Last Updated : 07 Jun, 2019 10:38 AM

 

Published : 07 Jun 2019 10:38 AM
Last Updated : 07 Jun 2019 10:38 AM

அதிகரிக்கும் மாணவர் தற்கொலைகள்; தடுப்பது எப்படி?

 

ஜூன் 5, 2019

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலுள்ள கூனிமேடு கிராமத்தைச் சேர்ந்த மோனிஷா (18) என்ற மாணவி  நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஜூன் 4, 2019

* நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத திருப்பூரைச் சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

* தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஷ்யா என்ற மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வு தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்குக் காரணம்.

ஜூன் 3, 2019

சிதம்பரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்கிற கல்லூரி மாணவர் அப்பா அடிக்கடி திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

ஜூன் 2, 2019

கோவையில் வேளாண் கல்லூரி மாணவர் இளங்கோவன் காதல் தோல்வியால், விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மே 27 , 2019

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிஸ் சவுத்ரி என்ற கல்லூரி மாணவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி விடுதியின் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் தோல்வியே மாணவர் தற்கொலைக்குக் காரணம்.

மே 26, 2019

பொன்னேரியைச் சேர்ந்த பி.டெக் இறுதியாண்டு படித்த கல்லூரி மாணவி அனுப்பிரியா கல்லூரி விடுதியின் 10-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். சொந்தப் பிரச்சினையால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் பட்டியல் இது.

‘தற்கொலை மிகவும் தனிப்பட்ட விஷயம். புரிந்துகொள்ளவே முடியாதது’  என்கிறார் உளவியல் மருத்துவர் கே.ரெட்ஃபீல்டு ஜேமிசன். ஒவ்வோர் ஆண்டும் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை

மத்திய குற்றவியல் ஆவணக்காப்பத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின் படி, கடந்த 2014 முதல் 2016 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 26,500 மாணவர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

உலகம் முழுவதும் மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என வருடத்துக்கு ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி  இந்தியாவில் மட்டும்  2005 முதல் 2015 வரை 1,33,623 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 2016-ம் ஆண்டில் நிகழ்ந்த பள்ளி மாணவர்கள் தற்கொலை குறித்த புள்ளி விவரங்களின்படி மாணவர்கள் தற்கொலையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் மொத்தம் 981 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2.68 மாணவர்கள் தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக் கொள்வதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம், மன உளைச்சல், தோல்வியை ஏற்காத மனப்பக்குவம், பிடித்தது கிடைக்காத விரக்தி போன்ற காரணங்களால் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் தேர்வுத் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம்.

இந்நிலையில் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதம் குறித்தும், தேர்வுத் தோல்வியில் ஏற்படும் அழுத்தங்கள் குறித்தும் போட்டித் தேர்வுப் பயிற்சியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.

3 விதமான பிரச்சினைகள்

''போட்டித் தேர்வுகளைப் பொறுத்தவரையில் மாணவர்களிடத்தில் மூன்றுவிதமான பிரச்சினைகள் உள்ளன. 1. தேர்வை அணுகும் விதம். 2. பொய்யான நம்பிக்கைகள்  விதைப்பது 3. தோல்வி என்பது வாழ்வின் இறுதி எல்லை என நினைப்பது.

தேர்வை அணுகும் விதம் தற்போது அபாயகரமாக மாறியுள்ளது. மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக நோயாளியைத் தயார் செய்வதற்கும் திருமண மேடைக்கு மணமகன் அல்லது மணமகளைத் தயார் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இங்கே மாணவர்களை அழகான சூழலுக்குத் தயார் செய்யாமல் அறுவை சிகிச்சைக்குரிய இறுக்கமான மனநிலையில் தயார் செய்கிறோம். தேர்வு என்பது சந்தர்ப்பம் என்று சொல்லிக் கொடுக்காமல் சவால் என்று சொல்லிப் பழகுகிறோம். தேர்வு உண்மையில் சவால் இல்லை. அது வெற்றிக்கான ஒரு சந்தர்ப்பம் மட்டுமே.

10 லட்சம் பேர் விண்ணப்பித்த வேலைக்கு 10,000 பணியிடங்கள்தான் உள்ளன என்றால் 9 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்காது என்ற யதார்த்தத்தை நாம் இளைஞர்களுக்குப் புரியவைக்க வேண்டும். உன்னால் முடியும் முடியும் என்று தன்னம்பிக்கை விதைப்பது நல்லதுதான். ஆனால், அதுவே மாணவர்கள் மத்தியில் உச்சகட்ட அழுத்தத்தை ஏற்றிவிடக்கூடாது. உன்னால் முடியாமலும் போகலாம் என்று இளைஞர்களிடம் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. பி.எச்.டி படித்த எத்தனையோ பேர் குரூப்-4 தேர்வில்  வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். அதற்காக அவர்கள் அறிவாளிகள் இல்லை என்று ஆகிவிடாது.

தோல்வி ஏற்பட்டால் அதுவே வாழ்வின் இறுதி அல்ல என்பதை மாணவர்கள், இளைஞர்கள் உணர வேண்டும். தோல்வி என்றால் கேவலமானது, அவமானகரமானது என்ற கற்பிதத்தை உருவாக்கும் சமூகமும் மாற வேண்டும்.

