Published : 15 Mar 2018 02:51 PM
Last Updated : 15 Mar 2018 02:51 PM

யானைகளின் வருகை 143: கெளதமரின் தாய் கண்ட கனவு

ராமயண காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் யானைகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். யானைகளைப் பராமரிப்பதற்கும், இனச்சேர்க்கையால் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கவும், நாகவனம் எனப்படும் வனவிலங்கு சரணாலயங்களையும், பூங்காக்களையும் அமைத்திருந்தனர்.

பரதன் தன் அண்ணன் ஸ்ரீராமனைக் காண சித்திரக்கூட்டிற்கு சென்ற போது ராமன் பரதனிடம் அவனது நாகவனம் பராமரிக்கப்படுகிறதா என கேட்கிறான்.

இமயமலை மற்றும் விந்திய மலைகளின் அடிவாரங்கள் அக்காலத்தில் யானைகளுக்கு பெரும் புகலிடமாக விளங்கின. அயோத்தியில் ஐராவதம், மகாபத்மா, அஞ்சனா மற்றும் வாமனா என்பபடும் பல்வேறு ரக யானைகள் இருந்தன. ஸ்ரீராமனுடன் போரிட்ட ராவணனிடம் மட்டும் ஆயிரக்கணக்கான யானைகள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதப் போரில் 2 லட்சத்து 70 ஆயிரம் யானைகள் பங்கு கொண்டதாக அந்த இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ளது.

கெளதமரின் தாய், மஹாமாயா ராணி என்பவர் ஒரு வெள்ளை யானை தன் உடலில் புகுந்து கொண்டதாகக் கனவு கண்டார். ராணிக்குப் பிறக்கும் மகன் பேரரசனாகவோ அல்லது பெரிய முனிவராகவோ வருவான் என்றனர் அரசு ஜோதிடர்கள். கிமு இரண்டாம் நூற்றாண்டில் நடந்த இந்நிகழ்ச்சி பர்ஹித் என்ற இடத்திலுள்ள ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் வெள்ளை யானை மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறது. இந்துக்கள் இதை இந்திரனின் வாகனமான ஐராவதம் என்கின்றனர். வெள்ளை நிற யானை என்பது வெண்ணிறப் புலி, வெண்ணிற மலைப்பாம்பு போல ஒரு இயற்கை பிறழ்வு எனலாம். வெள்ளை நிற யானையை அதன் உரிமையாளர்கள் மிகுந்த கவனத்துடனே பாதுகாப்பார்கள். ராவணின் யானைத் தொழுவத்தில் வெண்ணிற மேகங்களையொத்த யானைகள் இருந்தன என வால்மீகி குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து, பர்மா காடுகளில் வெள்ளை யானைகள் காணப்படுகின்றன.

1979 ஆம் ஆண்டின் கணக்குப்படி 35 ஆப்பிரிக்க நாடுகளில் இருந்த யானைகளின் எண்ணிக்கை 13 லட்சத்து 43 ஆயிரத்து 340 என டக்ளஸ் ஹாமில்டன் குறிப்பிடுகிறார். 1962-ல் கென்யாவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் 11 ஆயிரம் யானைகள் இருந்தன. காடுகள் தாங்கக்கூடிய அளவிற்கும் அதிகமாக யானைகளின் எண்ணிக்கை இருந்ததால் அப்போது 5 ஆயிரம் யானைகளை அரசே சுட்டுத்தள்ள முடிவு செய்தது. 1995 மார்ச் மாதத்தில் ஜிம்பாப்வே தேசியப்பூங்காவில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் யானைகள் இருந்தன. ஆனால் இக்காடுகளில் மிகுந்த நெருக்கடியை தவிர்க்க 36 ஆயிரம் யானைகளை விற்றுவிடத் தீர்மானித்தது அரசு. அவ்வாறு விற்க முடியாவிட்டால் அவற்றை சுட்டுத்தள்ளுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தீர்மானித்தனர் ஆட்சியாளர்கள்.

