Published : 10 Apr 2019 17:17 pm

Updated : 10 Apr 2019 18:04 pm

 

Published : 10 Apr 2019 05:17 PM
Last Updated : 10 Apr 2019 06:04 PM

களத்தில் காணும் முகங்களே எங்கள் வெற்றியின் சாட்சி: மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேட்டி

சித்திரைத் திருவிழாவோடு தேர்தல் திருவிழாவை எதிர்கொண்டிருக்கும் மதுரையில் இறுதிக்கட்டப் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளார் சு.வெங்கடேசனிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளத்துக்காகப் பேசினோம்.


மதுரை மாவட்டம் மேலூரில் பிரச்சாரத்துக்காக முகாமிட்டிருக்கும் சு.வெங்கடேசன் பிரச்சாரப் பரபரப்புக்கு இடையேயும் ஒவ்வொரு பாயின்ட்டிலும் பிரச்சாரத்தை முடித்த பின்னரும் 2 நிமிடங்கள் என நம்முடன் பேசி முடித்தார்.

அவருடனான பேட்டியிலிருந்து..

இன்று தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.. இது தேர்தலுக்கான ஆரம்பம்.. ஒரு வேட்பாளராக எப்படி உணர்கிறீர்கள்?

ஆவலுடன் தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறேன். மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

பல்வேறு கருத்துக் கணிப்புகளும் மதுரையில் தங்களையே வெற்றி வேட்பாளராக அடையாளம் காட்டியுள்ளது. அதன் அடிப்படையில் சொல்கிறீர்களா?

அதுமட்டுமல்ல, நான் களத்தில் காணும் மக்கள் முகங்கள்.. அந்த முகங்களில் தெரியும் மகிழ்ச்சி.. அவர்கள் என்னைப் பார்த்து கையசைத்துக் காட்டும் வரவேற்பு எங்களுக்கு வெற்றிக்கான நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

நான் செல்லும் இடங்களில் எல்லாம் மோடி எதிர்ப்பும் எடப்பாடி எதிர்ப்பும் பலமாகத் தெரிகிறது. கடைக்கிராம மக்கள்கூட மோடி, எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

வெற்றி பெற்றால் இவற்றைச் செய்வோம் என்ற வாக்குறுதியுடன் நாங்கள் வாக்கு சேகரிக்கிறோம். அவர்கள் ஏற்கெனவே அளித்த வாக்குறுதிக்கே பதில் சொல்ல முடியாமல் கையெடுத்துக் கும்பிட்டு மட்டும் செல்கிறார்கள்.

மக்களிடம் அவர்களுக்குச் செல்வாக்கு இல்லை. அதனால் பணமாவது செல்லுமா எனப் பார்த்து நிற்கிறார்கள்.

இந்தத் தேர்தல் ஏன், எந்த வகையில் முக்கியமானது எனக் கருதுகிறீர்கள்?

இந்தத் தேர்தல் இந்திய நலனுக்காக மோடியை அப்புறப்படுத்த வேண்டிய தேர்தல். நம் உண்மையான தேசபக்தி மோடியை அப்புறப்படுத்துவதில்தான் இருக்கிறது. அந்த வகையில் இது மிக முக்கியமான தேர்தல்.

களத்தில் கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆதரவு எப்படி இருக்கிறது?

தங்கள் சொந்தக் கட்சிக்கு வேலை செய்வதுபோல் உற்சாகமாக உளப்பூர்வமாக வேலை செய்கின்றனர். இதை நான் யெச்சூரி தலைமையில் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக்கூட்டத்திலும் சொல்லியிருந்தேன்.

"ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்காதது கம்யூனிஸ்ட்டுகள் செய்த பெருந்தவறு" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியிருக்கிறார்.. உங்கள் கூட்டணி கட்சித் தலைவர் ஸ்டாலின்தான் முதலில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் இன்னும் வெளிப்படையாக ஏதும் சொல்லவில்லை. இதில் உங்களின் கருத்து?

பிரதமர் யார் என்பதை தேர்தலுக்குப் பின்னர் வாக்குகளின் பலத்தைப் பொறுத்து தேர்வு செய்யும் விஷயம். ராகுல் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டல் அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு எந்த முரண்பட்ட கருத்தும் இருக்காது.

கீழடி பற்றி பேசுகிறீர்கள். பாமர மக்கள் இதனை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்?

நாம் தான் நகரத்தில் இருப்பவர்கள் படித்த அறிவாளிகள். கிராமத்தில் இருப்பவர்கள் படிக்காதவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கிராமத்து மக்கள் அரசியல், பொது விஷயங்களில் புரிதலோடு இருக்கிறார்கள்.

