Last Updated : 12 Mar, 2018 01:44 PM

 

Published : 12 Mar 2018 01:44 PM
Last Updated : 12 Mar 2018 01:44 PM

சாகசப் பயணமல்ல ட்ரெக்கிங்; வனத்தை பொறுப்புணர்ச்சியுடன் அணுகுங்கள்: பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அறிவுரை

"ட்ரெக்கிங் செல்வது வெறும் சாகசமல்ல; வனத்தை பொறுப்புணர்ச்சியுடன் அணுகுங்கள்" என அறிவுரை கூறியுள்ளார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன்.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது குரங்கணி காட்டுத் தீயும் அதில் 9 பேர் பலியான சோகமும்.


இந்நிலையில், காட்டுத் தீ தொடர்பாக 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்காக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜனை தொடர்பு கொண்டோம்.


காட்டுத் தீ ஏன் ஏற்படுகிறது?
ஆப்பிரிக்காவின் சவானா காடுகள், மேற்கு அமெரிக்க பைன் காடுகள் (Western U.S. Pine Forest) ஆகிய வனப்பகுதிகளில் மட்டுமே இயற்கையாக வனத் தீ ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலை வெப்ப மண்டல மலைக்காடு (Tropical Rain Forest) வகையைச் சார்ந்தது. இத்தகைய வனப் பகுதியில் இயற்கையாக வனத் தீ ஏற்பட அதிக வாய்ப்பில்லை.


தற்போது இலையுதிர் காலம். இதனால், மலையின் அடிவாரத்தில் இருந்தே தீ பிடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அதுவும், அணைக்கப்படாத சிகெரட் துண்டு, பீடித் துண்டு மூலமே தீ விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அப்படித்தான் குரங்கணியிலும் விபத்து ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

என்னவானார்கள்  தீ கண்காணிப்பாளர்கள்?
பொதுவாக கோடை காலங்களில் வனப்பகுதியில் தற்காலிக தீ கண்காணிப்பாளர்கள் (Temporary Fire Watchers) என வனத்துறையைச் சேர்ந்த சிலருக்கு பொறுப்பு ஒதுக்கப்படும். அவர்கள் வனத்தில் தீ ஏற்படுகிறதா என்பதை ஒவ்வொரு நாளும் கண்காணிப்பார்கள். ஏதாவது இடத்தில் தீ ஏற்பட்டால் அதை உடனடியாக அணைப்பதே அவர்களது பணி. தீ பிடித்துள்ள இடத்தைச் சுற்றி வேலி அமைத்து அந்த இடத்தில் பிடித்துள்ள தீ மேலும் பரவுவதற்கு முன்னதாக துரிதமாக செயல்பட்டு தீயை அணைப்பர்.

ஆனால், தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இத்தகைய  தற்காலிக தீ கண்காணிப்பாளர்கள் பணியமர்த்தப்படவில்லை. இதுவும் இத்தகைய விபத்து ஏற்பட முக்கியக் காரணமாகும். தற்காலிக தீ கண்காணிப்பாளர்கள் ஏன் பணியமர்த்தப்படவில்லை என்பதற்கு வனத்துறையே பதில்கூற வேண்டும்.


'மலைவாழ் மக்களின் மகத்துவம்'
பொதுவாக ட்ரெக்கிங் செல்வதற்கு 36 பேர் என்ற பெரிய எண்ணிக்கையில் நபர்களை அழைத்துச் செல்வதே மிகப் பெரியத் தவறு. ட்ரெக்கிங் செல்வதற்கு 3 அல்லது 4 பேரை அழைத்துச் செல்வதே சரியானது. அப்படி அழைத்துச் செல்லும்போது உள்ளூர் மலைவாழ் மக்களையும் அழைத்துச் செல்வது மிகவும் பாதுகாப்பானது.

உள்ளூர் மலைவாழ் மக்கள் வனத்தில் தீ பிடித்தால் அதன் வாசனையை உணர்ந்து உடனே எச்சரிக்கும் திறன் படைத்தவர்களாவர். இயற்கையோடு இணைந்து வாழும் அவர்களுக்கு வனத்தில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் அசம்பாவிதமும் அத்துப்படியாக இருக்கும்.
ஆனால், 36 பேரை எவ்வித முன்னேற்பாடும், முன்னெச்சரிக்கையும் இல்லாமலேயே அழைத்துச் சென்றிருப்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.

