

அண்ணாசாலையில் உள்ள ஹோட்டல்கள் சாலையை ஆக்கிரமித்து கார் பார்க்கிங் பகுதியாக பயன்படுத்துவதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
சென்னை அண்ணா சாலையில் தாராப்பூர் டவர்ஸ் எதிரே அடுத்தடுத்து 6 தனியார் ஹோட்டல்கள் உள்ளன. இதே போல் அண்ணா சிலை எதிரிலும் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டல் களுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் கார்களை அண்ணா சாலையிலேயே நிறுத்தி விடுகின்றனர். மேலும், 2 அடுக்கு பார்க்கிங்காகவும் இவர்கள் கார்களை நிறுத்துகின்றனர். இதன் காரண மாக அந்த இடத்தில் அண்ணா சாலையின் அகலம் குறைந்து, ஒரு பேருந்து மட்டுமே செல்லும் அளவுக்கு இடைவெளி உள்ளது. இதனால் அந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அப்பகுதியில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களின் நிர்வாகங்கள், வாடிக்கையாளர்களின் கார்களை பார்க்கிங் செய்வதற்காக தனித்தனியாக ஆட்களை நிறுத்தியுள்ளனர். சாப்பிட்டு முடித்துவிட்டு வரும் வாடிக்கையாளர்கள் கார்களை எடுக்கும்போது, அண்ணாசாலையிலேயே அதை திருப்புகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகிறது. பெரும்பாலான ஹோட்டல்கள், நடைபாதையையும் ஆக்கிரமித்துள்ளதால், நடந்து செல்லக்கூட வழியின்றிப் பொதுமக்கள் அவதிப் படுகின்றனர். இந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத போக்குவரத்து போலீஸார், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் மட்டும் கறாராக நடந்துகொண்டு அபராதம் வசூலிக்கின்றனர்.
இதுகுறித்து வாலாஜா சாலையில் வாகனங்களிடம் அபராதம் வசூல் செய்து கொண்டிருந்த போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர்களிடம் கேட்டபோது, “அபராதம் விதிப்பது எங்கள் இஷ்டம், உங்களால் முடிந்த தைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று இறுமாப்புடன் கூறினர்.
ஹோட்டல்களுக்கு போலீஸார் சலுகை வழங்குவது குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டபோது, “இந்த பகுதியில் 3 காவல் நிலையங்களில் உள்ள போலீஸார் பலருக்கும், போக்குவரத்து போலீஸாரில் பெரும்பாலானவர்களுக்கும் இந்த ஹோட்டல்களில் இருந்துதான் தினமும் உணவு வழங்கப்படுகிறது” என்றனர். மேலும், இந்த ஹோட்டல் நிர்வாகிகளிடம் இருந்து சில காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
“தினமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஹோட்டல்காரர்கள் பார்க்கிங் வசதியுடன் கூடிய கட்டிடங்களைக் கட்ட வேண்டும். பார்க்கிங் வசதி இல்லாத ஹோட்டல்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். எங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் போலீஸார், ஹோட்டல் நிறுவனங்களிடம் கடுமையாக நடந்து சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று இருசக்கர வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.