Published : 21 Mar 2018 04:44 PM
Last Updated : 21 Mar 2018 04:44 PM

யானைகளின் வருகை 147: தரிசனம் கிடைக்காதா?

 

'யானை வளர்த்த வானம்பாடி மகன்', 'நல்ல நேரம்', 'அன்னை ஓர் ஆலயம்' போன்ற சினிமா திரைப்படங்கள் யானைகளைப் பற்றி எனக்கு அறிதலுக்கு உதவின. அதேபோல் பாடப் புத்தகங்களில் வரும் யானைகளும் அறிதலுக்கே உதவின. புரிதலுக்கு என்று பார்த்தால் சினிமாவிலிருந்து ஒரு படி மேலாய் உணர்த்தியிருக்கின்றன என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதுவே முழுமையான புரிதலுக்கான கருவியானதா என்றால் இல்லை. அதை இட்டு நிரப்பின யானைகளைப் பற்றிய கள ஆய்வு நூல்கள். இது பாடப் புத்தகங்களில் கிடைக்காது. அக்கறையுடன் தேடும் போது கிடைக்கிறது. கிடைத்தாலும் சோர்வுறாமல் அதை வாசித்துத் தெளியும் போது மனதிற்குள் ஏறுகிறது. அதன் மீது காதல் கொண்டு அதீதமாக அசைபோடும் போது சிந்தனை சிறகடிக்கிறது. இப்படியும் இருக்குமோ, அப்படியும் இருக்குமோ? என்றெல்லாம் கற்பனை வானில் நீந்துகிறேன்.

அப்படியும் அடங்காத ஆசை. யானைகள் பற்றிய அனுபவ அறிவுள்ளவர்களிடம் கேட்டுத் தெளிகிறேன். உடனே அதை பறக்கப்பறக்க எழுதும்போது அது உண்மையான யானையாக அமைகிறதா? என்றால் இல்லை. அது ஒரு புனைவாகவோ, சிறுகதையாகவோ, நாவலாகவோதான் நிற்கிறது. அதில் அசலான யானை உருவம் இல்லை. அதை அனுபவ அறிவு கொண்டு அடி ஆழமாக யோசிக்கும்போதுதான், 'யானை டாக்டர் யார்? பூனை டாக்டர் யார்?' என்ற கேள்விகளில் முரண்பாடுகள் வந்து விழுகின்றன.

இந்த முரண்பாடு எங்கிருந்து வந்தது. அனுபவம் மூலமாகவே. பள்ளிப்பருவத்திலே கோயில் யானைகளையும், திருவிழா யானைகளையும் மட்டும் பார்த்து தும்பிக்கையில் காணிக்கை கொடுத்த அனுபவத்தின் மூலம் மட்டுமே இந்த முரண்கள் வந்துவிட்டனவா? இல்லை, இல்லவே இல்லை. காட்டு யானைகள், அதனூடே ஊடாடும் பயணம். அதில் எழுந்த உணர்வுகள்தான் யானைகள் பற்றிய புரிதலையும், அறிதலையும் விசாலமாக்குகின்றன.

'நீ இதுவரை அறிந்திருப்பது, புரிந்திருப்பதெல்லாம் ஒன்றுமேயில்லை. அதைவிட நீ அறிந்த/புரிந்த விஷயங்களில் நிறைய அபத்தங்களும் நிறைந்திருக்கின்றன என்பதையும் இடித்துரைக்கச் செய்கிறது. அப்படி என்ன அனுபவம். இந்தத் தொடரின் பல அத்தியாயங்களில் போகிற போக்கில் கிடைத்த செய்திகளூடே என் அனுபவங்களையும் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் எல்லாம் அந்தச் செய்திகளுக்கு அழுத்தத்தையும் ஆழத்தையும் ஊட்டுகின்றன. ஆனால் இப்போது நம் வனத்துறையையே, அதில் வரும் கால்நடை டாக்டர்களின் ஒட்டுமொத்த அறிவையும், ஆற்றலையுமே உரசிப் பார்க்கும் அளவு ஒரு விஷயத்தைச் சொல்வதென்றால் அதற்கு ஈடான அனுபவ அறிவை சொல்லித்தானே தீர வேண்டும்.

இதோ காடுகளுக்குள் பயணிக்கிறேன். இந்தக் காடு சாதாரண காடல்ல. யானைகள் வசிக்கும் காடு. அதற்குள் எனக்கு காட்டு யானைகள் எப்போது அறிமுகம் ஆகின? யோசிக்கிறேன்.

