Published : 16 Mar 2018 03:26 PM
Last Updated : 16 Mar 2018 03:26 PM

யானைகளின் வருகை 144: அங்குசப் பணியாளன் ஆன கதை

ரமேஷ் பேடியின் 'யானை: காடுகளின் அரசன்' என்ற இந்த நூலை மட்டும் கிட்டத்தட்ட ஏழெட்டு முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் காட்டு யானைகளை தரிசித்து அல்ல, ஸ்பரிசித்து பார்த்த தன்மை மட்டுமல்ல, அவற்றுடன் வாழ்ந்து பார்த்த அனுபவமே இதிலிருந்து கிடைக்கிறது. அவற்றிலிருந்து நமக்கு ஏற்படும் யானை அனுபவங்களை பொருத்திப் பார்க்கவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இன்றைக்கு யானை மற்றும் வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடாமலே, இதில் உள்ள தகவல்களை ஏராளமாக எடுத்து தங்கள் நூல்களில் பயன்படுத்துவதையும் காண்கிறேன்.

சமீபத்தில் எழுத்தாளர் சு.வேணுகோபால் எழுதி வெளி வந்திருக்கும் வலசை என்கிற நாவலிலும் சரி, அதற்கு முன்பு ராமன் சுகுமார் எழுதி வெளியிட்டிருந்த, 'என்றென்றும் யானைகள்' என்ற ஆய்வு நூலிலும் ஆகட்டும் இதன் நெடி சற்று தூக்கலாகவே காண நேரிட்டது. சு.வேணுகோபாலின் நூல் யானைகள் குறித்த புனைவு இலக்கியம். எனவே அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால் ராமன் சுகுமாருடையது ஆய்வு நூல். அதில் சில நெருடல்களும் வெளிப்பட்டிருப்பதை காண்கிறேன்.

ராமன் சுகுமார் 1980களில் சத்திய மங்கலம் காடுகளின் இண்டு இடுக்குகளில் எல்லாம் சுற்றியலைந்து தரவுகள் சேகரித்து வெளியுலகுக்கு சொன்ன சூழலியாளர். யானைகளின் இயல்பு, மனிதருக்கும், யானைகளுக்கும் இடையேயுள்ள மோதல்கள். சூழலையும், யானைகளையும் காக்க வேண்டிய தேவை பற்றிய தேவையையும் போகிற போக்கில் சொல்லி செல்கிறார். விலங்கியல், தாவரவியல் பட்டம் பெற சென்னை லயோலா மற்றும் விவேகானந்தா கல்லூரியிலும் படித்த இவர், 1979ல் இயற்கை பற்றிய முனைவர் பட்ட ஆய்வாளனாக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயன்ஸில் சேர்ந்திருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே இருந்த இயற்கையின் மீதான நேசம் இவரிடம் விரிவடைந்து பெரிய பாலூட்டிகள் பற்றிய ஆய்வு செய்வதே விருப்பமாக மாறியது. அதில் இந்தியாவில் முதன்முதலாக மாதவ் காட்கில் பெரும் முயற்சி எடுத்து நவீன இயற்கையியல் படிப்பை அங்கே அறிமுகம் செய்திருந்தார். அதில் தனக்கான ஆய்வுத் தலைப்பை தேர்ந்தெடுக்க அவருடன் பலவாறாக யோசித்திருக்கிறார்.

அப்போது, மனிதர்கள்-யானைகள் மோதல் பற்றி ஆய்வு செய்வதில் உள்ள பிரச்சினைகளை பற்றி மாதவ் காட்கில் கூறியிருக்கிறார். அது இவருக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. காட்டை ஒட்டிய பகுதிகளில் சிறு விவசாயிகளின் விளைநிலங்களில் யானைகள் புகுந்து சூறையாடுவதையும், கோபமடைந்த விவசாயிகள் விஷமிட்டுக் கொல்வதையும், தந்தங்களுக்காக வனக் கொள்ளையர்கள் வேட்டையாடுவதையும் பற்றி அவர் விரிவாக பேசியதில், 'இது பற்றி ஆய்வு நடத்துவது புதுமையானது. அவசியமானது. நீண்டகாலத்திற்கு யானைகள் மனிதர்களால் அழிக்கப்படாமல் வாழ வேண்டுமானால் அதற்கு இந்த ஆய்வு உதவும்!' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் AESA (ஆசிய யானைகள் சிறப்புக்குழு), IUCN ஆகியவை தமது முதல் திட்டத்தை முதுமலையில் தொடங்கியிருக்கிறது. அதன் தலைவராக இருந்த ஜே.சி.டேனியல் இந்தியாவில் யானைகள் தொடர்பான ஆய்வுக்கு நிதி பெறும் வாய்ப்பு உண்டு என மாதவ் காட்கிலுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு WWF நிதி வழங்க முன் வந்திருக்கிறது. அதை முன்னிட்டு ராமன் சுகுமார் யானைகள் மனிதர்கள் மோதல் குறித்த முன் வரைவைத் தயார் செய்து அவர்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதையடுத்து AESA-ன் ஆலோசனைக்கூட்டம் பெங்களூருவில் நடந்திருக்கிறது.

