Published : 24 Apr 2019 05:59 PM
Last Updated : 24 Apr 2019 05:59 PM

இந்த வெற்றியைப் பார்க்க அவ அப்பா இல்லைன்னுதான் வருத்தமா இருக்கு- கலங்கும் கோமதியின் தாய்

ஆசிய தடகளப் போட்டியில் தன் மகள், இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்றது, அவரின் தாய்க்கு மிகத் தாமதமாக மற்றவர்கள் சொல்லித்தான் தெரியவந்தது.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப் போட்டியில், மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து தங்கப் பதங்கத்தை வென்றார். சர்வதேச அளவில், கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

ஆனால், கோமதி மாரிமுத்துவின் தாய் ராசாத்திக்கு, மறுநாள் காலை 9.30 மணிக்குத்தான் தன் மகள் உலக சாதனை புரிந்திருப்பது தெரியவந்தது. 55 வயதான ராசாத்திக்கு, தன் மகளின் வெற்றிச் செய்தி காதுகளுக்கு எட்டியபோது, தங்களுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தார்.

"நான் நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்க மாடு ஒண்ணு முடியாமக் கிடந்தது. அதைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். அக்கம்பக்கத்துப் பிள்ளைங்க வந்து சொன்னப்பக் கூட 'எனக்குத் தெரியாதுய்யா'ன்னு சொன்னன்.

எனக்கு டிவியும் போட்டு பார்க்கத் தெரியாது. அங்க இருந்தவங்க தான் டிவியைப் போட்டுக் காட்டுனாங்க. இப்பக்கூட என் பொண்ணு ஓடுனத நான் டிவியில இன்னும் பாக்கல, ஜெயிச்ச சேதிய மட்டும் தான் பார்த்தேன்", என வெள்ளந்தியாகப் பேசுகிறார் ராசாத்தி.

"25 ஆம் தேதி வரைக்கும் எனக்கு போன் பேசாதம்மா, என்னால் பேச முடியாதுன்னு சொன்னா. அதனால இன்னும் பேசவில்லை. இந்தக் கிராமத்துக்கே பெருமை தேடித் தந்த பொண்ணு என் வயித்துல பொறந்திருக்கா", என மகளின் வெற்றியில் ஆனந்தம் கொள்கிறார் ராசாத்தி.

கோமதி மாரிமுத்து குடும்பத்தில் கடைக்குட்டி. போலீஸாகப் பணிபுரியும் அண்ணன், திருமணம் முடித்த 2 சகோதரிகள் உண்டு. "தங்கை படிக்கட்டும்" என, குடும்ப சூழல் கருதி, 10, 12 ஆம் வகுப்புடனேயே அவரது சகோதரிகளான லதா மற்றும் திலகவதி படிப்பை நிறுத்திக்கொண்டனர்.

"கோமதி பயிற்சிக்காக கிரவுண்டுக்கு சென்று வந்தால், ரெண்டு அக்காங்களும் அவளை துணி கூட துவைக்க விட மாட்டார்கள். நிறைய உதவிகளை அவளுக்குச் செய்தார்கள். இவ்வளவு ஒல்லியா இருந்துக்கிட்டு இப்படி ஓடுதேன்னு எல்லா வேலைகளையும் அவர்களே செய்வார்கள்" என்கிறார் தாய் ராசாத்தி.

திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட்டத்தில் உள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி. சரியான சாலை, மைதான வசதி என அடிப்படை வசதிகள் இல்லாதது முடிகண்டம் கிராமம். ஒரு சிறிய காயம் ஏற்பட்டாலும், 5 கி.மீ. தொலைவு கடந்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இன்று அக்கிராமம் கோமதியால் பெருமை பெற்றிருக்கிறது.

"இப்படியொரு கிராமம் இருக்குன்னு தெரிந்ததே என் தங்கையால் தான் என கிராமத்தினர் பெருமை கொள்கின்றனர். அவளின் வெற்றியால் கிராம மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்கிறார் கோமதியின் அண்ணன் சுப்பிரமணி.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான கோமதி, முடிகண்டம் போன்றதொரு கிராமத்திலிருந்து சர்வதேச வெற்றியை அடைந்ததற்குப் பின், நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஏழ்மையும், தடைகளும் நிரம்பிக் கிடக்கின்றன.

புதுக்கோட்டை மாவட்டம் நாசரேத்தில் உள்ள புனித தோமையார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த கோமதி, ஹோலி கிராஸ் கல்லூரியில் உயர் கல்வி பயின்றார்.

"சிறு வயதிலிருந்தே கோமதிக்கு விளையாட்டு என்றால் ஆர்வம். ஆனால், பள்ளியில் படிக்கும் போது அதற்கென தனியாகப் பயிற்சியாளர் இல்லை. பயிற்சியும் பெற்றதில்லை. இருந்தாலும், மாவட்ட அளவிலான ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெறுவார்.

கல்லூரி படிக்கும் போது தான் ஓட்டப் பந்தயத்தில் தீவிரப் பயிற்சியுடன் இறங்க ஆரம்பித்தார். அப்போது ராஜா மணி என்பவர் பயிற்சியாளராக இருந்தார்.

அதிகாலை 4 மணிக்கெல்லாம் அப்பாவும் கோமதியும் எழுந்துவிடுவார்கள். வீட்டிலிருந்து 5 கி.மீ. டூவீலரில் அப்பா தான் பேருந்து நிலையத்திற்குச் சென்று விடுவார். அங்கிருந்து கோமதி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு மைதானத்துக்குச் செல்வார். வீட்டிலிருந்து மைதானம் சுமார் 20 கி.மீ. மைதானத்தில் பயிற்சி பெற்று, பின்னர் கல்லூரி முடித்து, மாலையில் மறுபடியும் பயிற்சி முடிந்து, இரவு 9 மணிக்குத் திரும்பும் கோமதியை மீண்டும், அப்பா தான் பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வருவார்" என்கிறார் சுப்பிரமணி.