33 வயதில் 1997 கல்கியில் நிருபராகச் சேர்ந்தது வரை நான் காட்டு யானைகளைப் பார்த்ததே இல்லை. காடுகளைக் கூட பார்த்தது இல்லை. வெளிப்படையாகச் சொன்னால் கோவை அன்னூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, பல்லடம், திருப்பூர், அவிநாசி, மேட்டுப்பாளையம், தாராபுரம், வெள்ளக்கோயில், காங்கயம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, மதுரை, காரைக்குடி, சிவகங்கை, நாட்டரசன் கோட்டை, திருக்கோஷ்டியூர், குன்றக்குடி, பிள்ளையார்பட்டி போன்ற ஊர்களில் அம்பர் சர்க்கா பணிக்காக அலைந்திருக்கிறேன். அங்கெல்லாம் அந்தக் காலத்தில் நிறைந்திருந்த சீமைக்கருவேல முற்கள், நாட்டுக்கருவேல மரங்கள் அடர்ந்த காடுகளைத்தான் காடு என நம்பிக் கொண்டிருந்தேன். ஊட்டி என்ற மலை நகருக்கு கூட ஊட்டி ரயில் நிறுத்தப்படுகிறதா? என்ற கட்டுரை எழுத ஆசிரியர் குழு கேட்டுக் கொண்டதற்கிணங்கவே பயணப்பட்டேன். ரயில் விவகாரத்தை எடுத்தவுடன் திரும்பி விட்டேன்.

பிறிதொரு முறை கல்கி கோடை மலருக்காக அவலாஞ்சியின் அழகு பற்றி எழுதப் பணித்தார்கள். அவலாஞ்சி என்ற அற்புதப் பிரதேசம், அப்பர் பவானியில் அமைந்திருக்கிறது. அதற்கு ஊட்டியிலிருந்து 20 கிலோமீட்டர் தூரம் மலைக் காடுகளுக்குள் பயணிக்க வேண்டும். அந்த இடத்திற்கு போவதற்கு ஒரே ஒரு பேருந்துதான். அதுவும் அதிகாலையில் ஒரே ஒரு ட்ரிப் போகும். பிறகு மதியம் 3 மணிக்குத்தான். அது திரும்ப அவலாஞ்சியிலேயே தங்கி விடும். விடியற்காலையில்தான் புறப்பட்டு வரும்.

அதற்குப் பதிலாக எமரால்டுக்கு நிறைய பேருந்துகள் உள்ளன. (ஊட்டியில் இருந்து டாக்ஸி என்றால் கடுமையான வாடகை கேட்டார்கள்) அதுவரை பஸ்ஸில் சென்று மூன்று மைல் தூரம் காரிலோ, வேறு வாகனத்திலோ செல்லலாம் என்பதையெல்லாம் கேட்டுக்கொண்டு அதற்கேற்ப பயணம் புறப்பட்டது. எமரால்டு சென்ற பின்பு ஆட்டோவோ டாக்ஸியோ இல்லாமல் தவித்தேன். இருக்கவே இருக்கு நடராஜா சர்வீஸ் என மூன்று மைல் தூரம் நடந்தேன். காரிருள் காடு. வரிசையாய் அடர்ந்த மரங்கள். திக், திக் பயணம். கரடு முரடாகிக் கிடந்த காடுகளுக்குள் புலி இருக்குமோ, சிறுத்தை இருக்குமோ; பாய்ந்து தாக்குமோ; தெரியாத்தனமாக வந்து மாட்டிக் கொண்டோமோ என்ற அச்சம் முதன் முதலாக எட்டிப்பார்த்தது.

நல்லவேளை வழியில் சிறுத்தை மட்டுமல்ல சிறு பூனை கூட குறுக்கிடாதது தெய்வாதீனம். அவலாஞ்சி போய்ச் சேரவும் மதியப் பேருந்து அங்கிருந்து புறப்படவும் அதில் தொற்றிக் கொண்டே அவலாஞ்சி காட்சி முனையை என் கையில் இருந்த மினோல்டா கைக் கேமராவில் படம் பிடித்து செம்மையான அனுபவம். அப்போது பஸ்ஸில் இருந்தவர் என் பூர்வாசிரமத்தையெல்லாம் கேட்டுவிட்டு, 'எமரால்டிலிருந்து தனியா நடந்தே வந்தீங்களா? ஐயோ, ஏதாச்சும் காட்டு யானை குறுக்கே வந்திருந்தா, சிறுத்தைக தாக்கியிருந்தா என்னாவாகியிருக்கும்?' என்று கேட்டது இப்போது சொன்னது போல் உள்ளது.