மேலூரில் தொந்திலிங்கப்பட்டி என்ற குக்கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு முதியவர் ஒருவர் உங்களுடைய காவல் கோட்டம், வேள்பாரி படித்திருக்கிறேன் என்றார்.

சூரிப்பட்டி என்ற கிராமத்தில் மாணவர் ஒருவர், "யூடியூபில் கீழடி பற்றிய உங்கள் உரையைக் கேட்டிருக்கிறேன். நிறைய தெரிந்து கொண்டேன்" என்று உற்சாகமாகக் கூறினார். கடைக்கோடி கிராமம் வரை கீழடியின் அவசியம் புரிந்திருக்கிறது என்பதே உண்மை நிலவரம்.

மதுரைக்கு ஓர் இலக்கியவாதியாக என்ன செய்யவிருக்கிறீர்கள்?

காவல் கோட்டம் புத்தகத்திற்காக நான் செய்த ஆய்வுகள் மதுரையின் உயர்வான காலகட்டம், மோசமான காலகட்டம், எழுச்சி, சரிவு, சமூக வளர்ச்சி பற்றிய புரிதலை எனக்குத் தந்தது.

அந்தப் புரிதலை என் செயல்பாடுகளில் பயன்படுத்துவேன். ஒரு நகரின் வரலாறு தெரிந்திருந்தால் அந்த மக்களின் வாழ்க்கைக்குத் தேவையானதை அறிந்து உணர்ந்து செய்யலாம்.

சமகாலத்திற்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம்.

ஒருகாலத்தில் இங்கு ஜவுளித்தொழில் கொடிகட்டிப் பறந்தது. இன்று மதுரையின் பாரம்பரியமான சுங்கடித் தொழில்கூட விழிபிதுங்கி நிற்கிறது. இப்படி இன்னும் நிறைய தொழில்களைப் பட்டியலிடலாம். தொழில் வளர்ச்சிக்கு, வேலைவாய்ப்புக்கு என்ன செய்ய உள்ளீர்கள்?

எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப் போல மதுரையில் ரப்பர் தொழிற்சாலைகளை உருவாக்கி ரப்பர் ஹப்- ஆக மதுரையை மாற்றுவோம். ரப்பர் தொழில் சார்ந்த ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் வகையில் இங்கு ஒரு கல்வி மையம் நிறுவுவோம். தொழில் வளர்ச்சியின்போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றைக் குறைத்து வளர்ச்சியை நிலைநாட்ட முற்படுவோம்.

மதுரை சுயேட்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் மதுரை மக்களவைத் தேர்தலை நிறுத்திவைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். பணப்புழக்கத்தையே முக்கியக் காரணமாகக் கூறுகிறார். இந்தத் தேர்தலில் மதுரை தொகுதியில் பணநாயகத்தை வெல்ல என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?

பணம் மட்டும்தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் என்றால் எப்போதுமே அதிமுக மட்டும்தானே ஆட்சியில் இருந்திருக்க வேண்டும். பணத்தைத் தாண்டியும் சிந்திக்கும் திறன் மக்களுக்கு இருக்கிறது. அதனால்தான் ஆட்சி மாற்றங்கள் நிகழ்கின்றன. வாக்காளர்களுக்கு எது நல்லது என்பது தெரியும். பணநாயகம் இந்தத் தேர்தலில் மதுரையில் மட்டுமல்ல எந்தத் தொகுதியிலும் செல்லாது.. வெல்லாது.

எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களின் முதல் குரல் எதற்காக ஒலிக்கும்?

மதுரையை வரலாற்றுப் பாரம்பரியமிக்க நகரமாக அறிவிக்கக் கோருவேன்.

மதுரை வாக்காளர்களுக்கு உங்கள் வேண்டுகோள்..

மதுரை புறக்கணிக்கப்பட்ட தொகுதியாகவே பல ஆண்டுகள் இருந்துவிட்டது. இனி அது தடம் பதிக்கும் தொகுதியாக மாறும்.

முடங்கிப் போன நகரத்தை பல்வேறு வகைகளிலும் முன்னேற்றுவோம். நீர்நிலைகளை மீட்போம். வைகை நடுவே தடுப்பணை என்பதெல்லாம் எவ்வளவு பெரிய சுகாதாரக் கேடு. அதனைத் தடுத்து நிறுத்துவோம்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம். மதுரை இப்போது வாழத் தகுதியற்ற ஊராக இருக்கிறது. அதனை மக்கள் விரும்பி வாழும் ஊராக மாற்றுவோம்.

அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுகொள்கிறேன்.

தொடர்புக்கு:bharathi.p@thehindutamil.co.inமக்களவைத் தேர்தல்மதுரை மக்களவை தொகுதிசு.வெங்கடேசன்திமுக கூட்டணிசு.வெங்கடேசன் பேட்டிகீழடி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x