தோல்வி அடைந்த மாணவனுக்கு தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் தருவது, ஆலோசனை வழங்குவது மட்டும் போதுமானதல்ல. அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. சமூகக் கட்டமைப்பில் பதட்டமடையச் செய்யும் சூழல் மாறினால் மாணவர்கள் தேவையற்ற அழுத்தங்களுக்கு ஆளாகமாட்டார்கள்.

தேவை மறுதேர்வு

10 ஆண்டுகளுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வில் தோல்வி என்றால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், ஒரு மாதத்துக்குள் தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் மறு தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்த பிறகு தற்கொலைகள் குறைந்தன. நீட் தேர்விலும் மறுதேர்வு வைத்தால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

கல்வி முறையில் பிரச்சினை இருக்கிறது என்று மட்டும் பிரதானமாக சொல்லிக் கொண்டிருக்காமல் சமூகம் மாணவர்கள் மீது வைக்கும் அதீத அழுத்தத்தை மாற்றி அமைப்பதே சிறந்தது. சின்னச் சின்ன விஷயங்கள் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு எதிர்பார்ப்பு எகிறும்போது அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத மாணவர்களே மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அடிப்படையற்ற அச்சம், செயற்கான பதற்றங்களை யாரும் பெற்றோர், உறவினர்கள் உருவாக்கக்கூடாது.

ஒரு கதவு மூடினால் வாழ்க்கையே முடிந்துபோய் விட்டதாக நினைக்கக்கூடாது. ஒரு கதவு மூடப்பட்டது என்றால் ஏராளமான கதவுகள் திறந்து இருக்கும் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களை அடையாளம் காண்பது எப்படி? அதிலிருந்து அவர்களை விடுவிப்பது எப்படி? என்ற கேள்விகளுடன் சென்னைப் பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவர் தேன்மொழியிடம் பேசினோம்.

உடனடி முடிவல்ல; திட்டமிடப்பட்டதே தற்கொலை

''தற்கொலை செய்து கொள்பவர்கள் எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று பல முறை முயற்சித்துப் பார்ப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அவர்களுக்குள் தற்கொலை எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கும். தேர்வில் தோல்வி என்றாலோ வேறு பிரச்சினை என்றாலோ கூட உடனடியாக எந்த மாணவரும், இளைஞரும் தற்கொலை செய்துகொள்வதில்லை. அதுகுறித்த எண்ணம் முன்னதாகவே தோன்றும். அதற்கு ஏதோ ஒரு மன அழுத்தம் காரணமாக இருக்கலாம்.

தற்கொலை எண்ணத்தை அவர்கள் வார்த்தைகளிலோ, நடத்தையிலோ வெளிப்படுத்துவார்கள். நான் எதற்கும் பிரயோஜனம் இல்லை, நான் வாழத் தகுதியற்றவள், நான் உயிரோட இருந்து என்ன பண்ணப்போறேன், செத்தே போகலாம், எனக்கு மட்டும் அந்த கோர்ஸ் கிடைக்கலைன்னா உயிரோடவே இருக்க மாட்டேன், இதையே மிஸ் பண்ணிட்ட பிறகு எனக்குன்னு என்ன இருக்கு, அதை விட்டுட்டு என்னால வேற ஒரு விஷயத்தை யோசிச்சு கூடப் பார்க்க முடியாது  என்று நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்வார்கள். அப்போது உடனிருக்கும் பெற்றோர், சகோதர சகோதரிகள், நண்பர்கள், ஆசிரியர்கள் கவனமாக இருப்பது அவசியம்.

நிறையப் பேர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் டைரி, நோட்டு அல்லது சுவரில் ஏதேனும் குறிப்பின் மூலம் வெளிப்படுத்துவார்கள். சிலர் பேச்சின் மூலம் வெளிப்படுத்துவார்கள். எனவே, தேர்வில் தோல்வி ஏற்பட்டவுடன் உணர்ச்சிவசப்பட்டு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வதாக கருதக்கூடாது. 

படிப்புக்காக பட்ட கஷ்டம், அலைச்சல், உழைப்பு எல்லாம் வீணாகிப் போய்விட்டதே என்ற விரக்தியில் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால், தற்கொலைக்கான திட்டம்  அவர்களுக்குள் முன்னதாகவே இருக்கும்.

சில மாணவ, மாணவிகள் பெற்றோர் நோக்கத்தை, ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்வுக்கு ஆளாவார்கள். அவர்களால் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வார்கள்.

தற்கொலை எண்ணத்தை மாற்ற முடியுமா?

பெற்றோரே மாணவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது. நல்ல பள்ளி, அதிகக் கட்டணம், பக்கத்து வீட்டுப் பையன் மாதிரி இல்லை என்ற ஒப்பீடுகள் போன்றவற்றை மருந்துக்கும் மாணவர்களிடம் சொல்லிக் காட்டக்கூடாது.

