Published : 20 Mar 2018 09:26 AM
Last Updated : 20 Mar 2018 09:26 AM

அரவானும் வரலாறும் கணேசனும் பேச்சியண்ணனும்

பா

ரதப் போரில் பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருவதற்காக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொள்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். 'சகல சாமுத்திரிகா லட்சணமும் கொண்ட இளைஞனை களப்பலி கொடுத்தால் வெற்றி நிச்சயம்' என சகாதேவன் கூற, அர்ஜுனனுக்கும் நாககன்னிக்கும் பிறந்த அரவானை தேர்வு செய்கிறார் கிருஷ்ணர். களப்பலிக்கு முழு சம்மதம் தெரிவித்து, போரின் வெற்றிக்காக தன்னுயிரை ஈந்ததாக பாரதம் கூறுகிறது.

இதற்காகவே கோவை குறிச்சியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது அரவான் திருவிழா.

ஆத்தி மரத்தின் குச்சிகள், நார் உள்ளிட்டவற்றைக் கொண்டு அரவான் உருவம் உருவாக்கப்படுகிறது. வெள்ளி, தங்கத் தால் செய்யப்பட்ட முகத்தை சாத்துகிறார்கள். களப்பலிக்கு அரவானை அழைத்து வந்ததும் களிமண்ணால் செய்யப்பட்ட முகம் பொருத்தப்படுகிறது. களப்பலி மேடையில் அரவான் பலியிடப்படுவார். இதுதான் இந்த விழாவில் நடப்பது.

இதில் இடம்பெறும் அரவான் உருவத்தை உருவாக்கும் பணி நுட்பமானது. இந்தப் பணியை பாரம்பரியமாக குறிச்சி எஸ்.கணேசன் உடையார் செய்கிறார். சுமார் 50 ஆண்டுகளாக அரவானை இவர்உருவாக்கி வருக்கிறார். “தலைமுறை தலைமுறையாய் எங்கள் குடும்பம்தான் செய்கிறது. கடும் விரதமிருந்து சிலை வடிப்போம்” என்கிறார் கணேசன்.

அரவான் கதை பாடல்

குறிச்சி பேச்சியண்ண தேவருக்கு வயது 82. ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழாவின்போது அரவான் வரலாற்றை அவர்தான் பாடி வருகிறார்.

“களப்பலி கொடுப்பவருக்கு திருமணமாகி இருக்க வேண்டுமென்பதால், அரவானுக்கு பொங்கியம்மாளை திருமணம் செய்கின்றனர். புதன் கிழமை திருமணம், வியாழக்கிழமை அரவான் அழைப்பு, வெள்ளிக்கிழமை களப்பலி. 3 நாளில் மொத்தமும் முடிந்துபோகிறது.

ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுக்கும் தனித்தனி பாடல்கள் உள்ளன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு சாமிநாத சேர்வை பாடினார். அவரது சீடர் ரங்கசாமியிடமிருந்து நான் கற்றேன். என் இறுதிமூச்சு இருக்கும் வரை அரவான் புகழைப் பாடுவேன்” என்கிறார் இந்த அரவான் பக்தர். இவருக்குப் பிறகும் பாடல்கள் பாடப் பட வேண்டும் என்பதே நமது விருப்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x