விதிகளுக்கு உட்பட்டு வெறும் 3 அல்லது  பேர் ட்ரெக்கிங் சென்றிருந்தால் இத்தகைய பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்காது.


கடத்தல்காரர்களுக்கு சாதகம்...
இதில் இன்னொரு கோணத்தையும் நாம் கவனிக்க வேண்டும். பெண்கள், குழந்தைகள் என 36 பேர் வனப்பகுதிக்குள் சென்றிருக்கின்றனர். இதில் முறையான அனுமதி பெறப்பட்டதாக நமக்குத் தெரியவில்லை. வனத்துக்குள் 36 பேர் எளிதாக செல்ல முடிகிறது என்றால், வனவிலங்குகளை வேட்டையாடுபவர்களும் வனத்திலிருந்து மரங்களை வெட்டுபவர்களும்கூட எளிதாக செல்ல முடியும்தானே.

'ட்ரெக்கிங் சென்றவர்கள் முறையான அனுமதி பெறாமல் சென்றிருக்கிறர்கள். இனி ட்ரெக்கிங் விதிமுறைகள் கண்காணிக்கப்படும்' என முதல்வரே கூறுகிறார் என்றால் அரசாங்கம் அலட்சியமாக செயல்படுகிறது என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது என்றுதானே அர்த்தம்.


அரசுக்கே அதிக பொறுப்பு:
இத்தகைய சம்பவங்களைப் பொறுத்தவரை அரசுக்கே அதிக பொறுப்பிருக்கிறது. ட்ரெக்கிங்குக்கு அழைத்துச் சென்ற தனியார் அமைப்புகள் மீது தவறு இருந்தாலும் அவர்களை மட்டுமே முழுமையாகக் குறை கூறிவிட முடியாது. வனப்பகுதிக்குள் யாரை அனுமதிப்பது, எதற்காக அனுமதிப்பது, எத்தனை பேரை அனுமதிப்பது என்பனவற்றையெல்லாம் வனத்துறை அல்லவா முடிவு செய்ய வேண்டும். அப்படி என்றால் அதிக பொறுப்பு யாரிடம் இருக்கிறது என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

அதேபோல் ஒவ்வொரு தனி நபருக்கும் பொறுப்பு இருக்கிறது. வனத்துக்கு நாம் செல்கிறோம் என்றால் அது நமது வசிப்பிடம் இல்லை என்பதை நாம் முதலில் உணர வேண்டும். வன விலங்குகள் வாழும் இடம். அத்தகைய இடத்துக்குச் செல்லும் போது அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டாமா? தனி நபர் பொறுப்பு எங்கே போனது?


'வனத்தை பொறுப்புணர்ச்சியுடன் அணுகுங்கள்'
ட்ரெக்கிங் செல்வது வெறும் அட்வென்ச்சர் மட்டுமல்ல அல்ல. ஸ்ட்ரெஸ்பஸ்டரும் அல்ல. அது நம்மை வனத்தோடு ஒன்றுபடச் செய்யும் முயற்சி. வனச் சூழல் வித்தியாசமானது. அதுவும் ஒவ்வொரு பருவநிலையிலும் வனத்தின் சூழல் வெவ்வேறாக இருக்கும். எனவே, வனத்துக்குள் செல்லும்போது நாம் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். பொறுப்புணர்ச்சி மிகுந்த இயற்கை சுற்றுலாவாக (Responsible Eco tourism) ஆக அது அமைதல் வேண்டும். அப்படியாக பொறுப்புடன் நம்மால் வனத்தை அணுக முடியவில்லை என்றால் வெறும் அட்வென்சர் என்ற பெயரில் வனத்தை அணுகாமல் இருப்பதே நமக்கு நல்லது.


இன்றைய காலகட்டத்தில் ஐடி ஊழியர்களே அதிகமாக இத்தகைய ட்ரெக்கிங்குக்கு செல்வது வழக்கமாக இருக்கிறது. எப்போதும் கணினியும் நாற்காலியுமாக இருப்பவர்களுக்கு இது சாகசமாகவும் மனசை லகுவாக்குவும் பயணமாகவும் தெரிகிறது. தவறில்லை. ஆனால், அதை நாம் எத்தகைய முன்னெச்சரிக்கையுடன் பொறுப்புணர்ச்சியுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x