மோட்டிவேட் என்கிற பெயரில் உன்னால் முடியும் முடியும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவர்கள் தங்கள் பிரச்சினையை, இயலாமையைச் சொல்ல முன்வர மாட்டார்கள். அதிக எதிர்பார்ப்பு ஆபத்தை மட்டுமே ஏற்படுத்தும்.

சாக வேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை. ஆறுதலுக்கோ, அரவணைப்புக்கோ யாரும் இல்லை என்ற சுய கழிவிரக்கத்தில் இதற்கு மேல் உயிரோடு இருக்க வேண்டாம் என்றே ஏமாற்றத்திலும், நம்பிக்கையற்ற தன்மையிலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

தற்கொலையைப் பொறுத்தவரை படித்தவர்கள், படிக்காதவர்கள் என எல்லோரும் ஒன்றுதான். உணர்வுகளை சரியாகக் கையாளாத அனைவரும் தற்கொலை எண்ணத்துக்கு ஆளாகிறார்கள்.

தற்கொலை எண்ணத்தை விரட்டியடிப்பது எப்படி?

மாணவ, மாணவிகளை உற்று கவனித்தால் அவர்களிடம் என்ன வித்தியாசம் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்துவிடும். அப்படி நடத்தையில், பேச்சில் மாற்றம் இருந்தால் பெற்றோர்கள் மனம் விட்டுப் பேச வேண்டும். நினைத்தபடி வந்தால் ஏற்றுக்கொள்வோம். இல்லாவிட்டால் கிடைத்ததைப் பிடித்ததாக மாற்றிக்கொள்வோம் என்று நம்பிக்கையூட்ட வேண்டும். அப்படிச் செய்தால் மாணவர்களிடம் மன அழுத்தமும், தற்கொலை எண்ணமும் காணாமல் போகும்.

பிரச்சினையில் இருக்கும் மாணவரை கவுன்சிலிங் அழைத்துச் செல்லலாம். மனநல மருத்துவரை அணுகலாம்.

மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியான சூழல் அவசியம். எந்தக் குழந்தை விளையாட்டு, உடற்பயிற்சியில் ஈடுபடுகிறதோ அக்குழந்தைக்குதான் எண்டோமார்ப் என்ற ஹார்மோன் அதிகம் சுரக்கும். இதனால் குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் மகிழ்ச்சியாக இருப்பர். பிரச்சினைகள் வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

பள்ளிகளிலேயே உணர்வுகளைக் கையாள, பிரச்சினைகளைக் கையாள மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.  விளையாட்டு மீதான ஆர்வம் கொண்டவர்கள் இந்தப் போட்டியில் தோற்றால் அடுத்த போட்டியில் வெற்றி பெறலாம் என்று பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்துக்கு ஆளாவதில்லை. விளையாட்டுகளில் ஈடுபடுவது உணர்வுகளை சமநிலையில் வைத்திருக்க உதவும். மாணவர்கள் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஆர்வம் செலுத்துவது ஆரோக்கியமானது. எதிர்மறை எண்ணங்களை வர விடாமல் செய்ய விளையாட்டு கைகொடுக்கும்.

தன் முனைப்பு, தன்னம்பிக்கை உள்ள ஆளுமையாக வளர விளையாட்டு உறுதுணை புரியும். நான் நன்றாகப் பேசுகிறேன், பாடுகிறேன், ஆடுகிறேன் போன்ற எந்த ஒரு திறமையும் மற்றவர்களால் விரும்பப்படுகிறோம், ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்ற எண்ணத்தை வரவழைக்கும். அதுவே தாழ்வு மனப்பான்மையை தகர்த்து எறியச் செய்யும்.

பிரச்சினைகளை மாணவர்கள் கோணத்தில் புரிந்துகொண்டாலே போதுமானது. தற்கொலைக்கு உந்தித்தள்ளும் அந்தக் கணத்தை யார் வேண்டுமானாலும் தள்ளிப்போட முடியும்.

தோல்வி வந்தாலும் தோள் கொடுத்து ஆறுதல் சொல்ல வேண்டும். நெகட்டிவாகப் பேசக்கூடாது. அதிக விலை கொடுப்பதால் மட்டுமே நல்ல கல்வி கிடைத்து விடாது என்பதை பெற்றோர் உணர்ந்து தேர்ச்சி பெறாத குழந்தைகள் மீதும் அதிக அன்பு செலுத்த வேண்டும். மாணவர்கள் மீது பெற்றோர் காட்டும் அன்பை அவர்களும் உணரும் வகையில் வெளிப்படுத்த வேண்டும்'' என்கிறார் தேன்மொழி.

மதிப்பெண்கள் மட்டுமே எல்லாவற்றையும் முடிவு செயதில்லை. மதிப்பெண்களுக்கு அப்பால் இருக்கிறது வாழ்க்கை என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க  அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டியது அவசர அவசியம்.

மத்திய அரசு தனது பட்ஜெட்டில் ஆண்டுக்கு 0.06% தொகையை, மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் திட்டங்களில் செயல்படுத்துகிறது. இதை அதிகப்படுத்தினால் வருங்காலங்களில் மாணவர்களின் தற்கொலைகள் குறையும்.

க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x