போர்ச்சுகீசிய ஆப்பிரிக்காவில் ஒரு முறை 2 ஆயிரத்து 254 யானைகள் கொல்லப்பட்டு அதன் தந்தங்கள் அகற்றப்பட்டன. யானையை சட்டவிரோதமாக கொல்லுவோர் அவற்றை ஒரே இரவில் செய்து முடித்தனர். 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு கம்பி வலைகள் போட்டே அவர்கள் யானைகளை பிடித்தனர். இலங்கையில் பிரச்சினையே வேறு. ஒரு காலத்தில் அங்கே 10 ஆயிரம் யானைகள் இருந்தன. பிறகு அவை 800 ஆக குறைந்தது. இத்தகைய யானைகள் அழிவை தடுக்க அந்த அரசு சட்டமியற்றி பாதுகாக்க 1978-ம் ஆண்டு வாக்கில் இங்கே யானைகளின் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்தது. இந்தியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் சுமார் 9 ஆயிரத்து 950 இருந்துள்ளது. இவற்றில் ஆயிரம் முதல் 8 ஆயிரம் யானைகள் வடகிழக்குப் பகுதியில் உள்ளன. மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் 4500 யானைகளும், மத்தியப் பகுதிகளில் 900 முதல் 2 ஆயிரம் யானைகள் வரையிலும் மேற்கு இமயமலை அடிவாரத்தில் 500 யானைகளும், அந்தமான் தீவுகளில் 30 யானைகளும் உள்ளன.

1964 ஆம் ஆண்டு ஜூலையில் அட்லாண்டா நகரில் ஜனநாயக்கட்சியின் பேரவைக்கூட்டம் நடைபெற்றது. ஜனநாயகக்கட்சியின் சின்னம் யானையாக இருந்ததால் உறுப்பினர்களுக்கு விருந்தில் யானை மாமிசம் வழங்குவதென்று தீர்மானிக்கப்பட்டது. யானையை கொல்வது பெரும்பாலான நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. ஆயினும் கடைசியாக இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டது. போக்கிரி யானையை கொல்லுவதற்கு வன இலாகா சட்டம் வழி வகுத்திருப்பதால் தென்மேற்கு ஆப்பிரிக்காவில், விண்ட்லாக் என்ற இடத்திலிருந்து 647 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்த ஒரு ஆட்கொல்லி இருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அது சுட்டுக் கொல்லப்பட்டது.

ஆனால் ஏமாற்றம். அமெரிக்க அரசின் விவசாயத்துறை, யானைக்கறியை இறக்குமதி செய்யக்கூடாது என்று தடை விதித்துவிட்டது. யானை மாமிசம், இருமல் நோய் கொண்டவர்களுக்கு ஏற்ற மருந்து என சரகா குறிப்பிடுகிறார். விடாமல் அதை உட்கொண்டு வந்தால் இழந்த தேக வலிமையை கூட பெறலாம். பர்மாவில் யானை மாமிசம் பரவலாக உண்ணப்படுகிறது. நாகலாந்தில் யானைகள் பெருமளவு இருந்தாலும், நாகர்கள் இதை பிடித்து பழக்குவதில்லை. நாகர்கள் யானை பயிரை நாசம் செய்யும் விலங்கு என்று கருதுகிறார்கள்.

ஆனாலும் அதன் இறைச்சியை மிகவும் விரும்பி உண்பதால், அதனை வேட்டையாடுவதே தங்களுக்கு பிடித்தமான செயலாக கொண்டிருக்கிறார்கள். மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சாரி ஆற்றின் படகோட்டிகளிடம் கொம்பன் யானையை கொன்று புசிப்பதைப் பற்றி பல நாடோடிப் பாடல்களும் உள்ளன. 1964 ஆம் ஆண்டு டெஸ்மாண்ட் வெர்ராடே என்பவர் ஒற்றைக் கொம்பு யானையை சுட்டபோது, கிராமத்து மக்கள் இரவெல்லாம் ஆடிப்பாடி அதன் இறைச்சியை உண்டு மகிழ்ந்தனர். ஆப்பிரிக்க பழங்குடியினருக்கு யானை இறைச்சி என்பது எப்போதாவது கிடைக்கும் நிகழ்ச்சியே. அதை கொண்டாட்டமாகவே செய்வதுண்டு.

