Published : 09 Mar 2018 06:14 PM
Last Updated : 09 Mar 2018 06:14 PM

யானைகளின் வருகை 140: பயம்பு, கொப்பம் =பெருங்குழி

 

கடந்த சில அத்தியாங்களில் சுட்டப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் புறப்பாடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் சினிமாத்தனத்துடன் புறப்பட்ட யானை வளர்த்த வானம்பாடி மகன், பிறகு படிப்படியாக மாறி நல்ல நேரத்தில் 60 சதவீத சினிமாத்தனமும், அன்னை ஓர் ஆலயத்தில் 40 சதவீத சினிமாத்தனமும், கும்கியில் 10 சதவீத சினிமாத்தனமாகவும் சுருங்கியிருக்கிறதென்றால், அது அந்தந்த காலகட்டத்தில் மனிதகுலத்தின் புரிதலும், அதையொட்டி நிகழ்ந்த சமகால வாழ்நிலை கோட்பாடுகளிலான கற்பிதமும், அதன் வழிவந்த படைப்பாக்கத்தின் விரிதலும் எனலாம்.

அது நாம் கற்றுக் கொண்ட விஷயங்களிலிருந்தே உருண்டு, புரண்டு, சுழன்று, எழுச்சியுடன் புறப்படுகிறது. அதையும் அவரவர்க்கு கற்பிக்கப்பட்ட இடத்திலிருந்தே புறப்படுவோம்.

யானைக்கும் அடி சறுக்கும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழிகள் பாடப் புத்தகங்கள் வாயிலாகவே எனக்கு மட்டுமல்ல, யாவருக்கும் கற்பிக்கப்பட்டன. அதற்கு அர்த்தங்களும் பகரப்பட்டன. அதன் அடுத்த நிலை, 'கான முயலெய்த அம்பினில் யானை பிழைக்க வேலேந்தழினிது!' என்கிறது வள்ளுவம்.

எளியவனை வீழ்த்தி மகிழ்வதைக் காட்டிலும் யானை பலமுள்ளவனை எதிர்த்து தோற்பது மேல் என்கிறது அதன் பொழிப்புரை.

யானையின் பலம் தும்பிக்கையில். அந்த பலம் மிக்க யானைகளை மடக்கி வீழ்த்தி, ஆயிரமாயிரமாய் யானைப் படைகளாக எப்படி ஒருங்கிணைத்து நிறுத்தியிருப்பார்கள்? கேள்வி எழுகிறது. அது மட்டுமா, 'மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல்லென்று. ஆனை கட்டி போராடிக்கும் சோழவள நாடு!' என்ற பாடலும் நினைவில் ஆடுகிறது.

அந்தக்கால அரசர்களுக்கு யானைப்படைகள் இருந்ததுபோல அந்தக்கால நிலச் சுவான்தார்கள், விவசாயிகள் யானை கட்டி போரடித்தார்கள். அவர்கள் அப்படி எத்தனை யானைகள் வைத்திருந்திருப்பார்கள். அவர்கள் எப்படியெல்லாம் அவற்றை கட்டியாண்டிருப்பார்கள் என்பதை உணரத் தலைப்படுகிறோம்.

'காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

யானை புக்க புலம்போலத்

தானும் உண்ணான் உலகமும் கெடுமே!'

பிசிராந்தையார் எழுதிய புறநானூற்றுப் பாடலை இப்படி ஆசிரியர் போதிக்கிறார். அதற்கு அர்த்தமும் விளக்கப்படுகிறது.

பாண்டியன் அறிவுடை நம்பி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை. அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறுவதான பாடல்.

விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவு கூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால், யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்.

