Last Updated : 08 Apr, 2019 03:28 PM

 

Published : 08 Apr 2019 03:28 PM
Last Updated : 08 Apr 2019 03:28 PM

பிரதமரின் பிரச்சாரம்; வியூகப்பாதையில் ஓபிஎஸ்; உற்சாகத்தில் தொண்டர்கள்

அதிமுகவுக்காக தேனியில் 'அம்மா' காட்டிய வேட்பாளர்களை எல்லாம் வெற்றி பெற வைத்த ஓபிஎஸ், தனது மகனுக்காக பிரதமரையும் வரவழைப்பார், பணத்தையும் வாரி இறைப்பார் என்பதுதான் தேனி தொகுதிக்குள் இப்போதைக்கு அடிபடும் பேச்சாக இருக்கிறது.

தேனி மக்களவைத் தொகுதி விஐபி தொகுதியாக மாறியிருக்கிறது. அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் மகன் ரவீந்திரநாத், திமுக சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளராக தொகுதியில் சமூகத்தினரின் செல்வாக்கு பெற்ற தங்க தமிழ்ச்செல்வன் என வலுவான போட்டி நிலவுகிறது.

தேனியில் இதற்கு முந்தைய தேர்தல்களில் ஜெயலலிதா யாரை அதிமுக வேட்பாளராக அடையாளம் காட்டுகிறாரோ அவரை வெற்றி பெற வைப்பதையே ஓபிஎஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இந்த முறை தனக்காக தர்மயுத்தம் செய்த எம்.பி.க்களை எல்லாம்கூட ஓரங்கட்டிவிட்டு உட்கட்சி அதிருப்திகளை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என மகனைக் களமிறக்கியிருக்கிறார் ஓபிஎஸ்.

அதனாலேயே 'அம்மா' காட்டிய வேட்பாளர்களை எல்லாம் வெற்றி பெறவைத்த ஓபிஎஸ், இப்போது தனது மகனுக்காக பிரதமரையும் வரவழைப்பார், பணத்தையும் வாரி இரைப்பார் என தொகுதி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

இதுவரை தேர்தலுக்காக தேனிப் பக்கம் எந்த ஒரு பிரதமரும் வந்திராத நிலையில், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ம் தேதி தேனியில் பிரச்சாரம் செய்ய வருகிறார்.

அவர் தேனி வருவதற்கு டெல்லியில் பாஜக மேலிடத்தில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் செல்வாக்கே காரணம். தனது ஒட்டுமொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி பிரதமர் மோடியை தேனியில் போட்டியிடும் தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய அழைத்து வருகிறார் ஓபிஎஸ். இத்தனைக்கும் ரவீந்திரநாத் முதல் முறை தேர்தல் களம் காண்பவர்.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈவிகேஎஸ் இளங்கோவனும், அமமுக சார்பில் தங்க தமிழ்ச் செல்வனும் களமிறக்கப்பட்டுள்ள பயத்தின் எதிரொலியே பிரதமரை பிரச்சாரத்துக்கு அழைத்து வரச் செய்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க, பாஜக சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா, ராமநாதபுரம் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சொந்தக் கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ய வராமல் கூட்டணிக் கட்சி வேட்பாளருக்காக வருகிறாரே என்ற ஆதங்கத்தில் உள்ளனர்.

தாராள பணப்புழக்கம்:

பிரதமர், முதல்வர், திரை நட்சத்திரங்கள் என தேனியில் விஐபிக்கள் அணிவகுக்க பணம் எனும் பலத்தையும் விட்டுவைக்கவில்லை ஆளும் கட்சி. ஒவ்வொரு கூட்டத்துக்கும் மக்களைத் திரட்டி வருவது. அவர்களுக்கு வழிச்செலவு என பணம் தாராளமாகப் புழக்கத்தில் இருக்கிறதாம். கட்சியின் கடைசி நிர்வாகி வரை பாக்கெட் நிரம்பியே சுற்றுவதால் உற்சாகம் சற்றும் குறையாமல் பங்குனி வெயிலும் தள்ளிவைத்துவிட்டு களப்பணி ஆற்றுகின்றனராம். இருந்தாலும் ஓட்டுக்குப் பணம் எல்லாம் கடைசி 48 மணி நேரத்தில்தான் வழங்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதே களத் தகவல்.

பிரதமரின் பிரச்சாரம்; தாராள பணப்புழக்கம் என்று தனது வியூகப்பாதையில் ஓபிஎஸ் சரியாகப் பயணிக்கிறார் என்று கட்சி முக்கிய நிர்வாகிகள் மார்தட்டிக் கொள்கின்றனர்.

செலவில் போட்டியில்லை.. தலைவருக்கு பஞ்சமில்லை:

ஆளுங்கட்சி அளவுக்கு பணம் செலவழிக்க முடியாமல் காங்கிரஸ் திணறுகிறதாம். ஆனால், ஈவிகேஎஸ் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய அழைத்துவருகிறார். வரும் 12-ம் தேதி ராகுல் தேனி வருகிறார். போடி கல்லூரி விழாவுக்கு 1990-ல் வந்த ராஜீவ் காந்தி தேனி பங்களாமேட்டில் இருந்து நேரு சிலை வரை நடந்தே சென்றதைப் பார்த்த தேனி மக்கள் இன்று ராகுல் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். செலவில் எங்களால் அதிமுகவுடன் போட்டியிட முடியாது. ஆனால் தலைவருக்குப் பஞ்சமில்லை. எங்களுக்கு ராகுல் காந்தி வருகிறார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

குஷ்புவா இது..?!

இதற்கிடையில், ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து உசிலம்பட்டியில் பிரச்சாரம் செய்ய குஷ்பு வர கூட்டத்தில் ஒரே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. குஷ்பு பிரச்சார வாகனத்தில் நின்றுகொண்டே பேச கீழே நின்ற மக்களுக்கு அவர் சரியாகத் தெரியவில்லையாம். உடனே அருகிலிருந்த கடையில் ஒரு ஸ்டூல் வாங்கி அதன் மீது குஷ்புவை ஏறி நிற்கச் சொல்லி பிரச்சாரம் செய்ய வைத்திருக்கின்றனர். குஷ்பு பேசிச் சென்றவுடன் குஷ்பு முந்தி மாதிரி இல்லையே ஆளே மாறிவிட்டார் என்று வாக்காளப் பெருமக்கள் பேசிக்கொள்ள காங்கிரஸ்காரர்கள் அப்படியென்றால் இவ்வளவு நேரம் யாரும் வேட்பாளரை கவனிக்கவே இல்லையோ என பெருமூச்சு விட்டபடி கலைந்து சென்றிருக்கின்றனர்.

அமமுகவின் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பழைய செல்வாக்கு இருந்தாலும்கூட அவர் பெரிய அளவில் ஓட்டைப் பிரிப்பாரே தவிர வெற்றியெல்லாம் கடினமே எனக் கூறப்படுகிறது. ஆரத்தி தட்டுகள் கவனிக்கப்பட்டாலும்கூட அதிமுக அளவுக்கு தொகுதிக்குள் அமமுக பணத்தை செலவழிக்கவில்லை.

இப்படியாக தேனி தொகுதியின் இன்றைய கள நிலவரம் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x