

நரேந்திர மோடி ஏழைகளுக்கும், தலித் மக்களுக்கும் ஒன்றும் செய்ய மாட்டார் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாக பாஜக எம்பி தவறாக மொழி பெயர்த்த விவகாரம் அக்கட்சியினரை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கர்நாடகாவில் வரும் மே 12-ம் தேதி சட்டபேரவைத் தேர்தல் நடைபெறுவதால் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமித் ஷா, ‘எடியூரப்பா அரசுதான் ஊழலில் முதலிடம்’ என தவறுதலாகக் கூறினார். இதனால் பதறிய பாஜக எம்பி பிரஹலாத் ஜோஷி அமித் ஷாவை உடனடியாக திருத்தினார். அமித் ஷா வாய் தவறி கூறியது தேசிய அளவில் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளானது.
இந்நிலையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கர்நாடக அரசையும், காங்கிரஸ் கட்சியையும் இந்தியில் கடுமையாக விமர்சித்து பேசினார். அவரது உரையை பாஜக எம்பி பிரஹலாத் ஜோஷி கன்னடத்தில் மொழி பெயர்த்துக் கூறினார். அப்போது அமித் ஷா பேசும் போது “சித்தராமையா ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் ஒன்றும் செய்ய மாட்டார்” என்றார். அதனை கன்னடத்தில் மொழிபெயர்த்த பிரஹலாத் ஜோஷி, “நரேந்திர மோடி ஏழைகளுக்கும், தலித் மக்களுக்கும் ஒன்றும் செய்ய மாட்டார்”என கூறினார். இந்த விவகாரம் அங்கிருந்த எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினரிடையே அதிர்ச்சியையும், தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியது.
முந்தைய சொதப்பலின்போது அமித் ஷாவை திருத்திய பிரஹலாத் ஜோஷியே இந்த கூட்டத்தில் சொதப்பியது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவின் இந்த தொடர் சொதப்பலை சமூக வலைத்தளங்களில் கிண்டலாக பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில், “பாஜக தலைவர்கள் உண்மையை பேச ஆரம்பித்திருப்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது” என பதிவிட்டுள்ளார்.