இது மாதிரியான இலக்கியத்தில் காணப்படும் பாடல்கள் ஒரு பக்கம் கற்பனை வளத்தில் வரலாற்றிற்கு அர்த்தம் கற்பித்தாலும், இன்னொரு பக்கம் அறிவியல் ரீதியாக விலங்கியல் பாடத்தில் யானை பற்றிய கற்பிதம் அகழ்ந்து ஆராயப்படுகிறது. அதைப் பற்றிய சிந்தனைத் தெளிதல் 10 வயதில் ஒரு மாதிரியிருந்திருக்கிறது. 20 வயதில் வேறு மாதிரியிருந்திருக்கிறது. 40 வயதில் அதுவே வேறு ஒரு எல்லையை தொட்டிருக்கிறது. பார்த்தது, படித்தது ஆகியவற்றுக்கேற்ப அவரவர்க்கு எந்த மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதோ, அதற்கு ஏற்ப அவை விரிவு கொள்ளவும் ஆரம்பிக்கின்றன.

யானை ஒரு மூர்க்கமான பிராணி. அதன் பலத்திற்கு இணையான ஒரு பலம் எதுவும் இல்லை. அதை அடக்கி ஆண்டு தன் தேவைகளுக்கு பயன்படுத்துவது என்பது மனிதனுக்கான கூறுகளில் ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை அந்தத் தேடலிலேயே அறிகிறோம். வரலாற்று மனிதனுக்கு முன்பு யானை என்பது பயம் காட்டும் விலங்கு. காடுகளில் வாழ்ந்த மனிதன் ஐம்பூதங்களுக்கு அஞ்சி நடுங்கினான். அவற்றையே தெய்வமாகவும் வழிபட ஆரம்பித்தான்.

பிறகு தன்னைக் கொல்லும் தனக்கு ஆபத்து விளைவிக்கும் விஷயங்கள் யாவையும், விலங்குகள் யாவும் வழிபாடு செய்ய ஆரம்பித்தான். அதில் விஷமுள்ள நாகன்களும், பலமுள்ள யானைகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. அதையும் தாண்டி இதைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் உந்தித் தள்ளுகிறது. தேடுகிறோம். தேடிக் கொண்டே இருக்கிறோம்.

நாடகங்களும், சினிமாக்களும் காட்டாத அசல் பிம்பங்களை, பாடப் புத்தகங்கள், ஆசிரியர்கள் தெளிவு தராத அறிவுப்பூர்வமான விஷயங்களை தேடி புறப்படுகிறோம். சங்க காலத்திலிருந்து மட்டுமல்ல, அதற்கு முந்தைய, பிந்தைய காலங்களில் கூட யானைகளை பற்றிய கல்வெட்டுகளும், ஓலைச்சுவடிகளும், நூல்களும் மினுக்கம் பெறுகின்றன. அவையெல்லாம் புதுமை ததும்பவும் புறப்படுகின்றன. அதில் ஒன்றாகத்தான் அத்தியாயம் 135-ல் சுட்டிக்காட்டப்பட்ட கேள்வி திரும்பவும் எழுகிறது.

யானை மற்ற விலங்குளைப் போல ஒன்றும் ஊன் உண்ணி அல்ல. தாவரப்பட்சினி. புலியானாலும், சிறுத்தையானாலும், சிங்கமானாலும் ஊன் உண்ணி. மனிதனை மட்டுமல்ல, எந்த உயிரினங்கள் அகப்பட்டாலும் உடனே அடித்து தின்றுவிடும். ரத்தச்சுவை கொண்ட மிருகங்கள் அவை. அப்படியல்லாத அறிவுப்பூர்வமான விலங்கு யானை.

இத்தனைக்கும் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மனிதனுக்கு கற்றுக் கொடுத்தவை. அப்படிப்பட்ட விலங்கு ஏன் மனிதனை கண்டவுடன் துரத்தித் துரத்தி மிதித்துக் கொல்ல வேண்டும். அதற்கு ரத்த நாளங்களில் அல்ல, ஆயிரமாயிரம், லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனைக் கண்டால் கொல்; இல்லாவிட்டால் அவன் உன்னைக் கொன்று விடுவான் என்ற உத்தரவு அதன் உயிர் செல்லில், ஜீன்களில் கருக்கொள்ளப் பட்டிருக்கிறது. ஏனென்றால் உன்னை அவனுக்குத் தேவையிருக்கிறது. உன் சந்ததிகள் அவனுக்கு தேவையிருக்கிறது. உங்களையெல்லாம் கட்டியாளத் தலைப்படுபவன் அவன்! என்கிறது உளப்பூர்வமான ஆய்வின் வெளிப்பாடு.

