தில் மக்கள் இருந்தபோது கூட முறையான தண்ணீர் வசதியும், போக்குவத்து வசதியும், சுகாதார வசதியும் இல்லை என்கிறார், செக்காரக்குடி கிராம நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி ஒருவர்.

"மூன்று கி.மீ. நடந்து செக்காரக்குடி சென்று தான் தண்ணீர் எடுக்க வேண்டும், போக்குவரத்து வசதியும் அங்குதான் உண்டு. சாலை வசதியும் இல்லை. மக்கள் இருக்கும்போது ஆரம்ப பள்ளி மட்டும் இருந்தது. இப்போது அதுவும் பாழடைந்து போய் கிடக்கிறது" என்கிறார் அவர்.

தூத்துக்குடியில் பெருகி வரும் தொழிற்சாலைகள், காற்று, நீர் மாசு, காலநிலை மாற்றத்தால் நீர் ஆதாரம் குன்றுதல் ஆகியவற்றுக்கு விலை கொடுத்த கிராமம் தான் மீனாட்சிபுரம். கிராமங்களை அரசுகள் இன்னும் கவனிக்காவிட்டால், எண்ணற்ற மீனாட்சிபுரங்கள் உருவாகும் என்பது உறுதி.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x