ஒரு சராசரி எடை 6750 கிலோ. மைசூர் மாநிலத்தில் (இன்றைய கர்நாடகா) தலா 7409 கிலோ மற்றும் 6854 கிலோ எடையுள்ள யானைகள் இரண்டு இருந்தன. யானையே வலிமையின் அடையாளமாக தொன்று தொட்டு கருதப்படுகிறது. பீமசேனனுக்கு 10 ஆயிரம் யானைகளின் பலம் இருந்ததாக சொல்லப்படுகிறது. நாட்டுப்புறக்கதைகளின்படி யானைதான் காடுகளின் அரசன். யானையை காணும் சிங்கமும், புலியும் கூட தூரத்திலேயே ஒதுங்கிச் சென்று விடும் என்பதனால் இந்த நம்பிக்கை உலகெங்கிலும் உள்ள கிராம மக்களிடம் இப்படியொரு நம்பிக்கை வேரூன்றி வந்திருக்கிறது.

ஆண் யானைக்கு 25 வயதாகும்போது முழுமையான வளர்ச்சி பெற்றிருக்கும். பெண் யானை தனது 15-வது வயதில் முதல் கன்றை பெற்றெடுக்கும். யானைகள் இனச் சேர்க்கைக்கு துணைகளை நாடும் வயது இதுவே. பெண் யானை தன் குட்டிகளின் மீது காட்டும் பாசம் அன்பு மனித குலத்தில் தாய் தன் குழந்தையிடம் காட்டும் பாசத்தை விட மேலானது. ஆப்பிரிக்காவில் ஒரு முறை பெண் யானை ஒன்று இறந்து விட்ட தனது குட்டியானையை இரண்டு நாட்கள் தூக்கிக் கொண்டே திரிந்தது. மேயும்போது அல்லது தண்ணீர் உறிஞ்சும்போது மட்டும் தனது குட்டியை தன் அருகில் கிடத்தி விடும். தண்ணீரை குடித்த பின் மீண்டும் தூக்கிக் கொண்டு அலைந்து திரிந்தது.

ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு உயிரினப் பூங்காவை ஒரு குழுவினர் சுற்றி வரும்போது ஒரு பிளிறல் கேட்டது. 100 மீட்டர் தூரத்தில் ஒரு யானை நிற்கக் கண்டனர் அங்கே சென்றவர்கள். யானையை சற்று தள்ளி ஒரு ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு தாக்குவதற்கு தயாராக நின்றிருந்தன. கோபம் கொண்ட யானையை அணுகுவதற்கு அவற்றுக்கு தைரியம் இல்லை. ஒன்றரை மணி நேரம் அவை இப்படியே நின்றிருந்தன. அவ்வப்போது யானை பிளிறி அவற்றை விரட்டியது. மறுநாள் அதே குழுவினர் அங்கே சென்ற போது அதே யானையும், சிங்கங்களும் அதே இடத்தில் நிற்கக் கண்டனர்.

ஆனால் அப்போது யானை மிகவும் தளர்ந்து விட, சிங்கங்கள் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தன. அப்போதுதான் அதன் காலடியில் இறந்துவிட்ட குட்டி ஒன்றை பாதுகாத்துக் கொண்டிருப்பதை குழுவினர் பார்த்தனர். இப்படியே மூன்று நாட்கள் தம் முற்றுகையில் ஈடுபட்ட சிங்கங்கள் சோர்ந்து போய் சென்றுவிட்டன. அதன்பிறகுதான் தன் குட்டியின் உடலுக்கு காவல் நிற்பதை கைவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றது யானை. இதை லான்ஸ் கார்ப்பொரல் பாட்லிமேயோ என்பவர் நேரில் கண்டு பதிவிட்டிருக்கிறார்.

இப்படி ரமேஷ் பேடியின் யானை காடுகளின் அரசன் நூலில் யானைகள் குறித்து கொட்டிக் கிடக்கின்ற தகவல்களும், செய்திகளும், அனுபவக் குறிப்புகளும் ஏராளம். இன்றைக்கும் யானை ஆர்வலர்களுக்கு, ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு நிகண்டாக விளங்குவது இந்த யானை காடுகளின் அரசன் என்ற நூலாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது அபிப்ராயம்.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x