அதன் பிறகும் இதேபோல் நேர் நிதானம் இல்லாமல் காடுகளுக்குள் சென்று மாட்டிக் கொள்வது வழக்கமாகவே இருந்தது. அந்த வகையில் சத்தியமங்கலம் காடுகளில் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப்படை ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்கும். நான் ஒரு பக்கம் பழங்குடியின கிராமங்களுக்கு நடந்தே போய் மக்களிடம் பேசி செய்தி சேகரித்துக் கொண்டிருப்பேன்.

அப்போதெல்லாம் அவர்கள் உச்சரித்த வசனம்தான் 'பெரியவன், தெய்வம், கடவுள்' போன்ற வாசகங்கள். அவையெல்லாம் காட்டு யானைகளைக் குறிப்பதாக இருந்தது. அப்படி காட்டு யானைகள் நம் கண்ணுக்கு கிடைக்காதா என்ற ஏக்கமும் நிறைந்திருக்கும். அப்படி வெள்ளித் திருப்பூர், கடம்பூர், ஆசனூர், திம்பம், அந்தியூர், தூக்க நாயக்கன்பாளையம் என அலையாத காடுகள் இல்லை.

ஒரு முறை மேட்டுப்பாளையம் லிங்காவயல், ஊழியூர் மக்களிடம் பேட்டி எடுத்து விட்டு பக்கத்தில் அதிரடிப்படை கேம்ப் ஒன்று காட்டுக்குள் இருப்பதாக கேள்விப்பட்டு காட்டுக்குள் சென்று விட்டேன். போகப் போக பொட்டல்வெளி, அதையடுத்து அடர்ந்த காடு, கருவேல மரங்கள், மூங்கில் மரங்கள். ஆற்றுவெளி மணல். அங்கே பார்த்தால் யானைகளின் சாணம். குன்றுகள் போல். காட்டிற்குள் நான்கைந்து கிலோமீட்டர் தள்ளி ஒரு பரண். அதை ஒட்டி துணியால் வேயப்பட்ட டென்ட் கொட்டகைகள். அங்கே துப்பாக்கி ஏந்தியபடி நான்கு போலீஸார் நான்கு திக்குகளை குறி வைத்திருந்தனர்.

ஒரு கேமரா பையை தோளில் சார்த்திக் கொண்டு அங்கே நடந்து வந்து கொண்டிருந்த என்னை அதிரடிப்படையினர் சூழ்ந்து கொண்டனர். வந்தவர் நிருபர் என்று அறிந்து கொண்டதும், 'இங்கே எல்லாம் இப்படி வரக்கூடாது. காட்டு யானைகள் தாக்கியிருந்தால் என்னவாகியிருக்கும்?' என்று கடிந்தபடி இரண்டு அதிரடிப்படை வீரர்கள் என்னுடனே ஊழியூர் வரை வந்து பத்திரமாக விட்டுச் சென்றார்கள்.

இப்படியான காட்டுவெளிப் பயணத்தில் முதலில் நான் பார்த்த காட்டு யானை முதுமலையில் பிடிபட்ட மக்னாதான். அதைப் பற்றி செய்தி சேகரிக்க முதுமலை சென்றதும், அங்கே அந்த யானை கராலில் அடைக்கப்பட்டு பலத்த காவலுக்குட்பட்டு இருந்ததும், ஆர்வ மிகுதியால் அந்த கராலை நெருங்கி உள்ளே நின்றிருந்த மக்னாவைப் பார்த்ததும், 'அது வெரி டேஞ்சர். கிட்டப் போகாதீங்க. கராலையே உடைச்சிட்டு வந்துடும்!' என்று அப்போதைய முதுமலை வார்டன் உதயணன் எச்சரித்து என்னை கையை பிடித்து 50 அடி தள்ளி நிறுத்தியதும் மலரும் நினைவுகள்.

அதற்குப் பிறகும் காடுகள் எனக்கு பரிச்சயப்பட்டதே ஒழிய காட்டு யானைகள் தரிசனம் துளி கூட கிடைக்கவில்லை.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x