அதற்கு முன்பாக தென்னிந்தியக் காடுகளில் யானைகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இப்படி தென்னிந்தியா முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பது முதலாவது முறையாக இருக்க, அதில் சத்தியமங்கலம் காடுகளில் மட்டும் 1268 யானைகள் உள்ளதான விஷயம் பலரையும் சந்தேகிக்க வைத்திருக்கிறது.

பலர் அதை ஏற்கவே மறுத்துள்ளனர். ஈரோடு வனப்பகுதி இத்தனை யானைகளை தாங்காது. புகழ்பெற்ற முதுமலை வனத்திலேயே வெறும் 446 யானைகளே உள்ளன. எப்படி அவ்வளவு புகழ்மிக்க வனச் சரணாலயத்திலேயே குறைவான எண்ணிக்கையில் யானைகள் இருக்கும்போது சாதாரண வனத்தில் அவ்வளவு யானைகள் இருக்க முடியும் என்பதே கேள்வியாக இருந்தது. என்றாலும் முதுமலை எவ்வளவு புகழ்பெற்றதாக இருந்தாலும் அதன் பரப்பளவு வெறும் 321 சதுர கிலோமீட்டர்களே என்பதையும், சத்தியமங்கலம் காடுகள் 2467 சதுர கிலோமீட்டர்கள் பரந்துபட்ட வனம் என்பதையும் அவர்கள் உணரவில்லை.

சத்தியமங்கலத்தின் கிழக்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் விவசாய நிலமும் அதிகம், எனவே மனிதர்-யானைகள் மோதலும் அங்கே மிக அதிகம் என்பதால் அதுவே தன் ஆய்வுக்கு உகந்த இடம் என தேர்ந்தெடுத்திருக்கிறார். இதையெல்லாம் இவரே தன் நூலில் விரிவாக, விவரமாக குறிப்பிட்டு செல்கிறார்.

1980 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு பழைய ஜீப்பில் புறப்பட்ட இவரின் ஆய்வு பத்தாண்டுகள் முதுமலை தொடங்கி சத்தியமங்கலம் காடுகளுக்குள் அங்கிங்கெணாதபடி பயணிக்கிறது.

யானைகளை பற்றி மட்டுமல்ல, மற்ற விலங்கினங்களை பற்றியும், அதை சார்ந்த வாழ்கிற மனிதர்களைப் பற்றியும் ஒரு அல்ட்ரா ஸ்கேன் ரிப்போர்ட்டை நம்மிடம் தருகிறது. (இத்தொடரின் அத்தியாயம்:21ல் சொல்லப்பட்ட 'வீரப்பனுக்கு முன்பே செவ்வி கவுண்டர் என்பவர் யானை வேட்டையாடிகளை ஊக்குவிக்கும் பின்புலமாக இருந்திருக்கிறார்!' என்ற தகவல்களுக்கு இவரது நூலைதான் மேற்கோள் காட்டியிருந்தேன்)

ராமன் சுகுமார் தன் நூலின் ஆரம்பத்திலேயே மதம் பிடித்த இளம் வயது யானையைப் பற்றி ஒரு சிறுகதை போல் இப்படி வடிக்கிறார்:

''பிலிகிரி என்ன செய்வது என்று புரியாமல் மேலும் கீழும் அலைந்து கொண்டிருந்தது. 16 வயதேயான ஆண் யானை பிலிகிரியிடம் இத்தகைய மாற்றம் உண்டாவது ஒன்றும் புதிதில்லை. எல்லா யானைகளும் இந்த வயதில் சந்திக்கக்கூடிய மாற்றம்தான். பிலிகிரியின் உடல் முழுவதும் ஒரு வேகம். நெற்றிப் பொட்டில் விண், விண் என்று வலி. உடல் முழுவதும் ரத்தம் குபு, குபுவென பொங்கி ஓடும் உணர்வு. ஆம் பிலிகிரிக்கு முதன் முதலாக மதம் பிடிக்கத் தொடங்கியுள்ளது. 1983 ஜனவரி 19 அன்று பிலிகிரி ரங்கா மலையில் கயத்ததே வரகுடி குட்டையருகே முதன்முதலாக பிலிகிரியை இத்தகைய மதம் வடியும் நிலையில் கண்டேன். அவன் தண்ணீரில் மீண்டும், மீண்டும் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தான். துதிக்கையால் நீரை அலைந்தான். உறிஞ்சிப் பீய்சசி அடித்தான். இடவலமாக உடலை வேகமாக ஆட்டினான். குட்டையையே கலக்கிக் கொண்டிருந்தான். பின் திடீரென மூழ்கித் தன் தந்தத்தால் குட்டையின் அடியிலிருந்த சேற்றைத் தோண்டி தண்ணீருக்கு மேல் அள்ளி விசிறினான். இளமைக்கே உரிய மதம் வடிவதை அனுபவித்து பிலிகிரி திளைத்துக் கொண்டிருந்தான்'' என நீள்கிறது அந்தக் காட்சி.

இப்படியாக கதை போல் நீளும் இவரது ஆய்வில் யானைகள் குறித்த வரலாற்றுப் பார்வையும் சொல்லப்படுகிறது. அவர் சொல்கிறார்:

''ஒரு காலத்தில் மன்னர்களை சுமந்து வலம் வந்து ராஜகவுரவத்தின் சின்னமானது யானைகள். வழிபடும் தெய்வமெனப் பணிந்த மனிதன், மறுபுறம் அவற்றைக் கொன்று பசியாறினான். பின் அதன் தந்தங்கள் மதிப்பு மிக்க பொருளான பின் பொருளுடமைச் சமூகத்தில் அவை காசுக்காக வேட்டையாடப்பட்டன. மன்னர்கள் எதிரிகளை அச்சுறுத்தும் படையாக்கிப் போரிட்டனர். மன்னர்களை மகிழ்விக்கும் பரிசுப் பொருளாகவும் யானைகள் மாறின. சிந்து சமவெளி நாகரிகம் கூறும் முத்திரைகளில் மாடு மட்டுமல்ல, யானையும் கூட காணப்படுகிறது. அதன் முதுகிலிருந்து ஒரு கோடு வரையப்பட்டுள்ளதைக் கொண்டு ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் கேரிங்டன் அது அம்பாரியின் ஒரு கயிறு என்கிறார்.

ஆனால் வரலாற்று ஆய்வாளர் டி.கே.லாகிரி செளத்ரி அப்படி இருக்க முடியாது என்கிறார். எனினும் சிந்து சமவெளி நாகரிக காலத்தில் திராவிடர்கள் யானைகளைத் தமது உதவிக்கென பயன்படுத்தியிருக்கக் கூடும் என்பது உறுதி. ராமாயணம் ராமனுக்கு எதிராக தென்னிந்தியத் திராவிட மன்னன் ராவணன் யானைப் படையுடன் போரிட்டான் என்கிறது.

திராவிடர்கள் யானைகளை குழி வெட்டிப் பிடித்திருக்கக் கூடும். அதே முறைதான் சமீபகாலம் வரை கிட்டாவ் என்ற யானை பிடிப்பு முறையாக தென்னகத்தில் பயன்பட்டு வந்தது. கிமு 1500-ல் மேற்காசியாவிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்து சமவெளி நோக்கி வந்திருக்கக் கூடும். வலுவிழந்த சிந்து சமவெளி திராவிடர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர். யானைகளைப் படையாக பயன்படுத்தும் கலையை கற்ற ஆரியர்கள், யானைப் படை வலிமை கொண்டு கங்கை சமவெளி முழுமையும் தமது ஆளுகைக்கு உட்படுத்தினார்கள். யானைகளை விரட்டி ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழிகளில் விழ வைத்து, பழக்கப்படுத்த யானைகள் (கும்கிகள்) கொண்டு பயிற்றுவிக்கும் முறை வழமை பெற்றது.

மாபெரும் யானைகள் சிறிய மனிதனின் கையிலிருந்த சின்ன இரும்பு ஊசிக்கு (அங்குசம்) பயந்து பணியும் பணியாளன் ஆனது!'' இவ்வாறு நீளும் அவரின் ஆய்வின் வெளிப்பாடு 16-ம் நூற்றாண்டில் பிஹாரில் வாழ்ந்த பாசுப்பியா என்ற முனிவர் எழுதிய கஜசாஸ்திரம் நூலைப் பற்றி சொல்கிறது.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x