தன் மகளின் வெற்றிக்காக அயராது உழைத்த மாரிமுத்து, அந்த வெற்றியைப் பார்க்க தற்போது உயிருடன் இல்லை. 2016 ஆம் ஆண்டு உடல்நலமின்றி மாரிமுத்து இறந்து விட்டார். பல ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி, மாரிமுத்துவின் கால் பகுதி செயலிழந்தது. இருப்பினும், மகளை டூவீலரில் தினந்தோறும் பயிற்சிக்கு அழைத்துச் சென்றவர் மாரிமுத்து தான்.

"இந்த வெற்றிக்குக் காரணமே எங்க அப்பா தான்" என, குரல் உடைந்து சொல்கிறார் சுப்பிரமணி.

முடிகண்டம் கிராமத்தில் பண்ணை ஒன்றில் கூலித்தொழிலாளியாக இருந்தவர் மாரிமுத்து. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டிய தொகுப்பு இல்லம் தான் இவர்களின் வீடு. மாநில, தேசிய அளவில் கோமதி வென்ற பதக்கங்களை சரியாக வைக்கக்கூட இடம் இல்லை.

"அப்பா என்றால் கோமதிக்கு ரொம்ப பிடிக்கும். இந்தச் சமயத்தில், அவங்க அப்பா இல்லைன்னுதான் கவலையா இருக்கு. ஊரெல்லாம் சுற்றி பண்ணையில் விவசாய நிலத்திற்கு மருந்தடித்து படிக்க வைத்தார்", என ராசாத்தி சொல்லும்போது குரல் உடைகிறது.

"பயிற்சி சமயத்தில், கோமதி பயிற்சியாளர் சொல்லும் உணவுப்பொருட்களைச் சாப்பிட கூட முடியாத சூழல் வீட்டில் நிலவியது. எல்லாரும் வீட்டில் என்ன சாப்பிடுறாங்களோ அதுதான் கோமதிக்கும். ஓடிட்டு வீட்டுக்கு வந்தான்னா ரெண்டு முட்டை அவிச்சுக் கொடுப்பேன், வீட்டில் உள்ள மாட்டில் கறந்த பாலைக் கொடுப்போம்", என்கிறார் ராசாத்தி.

ஆரம்பத்தில் கோமதி தனியாகப் பயிற்சி எடுக்க செல்வதால், அவரது அண்ணன் சுப்பிரமணி, தன் தங்கை ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுவதில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார். பிறகு, தங்கையின் ஆர்வத்தைக் கண்டு மனம் மாறியுள்ளார்.

"ஒத்தையா பயிற்சிக்கு அனுப்புவதால் சிலர் ஏதாவது கேட்பார்கள். நாம் அதைக் கோமதியிடம் சொன்னால், எங்களிடம் கடிந்துகொள்வார். ஓட்டம், ஓட்டம், ஓட்டம் தான் அவளுக்கு முக்கியம்", என ராசாத்தி கூறுகிறார்.

தன் அப்பாவின் மரணத்திற்குப் பிறகு உடைந்துபோன ராசாத்திக்கு சென்னையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் பாப்பாத்தி என்பவர் தான் தைரியம் அளித்து ஓட்டப்பந்தயத்திற்காக பயிற்சி எடுக்க தன்னம்பிக்கை அளித்துள்ளார்.

கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, 2015-ல் பெங்களூரு வருமான வரித்துறையில் கோமதிக்கு வேலை கிடைத்தது. அந்தச் சமயத்தில், கோமதிக்கு பயிற்சியாளராக இருந்த காந்தி என்பவர், திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். உறுதுணையாக இருந்த பயிற்சியாளரும் இருந்ததால், கோமதி மீண்டும் மனதளவில் தளர்ந்தார்.

"அப்பா தான் இல்லை, பக்கபலமா 'கோச்' இருந்தாரு. இப்ப அவரும் இல்லைன்னு ரொம்ப வருத்தப்பட்டா", என்கிறார் ராசாத்தி.

அதன்பிறகு கோமதி குடும்பத்தினர் ஆதரவுடன் மீண்டுள்ளார். 30 வயதான கோமதி, 2013 ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 2013-ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், 7-வது இடத்தைப் பிடித்தார். 2015-ல் சீனாவில் நடைபெற்ற அதே போட்டியில், நான்காவது இடத்தைப் பிடித்தார் கோமதி.

இப்போது நான்கு ஆண்டுகள் கழித்து முதன்முறையாக சர்வதேசப் போட்டியில் தங்கத்தை வென்றிருக்கிறார் கோமதி. இடையில், தன் தந்தை, பயிற்சியாளரை இழந்து, குடும்பத்தைச் சுமக்க வேண்டிய நிலையிலும், கடின பயிற்சி எடுத்து வென்றிருக்கிறார்.

வெற்றிக்குப் பிறகு கோமதி கூறிய வார்த்தைகள் இவை:

"அடுக்கடுக்கான துன்பங்களைக் கண்டு நான் மனம் தளர்ந்து விடவில்லை; என்னுடைய திறமையில் முழு நம்பிக்கை கொண்டு இருந்தேன்; என்னால் சாதிக்க முடியும் என உறுதி கொண்டு இருந்தேன்; அதன் விளைவே இந்த வெற்றி"

கோமதியின் இந்த வெற்றி, எளிய வீடுகளில் இருந்து புறப்படும் அத்தனைப் பெண்களுக்குமான வெற்றி.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x