அதற்கு விரிவான தேடல் அவசியமாகிறது. அனுபவப்பூர்வமாக யானைகளை ஆய்ந்தெழுதியவர்கள். அவற்றுடன் வாழ்ந்து உணர்ந்தெழுதியவர்கள், சங்க காலப்பாடல்களிலும், அதற்கு முந்தைய வரலாற்று நிகண்டுகளையும் ஆழ ஊறிப்பார்த்து எழுதியவர்கள் நூல்களெல்லாம் தேடலில் அகப்படுகிறது. அவையெல்லாம் உணர்ந்து கொள்ள வாய்ப்பை அளிக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை. இதுவரை அறிந்ததை புரிந்து கொள்ளவே வாய்ப்பை அளிக்கிறது.

ஆப்பிரிக்கக் காடுகளில் சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியுள்ளதற்கான தொல்லியல் எச்சங்களை ஆராய்ந்த உயிரியலாளர்கள், ஏறத்தாழ 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து புலம் பெயர்ந்து மேற்கு மலைத் தொடர் பகுதிகளுக்கு யானைகள் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்கள். இங்கே ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் மனிதர்களே இங்கு குடியேறினர். பழங்காலத்தில் வேட்டையாடியும், உணவை சேமித்தும் மனித குலம் வாழ்ந்துள்ளது. பயிரிடும் சமூக வாழ்க்கைக்கு மனிதர்கள் முன்னேறியபோது அவர்களுக்கு நிலங்கள் தேவைப்பட்டன. எரிந்து கருகிய ஆதி உயிர்களில் எஞ்சியவை வாழ்விற்கு போராடின. நிலம் பிடிக்கும் போர்கள் மனிதர்களுக்கிடையே தொடங்கின. போரில் பலம் வாய்ந்த பேருயிரான யானைகளை பிடித்துப் பழக்கிப் போர்த்தொழிலுக்கு அவற்றைப் பயன்படுத்தி வந்ததை பரணர், நக்கீரர் போன்ற புலவர்கள் தங்கள் பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.

யானைகள் வரும் வலசைப் பாதையில் ஆழமான குழி வெட்டி அதில் யானையை விழச் செய்து பிடிப்பது பண்டைக் காலம் முதல் இருந்து வந்த வழக்கம். இப்படி யானைகளை பிடிப்பதற்கு 'பயம்பு' என்றும், 'கொப்பம்' என்றும் பெயர்கள் உண்டு. இதற்கு யானையைப் பிடிக்கும் பெருங்குழி என்று பொருள் என்கிறார் ஆதியில் யானைகள் இருந்தன என்ற தனது நூலில் கோவை சதாசிவம்.

அறம், மறம், காதல், இன்பம், இயற்கை இவற்றோடு இயைந்து வாழ்ந்தவர்கள் சங்க கால மக்கள். அம்மக்கள் பகிர்ந்தளித்த இலக்கியங்களில் பல விலங்குகள் சொல்லப்பட்டிருந்தாலும் யானைகள் அளவுக்கு வேறெந்த விலங்கைப் பற்றியும் இவ்வளவு மிகுதியாக சொல்லப்படவில்லை. மிகை உணர்ச்சியும், புனைவும் நிரம்பி வழியும் பாடல்களினூடே வெளிப்படும் உண்மைகள் நம்மை வியக்க வைக்கின்றன. இசைபட வாழ்பவர் செல்வம் போலக் கான் தொறும் பொலியும் கமழ் வாய் வேழம்! குறிஞ்சி நிலத்திற்குப் பெருமை சேர்ப்பது யானைக்கூட்டம்தான். யானைகளுக்கு ஒப்பாக ஒரு விலங்கு உலகில் இல்லை என்கிறார் நற்றிணையில் கபிலர். வரலாற்றில் யானைகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பண்பாட்டினையும் நமக்கு உணர்த்தி விடுகின்றன என்கிறது இவரது நூலாய்வு.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x